Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

முகப்பு

8/21/2019

0 Comments

 
Picture
முதல் பக்கம்
 
 நண்பர்களுக்கு வணக்கம். விகாரி வருடத்திய ஆவணி மாத அகல் மின்னிதழ் நம் பார்வைக்கு!
 
இவ்விதழில் :
 
அ.முத்துலிங்கம் அவர்களின் "நாட்குறிப்புகள் - ஆறாத் துயரம் 
பூர்ணிமா ஸ்ரீராம் அவர்களின் “காய் கனி மகத்துவம்” – பகுதி 1 
செளமியா. N அவர்களின் “காட்சிப் படிமங்களிலிருந்து...”
பாரியன்பன் நாகராஜன் அவர்களின் “கவிதைப் பக்கம்”
சத்யா GP யின் “ஊர் சுற்றி... போஜனம் தேடி...” – பகுதி 2
சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் “கவிதைப் பக்கம்”
கார்த்திக் ஸ்ரீநிவாசன் அவர்களின் “ரெடி 1...2...2... சந்திரயான்ஸ்” – பகுதி 1 
சத்யா GP யின் “சிறுகதை – மனசு”    
 
நண்பர்கள் அனைவரும் இவ்விதழைத் படியுங்கள். தங்கள் மேலான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
 
பேரன்புடன் 
சத்யா GP
ஆசிரியர் – அகல் மின்னிதழ் 
0 Comments

நாட் குறிப்புகள் – அ. முத்துலிங்கம்

8/21/2019

0 Comments

 
ஆறாத் துயரம்
நான் பல சமயங்களில் பலர் ஆறாத் துயரம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்; எழுதியிருப்பதை  படித்துமிருக்கிறேன். நான் நேரில் கண்ட சம்பவம் ஒன்று இரண்டு நாட்கள் முன்புதான் நடந்தது.
 
என் நண்பர் ஒருவர் உடல் நலமில்லாமல் இருந்தார். மூன்று மாதங்களாக பல மருத்துவர்களைப் பார்த்தும் நிறைய மருந்துகள் எடுத்தும் ஒரு பிரயோசனமில்லை. எக்ஸ்ரே, ஸ்கான், ரத்தப் பரிசோதனை என்று நிறையச் செய்து பார்த்துவிட்டார்கள் ஆனால் ஒருவருக்கும் நோய் என்னவென்று பிடிபடவில்லை. வருகின்ற திங்கட்கிழமை அவர் ஆஸ்பத்திரியில் அனுமதியாகிறார். மேலும் பல மருத்துவர்கள் புதிய பரிசோதனைகளை மேற்கொள்ளுவார்கள். வியாதி என்னவென்று கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை ஆரம்பிப்பதுதான் நோக்கம். சில வேளைகளில் சத்திர சிகிச்சை கூட தேவைப்படும். அவர் ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் இருக்கலாம், இரண்டு மாதம் இருக்கலாம். வேறு என்ன என்னவோ எல்லாம் நடக்கலாம்.
 
அவர் போலந்துக்காரார், வயது எண்பதுக்கு மேலே. பல மாதங்களுக்கு பிறகு ஆளை நேரில் பார்த்த நான் திடுக்கிட்டேன். எடை சரி பாதியாகக் குறைந்துவிட்டதென அவரே சொன்னார். உடைகள் ஆணியில் கொழுவிவிட்டது போல உடம்பில் தொங்கின. நீளமான கழுத்து சட்டென்று நடுவிலே வளைந்துபோய் கிடந்தது. மிகக் களைப்பாகக் காணப்பட்டார். இரண்டு வாக்கியத்துக்கு ஒருமுறை வாயை திறந்து காற்றை விழுங்கிவிட்டு பேசினார்.

Picture
நண்பர் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் கனடாவுக்கு வந்தவர். 60 வருடங்களை கனடாவில் கழித்துவிட்டார். தன்னுடைய இள வயதுச் சம்பவங்களை தொட்டு பேசிக்கொண்டு வந்தவர் தன் தகப்பனார் புறா வளர்த்த கதையை சொன்னார்.
 
“நிறைய புறாக்களை வளர்த்து விற்பதை ஒரு பொழுது போக்காக அவர் செய்தார். தூது ஓலை கொண்டு போகும் புறாக்களுக்கு பயிற்சி கொடுப்பதில் வல்லவர். புறாக்களுக்கு தங்குவதற்கு நல்ல வசதியும் உணவும் இருப்பது அவசியம். அவை கூட்டிலே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும். கிரமமாக காலை வேளையில் உணவளித்தால் எங்கே கொண்டு போய் விட்டாலும் அவை திரும்பிவிடும்”
 
ஓய்வு நாட்களில் என் நண்பரும் அவர் தகப்பனும் புறாக்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள். புறாவை எடுத்துக்கொண்டு ஒரு மைல் தூரம் சென்று அதை ஆகாயத்தில் எறிந்துவிடுவார்கள். இவர்கள் திரும்ப முன்னர் அது பறந்து கூட்டுக்கு வந்துவிடும். சிறிது சிறிதாக தூரத்தைக் கூட்டிக்கொண்டே போவார்கள். அவைகளுடைய உணவு நேரம் காலையில் என்பதால் அதிகாலையிலேயே புறப்பட்டு நெடுந்தூரம் சென்று புறாவை விடுதலை செய்வார்கள். உணவு நேரமானபடியால் புறா பறந்து எப்படியும் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும். ஒன்றிரண்டு புறாக்கள் தொலைவதுமுண்டு ஆனால் அநேகமாக எல்லா புறாக்களும் திரும்பிவிடும்.
 
அப்பாவிடம் ஒரு அழகான புறா இருந்தது. வெள்ளை நிறம், வாலில் மாத்திரம் மண் தூவியது போல கொஞ்சம் மஞ்சள் படர்ந்திருக்கும். அதற்கு நான் அல்பிங்கா என்று பெயர் சூட்டினேன். போலிஷ் மொழியில் அல்பிங்கா என்றால் வெள்ளை என்று பொருள். நாங்கள் வளர்த்த புறாக்களில் அதைப்போல அழகான ஒரு புறாவையோ மூளைத்திறன் கொண்ட பறவையையோ நான் கண்டதில்லை.
 
அந்தக் காலத்து அரசர்கள் கடிதங்களில் செய்திகள் அனுப்புவது இப்படியான புறாக்களில்தான். என்னுடைய காலத்தில்கூட ஒரு புகழ்பெற்ற டொக்ரர் அவசரமான மருந்துகளை புறாவின் காலில் கட்டி தருவித்திருக்கிறார். அப்பாவுக்கும் எனக்கும் இந்தப் புறாவில் தனி ஈடுபாடு இருந்தது. சிறிது சிறிதாக தூரத்தை கூட்டி 50 மைல் தூரம் பறப்பதற்கு அல்பிங்கா பழகிவிட்டது. எந்த திசையில் கொண்டு சென்று விட்டாலும் அது வீட்டுக்கு வந்துவிடும்.
 
அப்பாவுக்கு அடுத்த ஊரில் ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் ப்ரனிஸ்லோ.  எப்பொழுது அப்பாவைச் சந்திக்க வந்தாலும் அப்பாவிடம் அல்பிங்காவை பற்றி பேசுவார்; அதை தனக்கு விற்கச் சொல்லி அப்பாவை வற்புறுத்துவார். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர் தயாராக இருந்தார். நான் அந்தப் புறாவில் எவ்வளவு அன்பு வைத்திருந்தேன் என்பதை அப்பா அறிவார். பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் என்னுடைய முதல் வேலை அல்பிங்காவை எடுத்து கையிலே வைத்து கொஞ்சுவதுதான். ஆகவே அப்பா நண்பரின் வேண்டுகோளைத் தட்டிக்கொண்டே வந்தார்.
 
1939 ம் ஆண்டு செப்டம்பரில் ஜெர்மனி போலந்தின் மேல் படையெடுத்தது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது அப்படித்தான். போலந்து ஒரு மாதத்தில் முற்றாக வீழ்ந்தது. நாங்கள் இ.ப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வருடத்திற்குள் நிலைமை மிக மோசமானது. எங்கள் குடும்பம் பெரியது. அப்பாவினால் செலவுகளை சமாளிக்க முடியவில்லை. நான் பள்ளிக்கூடத்தில் இருந்த போது ஒரு நாள் அப்பா ப்ரனிஸ்லோவுக்கு புறாவை நல்ல விலைக்கு விற்றுவிட்டார். அதில் வந்த பணம் எங்கள் வீட்டுக்கு இரண்டு மாதத்திற்கு சாப்பாடு போட்டது என்று அப்பா பின்னாளில் சொன்னார்.
 
