Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

முகப்பு

7/19/2019

0 Comments

 
Picture
முதல் பக்கம் :
 
நண்பர்களுக்கு வணக்கம். ஆடி மாத அகல் மின்னிதழ் நம் பார்வைக்கு.
 
இவ்விதழில் –
 
ராணி கணபதி சுப்பிரமணியன் அவர்களின் “திருக்குற்றாலம்”
அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதை “பேச்சுப் போட்டி”
சத்யா GP யின் “கலக்கல் (பேஸ்) புக்”
ராஜிவி நந்தகோபால் அவர்களின் “ஆடிப் பெருக்கு”
சத்யா GP யின் சிறுகதை “நீர் விளையாட்டு”
பாரியன்பன் நாகராஜன் அவர்களின் “கவிதைப் பக்கம்”
சத்யா GP யின் “ஊர் சுற்றி... போஜனம் தேடி...” 
 
நண்பர்கள் இவ்விதழை முழுமையாகப் படித்துவிட்டு தங்களது மேலான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
நண்பர்கள் தங்கள் படைப்புகளை அகல் மின்னிதழுக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
 
பேரன்புடன்
சத்யா GP
0 Comments

திருக்குற்றாலம் – ராணி கணபதி சுப்பிரமணியன்

7/19/2019

3 Comments

 
இத்திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள குற்றாலத்தில் உள்ளது. அருவிகள் சூழ்ந்த குற்றாலம் தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்று. இங்கு பேரருவிக்கு அருகிலேயே இத்திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. சங்கு வடிவில் அமையப்பெற்ற இத்தலம் இரண்டாயிரமாண்டுகள் தொன்மை வாய்ந்தது.
 
"ஒருகத்தி லயனாகி யோருகத்திலரியாகி யுடையதேவனை
பெருகத்தி லரனாக வீற்றிருக்குந் தலமிதுவோ பிரமன் மாய
னாரு கத்து மழியாத வயனா மெந்தை
பூருவத்தின் புண்ணியமோ யான் புரிந்த மாதமோ புகுந்ததம்மா"

 
- திரிகூடராசப்பக் கவிராயர்
 
“குற்றாலக் குறவஞ்சி" எழுதிய திரிகூடராசப்பக்கவிராயரின் இந்தப் பாடல் தல வரலாற்றைக் கூறுகின்றது. 

Picture
இத்தலமூர்த்தி திருமாலாக இருந்திருக்கிறார். அகத்தியர் அவர் தலையில் கை வைத்து "குறு குறு குற்றாலநாதா" என்றபடியே அழுத்திச் சிவலிங்கமாக மாற்றியுள்ளார். இன்றும் மூலவர் மீது அகத்தியர் கைத்ததடம் இருக்கும்.
அகத்தியர் அழுத்தியதால் ஐயனுக்கு உண்டான தலைவலி நீங்க தினமும் அர்த்தசாமப் பூஜையில் ஐயனுக்குத் தைலாபிஷேகம் நடைபெறும். இங்கு குற்றாலநாதருக்குத் திருவனந்தல் பூஜை நடைபெறும் முன் பேரருவிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டு தீர்த்தம் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால் பேரருவிப் பாறைகளில் சிவலிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப் பட்டிருக்கின்றன.
 
இத்தலம் பாடல் பெற்ற தலம். முதலாம் திருமுறையில் "திருக்குற்றாலம் "என்ற பதிகம் இடம் பெற்றுள்ளது.
 
"வம்பார்குன்றந் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண்டி யாழ்செய் குற்றாலம்
அம்பால்நெய்யோ டாடலமர்ந்தா னலர்கொன்றை
 
நம்பான்மேய நன்னகர் போலும் நமரங்காள்"
 
- திருஞானசம்மந்தர்.
 
இத்தல விருட்சம் "குறும்பலா". தல விருட்சத்திற்கு பாடல் பெற்ற ஒரே தலம் என்ற சிறப்பைக் கொண்டுள்ள புண்ணிய திருத்தலம் இதுவே!
 
"திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந் தேவிபாகம்
பொருந்திப் பொருந்தாத வேடந்தாற் காடுறைல் புரிந்தசெல்வர்
இருந்த இடம் வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டுயாழ்செய்
குருந்த மணநாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரர் குறும்பலாவே"

 
- திருஞானசம்மந்தர்
 
11 பாடல் கொண்ட "திருக்குறும்பலா" என்னும் பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. 

Picture
இத்திருக்கோவிலின் கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அம்பாள் குழல்வாய்மொழியாளை மாணிக்கவாசர் திருக்கோவையாரில் பாடியுள்ளார்.
 
"எழில்வா யிளவஞ்சி யும்விரும் பும்மற் றிறை குறையுண்டு
அழல்வா யவிரொளி யம்பலத் தாருமஞ் சோதி யந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன் குற்றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல தில்லையில் பூந்தழையே".

 
இத்திருக்கோவிலில் அகத்தியரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட தரணிபீடம் என்னும் பராசக்தி பீடம் உள்ளது.
 
"அப்பெரும் பீடமன்றே யருட்பரா சக்திபீடம்
ஒப்பரும் பரமயோகத் துறைதலால் யோகபீடம்
தப்பிலா வகில மூலந் தரித்திலாற் தரணிபீடம்
இப்பெரும் பீடத் துள்ளல் இறைவர்பால் எம்பிராட்டி"

 
- திரிகூடராசப்பக் கவிராயர்.
 
கூத்தபெருமானின் பஞ்ச சபைகளுள் ஒன்றான சித்திர சபை இங்கு தான் உள்ளது.
கோவிலிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் தெப்பத்திற்கு எதிரில் உள்ளது.
செப்போடுகள் வேயப்பட்ட அறையில் நடராஜரின் திருவுருவமும் ஈசனின் 64 திருவிளையாடல்களும் மூலிகைச் சாயங்கள் கொண்டு வரையப்பட்டிருக்கும். அதனாலேயே சித்திர சபை எனப் பெயர் கொண்டுள்ளது. மார்கழி ஆருத்ராவில் இந்த நடராஜருக்குத் தாண்டவ ஆரத்தி நடந்த பின் தான் கோவிலிலிருக்கும் நடராஜருக்குத் தாண்டவ ஆரத்தி நடைபெறும்.
 
சித்திரை விசு, ஐப்பசி விசு இந்த இரு உற்சவங்களுக்கும் 7 ஆம் திருநாளன்று நடராஜ மூர்த்தி கோவிலிலிருந்து சித்திர சபைக்குச் செல்வார். அங்கு 8 ஆம் திருநாளில் கூத்தபெருமானுக்கு அபிஷேகமும் தாண்டவ ஆரத்தியும் நடைபெறும்.
மார்கழி திருவாதிரைத் திருநாள் கொடியேற்றத்தின் போது பன்னிரு திருமுறைகளுக்கும் காப்பு கட்டப்படும். சுவாமி சன்னதியில் நடராஜமூர்த்தி மார்கழி உற்சவத்தின் போது கொடித்தடி மண்டபத்தில் எழுந்தருள்வார். அவருக்கு இருகாலம் அபிஷேகமும் தாண்டவ ஆரத்தியும் நடைபெறும். ஐயனுக்கு நாட்டியாஞ்சலி செலுத்தப்படும்.  

Picture
குற்றாலத்திலிருந்து 3 கிமீ தொலைவில் இலஞ்சி என்னும் ஊரில் "திருக்கோவிலிஞ்சிக் குமாரர் கோவில்" உள்ளது. இது இரண்டாயிரமாண்டுகள் தொன்மை வாய்ந்த முருகப்பெருமான் திருக்கோவில். இங்கு எழுந்தருளும் திருவிலஞ்சிக் குமாரர் குற்றாலநாதரின் ஒவ்வொரு உற்சவத்திற்கும் வருகை புரிவார். தந்தையின் உற்சவம் முடிந்ததும் விடைபெறும் இலஞ்சிக் குமாரருக்கு பிரியாவிடை உபச்சாரங்கள் நடைபெறும். பலகார பட்சணங்களும் தந்தை குற்றாலநாதரிடம் பட்டு வஸ்திரமும், பவுன் தங்கமும் பெற்றுக் கொண்டு இலஞ்சி திரும்புவார்.
 
தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் மட்டுமே நடராஜருக்குத் தேர் உண்டு. சிதம்பரம், செப்பறை, குற்றாலம். சித்திரை விசு, ஐப்பசி விசு திருவிழாக்களில் ஐந்தாம் திருநாளிலும், மார்கழி திருவாதிரையன்றும் இங்கு தேரோட்டம் நடைபெறும்.
 
குற்றாலநாதர் கோவிலின் வெளிப்புற வாயிலின் வலதுபுறத்தில் செண்பகவிநாயகர் அரசமரத்தடியில் வீற்றிருக்கிறார். கார்த்திகை சோமவாரங்களில் இந்த விநாயகரை ப்ரதட்சணம் செய்ய தென்காசி சுற்றுவட்டாரப் பெண்கள் கூட்டம் கூட்டமாக வருவர். ப்ரம்ம முகூர்த்த வேளையில் குற்றாலம் நகரே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
ஞாயிறு இரவு 1 மணியிலிருந்து குற்றாலத்திற்குச் செல்ல, பெண்களுக்கென சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். காலை 7 மணி வரை பேரருவியில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. பெண்கள் அருவியில் நீராடிவிட்டு கையில் 11 விரலிமஞ்சள் துண்டுகளை வைத்துக்கொண்டு தீர்க்க சுமங்கலியாய் இருக்க வேண்டுமென வேண்டியபடி இந்த விநாயகரை ப்ரதட்சணம் செய்வர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஒரு மஞ்சள் துண்டை விநாயகர் மீது எறிவர்.
 
திருக்குற்றாலநாதர் கோவிலின் பின்புற வெளிப் பிரகாரத்திலிருந்து 1.மேற்கு முக விநாயகர் 2.மேற்கு சோமலிங்கம் 3.தெற்கு முக சுவாமி விமானம் 4.திரிகூடமலை 5.சித்ர மது கங்கை எனப்படும் பேரருவி இவை ஐந்தையும் ஒரே சமயத்தில் பஞ்ச தரிசனமாகக் காணலாம்.
 
இத்திருத்தலம் முக்தி தலமாகும். அதற்குச் சான்றாக நிறைய பாடல்கள் உள்ளன. அவற்றுள் சில, 

Picture
"உற்றா ராருளரோ உயிர்கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல் லால்நமக் குற்றா ராருளரோ"

 
- திருநாவுக்கரசர்
 
"உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா உன்குரை கழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுனே"

 
- மாணிக்கவாசகர் (திருப்புலம்பல்)
 
"காலன் வரும்முன்னே கண்பஞ்சடை முன்னே
பாலுன் கடைவாய் படும் முன்னே - மேல் விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு"

 
- பட்டினத்தார்
 
திரிகூடராசப்பக் கவிராயர் இத்தலத்தின் வழிபாட்டுப் பலனை,
 
"ஒரு தலத்தில் ஆயிரம் யாண்டுதவுபலன் ஓராண்டில் உதவுங்காசி
அருணைதரும் ஓராறு திங்களின்முத் திங்களிலே யருளும் ஆரூர்
இரு மதியிற் கேதாரம், ஒருமதியிற் கோகருணம்,ஏழுநாளில்
திருவளர்நெல் வேலிதரும் ஒருநாளில் கொடுத்தருளுந் திருக்குற்றாலம்"

 
என்ற பாடலில் கூறுகிறார். 