பள்ளியிலிருந்து வந்த நான்  அப்பா புறாவை விற்றதைக் கேள்விப்பட்டு அப்படியே மனமுடைந்து போனேன். ஒரு முழு நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன். ஒரு துண்டு ரொட்டிக்கு சிரமப்பட்ட அந்தக் காலத்தில் பட்டினி கிடப்பதில் எந்தவித பொருளும் இல்லை.
 
ப்ரனிஸ்லோவுக்கு புறாவை விற்ற போது அப்பா ஒரு விசயத்தை அவருக்கு தெளிவாகச் சொல்லியிருந்தார். இந்தப் புறா பயிற்சி கொடுக்கப்பட்டது. அதி புத்திசாலி. இது திரும்பவும் எங்கள் வீட்டுக்கு வந்தால் அதை நான் இன்னொருமுறை உங்களுக்கு தரமாட்டேன். அவரும் சம்மதித்தே அதை வாங்கிப்போனார்.
இரண்டு வாரம் ஓடிவிட்டது. ஒருநாள் காலை நான் பாடசாலைக்கு புறப்பட்டேன். வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்ததும் அப்படியே திடுக்கிட்டு நின்றேன். நான் வளர்த்த அல்பிங்கா திரும்பி வந்துவிட்டது. வாசலிலே நடுங்கிக்கொண்டு நின்றது. கழுத்தை சரித்து நிமிர்ந்து பார்த்தபோது விழுந்துவிட்டது. இரண்டு கைகளிலும் அதை தூக்கிய போது இருதயம் துடிப்பதுபோல துடித்தது. அதனுடைய இரண்டு இறக்கைகளும் வெட்டப்பட்டிருந்தன. அப்படியும் 17 மைல் தூரத்தை அது இரண்டு வார காலமாக நடந்தே கடந்திருந்தது. புறா கிளையில் உட்காரும் பறவை என்பதால் அதற்கு காலின் முன்பகுதியில் மூன்று விரல்களும் பின்பகுதியில் ஒரு விரலும் இருக்கும். கிளையில் பிடித்து உட்கார வசதியாக. அல்பிங்கா நடந்து வந்ததில் பின் விரல் முற்றாக தேய்ந்துவிட்டது. முன்விரல்கள் பாதியாக மழுங்கிப்போய் ரத்தம் கசியக் கிடந்தன. நிற்க வைத்த போது அல்பிங்கா நிற்க முடியாமல் சரிந்து சரிந்து விழுந்தது. அன்றிரவே இறந்துவிட்டது.’
 
இந்தக் கதையை சொன்னபோது நண்பர் விம்மி விம்மி அழத் தொடங்கினார். அவர் தன்னுடைய அப்பாவை நினைத்தாரோ, அந்தப் புறாவை நினைத்தாரோ அல்லது தன்னை நினைத்தாரோ தெரியாது. அடக்க அடக்க அவரை மீறி ஏதோ ஒன்று நடந்தது. மெலிந்துபோன அவர் உடம்பு துடிக்க எக்கி எக்கி அழுதார். 80 வயதுக் கண்களில் இருந்து நீர் கொட்டியது. நான் என் ஆயுளிலே இவ்வளவு வயதான ஒருவர்  அழுததை பார்த்தது இதுவே முதல் தடவை. 60 வருடங்களுக்கு முன் இறந்துபோன ஒரு புறா. அதை நினைத்து அழுதார்.
 
ஆறாத் துயரம் என்பது இது தான் என்று நினைக்கிறேன்.

 
0 Comments

அறிவிப்பு

8/21/2019

0 Comments

 
சென்னையில் வசிக்கும் நண்பர்கள் மளிகைப் பொருட்களை மலிவு விலையில் வாங்க அணுகுங்கள் 

"BHUVAN PROVISON MART" 

தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
0 Comments

காய் கனி மகத்துவம் – பூர்ணிமா ஸ்ரீராம்

8/21/2019

0 Comments

 
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் காய்கள், கீரைகள், கிழங்கு வகைகள், கனிகள் போன்றவற்றில் இயற்கையாக என்னென்ன நற்குணங்கள் உள்ளன என்பதை மேம்போக்காக எடுத்து சொல்லும் தொடராக இல்லாமல் சற்று ஆராய்ந்து நிறைய தகவல்களுடன் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் சேர்த்து இந்த கட்டுரைத் தொடரை எழுதவிருக்கிறேன்.
 
ஒவ்வொன்றிற்கும் நற்குணங்கள் உள்ளது போல் ஒவ்வாத சில கூறுகளும் உடன் இருக்கும். அதையும் கட்டுரையில் குறிப்பிடவிருக்கிறேன். வாரத்திற்கு ஏழு நாட்கள், மிக எளிதாக ஒவ்வொரு நாள் ஒவ்வொரு காய் என நம் உடலுக்குத் தேவையானவற்றை எப்படிப் பங்கிட்டு உண்பது, எந்தெந்த காயை எப்படி சமைத்தோ, பச்சையாகவோ சாப்பிடுவது என எனக்குத் தெரிந்தவற்றை சொல்ல இருக்கிறேன். 

Picture
ஆங்கில மருத்துவத்தின் அடிப்படையில் குளிர்ச்சி, சூடு என்னும் பதம் கிடையாது ஆனால் நம் பாரம்பரியத்தில் அது கண்டிப்பாக உண்டு. உதாரணத்திற்கு மாங்காய் சூடு என நம் முன்னோர்கள் சொல்வார்கள் அதை நிரூபிப்பது போல மாங்காய் சாப்பிட்டால் சிலருக்கு சூட்டுக் கட்டி கொப்பளங்கள் போன்றவை ஏற்படும். புடலை, வெள்ளரி, சுரைக்காய் போன்றவை குளுமையான தன்மை கொண்டவை. சிலருக்கு சளி பிடிப்பது போன்றவை இவற்றை உண்ணும் போது ஏற்படும்.
 
பொதுவான அடிப்படையில் எதை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டாலும் அளவாக வித விதமாக அனைத்து சத்துகளும் உடலில் சேர வேண்டும் என்னும் அடிப்படையில் நம் உணவினை தருவித்து உண்பதை வழக்கமாகக் கொண்டால் உடல் ஆரோக்கியத்தில் சிக்கலே எழாது. 

Picture
இந்தத் தொடரில்
 
  1. கத்திரிக்காய் – இதில் பல வகைகள் உண்டு அத்தனை ரகங்களைப் பற்றியும் தவறாமல் எழுதுவேன்.
  2. பாகற்காய்
  3. பூசணி
  4. பரங்கி
  5. நெல்லி
  6. சுரைக்காய்
  7. அவரைக்காய்
  8. பரங்கி
  9. வாழைக்காய், வாழைப்பூ மற்றும் வாழைத்தண்டு
  10. கொத்தவரங்காய்
  11. சேனை
  12. சேப்பக்கிழங்கு
  13. உருளைக் கிழங்கு
  14. கருணைக் கிழங்கு
  15. முள்ளங்கி
  16. கீரை ரகங்கள்
  17. கேரட்
  18. முட்டைக்கோஸ்
  19. மல்லி
  20. புதினா
  21. கருவேப்பிலை
  22. டர்னிப்
  23. கோவக்காய் 
  24. வாழைப்பழங்கள்
  25. கொய்யாப்பழம்
  26. நாவல் பழம்
  27. சீதா பழம்
  28. பனம்பழம்
  29. வெள்ளரிப் பழம்
  30. திராட்சைப் பழம்
  31. மாம்பழம்
  32. பலாப்பழம்
  33. மாதுளை
  34. சாத்துக்குடி
  35. ஆரஞ்சு
  36. ஆப்பிள் 
Picture
இப்படி ஏராளமான நம் ஊரில் விளையும் (வெளிநாட்டில் இருந்து நம் ஊருக்கு வந்திருந்தாலும் சரி) காய், கனி, கிழங்கு & கீரை வகைகள் பற்றி எழுதவிருக்கும் இத்தொடருக்கு வாசகர்கள் ஆதரவு தர வேண்டுகிறேன்.
 
வாய்ப்பு தந்த அகல் மின்னிதழ் ஆசிரியருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
 
நட்புடன்

பூர்ணிமா 
0 Comments

காட்சிப் படிமங்களிலிருந்து... செளமியா. N

8/21/2019

0 Comments

 
அன்பு காலாவதியாகிவிட்டது!
**************************
எப்போதும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் நிமிடங்களை கை கொள்வது எனக்கு இயலாத சூழல்.
 
பஸ்ஸுக்கு காத்திருப்பது என்ன அவ்வளவு கொடுமையானதா என நீங்கள் நினைக்கலாம் ஆமாம் கொடுமையானது தான். எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்வு என்னை தொடர்ந்து கொண்டேயிருப்பதை உங்களால் உணர இயலாது. காலம் அதன் மூர்க்கத்தனங்களை உமிழ்ந்து எழுந்ததில் விழுந்த நிழலில் எனது உயிர் வலிக்கக்கச் செய்த கொடூரம் அது.
 
“அக்கா... ஒரே ஒரு புக்கு வாங்கிக்கக்கா... வந்ததுல இருந்து ஒன்னுமே விக்கல. ஒன்னே ஒன்னு வாங்கிக்கக்கா" கைகள் நிறைய புத்தகங்களோடும் கண் நிறைய கனவுகளோடும் தனது எளிய வார்த்தைகளால் மார்க்கெட்டிங் செய்யும் சிறுமிக்கு, இதுதான் விற்பனையின் யுக்தி என்பதை யாரும் கற்றுக்கொடுத்திருக்க இயலாது.
விற்பனையாகப் போகும் பென் டென்னும் ஜாக்கி சானும் ஒருவருக்கொருவர் விழிகளை பரிமாறிக்கொள்வதாக வேடிக்கையோடு ஒப்பிட்ட வேளை வேண்டாம் என்று சொல்ல மனமில்லாமல், "எவ்வளவு?" என்றேன்.
 
“ஒன்னு வாங்கினா 20 ரூபா 3 வாங்கினா 50 ரூபா க்கா...” வியாபார யுக்திகளுக்குள் இந்தச் சின்னஞ்சிறு வயது அமிழ்ந்து கிடக்கின்றது. 

Picture
“50 ரூபாக்கு 4 கொடுக்கறியா வாங்கிக்கறேன்” என்றதற்கு பதிலாக, ஆங்கிரி பேர்ட், சோட்டா பீம் ஸ்பைடர் மேன் கூட இருக்கு எடுத்துக்கோங்க என்று புன்னகையை வழங்குகிறாள்.
 
இந்த 50 ரூபாய் அன்றைய இரவில் குடும்பத்திற்கான பசியை போக்கிவிடும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்குமோ?
 
விற்பனை முடிந்து வீடு திரும்பும் அவளது வருகைக்காக பற்றுவதற்கு தயாராக சின்னஞ்சிறிய தணல்கள் காத்திருக்கக்கூடும். விற்றுத்தீரும் புத்தகத்தின் மதிப்பிற்கு ஏற்றவாறுதான் அன்றைய இரவும் அதைத் தொடரும் பகலுக்கான உணவும் என்பதாகக் கூட இருக்கக்கூடும்.
 
எனது எண்ணத்தை தடை செய்த அவளது குரலில் அவ்வளவு வாஞ்சை. என்னைக் கொல்லும் கூரிய கொடிய ஆயுதமது.
 
“அக்கா அக்கா எனக்கு ஒரே ஒரு ஸ்கூல் பேக்கும், எழுதறத்துக்கு ஒரு நோட்டும் வாங்கித்தரியா?” என்ற போது அவளது கண்கள் ஒரு கணம்... ஒரே ஒரு கணம்... நான் அவள் காலடியில் விழுந்திருக்கலாம் தான்.
 
நிறுத்தத்தில் காத்திருந்த நிமிடங்களைத் தொடர்ந்து, விளக்குகள் அணைக்கப்பட்ட பேருந்தின் உள் வழியும் ஒளியாகத் தெரிவது... அந்தச் சிறுமியின் இரு கண்கள் தான். வறுமையின் நிறம் கறுப்பு என்பதை உணர முடிந்த வேளை காதுகளுக்குள் ரீங்கரிக்கும் அந்தக் குரல் அதன் சின்னஞ்சிறிய அலகுகளால் என்னை வதைத்திருக்கலாம் தான்.
 
"பகிர்ந்துக்கொள்ளப்படும் அன்பைப் போல உன்னதமானது எதுவுமேயில்லை" டால்ஸ்டாயின் வார்த்தைகளை இறுகப்பற்றியிருந்த எனது விரல்கள் மெல்ல மெல்ல அலைந்து திரிந்து துழாவும் திசையில் நீலம் பூத்த அவளது கண்களை என்றேனும் நான் சந்திக்ககூடும்.
 
காலமே... அப்போது அவளது அன்பைப் பெறும் சூழலை மட்டும் எனக்குக்கொடுக்காதிரும்.

 
0 Comments

கவிச்சிந்தனைகள் – பாரியன்பன் நாகராஜன்

8/21/2019

0 Comments

 
என்மீது நிழல்பரத்தும்
தென்னைக்கு அப்படியே
என் தாயின் சாயல்
 
நாளெல்லாம் தேடியும்
அகப்படவேயில்லை
ஆகாயத்தின் அஸ்திவாரம்

Picture
பஞ்சம் பிழைக்க
வெகுதூரம் போன பறவை
திரும்புகையில் மெலிந்திருந்தது
 
என்னிதய ஆசனத்தில்
கம்பீரமாய் வீற்றிருக்கிறாய்
உன்னை எழுப்பிட மனமில்லை

0 Comments

ஊர் சுற்றி... போஜனம் தேடி... – சத்யா GP

8/21/2019

0 Comments

 
அத்தியாயம் – 2 

தமிழகத்தின் தலைநகரில் உள்ள பகுதி நேர உணவகம் பற்றித் தான் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கவிருக்கிறோம். பொதுவாக தமிழகத்தின் தலைநகரமான மெட்ராஸுக்கும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு. முக்கியமாக சொல்ல வேண்டியது விலைவாசி.
 
வீட்டு வாடகை, வியாபார ஸ்தலங்களுக்குரிய கடை வாடகை, காலி மனை விலை, தனி வீட்டின் விலை, அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை என ரியல் எஸ்டேட் தொடர்புடைய அனைத்தும் சிகரம் தொடும் அளவிற்கே மெட்ராஸில் காணப்படுகின்றன. அடுத்து ஆட்டோ, டாக்ஸிக்கான கட்டணங்கள், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பல பேருந்துகள் மாற வேண்டிய சூழல், மின்சார ரயில் பயணக் கட்டணம் குறைவு என்றாலும் ரயில் நிறுத்தங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் இல்லாதிருப்பது, பல்வேறு பகுதிகளில் மின்சார ரயில் வசதியே கிடையாது என்னும் நிலை. இப்படி மக்களின் அன்றாட வாழ்க்கை என்பது அதிகமான “cost of living” சூழலில் தான் என்பதை மக்கள் ஓரளவு பழக்கிக் கொண்டுவிட்டனர் ஆனால் பிழைப்புக்காக தமிழகத்தின் பிற பகுதியிலிருந்து மெட்ராஸ் வந்து வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு ஊர் நினைவும் அதனுடன் இங்குள்ள பெரு நகர வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் புலம்புவதும் வழமையான ஒன்று. 

Picture
உணவைப் பொறுத்தவரை அரிசி, தானியங்கள், எண்ணை வித்துக்கள், காய் கனிகள்... இப்படி எதுவும் மெட்ராஸ் நகர எல்லைக்குள் விளைவதில்லை. பெருவாரியான உணவுப் பொருட்கள் குறிப்பாக காய்கனிகளுக்கு மெட்ராஸின் காவல் தெய்வம் என்றால் அது ஆந்திரா மட்டுமே!
 