Picture
 இத்தனைச் சிறப்புகள் கொண்ட இத்திருத்தலத்தை தரிசிக்க பூர்வ புண்ணியம் வேண்டுமெனத் தல வரலாற்றுப் பாடலிலேயே திரிகூடராசப்பக்கவிராயர் கூறுகிறார்.
 
"சீதமழை முகில்பொழிக தேசமெலாம் பயிர்விளைக செல்வ மோங்க
மாதர்குழா மக்கள்குழா மனையறங்க ளுடன்
பொலிந்து மலிந்து வாழ்க
மேதகுசீர்ச் சைவநெறி வேதநெறி தழைத்தோங்க மேலும் மேலும்
பூதமேற் சிவபெருமா னாலயங்கள் பூசனைகள் பொலிக மாதோ"

 
- திரிகூடராசப்பக் கவிராயர்.
 
வற்றாக் குடிநீர் கொண்ட குற்றாலநாதரைக் கண்டு குன்றாத நலமும் வளமும் பெற்றுச் செல்வீர்.
வாழிய எம்மான். 

 
சிவாய நம...  
3 Comments

சிறுகதை – அ. முத்துலிங்கம்

7/19/2019

0 Comments

 
பேச்சுப்போட்டி
சிறுவயதில் அம்மாவுடன் வெளியே போவதற்கு எனக்கு பிடிக்கும். ஒருநாள் அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு பெரியகடைக்கு வெண்கலப்பானை ஒன்று வாங்கவென்று போனார். நாலு கடைகள் ஏறி இறங்கி அவரின் மனதில் இருந்த ஏதோ ஒரு பானையை தேடி அலைந்து கடைசியில் ஒரு கடையில் அதைக் கண்டுபிடித்தார். அந்தப் பானை முப்பது நாற்பது பேருக்கு  சமைக்க ஏற்றதாக இருக்கும் என்று கடைக்காரன் அபிப்பிராயப்பட்டான். அம்மா அதை ஏற்றுக்கொள்ளாமல் அதே போல இன்னும் வேறு பானைகளையும் எடை பார்ப்பதுபோல தூக்கித்தூக்கி ஆராய்ந்தார். பானையின் உள்ளேயும், வெளியேயும், விளிம்புகளையும் தொட்டுத் தடவி உறுதி செய்தார்; டங் டங் என்று தட்டிப் பார்த்தார். அப்படியும் திருப்தி வராமல் பானையை தூக்கி சூரியனுக்கு எதிராகப் பிடித்து முகத்தை உள்ளுக்கு விட்டு ஓட்டை ஏதாவது தெரிகிறதா என்று சோதித்தார். 
Picture
அதன் பிறகுதான் பேரம் ஆரம்பமானது. கடைக்காரன் ஒரு விலை சொல்ல, அம்மா இன்னொரு விலை கேட்க பேரம் படியவில்லை. இறுதியில் அம்மா கோபித்துக்கொண்டு வெளியே புறப்பட, கடைக்காரன் மறுபடியும் கூப்பிட்டான். இப்படி மாறி மாறி நாலு தரம் வெளிநடப்பு செய்தபிறகு அம்மாவும் அவனும் ஒரு விலையில் சந்தித்துக் கொண்டார்கள். அம்மா முந்தானையில் இருந்த காசை பிரித்து கொடுத்துவிட்டு, பானையை கையிலே வாங்கியபோது அவருடைய முகத்து மகிழ்ச்சி கண்கொள்ளாததாக இருந்தது. 
 
ஒரு வெண்கலப்பானை வாங்குவதற்குகூட எவ்வளவு வாக்கு சாதுர்யம் தேவைப்படுகிறது என்று நான் அம்மாவை வியப்புடன் பார்த்தேன்.  அம்மா இப்படி சந்தோசமாக இருப்பதும் அபூர்வம். நான் சொல்லிவிட முடிவு செய்தேன்.
 
'அம்மா, பள்ளிக்கூடத்தில் என்னை பேச்சுப் போட்டிக்கு தெரிவு செய்திருக்கிறார்கள்' என்றேன்.
 
'அப்படியா, அப்படியா' என்று அம்மா நம்ப முடியாமல் கேட்டார். அவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இரண்டு மடங்கானது. பானையை இறக்கி நடுவீதியில் வைத்துவிட்டு நாரியில் இரண்டு கைகளையும் ஊன்றி நின்று நிமிர்ந்து பார்த்தார். யாழ்ப்பாணத்திலேயே மிகப் பிரகாசமான சூரியன் அப்போது காய்ந்து கொண்டிருந்தான். சிறிது நேரம் மௌனமாக இளைப்பாறிவிட்டு என் கன்னத்தை தொட்டு 'சரி, ஆவியுலகத்துடன் பேசுவதை இன்றுடன் நிறுத்து. நீ பேச்சுப்போட்டியில் முதலாவதாய் வரவேண்டும். நேரத்தை வீணாக்கக்கூடாது' என்றார்.
 
நான் சந்தோசப்படுவதற்காக திறந்த வாயை இப்பொழுது துக்கப்படுவதற்காக மாற்றினேன். ஒரே வசனத்தில் அதி மகிழ்ச்சியான ஒரு செய்தியையும் ஆகத் துக்கம் தரும் ஒரு செய்தியையும் கொடுப்பதற்கு அம்மா ஒருவராலேயே முடியும். 
 அம்மா சொன்ன ஆவியுலக விருத்தாந்தம் இதுதான். பக்கத்து வீட்டில் ஆவியுடன் பேசுவார்கள். எங்கள் கிராமத்திலும், இன்னும் அயல் கிராமங்களில் இருந்தும் சனங்கள் இறந்தவர்களுடன் பேச அங்கே வருவார்கள். நாலு பக்கமும் சட்டம் போட்ட ஒரு சதுரக் கண்ணாடியில் சுற்றிவர A,B,C,D என்று எல்லா ஆங்கில எழுத்துக்களும் எழுதியிருக்கும். கண்ணாடி நடுவிலே ஒரு மைப்புட்டியின் மூடியை கவிழ்த்து வைத்து, ஒரு சிறுவனும் சிறுமியும் எதிரெதிராக உட்கார்ந்து மூடியின் மேல் இரண்டு விரல்களால் தொட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த மூடி தானாகவே அசைந்து ஒவ்வொரு எழுத்தாக தொட்டுச் செல்லும். அந்த எழுத்துக்களை குறித்து வைத்து ஆவிகள் என்ன பேசுகின்றன என்பதைச் சொல்வார்கள்.
 
வீட்டுக்காரருடைய மகள் தனலட்சுமிதான் மீடியம். நான்தான் எதிர் மீடியம். ஆணும் பெண்ணும் எதிரெதிராக அமர்ந்தால்தான் மீடியம் முழு விசையுடன் செயல்படுமாம். யாராவது ஆவியுடன் பேச வந்தால் பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு ஆளனுப்புவார். நானும் சந்தோசமாய் சென்று மீடியம் வேலையை செய்துவிட்டு திரும்புவேன். ஒரு நாளாவது அம்மா எந்த விதமான எதிர்ப்பும் சொல்லவில்லை ஆனால் அவருடைய மனது சந்தோசமாக இல்லை என்பது எனக்கு அன்றைக்குத்தான் தெரிய வந்தது. ஆவியுடன் பேசி முடிந்ததும் எனக்கும் தனலட்சுமிக்கும் ஏதாவது தின்பதற்கு தருவார்கள். ஆவிகள் எங்கள் உடம்பு வழியாக இறங்குவதால் எங்களுக்கு களைப்பாக இருக்கும் என்று சொல்லி இந்த உபசாரம் நடக்கும். அதை நானோ தனலட்சுமியோ எந்தக் காலத்திலும் மறுத்தது கிடையாது. அம்மா தடையுத்தரவு போட்ட பிறகு அடுத்த வீட்டிலிருந்து யாராவது என்னை மீடியம் வேலைக்கு தேடி வந்தால் அம்மாவே பதில் சொல்லி அனுப்பிவிடுவார்.
 
‘அங்கே போய்ச் சொல்லுங்கோ அவன் பேச்சுப்போட்டிக்கு பேர் கொடுத்திருக்கிறான் என்று. இரவிரவாக அவன் கண்விழிச்சு பேச்சை பாடமாக்க வேணும். இன்றைக்கு வர ஏலாது. இந்தப் போட்டி முடியும் வரை அவனை கரைச்சல் பண்ண வேண்டாம்' இப்படி இரண்டு மூன்று தடவை நடந்தபிறகு அவர்கள் வேறு ஏற்பாடு செய்து கொண்டார்கள். ஆவியுலகத்துடன் எனக்கிருந்த தொடர்பு இப்படித்தான் திடீரென்று துண்டிக்கப்பட்டது.
 
 பத்துப் பேர் கலந்து கொண்ட எங்கள் பள்ளிக்கூட பேச்சுப் போட்டியில் நான் முதலாவதாக வந்திருந்தேன். அடுத்த சுற்றுக்கு என்னை தயார் செய்யும்படி சரித்திரப் பாடம் கற்பிக்கும் வாத்தியாரை தலைமையாசிரியர் ஏற்பாடு செய்திருந்தார். வடமாகாணத்தில் நடக்கப்போகும் போட்டியில் 20 பள்ளிக்கூடங்களுக்கு மேலாக கலந்து கொள்ளுமாம். எனக்கு பயம் பிடிக்கத் தொடங்கியது. ஆவிகள் தினமும் என் உடம்பில் இறங்கி வந்தபோது ஏற்படாத நடுக்கம் இப்போது ஏற்பட்டது. 
 
 நான் தலைமையாசிரியர் சொன்ன அறைக்கு முன் நின்றேன். சரியாக ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கதவைத் தட்டுவதா அல்லது கூப்பிடுவதா அல்லது தள்ளித் திறந்துகொண்டு உள்ளே போவதா? என்னுடைய 12 வயது வரைக்கும் நான் ஒரு கைப்பிடி வைத்த கதவையோ, குமிழ் வைத்த கதவையோ கண்டதில்லை. எல்லாக் கதவுகளும் எங்கள் ஊர் தச்சு வேலைக்காரர்கள் செய்தவைதான். தள்ளித்தான் திறக்க வேண்டும். திறப்பை துளையினுள் நுழைத்து இழுத்துத்தான் கதவைப் பூட்டவேண்டும்.
 