அதிகமான கடை வாடகை, தண்ணீர் பிரச்சனை, வேலைக்கு ஆட்கள் கிடைக்காத சிக்கல், போக்குவரத்து நெரிசல் இப்படி பல்வேறு காரணிகளால் உணவுப் பதார்த்தங்களின் விலை மெட்ராஸில் அதிகமே! எனக்குத் தெரிந்து புறநகர் பகுதியில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள 250 சதுரடி அளவு கொண்ட ஒரு கடைக்கு என் நண்பர் தரும் மாத வாடகை 22,000/- ரூபாய். அது தவிர மேல் தளத்தில் கடையில் பணிபுரியும் மூவர் தங்க ஒரு அறைக்கு அவர் தரும் வாடகை 5,000/- ரூபாய். நண்பர் டீ, பலகாரம் மற்றும் பழரசம் விற்பனை செய்யும் கடையை நடத்துகிறார். தினமும் காசு தந்து லாரியில் தண்ணீர் வரவழைக்கிறார். கேனில் குடிநீர் வாங்குகிறார். பணியாளர்களுக்கான தின சம்பளம், தண்ணீர் செலவினம், மின்சாரக் கட்டணம், கடை மற்றும் அறைக்கான மாத வாடகை, கடை நடத்தத் தேவையான பால், கனி, டீத்தூள், காபித்தூள், பூஸ்ட் மற்றும் மளிகைப் பொருட்கள் மற்றும் ஒரு நாள் லாபமாக ஆயிரம் ரூபாய் என்று கணக்கு வைத்துப் பார்த்தால் தினசரி 9,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வியாபாரம் செய்ய வேண்டும் என்கிறார். ஒரு நடுத்தரமான தேநீர் கடைக்காரர் மாதம் முப்பதாயிரம் சம்பாதிக்க வேண்டுமெனில் அவர் வருடத்திற்கு நாற்பது லட்சம் டர்ன் ஓவர் செய்தே ஆக வேண்டும்... இது தான் மெட்ராஸ்.
 
போஜனம் தேடி கட்டுரையில் மெட்ராஸின் விலைவாசி குறித்து ஏன் இவ்வளவு எழுதுகிறேன் என யோசிக்கிறீர்களா? புறநகர் பகுதிகளில் உள்ள கடை வாடகையே இவ்வளவு என்னும் போது நகரத்தின் முக்கிய இடங்களில் வாடகை எவ்வளவு என யோசித்துப் பாருங்கள். அபிராமபுரத்தில் உள்ள ஸி,பி.ராமசாமி ரோடு பகுதியில் கடை, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான வாடகை என்ன என்று தெரிந்தவர்கள் யோசியுங்கள். தெரியாதவர்கள், தெரிந்தவர்களிடம் விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். 2008 ஆம் ஆண்டு நண்பர் ஒருவருக்கு இந்த பகுதியில் வீடு வாடகைக்கு பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அப்போதே டபுள் பெட்ரூம் ஃப்ளாட் வாடகை இருபதாயிரம் ரூபாய்.  
 
அந்த ஸி.பி ராமசாமி ரோட்டில் கடை வைத்திருக்கும் ஒருவர் ஐந்து ரூபாய்க்கு கலந்த சாதங்களைப் பொட்டலம் கட்டி விற்பனை செய்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். நான் சொல்வதெல்லாம் உண்மை.  

Picture
ஸி.பி ராமசாமி ரோட்டில் உள்ள கீர்த்திலால் நகைக்கடையில் இருந்து அபிராமபுரம், ஆர்.ஏ. புரம் என்று உள்நோக்கி செல்லாமல் எதிர் திசையில் பயணித்தால் ஒரு வழிச்சாலை என இடது புறம் சர் சி.வி. ராமன் சாலைக்குள் நுழைய வேண்டும். சர் சி.வி. ராமன் சாலை துவக்கத்திலேயே இடது புறம் அதாவது எம்.ஆர்.எஃப் டயர் ஷோ ரூம் எதிர்ப்புறம், கனரா வங்கி ஏடிஎம் பக்கத்திலே ஐந்து ரூபாய் சித்ரான்ன பொட்டலக் கடை இருக்கிறது.
 
கடையின் பெயர் : லட்சுமி டீ ஸ்டால்.
 
இந்த சாலை எனக்கு மிகவும் பரிச்சயமானது. 2005 வருடம் துவங்கி 2008 ஆம் ஆண்டு வரை, சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தினசரி இந்த வழியே செல்வது வழக்கம். கீர்த்திலால் நகைக் கடைக்கு எதிரே உள்ள பழரசக் கடை, பக்கத்தில் உள்ள கொல்கத்தா சாட் போன்றவற்றில் நெடுங்காலம் குடியிருந்தவன். லட்சுமி டீ ஸ்டாலுக்கும் ஏகப்பட்ட முறை சென்று ரிலாக்ஸ் செய்தவன். பக்கத்தில் உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசியல் புத்தகம் வாங்கிப் படிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தவன் ஆனால் அப்போதெல்லாம் எனக்கு ஐந்து ரூபாய் உணவகம் பற்றித் தெரியாது. போஜனம் தொடர் எழுதத் துவங்கியவுடன் நண்பர் ஒருவர் இந்த உணவகம் பற்றி சொல்லி ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். கடைக்குப் போய் பார்த்தேன். நண்பரின் கூற்று உர்ஜிதமானது.
 
மலிவு விலையில் தரமான உணவினை சுகாதாரமான சூழலில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதல்வர் அம்மா தன் ஆட்சிக் காலத்தில் அம்மா உணவகங்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துவக்கி மக்களின் பசியைப் போக்கினார்.   
Picture
லக்ஷ்மி டீ ஸ்டாலை நடத்தி வரும் கணேசன் அவர்கள் 25 வருடங்களுக்கு முன்பு ஐந்து ரூபாய்க்கு பொட்டல சாதத்தை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். வருடங்கள் செல்ல செல்ல விலைவாசி எகிறினாலும் வைராக்கியத்தோடு விலையை உயர்த்தக் கூடாது என்று விற்பனை செய்கிறார். இரண்டு முறை மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தால் உணவின் அளவை சிறிது குறைத்தாலும் ஐந்து ரூபாய் விலைக்கே விற்பனையைத் தொடர்ந்து செய்து வருகிறார்.    
 
இரண்டு பாக்கெட் அல்லது மூன்று பாக்கெட்டுகள் வாங்கி சாப்பிட்டால் கண்டிப்பாக வயிறு நிறையும் என்று கடையின் ஸ்தாபகர் மட்டுமல்ல சாப்பிடுபவர்களும் தவறாது சொல்கிறார்கள். பார்ஸல் மட்டுமல்லாது கடையில் ஒரே சமயத்தில் ஆறேழு பேர் அமர்ந்து சாப்பிடும் விதத்தில் வடிவமைப்பு உள்ளது. நிறைய பேர் கடைக்கு வெளியே நின்றபடி சாப்பிடுகிறார்கள்.
 
கலந்த சாதம் மட்டுமில்லை. பார்ஸலில் தக்காளி சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் மற்றும் சாம்பார் தருகிறார்கள். சாம்பார் சாதம், மற்றும் தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் தருகிறார்கள். அங்கே அமர்ந்து சாப்பிடுபவர்கள் அருகிலேயே ஊறுகாய் ஏனம் மற்றும் சாம்பார் வாளியை வைத்து விடுகிறார்கள். சிலர் சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சாம்பார் வாளியிலிருந்து காயாக அரித்து எடுத்து போட்டுக் கொண்டு சாப்பிடுவதையும் பார்க்க முடிந்தது.
 
25 கிலோ அரிசி ஆயிரம் ரூபாய், தக்காளி, தயிர், சாம்பாருக்கான காய், எண்ணை, ஊறுகாய் என அனைத்திற்கும் சேர்த்து இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்தி ஐநூறு ரூபாய் வரை செலவாகும் என்கிறார். தக்காளி, வெங்காயம் மற்றும் காய், எண்ணை விலை அதிகமானால் மூன்றாயிரம் ரூபாய் வரை மொத்த செலவினம் என்றும் சொல்கிறார் கணேசன்.  

Picture
 இந்த வியாபாரத்திற்கு என்று தனியாகப் பணியாளர்கள் யாரையும் அவர் அமர்த்திக்கொள்ளவில்லை. கணேசன் அவர்களின் மகன் ராஜூ இந்த கடைக்கு அருகே ஒரு துரித உணவகத்தை நடத்தி வருகிறார். அங்கு சமையல் வேலை செய்பவர்கள் சாம்பார், தக்காளித் தொக்கு, எலுமிச்சை சாதத்திற்கான கலவை போன்றவற்றைத் தயாரித்து தந்துவிடுகிறார்கள். இங்கு உலையில் சாதம் வடித்து அனைத்து சித்ரானங்களையும் தயார் செய்கிறார். இப்படிச்செய்வதால் பணியாளர் சம்பளம் என்ற செலவு தமக்கு இல்லை அதுவும் குறைவான விலைக்கு விற்பனை செய்வதற்கு உதவியாக இருக்கிறது என்கிறார் உரிமையாளர்.   
 
ஐந்து ரூபாய்க்கு சாதம் என்பதை சிலர் தகுதி குறைவாக கருதுவதால் பத்து ரூபாய்க்கு ரெண்டு பொட்டலங்கள் என்று சொல்லி விற்பனை செய்கிறார். கடையில் உள்ள டீ மாஸ்டர் மணி, கல்லாவில் உள்ள கேஷியர் சிவா ஆகியோருக்கு, கடை குறித்து பலர் உயர்வாகப் பேசுவதையும், கடை முதலாளி செய்யும் சேவை குறித்து அனைவரும் ஸ்லாகிப்பதையும் கண்டு பெருமித உணர்வோடு இருக்கிறார்கள்.
 
கேஷியரிடம் சித்ரான்னம் மட்டும் தானா டிபன் போன்றவையும் உண்டா என்று கேட்டேன்.
 
“டீ, காபி, பஜ்ஜி, வடை இது மாதிரி பலகாரம் உண்டு சார். மதியம் மட்டும் சாப்பாடு”
 
“என்னென்ன சாதம் போடுறீங்க ஜி?”
 
“சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம்... சில நாள் லெமனுக்குப் பதிலா புளியோதரை”
 
“எவ்வளவு சாதப் பாக்கெட் சேல்ஸ் ஆவுங்க?”
 
“ஒரு நாளைக்கு நாலு வெரைட்டி சேர்த்து மொத்தமா ஆயிரத்துல இருந்து ஆயிரத்தி இருநூறு பாக்கெட் போடுவோம்”
 
“மதியம் எப்போ வியாபாரம் ஆரம்பிக்கும்”
 
“கரெக்டா பன்னிரெண்டே கால் மணிக்கு ஸ்டார்ட் பண்ணுவோம்”
 
“எப்போ முடியுங்க?”
 
“அது சொல்ல முடியாதுங்க, சில நாள் கால் அவர்ல தீர்ந்து போயிரும், எப்படிப் பார்த்தாலும் அதிகபட்சம் ஒரு மணி வரைக்கும் தாங்கும் அவ்வளவு தான். அதுக்குன்னு பன்னிரெண்டு அம்பதுக்கு யாரும் வராதீங்க, பன்னிரெண்டே காலுக்கே நம்ம கடைக்கு வாங்க ப்ளீஸ்”
 
மழை முழுதும் பொய்த்துப் போகாமல் அவ்வப்போது மெட்ராஸில் பொழிகிறது என்றால் அதற்கு கணேசன் போன்றவர்களே காரணம்!  
0 Comments

கவிதைப் பக்கம் – சரஸ்வதி தியாகராஜன்

8/21/2019

0 Comments

 
தாகம் 
மலரைப் பார்த்து 
மலரா மொட்டுக்கு 
மலரும் தாகம். 
 
தாவணி கட்டும்
தமக்கை கண்டு
தங்கைக்கும் உடுத்த
தணியாத தாகம். 
 
ஊர்தியில் செல்பவரை
ஊர்ந்து செல்பவர்
உற்று நோக்கையில்
ஊறும் தாகம். ​
Picture
இல்லா வழிகளை
இல்லையென அறிந்து
இருக்கும் சுகத்தை
சுகித்து வாழ
திறக்கும் வழிகளை
திறவாக் கதவுகள். 
 
இதற்கு நேரம்
எதற்கும் எவர்க்கும் 
வரும் வரும்!!

 
0 Comments

ரெடி 1...2...3... சந்திரயான்ஸ் – கார்த்திக் ஸ்ரீநிவாசன்

8/21/2019

2 Comments

 
இந்திய ஜனாதிபதி 2019 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்" என்ற பாடலை மேற்கோள் காட்டிப் பேசினார்,  பாரதி விரும்பியதைப் போலவே பாரதம் அதீத வேகத்தில் அறிவியல் வளர்ச்சியை அடைந்து வருவதாகவும் கூறினார். "பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்", எனத் தொடங்கும் பாரதியின் பாடலில் இந்த வரிகள் வரும்.
 
பாரதி கண்ட கனவிற்கேற்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISRO, செயற்கைக் கோள் ஏவுதல் மற்றும் அது சம்பந்தமான ஆராய்ச்சிகள் மட்டுமல்லாமல், சந்திரன், செவ்வாய், சூரியன், சுக்கிரன் போன்றவற்றிற்கும் தன் ஆராய்ச்சிகளை நீட்டித்து இரு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை.   ​

Picture
ந்திரன் பற்றிய ஆராய்ச்சிகள் இந்திய விண்வெளித் துறைக்கு மிகப்பெரும் உந்துதலுடன் கூடிய வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுவரை சந்திரனுக்கு அனுப்பப்பட்டவை இரண்டு "யான்"கள், அதாவது வாகனங்கள். சந்திரயான் - 1 மற்றும் சந்திரயான் - 2. இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு சந்திரயான் - 3 சந்திரனுக்கு செல்லும்!
 
சந்திரயான் - 1
 
சந்திரயான் திட்டம், 2003 ஆகஸ்ட் மாத சுதந்திர தினத்தன்று அப்போதைய பிரதமர் திரு வாஜ்பேயி அவர்களால் அறிவிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்டாலும், 1999/2000 ஆண்டு முதலே இது பற்றிய முன்னெடுப்புகளை இந்திய அறிவியல் அகடமியும், இந்திய வானியல் குழுமமும் எடுத்து வந்தது. இதன் தொடர்ச்சியாக இஸ்ரோ (ISRO - Indian Space Research Organization), பல்துறை அறிவியலாளர்கள் கொண்ட தேசிய சந்திரன் திட்டப் பணிக்குழுவை (National Lunar Mission Task Force) நியமித்தது. அப்பணிக்குழு, தன் அறிக்கையில், இந்தியாவிடம் (இஸ்ரோவிடம்) சந்திர ஆய்வுக்கு உண்டான தொழில்நுட்பம் இருப்பதாக 2003 ஏப்ரலில் சொன்னது. இதனை அடுத்தே 2003 ஆகஸ்ட் சுதந்திர தின உரையில் அப்போதைய பிரதமர் சந்திரயான் திட்டம் பற்றி அறிவித்தார். அதன் பிறகு 2003 நவம்பர் மாதத்தில் அரசு அதற்கான ஒப்புதலையும், நிதி ஆதாரங்கள் குறித்தான ஆணைகளையும் அளித்தது. அரசின் ஆணைக்கிணங்க, சந்திரயான் திட்டத்தின் நோக்கங்கள் வரையறை செய்யப்பட்டன. அவை:
 
1. உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே வடிவமைக்கப்பட (design) வேண்டும்
 
2. உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே உருவாக்கப்பட (produce) வேண்டும்
 
3. உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே விண்ணில் செலுத்தப்பட (launch) வேண்டும்
 
4. அனுப்பப்படும் விண்கலம் செய்ய வேண்டியவை:
 
(அ) சந்திரனின் முப்பரிமாண வரைபடம் (map) தயாரிக்க வேண்டும், அதில் அதன் நிலம் பற்றிய நீளம் – அகலம் - உயரம் ஆகியவை ± 5 மீட்டர்கள் துல்லியத்தில் இருக்க வேண்டும்.
 