கடைசியில் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கதவை தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தேன். எல்லாம் என் பேச்சு விசயமாகத்தான். மாஸ்ரர் 'வாவா, உன்னைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தனான்' என்றார். கறுப்பாக சிநேகமாக வெள்ளைப் பற்களால் சிரித்தார். அவர் என்னிலும் பார்க்க பெரிய ஆயத்தத்துடனும், என்னிலும் பார்க்க அதிக உற்சாகத்துடனும் இருந்தது என்னை கொஞ்சம் திடுக்கிட வைத்தது.
 
'சேர், இதுதான் என்ரை பேச்சு' என்று நான் கொண்டுபோன தாள்களைக் கொடுத்தேன். அவர் அதைக் கையில் எடுக்கவில்லை. 'நான் உன்னுடைய பேச்சில் ஒரு வசனத்தையும் மாற்றமாட்டேன். அது அப்படியே இருக்கட்டும். நல்ல பேச்சு. புதிசாக எழுதி பாடமாக்க நேரமும் போதாது' என்றார்.
 
 'ஓம் சேர்'
 
 'சரி. நான் உன்னுடைய சாதகத்தைப் பார்த்தனான். உனக்கு புதன் ஏழாம் இடத்திலே இருக்கு. நல்லாய்ப் படிப்பு வரும்; பிரசங்கமும் செய்வாய். கிரேக்க புராணத்தில் புதன்தான் பேச்சுக்கு அதிபதி. திருடர்களின் கடவுளும் அவன்தான். திருடுவது என்றால் என்ன, தந்திரம் செய்வது. நான் உனக்கு அதைத்தான் சொல்லித் தரப்போறன். எப்படி நிற்பது, எப்படி உச்சரிப்பது, எங்கே குரலை உயர்த்துவது, எங்கே தாழ்த்துவது, எப்பொழுது இடைவெளி விடுவது போன்ற பயிற்சி என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, ஏனென்றால் இன்னொரு முறை பேச்சை எழுதி மனப்பாடம் செய்யச் சொல்லப்போகிறார் என்று நான் அடிவயிற்றில் கலங்கிக் கொண்டிருந்தேன்.
 பயிற்சி தொடங்கியது. ஒரு வாரகாலமாக அவர் சொன்ன நேரத்துக்கு போய் அவரிடம் பல நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன்.
 
'மகாத்மா காந்தி 1869ம் ஆண்டு போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்தார்.' இதுதான் முதல் வசனம். 'மகாத்மா' அல்ல 'மஹாத்மா' என்று திருத்தினார். 'தென்னாப்பிரிக்காவில்' என்று தொடங்கும்போது குரலை நெகிழ்த்தி இரக்கத்தை கொண்டுவரவேண்டும் என்றார். 'வெள்ளையனே வெளியேறு' என்ற வாசகம் வரும்போது வேசமாக கைகளை தலைக்கு மேலே தூக்கி காட்ட வேண்டும். 'அன்பே தகழியாகவும், அஹிம்சையே நெய்யாகவும், என்புருக்கும் தியாகமே இடுதிரியாகவும்' என்று நான் ஏதோ புத்தகத்திலிருந்து திருடிச் சேர்த்த வசனத்தின்போது கையை நெஞ்சிலே வைத்து சபையோரை காருண்யம் ததும்பும் கண்களால் கரைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லித் தந்தார். நான் ஒரு முதல்தர மாணவனாக இருந்து மாஸ்ரர் சொன்ன ஒவ்வொன்றையும் வரிக்கு வரி, சொல்லுக்கு சொல் கடைப்பிடித்தேன்.
 
பேச்சுப்போட்டி நடுவர்கள் மேடையில் வீற்றிருந்தார்கள். பல மைல் தூரத்திலிருந்து நானும் மாஸ்ரரும் அப்போதுதான் இளைக்க களைக்க வந்து சேர்ந்தோம். வயதுக்கு தக்கமாதிரி பேச்சுப் போட்டியாளர்களை வகைப்படுத்திய முதல் சுற்றுப் பேச்சில் நான் தேறிவிட்டேன்.  இரண்டாவது சுற்றில் என்னுடன் போட்டியிடுபவர்களுடைய பேச்சை கேட்க விருப்பப்பட்டேன். மாஸ்ரரும் சரி என்றார்.
 
நான் முன்பு பார்த்திராத ஒரு கறுப்பு மாணவன், என்னிலும் உயரத்தில் சின்னதாகத் தோற்றமளித்தவன், பேசினான். அவனுடைய உயரத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லை. குரல் கணீரென்று அரங்கத்தின் எல்லைவரைக்கும் கேட்டது. கப்பலோட்டிய தமிழனைப் பற்றிய பேச்சு. ஒரு பந்து துள்ளுவதுபோல அவன் மேடை முழுக்க துள்ளியபடியே பேசினான். அவன் வாயிலிருந்து சொற்கள் நில்லாமல் உருண்டு வந்து விழுந்தன. அவன் முடித்ததும் அவனுக்கு விழுந்த கைத்தட்டு அவன் பேசிய நேரத்திலும் பார்க்க கூடியதாக இருந்தது.
 
அடுத்தது, என்னிலும் உயரமாக தோன்றிய ஒரு பெண். கறுப்பு பூச்சிகள் மொய்ப்பதுபோல அடர்த்தியான இமைகள். அவளுடைய குடும்பம் முழுக்க ஏதோ திருவிழா பார்க்க புறப்பட்டதுபோல வந்திருந்தது. அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, பாட்டி என்று அவர்களே அரங்கத்தில் அரைவாசி இடத்தை பிடித்துவிட்டார்கள். அவள் ஆறுமுக நாவலரைப் பற்றி பேசினாள். அவள் குரலில் ஏற்றமோ இறக்கமோ கிடையாது ஆனால் குரல் சங்கீதம் கேட்பதுபோல இருந்தது. அவளுடைய இரட்டைப் பின்னலில் ஒன்று முன்னுக்கு இருந்தது பேச்சின் முடிவில் எப்படியோ பின்னுக்கு போய்விட்டது.
 
இந்தப் பெண் பேசும்போது வாயைக் குவித்துவைத்து பேசினாள். எல்லா உணர்ச்சிகளையும் அவளால் வாயைக் குவித்தபடி காட்டமுடிந்தது. கோபமாக இருக்கும்போதும் வாயைக் குவித்தாள். மகிழ்ச்சியை காட்டும்போதும் வாயை குவித்தாள். இரக்க குணத்தை வெளிப்படுத்தும் போதும் வாயை குவித்தாள். அவள் பேச்சு காதுக்கு கேட்பதற்கும், கண்ணுக்கு பார்ப்பதற்கும் குளிர்ச்சியாக இருந்தது. நான் நடுவராக இருந்தால் அவளுக்குத்தான் வாக்கு போடுவேன்.
 
என்னுடைய முறை வந்தபோது நான் நாலு படிகளில் ஒவ்வொன்றாக ஏறி மேடையின் நடுவில் போய் நின்றேன். முதலில் மாஸ்ரர் எங்கேயிருக்கிறார் என்று  தேடினேன். அவர் முதலைபோல சிரித்தபடி தூரத்தில் தெரிந்தார். நான் பேசும் போது என்னுடன் சேர்ந்து அவருடைய சொண்டுகளும் அசைந்தபடி இருக்கும். புதன் அனுக்கிரகம் இருப்பதால் மாஸ்ரர் என்னை 'புத்திநாதன்' என்று விளித்ததை நினைத்துக் கொண்டேன். முழங்கால்கள் ஒன்றோடொன்று இடிக்காமல் தடுப்பதற்கு நான் பெருமுயற்சி எடுக்க வேண்டியிருந்தது. குரலை உயர்த்தவேண்டிய இடத்தில் உயர்த்தி, இறக்கவேண்டிய இடத்தில் இறக்கி, கைகளை எங்கேயெங்கே எந்த திசையில் எவ்வளவு உயரத்துக்கு காட்டவேண்டுமோ அவ்வளவையும் காட்டி கச்சிதமாக பேச்சை முடிவுக்கு கொண்டுவந்தேன். பேச்சின் ஆரம்பத்தில் முதல் வாக்கியத்தின் போது முதல் வார்த்தையை 'மகாத்மா காந்தி' 'மகாத்மா காந்தி' என்று எதற்காக இரண்டுதரம் சொன்னேன் என்பது எனக்கோ மாஸ்ரருக்கோ புரியாத ஒன்று.
 
பேச்சுப்போட்டி முடிந்தபோது பெரும் மழை பிடித்துக்கொண்டது. ஒருவரும் எதிர்பாராமல் திடீரென்று பெய்த மழை, அது வந்தமாதிரியே உடனேயே போய்விடும் என்றார்கள் ஆனால் மழை விடாமல் இரண்டு மணி நேரமாக கொட்டியது. திரும்பும் போது மாஸ்ரர் சைக்கிளை உழக்க நான் பின் சீட்டில் உட்கார்ந்து வந்தேன். சைக்கிள் மெதுவாக சென்றபடியால் டைனமோவும் மெதுவாகவே சுழன்று மங்கலான வெளிச்சத்தை கொடுத்தது. கறுப்பு வானமும், குறுகலான வீதியும், மழையில் நனைந்து கூனிப்போன மாஸ்ரரின் முதுகும், வெட்டவெளியில் தனியாக நின்ற பனைமரம் ஒன்று இடி விழுந்து எரிந்துகொண்டிருந்ததும் என்னுடைய அன்றைய மன நிலையில் அப்படியே பதிந்து போனது. ஒழுங்கைகளில் வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது. வாத்தியார் எங்கள் வீட்டுப் படலையில் என்னைக் கொண்டுவந்து இறக்கி விடும்போது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. 'பார்த்துப்போ' என்று சொல்லிவிட்டு மாஸ்ரர் சைக்கிளை திருப்பிக்கொண்டு போனார்.
 
வீடு இருட்டில் மூழ்கிக் கிடந்தது. எல்லோரும் தூங்கப் போய்விட்டார்கள் என்றே நினைத்தேன். ஒரேயொரு கைவிளக்கு எரிய அம்மா எனக்காக தூங்காமல் காத்திருந்தார். நான் ஒரு பெரிய ஆள், ஏதோ முக்கியமான காரியமாக வெளியே போய்விட்டு வருகிறேன் என்பதுபோல அம்மா எனக்காகக் கண்விழித்திருந்ததை இன்றுவரைக்கும் என்னால் மறக்க முடியாது.
 
என்னைக் கண்டதும் அம்மா கட்டி அணைத்து, தலையைத் தடவி ஈரம் இல்லையென்று உறுதி செய்த பிறகு 'பிள்ளை உனக்கு நல்ல பசி. வா, நான் சாப்பாடு போடுறேன்' என்றார். அன்றைய பேச்சுப் போட்டியில் என்ன நடந்தது என்றோ, நான் எப்படிப் பேசினேன் என்றோ, யாருக்கு பரிசு கிடைத்தது என்றோ ஒரு வார்த்தை அவர் என்னிடம் கேட்கவில்லை. கையிலே வெற்றிக் கிண்ணம் இல்லாததைப் பார்த்துவிட்டு என்னைக் கேள்வி கேட்டு வேதனைப் படுத்தக் கூடாது என்று நினைத்திருக்கலாம்.
 
அன்று அம்மா விசேஷமாக சமைத்திருந்தது தெரிந்தது. நான் வெற்றிக்கிண்ணம் கொண்டுவருவதை கொண்டாடுவதற்காக இருக்கலாம். கோப்பை நிறைய சோறு பரிமாறி, அதற்கு மேலே பலவிதமான கறிவகைகளை பரப்பி வைத்து, பிசைந்து ஓர் அபூர்வமான மணம் கொடுக்கும் குழையலை கைப்பிடியில் உண்டாக்கி ஒவ்வொரு வாயாக வைத்து வயிறாரச் சாப்பிட்டேன். படுப்பதற்கு பாயும் தலையணையும் பக்கத்தில் தயாராக இருந்தாலும் அம்மாவுக்கு அன்று நடந்த பேச்சுப் போட்டி விவரங்களை முழுவதுமாகக் கூறவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு கொட்டைப்பாக்கு அளவில் இருக்கும் மூன்றாவது பரிசுக் கிண்ணம், அது கூட கிடைக்காததன் காரணத்தை நான் அம்மாவிடம் சொல்லவேண்டும். நான் நாலாவதாகக்கூட வரவில்லை. ஏழோ, எட்டோ அதற்கு மேலோ இருந்தேன்.
 
'அம்மா, கெதியாய் வாங்கோ' என்றேன். 'வாறன், வாறன். எல்லாம் முடிஞ்சு போச்சு'
 உண்ட களைப்பில் தாழ்வாரத்து சுவரில் தலையை சாய்த்து அம்மாவுக்காகக் காத்திருந்தேன். இரட்டைப்பின்னல்காரி, அவள் தலையளவு கோப்பையை தூக்கிக்கொண்டு போனது ஞாபகத்துக்கு வந்தது. துள்ளித் துள்ளிப் பேசின கறுப்பு பையன் வென்ற கோப்பையும் பெரிசாக பளபளவென்று இருந்தது. ஏழாம் வீட்டுக்கு அதிபதியான புதன் அன்று என்னை மறந்து இன்னும் பெரிய  தந்திரக்காரனுக்கு உதவப் போயிருக்கலாம். மெல்ல மெல்ல கண் அயர்ந்துகொண்டு வந்தது.
 
அம்மா சமையலறையில் தனியாக உட்கார்ந்து கைவிளக்கு வெளிச்சத்தில் சாப்பிட்டுவிட்டு, சோற்றுப் பானையை மூடி, கரிச் சட்டிகளை கழுவி, பாத்திரங்களையும் தண்ணீர் குவளைகளையும் அலம்பி, துடைத்து அடுக்கி வைத்து, சமையலறையை கூட்டித் துப்புரவாக்கி அடுத்தநாள் காலைச் சமையலுக்கு வேண்டிய ஆயத்தங்களை செய்யும் சத்தம் வெகு நேரமாக எனக்கு கேட்டுக் கொண்டிருந்தது.
 

0 Comments

கலக்கல் (பேஸ்) புக் – சத்யா GP

7/19/2019

0 Comments

 
அரசியல், சினிமா, கிரிக்கெட் இப்படி எதுவாக இருந்தாலும் வன்மம், குரோதம், தனி மனிதத் த்வேஷம், துதிபாடல், போலியான புள்ளி விவரங்கள், பொய்யை நிஜமாக்க மேற்கொள்ளும் பிரம்மப் பிரயத்தனங்கள் என சமூகவலைத்தளங்களின் போக்கு மிகையானதொரு உலகுக்கு சென்றுவிட்டது. இனி அது மீண்டு வருவது என்பது சாத்தியமற்றது.
 
இசை, அறிவியல், மருத்துவம், பொருளாதாரம், விஞ்ஞானம், உணவு, ஊர் சுற்றுதல், கோயில்கள், சரித்திரம், புத்தகங்கள், இலக்கியம், கவிதைகள், புதுப் புது கண்டுபிடிப்புகள்... இப்படிப் பல்வேறு களங்கள், தலைப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்பதே உண்மை ஆனால் இது தொடர்பாக தரவுகளுடன் விருப்பு வெறுப்பின்றி எந்தவொரு சார்பும் இல்லாது பதிவுகள் எழுத மெனக்கெடல் அவசியம் ஆனால் அரசியல், தனி மனித த்வேஷம், துதிபாடல் போன்ற மேலே குறிப்பிட்டவற்றிற்கு கஷ்டமே தேவை இல்லை அதுவும் மீம் போட குறைந்தபட்ச சிந்தனை என்பதே தேவை இல்லை...
 
பேஸ்புக் உள்ளே நுழைந்தாலே அடிதடி, ரணகளம் தானா என்று யோசிப்பவர்களும், அது கண்டு வெறுப்பவர்களும் கணிசமான அளவிற்கு இருக்கிறார்கள் அவர்களுக்காகவே ஒரு க்ரூப் இருக்கிறது. 
Picture
மனம் விட்டு சிரிக்க, கனமான மனது இளக, ரிலாக்ஸ் செய்யத் தான் பேஸ்புக் வருகிறேன் என்று சொல்லை நிஜமாக்க... சுருங்கச் சொன்னால் நம்மை ஆசுவாசப்படுத்துவதற்காகவே இந்த குழு இயங்குகிறது. நகைச்சுவையைப் பொறுத்தவரை சுய எள்ளல் என்னும் கான்செப்ட் என்றும் அனைவராலும் ஏற்கக்கூடிய ஒன்று. வடிவேலு அவர்கள் காமெடியில் ஜொலிக்க முக்கியக் காரணம் அது. இந்தக் குழு பட்டையைக் கிளப்பக் காரணமும் அது தான்.
 
பொதுவாக ஒரு நிறுவனத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் அது லாபகரமானதாக விளங்க மார்க்கெட்டிங் பிரிவு சிறப்பாக செயல்படுதல் அவசியம். உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவாய் ஈட்டினால் தான் சம்பளம் துவங்கி அனைத்து செலவினங்களையும் சமாளிக்க முடியும்.
 
மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்களின் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. அவர்களின் பணிச்சுமையும் கடினமானது. செக்டார் வாரியாகப் பிரிக்கும் போது வித விதமான முறையில் மார்க்கெட்டிங் செய்யப்படுவதைக் காணலாம். நீண்ட நெடுங்காலமாக ஒரே பாணியில் இயங்கும் மார்க்கெட்டிங் எது என்று பார்த்தால் 1. டைரெக்ட் மார்க்கெட்டிங் (வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்வது, வாக்வம் கிளீனர், அக்வா கார்ட் போன்றவை இதிலடங்கும்) 2. பார்மா செல்லிங் அதாவது மெடிக்கல் ரெப்.
 
இந்தியாவில் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பெருமளவில் உள்ளே புகுந்து அத்துறையில் வேலை வாய்ப்பு அதிகமான போது மெடிக்கல் ரெப்கள், பார்மா செல்லிங்கில் இருந்த ஏரியா சேல்ஸ் மேனேஜர்கள், ரீஜினல் சேல்ஸ் மேனேஜர்கள் போன்ற பொறுப்பில் இருந்தவர்கள் பெருமளவில் தங்கள் பணியிலிருந்து விலகி இன்ஷூரன்ஸ் துறைக்குள் நுழைந்தார்கள். மருந்துகள், நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான அனுபவறிவு இருந்ததால் இவர்களை இன்ஷூரன்ஸ் துறை இரு கரம் கூப்பி தம்முடன் ஐக்கியப்படுத்திக் கொண்டன. 2008 ஆம் ஆண்டு காலவாக்கில் இது அதிகளவில் நடந்தேறியது. மெடிக்கல் ரெப் உத்தியோகத்தில் வேலைக்கு சேர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. அதன் பின் தங்க முட்டையிடும் வாத்தை அறுப்பது போல் அப்போதைய நடுவண் அரசின் கொள்கையால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தள்ளாடின. பெருமளவு தங்களின் கிளைகளை இழுத்து மூடின. தேசம் முழுதும் ஏராளமானோர் வேலையைப் பறி கொடுத்து நிர்கதியானார்கள். பலர் மீண்டும் பார்மா செக்டாருக்குள் புகுந்தார்கள்.
Picture
மெடிக்கல் ரெப் வேலை தனித்துவமானது. ஒரு எஃப்.எம்.ஸி.ஜி செக்டாரில் பணிபுரியும் விற்பனைப் பிரதிநிதி தம்முடைய ஸ்டாக்கிஸ்ட்டிடம் விற்கும் பொருட்களை ஆர்டர் எடுத்து வைக்க வேண்டும். அதற்குரிய தொகையை நிறுவனத்தின் தரத்திற்கேற்ப கேஷ் & கேரி அடிப்படையிலோ அல்லது அதிகபட்சம் முப்பது நாட்கள் கடன் என்னும் கால அளவிலோ வசூல் செய்வார்கள். இதைத்தவிர ஸ்டாக்கிஸ்டுகளின் வாடிக்கையாளர்களான ரீடெய்லர்களிடம் சென்று தங்கள் நிறுவனத் தயாரிப்புகள் குறித்து கம்பு சுற்றி, டிஸ்கவுண்ட் தந்து பொருட்களின் விற்பனை அதிகரிக்க உதவுவார்கள். இது கடினமான பணியானாலும் மெடிக்கல் ரெப்புகளுடன் ஒப்பிடும் போது எளிதானதே ஆனால் மெடிக்கல் ரெப்?
 
மெடிக்கல் ரெப்புகள் ஸ்டாக்கிஸ்ட்களிடம் மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். இது ப்ரைமரி ஆர்டர். மாதா மாதம் ஒவ்வொரு மெடிக்கல் ரெப்புக்கும் இது தான் இலக்கு. அடுத்து கெமிஸ்ட் (மெடிக்கல் ஷாப்) அவர்களிடம் தங்கள் நிறுவன மருந்துகளை ஸ்டாக் வைக்க ஆர்டர் எடுக்க வேண்டும். இது செகன்டரி ஆர்டர். இதில் பல இம்சைகள் உண்டு. நாம் ஆர்டர் எடுக்கும் மருந்தகங்களை நம்முடைய ஸ்டாக்கிஸ்ட் கறுப்புப் பட்டியலில் சேர்க்காமல் இருக்க வேண்டும். இருந்தால் ஆர்டர் வீண். அடுத்து மருத்துவர்களைத் தொடர்ந்து சந்தித்து நம் நிறுவன மருந்துகளைப் பரிந்துரைக்க வைக்குமாறு செய்ய வேண்டும்.
 