(ஆ) சந்திரனின் மண் எந்தெந்த வேதியல் பொருட்கள், கனிமங்கள் மற்றும் கதிரியக்கப் பொருட்கள் கொண்டது என்பதை கண்டு பிடிக்க வேண்டும். சந்திரனின் ஒரு வேதியல் வரை படத்தையும் (chemical imaging) தயாரிக்க வேண்டும், அதாவது, எந்தந்த இடத்தில் எவ்வகைப் பொருட்களின் அடர்த்தி அதிகம் உள்ளது என அறியும் ஒரு தகவல் படம் தயாரிக்க வேண்டும்.
 
(இ) சந்திரனின் நிலத்தை மோதி, தெறிக்க விட்டு, அதில் இருந்து சிதறும் துகள்களை ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக Moon Impact Probe எனும் ஆய்வுக்கருவியை அனுப்ப வேண்டும்.
 
இந்த நோக்கங்கள் அறிவிக்கப்பட்ட பின், நாசா (NASA - National Aeronautics and Space Administration) உட்பட, பல வெளிநாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இஸ்ரோவோடு சேர்ந்து ஆய்வு செய்ய முன் வந்தன. அவ்வாறு முன் வந்த நிறுவனங்களுக்கு, அதன் ஆய்வுக் கருவிகளை இலவசமாக சந்திரனுக்கு எடுத்து செல்ல இஸ்ரோ முடிவெடுத்தது.   
​
Picture
சந்திர வாகனம் எடுத்துச் சென்ற ஆய்வுக்கருவிகள்  :
 
1. நில வரைபட நிழற்படக்கருவி (Terrain Mapping Camera - TMC) - இந்தியத் தயாரிப்பு - இது ±5 மீட்டர்கள் துல்லியத்தில் வரைபடம் தயாரிக்க உதவியது.
 
2. உயர் அலைக்கற்றை பிம்பக்கருவி (HySI - Hyper Spectral Imager) - இந்தியத் தயாரிப்பு - இது கனிம வளங்களை கண்டுபிடிக்க உதவக் கூடியது.
 
3. தூர வரையறை அகச்சிவப்பு சீரொளிக் கருவி (LLRI - Lunar Laser Ranging Instrument) - இந்தியத் தயாரிப்பு - நிலப்பரப்பின் உயரங்ககளை அளக்க உதவக் கூடியது.
 
4. உயர் ஆற்றல் காமா மற்றும் எக்ஸ் - ரே நிற மாலைக் கருவி (HEX - High Energy gamma/x-ray spectrometer) - இந்தியத் தயாரிப்பு - கதிரியக்கப் பொருட்களின் இருப்பு, அளவு மற்றும் அடர்த்தியை அளக்கக் கூடியது.
 
5. சந்திர மோது கருவி (MIP - Moon Impact Probe) - இந்தியத் தயாரிப்பு - சந்திரனின் நிலப்பரப்பின் மீது வேகமாக மோதி, அதனால் சிதறும் துகள்களை ஆய்வு செய்ய உதவக்கூடியது. இந்தக்  கருவி, மேலும் சில துணைக்  கருவிகளைக்  கொண்டிருந்தது, அது பற்றி பிறகு பார்க்கலாம்.
 
6. எக்ஸ் - ரே நிற மாலை ஒளிர்வுக் கருவி (C1XS - X-ray fluorescence spectrometer) - இந்திய மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுத்துறைகளின் கூட்டுத் தயாரிப்பு - இது சில வேதியல் பொருட்களையும், சூரிய ஒளிர்வையும் அளக்கும் கருவி
 
7. தாழ் - ஆற்றல் அணுப் பிரதிலிப்பு பகுப்பாய்வுக் கருவி (SARA - Sub-keV Atom Reflecting Analyser) - ஐரோப்பிய விண்வெளித் துறை தயாரிப்பு - சந்திரனின் மேற்பரப்பில் உள்ள கனிமக் கலவைகளை பற்றிய ஆய்வுகளை செய்யக் கூடியது.  
 
8. சந்திர கனிம படப்பிடிப்புக் கருவி (M3 - Moon Mineralogy Mapper) - அமெரிக்கத் தயாரிப்பு - கனிம வள வரைபடத் தயாரிப்புக்கு உதவக் கூடியது.
 
9. தாழ் அகச்சிவப்பு நிறமாலைக் கருவி (SIR2 - Near infrared Spectrometer) - ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத் தயாரிப்பு - கனிம மூலக்கூறு ஆய்வுக்கானது, இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் 2003 ஆம் ஆண்டு அனுப்பிய கருவியின் (SIR1) நீட்சி.
 
10. கதிரியக்க அளவு மானி (RADOM - 7, Radiation Dose Monitor Experiment) - பல்கேரியத் தயாரிப்பு - சந்திரனின் பரப்பில் எவ்வளவு கதிரியக்கம் இருக்கிறது என அளவிடக் கூடிய கருவி.
 
11. மிக முக்கியமான கருவி – Mini - SAR எனப்படும் Synthetic Aperture Radar – நாஸா + இஸ்ரோ கூட்டுத் தயாரிப்பு. சந்திரனின் துருவப் பகுதியில் இருக்கும் நீர் மூலக்கூறுகள் பற்றி ஆராய உதவிய கருவி. சந்திரனில் தண்ணீர், திட வடிவில் இருப்பதை உறுதிப்படுத்தியது.
 
கருவிகளின் பட்டியல் கண்ணைக் கட்டுகிறது, இது பற்றிய மேலதிக விவரங்களை பிறகு பார்க்கலாம். அதற்கு முன், இந்தியா ஏன் இந்த ஆய்வுகளை செய்ய வேண்டும் எனப் பாப்போம். 
 
சந்திரனில் ஒரு ஆய்வுக் கலத்தை இறக்கி, இந்தியக் கொடியை அங்கே நிறுவுவது இந்தியா தன்  இருப்பை நிலவில் தக்க வைத்துக் கொள்ளவே.     

Picture
சந்திரயான் - 1, சந்திரனில் நீர் மூலக்கூறுகளின் இருப்பை முதலில் உலகிற்கு அறிவித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாம் சந்திரயான் - 1 க்கு பிறகு பார்க்கப்போகும் சந்திரயான் - 2, இதுவரை இஸ்ரோ எடுத்துக் கொண்ட திட்டங்களிலேயே மிகவும் சிக்கலான ஒன்று! இந்தத் திட்டத்தின் முதன்மையான இரண்டு நோக்கங்கள் - சந்திரனில் நீர் பற்றியும், ஆரம்ப கால சூரிய குடும்பம் மற்றும் அதன் உருவாக்கம் பற்றியும் அறிவதாகும். இவை எல்லாம் அறிவியல் சார்ந்த விஷயங்கள் - அறிவியலைத் தவிர இஸ்ரோவிற்கு இருக்கும் மற்றொரு நோக்கம், வளி வர்த்தகம்.
 
பூமியைச் சுற்றும் செயற்கைக் கோள்களை ஏவும் வர்த்தகத்தில் இந்தியா, அதன் குறைந்த விலை ராக்கெட்டுகள் காரணமாக முன்னிலை வகிக்கிறது, அதே போல, சந்திரனுக்கு இனி ஏவப்படும் செயற்கைக் கோள் வர்த்தகத்திலும் முன்னிலை பெரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது நல்ல விஷயமா என்றால் நிச்சயம் இந்தியாவிற்கு நல்ல விஷயம்தான், ஆனால் உலகில் அனைவருக்கும் நல்ல விஷயமா என்றால் நிச்சயம் இல்லை!
 
இஸ்ரோ ஒரு அரசு சார்ந்த நிறுவனம் என்பதாலும், அதன் ராக்கெட்டுகள் விலை மலிவாக இருப்பதாலும், அமெரிக்க நிறுவனங்கள், வளி வர்த்தகத்தை இந்தியா, முற்று - முழுதாக வளைத்துப் போட்டு விடும் என அஞ்சுகின்றன.
 
COMSTAC என்று ஒரு அமைப்பு இருக்கிறது - Commercial Space Transportation Advisory Committee - இது ஒரு அமெரிக்க நிறுவனம், அமெரிக்க அரசிற்கான வளி பற்றிய விஷயங்களிலும், அதன் வர்த்தகம் பற்றியும் அமெரிக்க அரசிற்கு ஆலோசனைகளை வழங்கும்.
 