மெடிக்கல் ரெப் உத்தியோகத்தில் முக்கிய சிக்கல் என்னவென்றால் மற்ற சேல்ஸ் ரெப்பைப் பொறுத்தவரை அவர் விற்கும் பொருட்களுக்கு அவரே ராஜா. ரீடெயிலர்ஸ் வியாபாரத்தில் அனுபவசாலிகள் எனில் அவர்களிடம் அடக்கி வாசித்தால் போதும் ஆனால் இங்கே மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவரிடம் இந்த நோய்க்கு, குறைபாடுக்கு இன்ன மருந்து என்று விவரிக்கிறோமோ அந்த நோய் மற்றும் குறைபாடு பற்றி அதிகம் அறிந்தவர் மருத்துவரே, ஆதலால் விஷய ஞானம் அதிகம் உள்ளவர் மருத்துவர் என்பதால் பாடம் நடத்துவது போல் மருந்துகள் குறித்து (detailing) விவரிப்பதை தவிர்த்தல் என்ற பாடமும் உண்டு. 
 
இது தவிர பெரிய மருத்துவமனைகளில் உள்ள ஸ்பெஷாலிடி டாக்டர்களை சந்திக்கப் போவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட வேண்டும். நிறைய மருத்துவர்கள் மெடிக்கல் ரெப்களை குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பார்ப்பார்கள். அதை சமாளிக்க வேண்டும். மெடிக்கல் ரெப் என்றால் முகம் சுளிக்கும் மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவ ஆலோசனைக்கு காத்திருக்கும் நோயாளிகளின் வெறுப்பு முகபாவத்தை தினமும் எதிர்கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் சகிப்புத்தன்மையின் உச்சம் தொட வேண்டும். பச்சையாகச் சொல்ல வேண்டும் என்றால் எருமைத் தோல் அவசியம்.  

Picture
தஞ்சையில் ஒரு பிரபலமான குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் இருந்தார். எப்போதும் அவரிடம் கூட்டம் அள்ளும். வாரத்திற்கு மூன்று நாட்கள், ஒரு நாளைக்கு பதினைந்து மெடிக்கல் ரெப்கள் என முறை வைத்து பார்ப்பார். மெடிக்கல் ரெப்கள் அவரைக் காண முன்பதிவு செய்ய வேண்டும். அதாவது புதன் கிழமை இரவு எட்டு மணிக்குப் பிறகு ரெப் பார்வையெனில் ரெப்கள் காலை ஐந்து மணிக்கு தத்தமது விஸிடிங் கார்டுகளை மருத்துவமனையில் தந்து ஒப்புதல் பெற வேண்டும்.
 
ஃபீல்ட் வொர்க்கின் போது ஏரியா சேல்ஸ் மேனேஜர், ரீஜினல் சேல்ஸ் மேனேஜர் வருவது, ஸ்டாக்கிஸ்ட்டுடன் மாதக் கடைசியில் அல்லாடி ஆர்டர் பெற்று செக் வாங்குவது, ஒரு மாதம் முழுக்க உள்ளூரில் வாகனத்தில் எரிபொருள் நிரப்பி சுற்றுவது, வெளியூர் சென்று விடுதிகளில் தங்கி வேலை பார்ப்பது, அனைத்து செலவுகளையும் குறிப்பிட்டு எக்ஸ்பென்ஸ் ஸ்டேட்மெண்ட்டை பணிபுரியும் நிறுவனத்திற்கு அனுப்பி இரு மாதங்கள் கழித்து தான்  அத்தொகையைப் பெற முடியும். அதாவது ஜூன் மாதம் செய்த செலவுகளை ஜூலை முதல் வாரம் குறிப்பிட்டு கம்பெனிக்கு தகவல் அனுப்பினால் ஆகஸ்ட் மாதம் அத்தொகையை நமக்கு அனுப்புவார்கள். இடையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் முதல் வாரம் நம் பணி தொடர்பான செலவினங்களையும் நாம் சமாளிக்க வேண்டும்.  
 
அனைத்திலும் சில்மிஷங்கள் உண்டு அதற்கு இந்தப் பணியும் விதிவிலக்கல்ல. எக்ஸ்பென்ஸ் ஸ்டேட்மெண்ட். டெய்லி ரிப்போர்ட் போன்றவற்றில் மெடிக்கல் ரெப்கள் செய்யும் சேட்டைகள் தனிக் கதை.
 
மெடிக்கல் ரெப்களின் வாழ்க்கையை நான் விவரித்தது ஒரு துளியே அதாவது டீசர் போல! முழுப் படம் இன்னும் நீளம்.
 
பேஸ்புக் குழு என்று சொல்லி ஏன் மெடிக்கல் ரெப்கள் குறித்து இப்படி அளவளாவுகிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம்.
 
நான் குறிப்பிட்ட குழுவின் பெயர் : Pharma Memes பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மெடிக்கல் ரெப்களை பேஸ்புக் என்ற சமூகவலைத்தளம் இணைக்க அவர்கள் ஒன்று சேர்ந்து இந்தக் குழுவை நடத்துகிறார்கள். அன்றாடம் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், இடர்பாடுகள், தாங்கள் செய்யும் கோமாளித்தனங்கள் என சகலத்தையும் மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தி தங்களையும் மக்களையும் பரஸ்பரம் இளைப்பாறும் வித்தையை செய்கிறார்கள்.  

Picture
ஒரு மருத்துவமனையில் டாக்டருக்காக காத்திருக்கும் நேரத்தில் இந்த க்ரூப்பின் மீம்ஸ்களை மெடிக்கல் ரெப் பார்த்து ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். சுய பகடி என்ற வஸ்துவில் இவர்கள் முத்திரை பதிக்கிறார்கள். மெடிக்கல் ரெப்பாக இருந்து இப்போது அத்துறையில் இல்லாதவர்களை நாம் ரெப்பாக இல்லையே என்று ஏங்க வைக்கிறார்கள்.
 
ராதா / சிவாஜி (முதல் மரியாதை திரைப்படம்) டெம்ப்ளேட்டை வைத்து இவர்கள் உருவாக்கிய மீம்ஸ்கள் ஏராளம். ஒவ்வொன்றும் குபீர் சிரிப்பை வரவழைப்பவை.
மெடிக்கல் ரெப் குறித்து நீட்டி முழக்கி பதிவுகள் எழுதாமல் ஜஸ்ட் லைக் தட் மீம்ஸ் வடிவத்தில் ஆழமான விஷயங்களையும் எடுத்து சொல்வது இவர்களின் பலம்.
 
அரசியல் களத்தில் மீம்ஸ் என்பது வறண்ட நிலைக்கு செல்கிறது, மோடி மீதான காழ்ப்புணர்வு, திமுகவின் குடும்ப அரசியல், அதிமுக பலவீனமாவது, ஜாதி மோதல்... இப்படி குறுகிய வட்டத்திலேயே மீம்ஸ்கள் அதிகம் புழங்குகின்றன ஆனால் மெடிக்கல் ரெப் என்ற குறுகிய களத்தில் வெரைட்டி காண்பித்து அசத்துவதில் இவர்களை மிஞ்ச யாருமே இல்லை. கன்டென்ட் தொடர்பாக இவர்கள் தடுமாறுவதே இல்லை.  

Picture
முப்பத்தி நான்கு அட்மின்கள் மற்றும் மாடரேட்டர்கள் கொண்ட பக்காவான டீம் இக்குழுவை சிறப்பாக நிர்வகிக்கிறது.
 
இக்குழுக்கு சென்று மீம்ஸ்களை ரசிக்க விரும்புபவர்கள் இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.facebook.com/groups/pharmamemes/
 
அடுத்த முறை ஏதாவது ஒரு கிளினிக்கில் டாக்டரின் ஆலோசனை பெற நீங்கள் காத்திருக்கையில் யாராவது ஒரு மெடிக்கல் ரெப்பை காண நேர்ந்தால் அவரிடம் இந்த க்ரூப் பற்றி எடுத்து சொல்லுங்கள். அவருக்கு இந்த க்ரூப் பரிச்சயம் இல்லையெனில்... கவலை வேண்டாம், உடனே அவர் தம்மை குழுவில் இணைத்துக் கொள்வார்.
 
ஒரு குழு குறித்து எதற்கு இவ்வளவு பெரிய கட்டுரையை இவன் எழுதுகிறான் என்று யோசிக்கிறீர்களா?  
Picture
பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை நானும் மெடிக்கல் ரெப்பாக இருந்தவன் தான். அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து முகம் கழுவி, பல் துலக்கி, விஸிடிங் கார்டு ஏற்கப்பட வேண்டும் என்று விக்ன விநாயகரிடம் துரித கதியில் வணங்கி தஞ்சை தெற்கலங்கம் சென்று ஐந்து மணிக்கு கார்டு தந்து சாதித்த சந்தோஷத்தில் அறைக்குத் திரும்புவனாக இருந்தவன் சாட்சாத் இந்த சத்யா தான்.
 
I am Proud to be a (Ex) Medical Rep 
0 Comments

ஆடிப் பெருக்கு - ராஜிவி நந்தகோபால்

7/19/2019

0 Comments

 
நீருக்கு நன்றி சொல்லும் விழாதான் ஆடிப்பெருக்கு!
 
நீருக்கு நம் என்ன ஓட்டங்கள் நன்றாகப் புரியும் என்பதால்தான் நம் முன்னோர்கள் நீரினை வழிபாடு செய்ய சொல்லி கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது ஜப்பானில் அறிவியல் ஆராய்ச்சியில் கண்டுபிடித்து சொன்னதை அப்போதே நம் முன்னோர்கள் நமக்கு விழாவாக கொண்டாட சொல்லி பழக்கியிருக்கிறார்கள்.
 
நீரைக் கையில் வைத்து மந்திர உச்சாடனம் செய்துதான் ரிஷிகளும் யோகிகளும் நல்லதைச் செய்வார்கள். மந்திரவாதிகள் தீமையையும் செய்வார்கள் ஏனெனில் நாம் ஜபிக்கும் மந்திரத்தின் ஷக்தியை நீர் மட்டுமே சுலபாக ஏற்று செயல் புரியும்.
 
ஆடியில் தொடங்கிய அனைத்தும் பல்கி பெருகும் என்பதால் ஆடிப்பெருக்கு அன்று விதை விதைப்பது மட்டுமன்றி வியாபாரத்தில் புதுக்கணக்கையும் துவங்குவார்கள். 

Picture
புராணத்தில் :
ராவணன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்த பாவம் தீர ஏதேனும் உபாயம் கூறும்படி ராமபிரான் தன்குலகுரு வசிஷ்டரிடம் கேட்டார் அதற்கு வசிஷ்டர்
“அறுபத்தாறு புனிதத் தீர்த்தங்களைத் தன்னகத்தே கொண்ட காவிரியில் நீராடினால் அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்'' என்று கூறினார்.
 
அதன்படி ஸ்ரீ ராமபிரான் காவிரியில் நீராடிய நன்னாள்தான் ஆடிப்பெருக்கு.
 
காவிரிக்கரையில் பூமிக்கடியில் பதினெட்டு சித்தர்களும், யோகிகளும் பிருத்வி யோகம் பூண்டு தவம் செய்வதாகவும், ஆடிப்பெருக்கு நாளன்று காவிரிக்கு தங்கள் தவப்பயனை வழங்குவதாகவும், அந்தத் தவப்பயனைப் பெற்ற காவிரி, அன்று தன்னில் தானே நீராடி தன்னை வழிபடும் மனிதர்களின் பாவங்களைப் போக்குகிறாளாம் ஆகவே ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் நீராடி
 
“கவேர கன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே
தே
ஹிமே பக்தி முக்தி த்வம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி”
 
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட வேண்டும்.
 
காவிரியில் ஆடிப்பெருக்கு :
தன் அண்ணனை வணங்கும் விதமாக ஸ்ரீரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தை ஒரு மலர் மாலை போல் அணிவித்து மகிழ்கிறாளாம் காவிரி. 
மலர் மாலையில் இருந்து பிறந்தவள்தானே காவிரித்தாய்.
 
காவிரித் தாய்க்கு காதோலை கருகமணி,
கார்போக அரிசியுடன் வெல்லமும் எள்ளும் கலந்த கலவை,
பழங்கள் மற்றும் தேங்காய் வெற்றிலை – பாக்கு,
மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றுடன்
சித்ரான்னங்களையும் படைத்து பூஜை செய்வார்கள்.
 
பூஜையில் வைத்த மஞ்சள் சரடை வயது வித்தியாசமின்றி பெண்கள் அனைவரும் கழுத்தில் அணிந்துகொள்வார்கள். ஆண்கள் இதை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வர்கள்.
 
ஆடிப்பதினெட்டு அன்று, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், பல்லக்கில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு வழிபாடுகள் நடைபெறும்.
 
ஆடிப்பெருக்கு சீர் என்று பிறந்த வீட்டிலிருந்து, திருமணம் செய்து கொடுத்த பெண்கள் அனைவருக்கும் சீர் கொடுப்பார்கள் அதே போல ஸ்ரீரங்க பெருமாளான ரங்கனும் தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுப்பார்.
 
அன்று மாலை நேரத்தில் ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து புடவை, தாலி, காதோலை கருகமணி, மலர் மாலை, தேங்காய், வெற்றிலை - பாக்கு, பழங்கள் ஆகிய மங்கல பொருள்களுடன் சீர் வரிசைகளை யானை மேல் ஏற்றி, மேள தாளங்கள் முழங்க அம்மா மண்டபம் படித்துறைக்கு எடுத்து வருவார்கள். 
 
அந்தச் சீர்வரிசைகளை அங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் முன் சமர்ப்பித்து பூஜை செய்வார்கள் பிறகு அந்த பொருட்களைக் காவிரித் தாய்க்கு வழங்குவார்கள்.
 
இவ்வருடமும் அனைவரும் சீரும் சிறப்புமாக ஆடி பெருக்கு வைபோகத்தை கொண்டாட வாழ்த்துகிறேன்.
 

0 Comments

சிறுகதை – சத்யா GP

7/19/2019

0 Comments

 
நீர் விளையாட்டு
“வண்டில அழகா நம்பர் ஒன் டோல்கேட்ல இறங்கி பஸ் பிடிச்சு போகலாம், ஆக்டிவாவை நான் வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வந்துருவேன். ரிட்டர்ன் வரும் போது டோல்கேட்ல இறங்கிட்டு கால் அடிக்கிறேன் வண்டி எடுத்துட்டு வாம்மான்னு சொல்லத் தெரியுதுல்ல? எதுக்கு சத்திரம் போய்கிட்டு?”
 
“வயசாகுது உமா, அரியலூர் வண்டி எல்லாம் ஃபுல்லா தான் வருவான், சத்திரம் போய் உட்கார்ந்துட்டு போறது தான் நல்லது”
 
“சரி சரி வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வந்து சேரு”
 
‘அந்த டாக்டர் நான் ரெப்பா இருக்கற காலத்துல இருந்து எனக்கு நல்லா சப்போர்ட் செய்யறார், டிஸ்ட்ரிபியூஷன் எடுத்துருக்கேன்னு சொன்ன உடனே, ஆசிர்வாதம் செஞ்சு ஐயாயிரம் ரூபாய்க்கு ஆர்டர் தந்தார். முதல் பில்லிங் அவர் தான், அவரை மாதிரி நல்ல மனுஷங்களால தான் பிஸ்னஸ் டெவலப் ஆகி உனக்குத் தாலி கட்டி மூணு வேளை சோறு போட முடியும்னு நம்பிக்கை வந்து...”

Picture
“சரி ராஜு, அவர் புது ஹாஸ்பிட்டல் பில்டிங் கட்டிருக்கார், அழைப்பிதழ் வெச்சுருக்கார் அவசியம் போகணும் அதானே?, எதுக்கு வழக்கமான எஸ்டிடியை ஆரம்பிக்கிற? போயிட்டு வா”
 
உமா எப்போதும் போல் சகஜமாகப் பேசினாலும் ஏனோ மனம் இடறியது. உள்ளுணர்வு சரியில்லாது தவித்தான் ராஜு.
 
ரஹ்மான், ஹாரீஸ், அனிருத் என எல்லா இடமும் புழங்கினாலும் திருச்சி டு அரியலூர், ஜெயந்கொண்டம், செந்துறை... தஞ்சை டு பட்டுக்கோட்டை, கும்பகோணம், மாயவரம்... இந்த சாலை மார்க்க பேருந்து பயணங்களில் மட்டும் பெரும்பாலும் “ராஜா”ங்கம் தான்!
 
லால்குடி வரை நரைக்கத் துவங்கிய காலப் பாடல்கள். லால்குடி தாண்டிய பின் டவுஸர் அணிந்து சுற்றிய விவரம் அறியா காலத்து கீதங்களை படையல் வைக்கத் துவங்கினார் டிரைவர். ஆடி மாதம், பால்யத்தில் அடிக்கும் காற்றானது உடல் வலியைத் தோற்றுவிக்கும். இரு நாள் காய்ச்சலில் படுக்க வைக்கும். இப்போது ஆடிக் காற்று இருந்தாலும் அப்போது போல் இம்மியளவும் இல்லை ஆக அம்மியும் நகரவில்லை. ராஜு எப்போதும் ராஜாங்கத்தை தவிர்க்க காரணமே இது தான், எதை எதையோ நினைக்க வைக்கும். இறுதியில் இழந்த அனைத்தையும் யோசிக்க வைக்கும். குறிப்பாக பறி போன அப்பாவித்தனத்தை நினைத்து நினைத்து அழ வைக்கும்!
 
புள்ளம்பாடியைப் பேருந்து கடக்கும் போது இனம் புரியாத வலியுணர்வு. காரணம் விளங்கவில்லை. கல்லக்குடி அருகே பேருந்து செல்லும் போது ஏனோ மனது அம்பாள் டாக்கீஸையும், பாக்யராஜ் – டி. ராஜேந்தர், ரஜினிகாந்த் – கமல்ஹாசன் என்ற பள்ளி காலத்தையும் அதிகம் அசை போட்டது.
 
ராஜுவால் இயல்பாக வளைய வர முடியவில்லை. டாக்டரைப் பார்த்து சிரித்த சிரிப்பில் ஒரு செயற்கைத்தனம் இருந்ததை அவனால் உணர முடிந்தது. வெள்ளிக் குத்துவிளக்கைத் தந்து, பேச வேண்டும் என்பதற்காக அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
 
Moxi kind – 5 box
panta kind – 6 box
electral – 151 sachet
Pot chlor – 51 bottle  
 
“புது பில்டிங் திறப்பு விழாவை முன்னிட்டு ராஜுக்கு ஆர்டர், ஏற்கனவே போட்டு வெச்சுட்டேன் இந்தாப்பா” டாக்டர் தந்ததை அமைதியாக வாங்கிகொண்டான்.
சம்பிரதாயத்துக்கு மருத்துவமனையை சுற்றிப் பார்த்தான். விசாரிப்பதாக சொல்லி ஏனோதானோவென கேள்விகள் கேட்டான். ஒப்புக்கு சாப்பிட்டுவிட்டு கிளம்பினான்.
 
உண்ட களைப்பால் பேருந்தில் ஏறி வண்டி புறப்பட்ட ஐந்தாவது நிமிடம் தூங்கிப்போனான். விழிப்பு வந்த போது முகம், கை, கழுத்து, முதுகு என உடலின் பல இடங்கள் வியர்த்திருந்தன. நன்றாக அமர்ந்து கொண்டான். கடிகாரம் இரண்டு மணி என்று காட்டியது. காற்று சகல இடங்களிலும் ஊடுருவி வியர்வையை உறிஞ்சியது. ஒரு ட்ராக்டர் சாலையில் குப்புற கவிழ்ந்திருந்ததால் வாகனத்தின் வேகம் மட்டுப்பட்டது. ரோடும் அந்தப் பிராந்தியமும் மாந்துறை என்பதை தெளிவாக விளக்க, பின் இருக்கையில் இருந்தவர் அவன் மனதை படித்தவர் போல “ஒரு காலத்துல அய்யவாய்க்கால்ல என்னாமா தண்ணீ ஓடும், இப்போ வறண்டு கிடக்கு, இதெல்லாம் முப்போகம் வெளஞ்ச பூமின்னா யாராவது நம்புவாங்களா?” என்றார்.  
 
“டேய் முத்து நீ சொன்னியே தூறல் நின்னு போச்சு படம், இந்த சனிக்கிழமை  தான் டா அம்பாள் டாக்கீஸ்ல நைட் ஷோ பாத்தோம். நீ சொன்ன பாட்டை விட என் சோக கதையைக் கேளு தாய்குலமே பாட்டு தான் எனக்குப் பிடிச்சுது”
 
“எங்க ஊரு தங்கம் தியேட்டர்ல முன்னாடியே படம் வந்துருச்சு டா. பயங்கர கூட்டம், அப்பா தியேட்டர்காரர் கிட்ட சொல்லி பாக்ஸ்ல டிக்கெட் பிடிச்சார். வீட்ல எல்லாரும் போய் பார்த்தோம். அதென்னமோ பாக்யராஜ் படம்னா குடும்பம் குடும்பமா போய் பாப்பாங்களாம், டி. ராஜேந்தர் படம்னா விசிலடிச்சான் குஞ்சுக தான் வருவாங்களாம், எங்கம்மாவும் பக்கத்து வீட்டு ஜி. லக்ஷ்மி அம்மாவும் சொல்றாங்க”
 
“நான் பாட்டைப் பத்தி சொன்னா நீ எதையோ சொல்றியே/”
 
“இல்லை டா நா சொன்ன பாட்டு நல்லா இருக்கும். நீ பாத்த தானே, முதல்ல பொம்பளை குரல் பாடும் அப்புறம் மியூசிக் பொறவு ஆம்பளை குரல் பொம்பளை குரல் அப்புறம் திரும்ப முதல்ல பொம்பளை குரல் பாடினதே வந்துட்டு ஒரு மியூஸிக் வருமே ‘டேன்டுன்டுன்டேன் டின் டேன் டன்ன்னு’ தண்ணி நிறைய ஓட பரிசல்ல பாக்யராஜ் ஒரு பொம்பளையோட போற மாதிரி இருக்கும். அந்த மியூஸிக் எனக்கு ரொம்ப பிடிக்கும் டா, பேட்டரி போட்டு ட்ரான்சிஸ்டரை எடுத்துட்டு குளத்தாங்கரைப் பக்கம் போயிரனும். இந்த மியூஸிக் கேட்கும் போது தண்ணில காலை தூக்கி தூக்கி அடிக்கணும், எப்படி இருக்கும் தெரியுமா”
 
“அதெல்லாம் கஷ்டம், நீ குளத்துல உட்கார்ந்திருக்கும் போது ரேடியோல இந்தப் பாட்டை போடணும், இல்லைன்னா என்ன செய்வ?”
 