இந்நிறுவனம்  அமெரிக்க அரசிற்கு கொடுத்துள்ள ஒரு அறிக்கையில், இந்தியாவின் அரசு சார்பு நிறுவனமான இஸ்ரோவை மேலும் வளர அனுமதித்தால், அது அமெரிக்க வளி வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க அரசும், அமெரிக்க தனியார் நிறுவனங்களும் முன்னெடுத்துள்ள பல வளி வர்த்தகங்கள் எவ்வகையில் எல்லாம் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது.
 
கடந்த மூன்று வருடத்தில் மட்டும் இஸ்ரோவின் வருமானம் இந்திய ரூபாய் மதிப்பில் 5000 கோடிகளைத் தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணம் அப்படியே அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய பணம் என்பது அந்நிறுவனத்தின் கருத்து,
 
முதலில் அறிவியல், இரண்டாவது வர்த்தகம் - அதோடு முடியவில்லை விஷயம், மூன்றாவதாக அரசியலும் இருக்கிறது.
 
பத்தாண்டுகளில், பூமியை சுற்றும் விண்வெளி நிலையங்கள் போய், நிலவில் விண்வெளிக் கூடங்கள் உருவாகும். சந்திரன் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான ஒரு தற்காலிக தங்கு விடுதியாகவும் எதிர்காலத்தில் மாறும் சாத்தியக்கூறுகள் அதிகம். அடுத்த நூற்றாண்டில், சந்திரனில் மனிதர்கள் வாழ காலனிகள் உருவானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அப்போது, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ஒன்று, சந்திரனில் பிரதிநிதித்துவம் பெறாமல் போவது சரியல்ல, அதனால், இந்தியா நிச்சயம் சந்திரப் பயணங்கள், செவ்வாய்ப் பயணங்கள், அதனைத் தாண்டிய ஆராய்ச்சிகளில், தன்னை முன்னிலைப் படுத்தியே தீரும்.
 
நாளை நிரந்தரக் காலனிகள் சந்திரனில் அமையும் பட்சத்தில் உலகம் இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு மேலே செல்ல முடியாது. வீட்டோ அதிகாரத்துடன் கூடிய சந்திரனுக்கான முடிவெடுக்கும் நாடுகள் குழுவில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இருக்கும். இந்தியா வளி ஆய்வுகளை முன்னெடுக்காவிட்டால், இந்தியாவிற்கு ஐநாவில் ஏற்பட்ட நிலை நாளை வளி விஷயங்களிலும் ஏற்படும்.
 
உலகில் ஆறில் ஒரு பங்கு மக்களைக் கொண்ட நாட்டிற்கு ஐநாவின் நிரந்தரப் பிரதிநிதித்துவம் இல்லை என்றால் அங்கே ஜனநாயகம் இல்லை என்றே பொருள் - ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது, சர்வதேச ராஜதந்திரம் என்பது இரக்கமற்றது, நியாயமற்றது.
 
நாளை சந்திரனில் காலனிகள் அமையும் போது இந்தியாவின் சொல் சபையேறும், ஐநாவில் இந்தியா ஒதுக்கப்பட்டது போல வளி அரசியலில் உலகம் இந்தியாவை ஒதுக்கி விட முடியாது!
 
(தொடரும்)
 

2 Comments

சிறுகதை – சத்யா GP

8/21/2019

0 Comments

 
மனசு
அதே அடுக்கு மாடிக் குடியிருப்பு ஆனால் சொந்த வீடு (லோனில் இருந்தாலும்!) அந்த உணர்வு காரணமாய் கொஞ்சம் சந்தோஷமாகத் தான் திவ்யா உணர்ந்தாள். மெட்ராஸ் வந்து ஆறு வருடம் ஆகிவிட்டது. 2 வருடம் வொர்க்கிங் வுமன் ஹாஸ்டல் அடுத்து காதல் திருமணம் கீழ்ப்பாக்கம் டெயிலர்ஸ் ரோட்டில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் குடித்தனம். அது கூட அவள் சௌகரியத்திற்காக! ரமேஷ் அந்த ஏரியாவில் வாடகை கூடுதல் என்றாலும் வீடு பார்த்தான். நான்கு வருடம் அங்கு குப்பை கொட்டி இதோ இப்போது சொந்த வீடு.
 
சென்னைக்கு வெளியே மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், கிழக்கு தாம்பரம் ரோடு போன்ற பகுதிகளுக்கு நடுவாந்திரமாக ஒரு ஃப்ளாட். ரமேஷின் அலுவலகம் அருகாமையில்! ஏதோ ஒரு சலிப்பு காரணமாக திவ்யா வேலைக்குப் போவதை நிறுத்தி விட்டிருந்தாள். ஒரு ஆன்லைன் போடிக் ஷாப் நடத்தி வருகிறாள். குழந்தை இல்லை என்பது அவர்கள் இருவருக்கும் உள்ள ஒரு குறை. அது தவிர்த்து எந்தவொரு மனக்கிலேசமும் இல்லை. ரமேஷுக்கு ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்கிற ஆசை உண்டு ஆனால் திவ்யா அதில் ஈடுபாடு காட்டவில்லை. ரமேஷும் கட்டாயப்படுத்தவில்லை.      ​
Picture
மூன்று பெட் ரூம் ஃப்ளாட், இரண்டு விஸ்தாரமான செடித் தொட்டிகள்  வைக்கக்கூடிய அளவுக்கு பால்கனி. முதல் மாடியில் வீடு. வாசலில் கோலம் போடும் அளவுக்கு போதிய இடம். அகலமான வழி கொண்ட மாடிப் பட்டிக்கட்டுகள். லிஃப்ட். இத்தனையும் இருந்த போதும் நம்ம கும்பகோணம் வீடு போல் வராது என திவ்யாவும், நம்ம மதுரை வீடு மாதிரி இல்லை என்று ரமேஷும் நினைப்பதை ஏனோ மாற்றிக் கொள்ளவில்லை.
 
டெயிலர்ஸ் ரோடு போல் இங்கு இல்லை. பக்கத்தில் அண்ணாச்சி கடை, காலை நான்கு மணிக்கு அடுப்பு பற்ற வைக்கும் சேட்டன் டீக்கடை. மார்கழி மாதத்தில் விடிகாலை கலர்ப்பொடி கொண்டு கோலத்தில் ஜொலிக்கும் தனி வீடுகள் என திவ்யா பூரிக்க நிறைய விஷயங்கள் அக்கம்பக்கத்தில் இருந்தன.
 
புது வீடு வந்து மூன்று நாட்கள் வீட்டை ஒழுங்காக்கி, ஷிஃப்டிங் வேலை முழுமையாக முடித்து சமையலை திவ்யா துவக்க, ஆஃபிஸுக்கு லீவ் போட்டிருந்த ரமேஷும் வேலைக்கு கிளம்பிப் போனான்.
 
காலை பத்து மணி. திவ்யா லேப் டாப்பை உயிர்ப்பித்து தனக்கு வந்த மின்னஞ்சல்கள், ஆன்லைன் போட்டிக் தொடர்பான வியாபார விசாரணைகள், பேஸ்புக்கில் சொந்த வீடு புகைப்பட அப்லோட் (மறக்காமல் சொந்த வீடு எப்படி இருக்கு ப்ரெண்ச்? என்னும் தலைப்பு) என சகலமும் முடித்த போது மணி மதியம் ஒன்று முப்பது. சாப்பாட்டை முடித்து அடுத்து மொபைலில் வாட்ஸப் புகுந்து சில விடியோக்கள் பார்த்து சிரித்து, நேரத்துக்கு சாப்பிடு என ரமேஷுக்கு மெசேஜ் அனுப்பி “கடமைகளை” முடித்த போது மணி மாலை மூன்று.
 
கிழக்கு தாம்பரம் சாலையில் கொஞ்சம் தூரம் போய் சின்ன பர்சேஸ் செய்து வரலாம் என யோசித்து தன் ஆக்டிவாவில் புறப்பட்டாள்.
 