“ஆமால்ல?”
 
“நான் ஒன்னு சொல்றேன். அப்பாட்ட வீட்ல டேப்ரெக்கார்டர் வாங்க சொல்லு, இந்தப் பாட்டைப் போட்டுட்டு மியூஸிக் வரும் போது பாத்ரூம்ல பைப்பை திறந்துவிட்டு தண்ணீல காலை வெச்சு அடி, குதி”
 
“போடா லூசு, எனக்கு கண் முன்ன நிறைய தண்ணீ ஓடனும் அதை நான் பாத்துக்கிட்டே...”
 
“அது சரி”
 
பேருந்து வேகமெடுத்து சென்று கொண்டிருந்தது மீண்டும் ராஜு கண் அசந்தான். விழிப்பு வந்த போது வண்டி வாளாடியைத் தாண்டியிருந்தது. டோல்கேட்டில் இறங்க வேண்டும் என்று தயாராக ஆரம்பித்தான்.
 
டோல்கேட்டில் வண்டி நிற்க கீழே இறங்கி நடக்கலானான். டீ குடித்தால் தேவலை என்று வறண்ட நாக்கு உத்தரவிடும் போது போன் ரிங்கியது. உமாவுக்கு வைத்திருந்த ரிங் டோன் அவளின் அழைப்பு என்பதை சொல்ல எடுத்து பேச ஆரம்பித்தான். உமா குரலில் பதட்டம்.
 
“ராஜு, நம்ம கூட பத்தாவது வரைக்கும் படிச்ச முத்து அதான் இப்போ வயலூர்ல இருக்காரே?”
 
“ஆமா பாக்யராஜ் ரசிகன்”
 
“முத்து ஹார்ட் அட்டாக்ல இன்னிக்கு...”
 
“ஐயோ” தன்னை மீறி ராஜு அலறினான்.
 
“பதட்டப்படாத ராஜு ப்ளீஸ், மதியமே காலமாகிட்டாப்ள எனக்கு இப்போ தான் தகவல் வந்துச்சு நான் அங்க போய்கிட்டு இருக்கேன் ஷீலா, பாப்பா எல்லாரும் அவரை கூட்டிக்கிட்டு புள்ளம்பாடி கிளம்பறாங்க அவங்க கூட நான் போறேன்.. அங்க தான் தகனம் செய்யப் போறாங்களாம்” 
 
“ஷீலாவை பத்திரமா பாத்துக்க, பொம்பளைப் பிள்ளை வேற இருக்கு”
 
:”சரி, நீ எங்க இருக்க ராஜு?”  
 
“இப்போ தான் டோல்கேட் வந்தேன், பொண்ணு எங்க?”
 
“கேப்ஸ் செல்வம் அண்ணன் வீட்ல தான் விட்டுட்டு வந்துருக்கேன், அவர் தான் வயலூர் போக இண்டிகா அனுப்பினார், நீ நேரா புள்ளம்பாடி வா”
 
பெரும் ஜனத்திரளுடன் வந்த அரியலூர் ரூட் வண்டியில் பாய்ந்து ஏறினான். “பாவிப்பயலே நீ...” சுனிதி செளஹான் பேருந்துக்குள் பாடிக் கொண்டிருந்தார் லயிக்கவில்லை.
 
“இப்போ காவிரில போய் மொபைல் ஹெட் செட்ல பல தரம் தங்கச் சங்கிலி பாட்டை கேட்டு ஆத்துத் தண்ணியில காலால அடிச்சு அடிச்சு கூத்தாடி பாட்டை கேட்டுட்டேன் ஆனா அப்போ அந்த ஆசை... புள்ளம்பாடி ஏரிக்கு ஒரு வாட்டி கூட்டிட்டு போங்கன்னு அப்பா கிட்ட கேட்டேன், மாட்டேன்னுட்டார் அதான் நினைவுக்கு வருது”
 
“உனக்கு எதையுமே தைரியமா சந்திச்சு சாதிக்கத் தெரியல முத்து”
 
“அதென்னமோ சரி தான் ராஜு, ஒன்னு ஆசைப்பட்டது லேட்டா கிடைக்குது, இல்லை கிடைக்காம போய்டுது”  
 
பெண் குழந்தை இருப்பதால் ஷீலா அவள் முன் தன் துக்கத்தை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பக்குவமாக நடந்து கொண்டாள். உமாவுடன் அதிகம் பேசியபடி இருந்தாள். உள்ளூரில் எஞ்சியிருந்த சொற்ப சொந்தமும் எக்கச்சக்கமான திருச்சிவாசிகளும் வந்துவிட காரியக்காரன் “ஐயா எப்போ எடுக்கலாம்” என்றான்.
 
ஷீலாவிடம் சில வார்த்தைகள் ராஜு பேசினான். “பாத்தும்மா அவன் எதையும் வெளிப்படையா பேச மாட்டான், தன்னோட விருப்பத்தை சொல்ல மாட்டான், அதனாலயே நிறைய மிஸ் பண்ணி இருக்கான். பணம் போக்குவரத்து எல்லாத்துலயும் கவனமா இரு, என்ன உதவின்னாலும் கேளு, பாப்பாக்கு இனி நீ தான் எல்லாமே”
 
சுடுகாட்டில் முத்து ஐக்கியமாகிவிட்டான். ஐந்து வயது முதல் இப்போது வரை... முப்பத்தி ஆறு ஆண்டுகள் நண்பனாக ராஜுவுடன் தொடர்ந்தவன், வாழ்க்கை பிரயாணத்தை முடித்துக் கொண்டுவிட்டான்.
 
“உமா, ஷங்கர் பேமிலி கிளம்புது பாரு, நீ அவங்க கூட போ, தில்லை நகர்ல அவங்க வீடு, நான் சொல்லிட்டேன். ஸ்ரீரங்கத்துல நம்ம வீட்டு வாசல்லயே ட்ராப் செய்வாங்க”
 
“நீ எங்க போற?”
 
“கொஞ்சம் அய்யவாய்க்கால் வரைக்கும் போயிட்டு வரேன். மொபைல்ல ராஜா ஹிட்ஸ்னு பாக்யராஜ் படப் பாட்டுக நிறைய இருக்கு, அவனுக்கு உசுரு, அதைப் பாத்தாலே கில்டி ஃபீலிங் வருது, எல்லாத்தையும் அழிக்கலாம்னு இருக்கேன்”
 
“பாட்டு ஃபோல்டரை அழிக்கப் போறியா? இல்லை கில்டி ஃபீலிங்கையா?”
 
“தெரியல”
 
“எப்படி டா வாய்க்கால் புல்லா தண்ணீ, பாட்டைக் கேட்டுக்கிட்டே நல்லா குதிச்சு விளையாடி கால் முழுக்க ஈரம், உன் ஆசையை எங்கூருல நிறைவேத்திட்டேன். சந்தோஷமா முத்து?”
 
“டேய் உன்கிட்ட மட்டும் சொல்றேன் அவ என் சுலக்ஷணா டா”
 
“யாரை சொல்ற முத்து?”
 
“நம்ம உமா மகேஸ்வரி, ப்ளீஸ் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு”
 
“சத்தியம், யார் கிட்டயும் சாகற வரைக்கும் இந்த ராஜு சொல்ல மாட்டான்”   
************************************
(கல்கி வார இதழில் வெளிவந்த சிறுகதை) 
0 Comments

கவிதைப் பக்கம் – பாரியன்பன் நாகராஜன்

7/19/2019

0 Comments

 
ஆதி உலகம் 

எல்லோரும்
இருட்டில் இருக்கின்றீர்கள்
மானம் காக்கும்
 
ஆடைகளைத் தளர்த்தி
முழுவதுமாய் விடுவித்து
 
அவரவர் பாலினத்தை
'குறி'பிடித்து  
நிரூபிக்கத் தொடங்குகின்றீர்கள்.
 
முதலில் தயங்கிய நீங்கள் 
ஒருவன் வழிநடத்தியதின் 
பொருட்டு கொஞ்சம் கொஞ்சமாய் 
அச்சத்தை துறக்கிறீர்கள்.
 
உங்களைப் பின்தொடர்ந்து 
ஒருவர் பின்னொருவராய் 
வெட்கம் களைய ஆடைகளைக் 
கழற்றி வீசத் தொடங்குகின்றீர்கள்.
 
தயக்கம் அச்சமின்றி 
வெளியேறியதும்
புதிதாய்ப் பிறந்த 
ஆதி மனிதரைப்போல்
ஏதுவும் தெரியாமல் 
வார்த்தைகளின்றி நிர்வாணமாய் 
இருக்கச் சம்மதிக்கின்றீர்கள்.
 
அந்நொடி முதல்
பட்டப்பகலிலிருந்து கவர்ச்சியுடனான 
ஓர் 'ஆதி உலகம்'உங்களுக்காக 
இனிதே உதயமாகத் தொடங்குகிறது.

0 Comments

ஊர் சுற்றி... போஜனம் தேடி... – சத்யா GP

7/19/2019

7 Comments

 
மெஸ் வடிவமைப்பைக் கொண்ட ஒரு சைவ சிற்றுண்டி உணவகம் வெற்றிகரமாக நூறாவது ஆண்டை அடி எடுத்து வைத்து தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருகிறது. உணவகத்தைத் துவக்கிய அதே குடும்பத்தாரின் நிர்வாகத்தின் கீழ் சீரும் சிறப்புமாக கோலாச்சுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
 
நம்பித்தான் ஆக வேண்டும். அந்த சைவ சிற்றுண்டி உணவகம் தாயார் மீனாட்சியம்மன் அவதரித்த தூங்கா நகரம் மதுரையில் இயங்குகிறது. நான் வணங்கும் மீனாட்சி தாயார் சந்நிதி அருகில் அமையப்பெற்று மக்களின் பசியைப் போக்குகிறது என்பது தமிழர்களாகிய நம் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டிய சங்கதி.
 
பாசக்கார மதுரைக்கார தோஸ்த் ஒருவன் இந்த உணவகத்தைப் பற்றி எடுத்து சொன்ன போது என்னால் நம்பவே முடியவில்லை. தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்டு திருச்சியில் கல்வி பயின்று, வேலை பார்த்து சுமார் 27 வருடங்கள் திருச்சியுடன் குடும்பம் நடத்திய எனக்கு மதுரை பரிச்சயமான பிராந்தியம். மெடிக்கல் ரெப்பாக இருக்கும் போது மதுரையிலும் சில காலம் பிழைப்புக்காகத் தங்கி வேலை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த சிற்றுண்டி சாலை பற்றி எனக்குத் தெரியாது. தகவல் தெரிந்த உடனே மதுரையில் வசிக்கும் நண்பர் சந்திர மெளலி சாரிடம் மெஸ் பற்றி கேட்க அவர் புளகாங்கிதம் அடைந்தார்.
 