சாலையில் பயணிக்கும் போது ஒரு போர்டைப் பார்த்தவுடன் அவள் வண்டியை நிறுத்தினாள். வெளியே இருந்த போர்டில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணைப் பார்த்து டயல் செய்து ‘ஏதோ கேட்டாள்’, எதிர்முனையில் வந்த பதில் அவள் முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கியது. வண்டியைத் திருப்பிக் கொண்டு போய் ஒரு ரெஸ்டாரண்ட்டில் நிறுத்தி ஃபில்டர் காஃபி சாப்பிட்டு. பின்பு ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் போய் பர்சேஸ் முடித்து அந்த போர்டு பார்த்த இடத்திற்கு சென்று விவரம் சொல்லி நுழைந்தாள்.
 
உள்ளே ஒரு பெண்மணி இன்முகத்துடன் திவ்யாவை வரவேற்றார். பாந்தமான உபசரிப்பு, அமைதியான முகம் அதைவிட அவரது நோக்கம், அந்த சூழல்...  அனைத்தும் பிடித்துப் போனது. சிறு வயதில் ஒன்றா... இரண்டா எத்தனை நாய்கள்... தெருவில் குட்டி போட்டு... அந்தக் குட்டிகள் தெருவில் பரிதவிக்க... திவ்யாவும் அவள் அம்மாவும் வீட்டிற்கு கொண்டு வந்து வளர்த்திருக்கிறார்கள்.
 
திவ்யா தன்னை சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டாள். அந்த அமைப்பை நடத்தும் பெண்மணி பேசத் துவங்கினார்.
 
“என்ன காரணம்னு சொல்லத் தெரியல, பிராணிகளுக்காக இதை ஆரம்பிச்சோம். நிறைய நோய் வாய்ப்பட்ட தெரு நாய்களை குணப்படுத்தி இருக்கோம். நிறை மாசமா இருக்கற நாய்களை கூட்டிட்டு வந்து பிரசவம் பார்த்து வளர்க்கறோம். நாய் குட்டி வளர்க்கனும்னு கேட்கறவங்க நல்லா வளர்ப்பாங்களான்னு தீர விசாரிச்சு உர்ஜிதப்படுத்தின பின்னாடி வளர்க்க தரோம். அடி மாடுக்குப் போற மாடுகளை காப்பாத்தி வளர்க்கிறோம். எருமையும், பசுவும் அவ்வளவு நாள் பால் தருது, காளை மாடும் ஜல்லிக்கட்டு, செனை பிடிக்கன்னு பல விதத்தில் உபயோகமா இருக்கு ஆனால் வயோதிகம்னு வந்தா அதுகளை அடிமாடுக்கு அனுப்ப மனுஷனுக்கு எப்படித்தான் மனசு வருதோ? சுயநலமே மனுஷனுக்கு பிரதானமாகிப்போச்சு”
 
திவ்யாவிடம் பதில் இல்லை. அந்தம்மாவின் வாடிய முகத்தைப் பார்த்து பேச்சை மாற்ற நினைத்தாள். “பப்ளிக் சப்போர்ட் உங்களுக்கு எப்படி இருக்கு மேம்?”
 
“முதல்ல அக்கம் பக்கம் கேலி, கிண்டல்னு இருந்தாங்க. ‘நிறைய இடம் இருக்கு, பெருசா அப்பார்ட்மெண்ட் கட்டி இருக்கலாம் ஆனா நாய், மாடுன்னு வெச்சுக்கிட்டு சாணி, மூத்திரம் அள்ளுறாங்க, போதாதுக்கு அதுங்க சத்தம் நாராசமா இருக்கு,
ஏதோ பெருசா ஆதாயம் இருக்கும்யா காரணம் இல்லாம தோரணம் கட்டுவாங்களா” இப்படி நிறைய நெகடிவ் கமெண்ட்ஸ். அப்புறம் எங்களை புரிஞ்சுக்கிட்டு தன்மையா பழக ஆரம்பிச்சாங்க. இப்போ அக்கம் பக்கத்துல இருக்கறவங்க முதல் பெரிய வி.ஐ.பின்னு நிறைய பேர் ஹெல்ப் செய்யறாங்க” 
 
‘கிரேட் மேம். நாங்களும் நாய் நிறைய வளர்த்திருக்கோம் எங்க தாத்தா இருக்கும் போது வீட்டுல மாடு உண்டு. இதுல உங்களுக்கு கஷ்டமான விஷயமா எதை மேம் சொல்வீங்க?’ தான் வாங்கி வந்த பெடிக்ரே, பிஸ்கெட், பழங்கள் போன்றவற்றை தந்தபடி திவ்யா கேட்டாள்.
 
“தெருவுல இருக்கிற நாயை கொண்டு வந்து வளர்த்துடலாம் அது சங்கடமே இல்லை ஆனா வீட்டுல செல்லமா வளர்த்துட்டு சடார்னு நாயை கொண்டு வந்து எங்க காம்பவுண்ட் உள்ள விட்டுட்டு போய்டுவாங்க, அதுங்களை கவனிக்கிறது தான் ரொம்ப கஷ்டம். செல்லமா, பிரியமா வளர்த்தவங்க ஏன் நம்மளை இப்படி அனாதையா தவிக்க விட்டுட்டுப் போனங்கன்னு அதுங்களுக்கு உள்ள கேள்வி இருக்கும், கோபம் இருக்கும், இயலாமை இருக்கும், சொல்ல முடியாத துக்கம் இருக்கும். அதனால மனோ நிலை பாதிக்கப்பட்டு இருக்கும். அதுங்களை சரிப்படுத்தி... அது தான் ரொம்ப கஷ்டம்”
 
“ஐயோ இப்படி ஒரு ஆங்கிள்ல யோசிக்கவே இல்லை மேம்”
 
“தீர்க்க முடியாத சிக்கல்களை, ரணத்தை வஞ்சனையே இல்லாம சகல ஜீவ ராசிகளுக்கும் தரதுல மனுஷனை அடிச்சுக்க முடியாது திவ்யா”
 
இருவரும் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு செக் தந்து விட்டு கைகூப்பி திவ்யா விடைபெற்றாள்.
 
இரண்டு நாட்களாக மனம் பல விஷயங்களை அசை போட்டபடி யோசித்தது. சனிக்கிழமை ஆஃபிஸ் லீவ் என லேட்டாக எழுந்த ரமேஷுக்கு காஃபி தரும் போது “ரமேஷ் நீ சொன்ன தத்தெடுக்கற விஷயத்தில் எனக்கும் பரிபூரண சம்மதம் ஆனா?”
 
“என்ன ஆனா?”
 
“அடாப்ட் செய்யற சைல்ட் ஏற்கனவே பேரண்ட்ஸ் கூட வளர்ந்த வாண்டா இருக்கட்டும்”
 
“யூ மீன் அப்பா, அம்மா இருந்து எதானலயோ அவங்க தவறிப் போய்... அப்படித்தானே?”
 
“ஆமா ரமேஷ்”
 
“எனக்கு ஃப்ரெண்ட் ஒருத்தனைப் பாக்கப் போகணும், ஃபார்மலிட்டீஸ் கொஞ்சம் தெரியும், முழுசா க்ளாரிஃபை செய்துக்க ஈவ்னிங் ஒரு ஹோம்க்கு போகலாம்”
 
“இது தான் ரமேஷ் அதிகம் கேள்வி கேட்க மாட்டான் ஆனால் மனசைப் புரிஞ்சுக்கிட்டு நடந்துக்க அவனை மாதிரி யாரும் கிடையாது” – திவ்யா மனம் பெருமிதப்பட்டது. ஈவ்னிங் ஹோம் போவது பற்றியே யோசித்தபடி இருந்தாள்.
 
தன் ஃப்ரெண்ட் தினேஷுக்கு போன் செய்தாள். ‘நான் முடிவு செய்துட்டேன்                                                       
அடாப்ஷனுக்கு ஓகே சொல்லிட்டேன்’
 
‘வாவ்... சூப்பர் என்ன காரணம்? எப்படி இந்த மன மாற்றம்?’ 
 
திவ்யா சொல்ல சொல்ல தினேஷ் மிக கவனமாக கேட்டபடி ஒவ்வொன்றாய் உள் வாங்கிக் கொண்டான்.
 
*****************************************
(கல்கி வார இதழில் பிரசுரமானது)
0 Comments

கடைசிப் பக்கம்

8/21/2019

0 Comments

 
பல சுவாரசியமான அம்சங்களுடன் புரட்டாசி மாத அகல் மின்னிதழ் வெளிவரவிருக்கிறது 
Picture
0 Comments

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    August 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.