“மீனாட்சியம்மன் கோயில் பக்கத்துல இருக்கு, டிஃபன் பிரமாதமா இருக்கும், நான் நிறைய தரம் அங்க போய் சாப்பிட்டு இருக்கேன். இடம் சுத்தமா இருக்கும். எல்லா டிபன் வகையும் டேஸ்ட்டாவும் இருக்கும், உடம்பையும் எதுவும் செய்யாது, அடுத்த முறை நீங்க மதுரை வரும் போது அவசியம் உங்களைக் கூட்டிட்டுப் போறேன்”
 
  • சந்திர மெளலி சார் சொன்னது இது.   ​ ​
Picture
உணவகத்தின் மேலாளர், உரிமையாளர் ஆகியோரது அலைபேசி எண்களைத் தந்து, மேலதிகத் தகவல்களுக்கு நேரடியாக பேசிக்கொள்ளுமாறு என்னிடம் சொன்னார்.
 
சைவ சிற்றுண்டி சாலை, மெஸ், உணவகம் என மீண்டும் மீண்டும் எழுதி வருகிறேனே அதன் பெயர் “கோபு ஐயங்கார் டிஃபன் சென்டர்”              
 
இந்த உணவகத்தின் ஸ்பெஷல் பதார்த்தம் “வெள்ளையப்பம்” தினமும் மாலை மூன்று மணிக்கு மேல் சுடச்சுட தயாராகும் இதை உணவகத்திற்கு வரும் மக்கள் விரும்பி உண்கிறார்கள். ஏராளமான ரசிகர்கள் வெள்ளையப்பத்திற்காகவே தினசரி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். வெள்ளையப்பத்துடன் தொட்டுக் கொள்ளத் தரும் காரச் சட்னியும் இவர்களின் தனித்துவமான தயாரிப்பு.
 
காலை ஆறு மணியிலிருந்து நண்பகல் பதினோரு மணி வரை இட்லி, தோசை, வடை, பூரி, பொங்கல், ஃபில்டர் காஃபி போன்ற பதார்த்தங்களை தயாரித்து விற்கிறார்கள். பின்பு கடை சாத்தப்படுகிறது, மீண்டும் மூன்று மணிக்கு வெள்ளையப்பத்துடன் திறக்கப்படுகிறது. இரவு பத்து மணி வரை கடை உண்டு.     
 
எக்கச்சக்கமாக ஆச்சரியத்தையும், பரவசத்தையும் பரிமாறும் கோபு ஐயங்கார் டிஃபன் சென்டர் குறித்து தற்போது அதை நிர்வகித்து வரும் உரிமையாளர் (Proprietorix) ஸ்ரீமதி. சுபா அவர்களைத் தொடர்பு கொண்டு அலைபேசியில் பேசினேன். அவர் வசிப்பது பெங்களூரில். அங்கிருந்தபடி நிர்வகிக்கிறார். அவருடனான சம்பாஷணையிலிருந்து :   ​
Picture
துவக்க அறிமுக சம்பிரதாயப் பேச்சுக்குப் பிறகு, “வணக்கம் மேடம், உங்க டிஃபன் சென்டர் பத்தி ஒரு ஆர்டிக்கல் எழுதலாம்னு யோசனை, அதாவது “ஊர் சுற்றி... போஜனம் தேடி...” இப்படி ஒரு தலைப்புல ஒவ்வொரு ஊர்ல நீண்ட நெடுங்காலமா சுவையா, உடலுக்கு தீங்கு விளைவிக்காத வீட்டு சாப்பாடு மாதிரி தரத்தோட உணவு தர சைவ உணவகங்கள் பற்றி ஒரு தொடர் எழுதலாம்னு தோணுச்சு, என் ஃப்ரெண்ட் உங்க கடையைப் பத்தி சொல்ல, உங்க மெஸ்ல இருந்து ஆரம்பிக்கலாம்னு எண்ணம், நீங்க நேரம் ஒதுக்கி தகவல்கள் சொன்னால் உதவியா இருக்கும்”
 
“தாராளமா கேளுங்க சொல்றேன்” 
 
“இந்த ஸ்தாபனம் எப்போ துவங்கிச்சு, யார் ஆரம்பிச்சாங்க கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்”
 
“இந்தக் கடையை முதல்ல வேற ஒருத்தர் நடத்திக்கிட்டு இருந்தார். அந்த ஹோட்டல்ல எங்க தாத்தா (அப்பா வழி) சப்ளையரா வேலை பார்த்தார். 1920 வது வருஷம் தாத்தா கடையை வாங்கி சின்ன சின்ன ஆல்ட்ரேஷன் வேலைகள் மட்டும் செய்து “கோபு ஐயங்கார் டிஃபன் சென்டர்”ன்னு பேர் மாத்தி ஆரம்பிச்சார், அதுக்கப்புறம் எங்கப்பா கடையைப் பாத்துக்கிட்டார் அவர் பேர் ஸ்ரீநிவாசன். அப்பாக்கு பாத்துக்க சிரமமா இருக்கும் போது நான் நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பிச்சேன். கடந்த பத்து வருஷமா நான் தான் கடையைப் பார்த்துக்கறேன்”
 
“தாத்தா பேரு?”
 
“கோபாலன்”
 
“அப்பா?”
 
“அப்பா நாலு வருஷத்துக்கு முன்ன காலமாகிட்டார்”
 
“நீங்க என்ன படிச்சுருக்கீங்க?”
 
“எம்ஸிஏ, ஐடி கம்பெனி உத்தியோகத்தைப் பார்த்தபடி இதையும் கவனிக்கிறேன். கடவுள் புண்ணியத்தில் எல்லாம் நல்ல படியா நடக்குது”    
 
“கடை நடத்த ஏதாவது குறிக்கோள் மாதிரி வெச்சுருக்கீங்களா mam?”
 
“கண்டிப்பா, தாத்தா, அப்பா காலத்தில் எப்படி க்வாலிட்டி மெயின்டெயின் செய்தாங்களோ அதை அப்படியே ஃபாலோ செய்யறேன், நோ காம்ப்ரமைஸ், உதாரணத்துக்கு ஒரு தரம் உபயோகப்படுத்திய சமையல் எண்ணையை திரும்ப பயன்படுத்த மாட்டோம், கீழ கொட்டிடுவோம், சாப்பிட வரவங்களுக்கு தரமான ஆகாரத்தை தரனும், எங்க motto ன்னு சொல்லலாம்”    
 
“வெள்ளையப்பம் உங்களோட signature dish ன்னு மக்கள் சொல்றாங்க, இதைத் தவிர வேறென்ன ஸ்பெஷல்?” 
 
“வெள்ளையப்பம் மட்டும் இல்லை, அதுக்கு தொட்டுக்க தர காரச் சட்னியும் ஸ்பெஷல் தான். பச்சை மிளகாய் வெச்சு அரைக்கிற அந்த சட்னியோட பக்குவம் நல்ல ருசியா இருக்குன்னு வர வாடிக்கையாளர்கள் சொல்வாங்க”
 
“விரிவாக்கம், கிளைகள், நவீனப்படுத்தறது இப்படி எதிர்காலத் திட்டங்கள் என்ன வெச்சுருக்கீங்க?”
 
“மீனாட்சியம்மன் கோயில் பக்கத்துல இருக்கற மாதிரியே, இங்க உள்ள பதார்த்தங்கள் கிடைக்கிற மாதிரி இன்னொரு கிளை பை பாஸ் ரோட்ல வெச்சுருக்கோம்”
 
“தேனி பை பாஸ்லயா?”
 
“ஆமா, காமாட்சியம்மன் கோயில் பக்கத்துல இருக்கு, அங்க இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா தினமும் சாயங்காலம் 101 வகை தோசைகள் தரோம், அப்புறம் இந்த மீனாட்சியம்மன் கோயில் பக்கத்துல இருக்கற டிஃபன் சென்டர்ல வெங்காயம், பூண்டு சேர்க்கை கிடையாது. ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கறவங்க, விரதம் இருக்கறவங்க இப்படி எல்லாரும் வந்து சாப்பிடற மாதிரி சமைச்சு தரோம்”
 
“உங்க கடைக்கு லீவே கிடையாதா?”
 
“வாரா வாரம் திங்கட்கிழமை லீவ்”    
 
“அதென்ன திங்கள், ஏதாவது காரணமிருக்கா?” 

Picture
“தாத்தா இதை நடத்தும் போது பிரிட்டிஷ் ஆட்சி காலம். வாரம் ஒரு நாள் லீவ் விடணும்னு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்டுருந்தாங்க, ஞாயித்துக்கிழமை நிறைய மனுஷா கடைக்கு வரதால தாத்தா திங்கள் லீவ் விட்டார். அது பழகிப் போச்சு”
 
“ஒரு கிளை மட்டும் போதும்னு முடிவு செய்துட்டீங்களா?”
 
“பெரிய ஸ்டார் ஹோட்டல் மாதிரி எல்லாம் கடை நடத்த எனக்கு விருப்பம் இல்லை, சுத்தம், சுகாதாரம், தரம், ருசி இப்படி எதுலயும் சமரசம் செய்துக்காம இந்த மிட் ரேஞ்சுலயே நிறைய கிளைகள் ஆரம்பிச்சு நடத்தனும் அது தான் ஆசை”
 
“நீங்க மதுரைல தான் இருக்கீங்களா?”
 
“நான் பெங்களூர் வாசி. நான் இங்க இருந்து நிர்வாகத்தைப் பாத்துக்கறேன், மாசம் ஒரு தரம் மதுரை வருவேன், என் அத்தை மகன் மதுரைல இருக்கார், அவர் ரெண்டு கடையும் பார்த்துப்பார்”
 
“எப்படி பெங்களூர்ல இருந்து?”
 
“சிசி டிவி தான்”
 
“டெக்னாலஜியைப் பயன்படுத்தறீங்க”
 
“ஆமா பணம் செலுத்துறது கூட கார்ட், வேலட், கேஷ்னு சகல விதத்திலும் செய்யற வசதி இருக்கு, பை பாஸ் கடைல ஸ்விக்கி, ஸோமேடோ கூட டீல் வெச்சுருக்கோம்”
 
“பக்காவா அப்டேட் ஆகி இருக்கீங்க, வேற பிஸ்னஸ் ஏதாவது செய்றீங்களா?”
 
“மதுரைல ஒரு காஃபி ஷாப் வெச்சு நடத்தறேன். “Gobble Dobble” ன்னு பெயர்”
 
“தாத்தாவோட பெயரை இதிலும் கொண்டு வந்துட்டீங்க”
 
“ஆமா, என்ன ஸ்பெஷல்னா மதுரைல முதல் கேமிங் காபி ஷாப் (Gaming coffee shop) இது தான்”
 
“நல்ல கான்செப்ட், உங்க கிட்ட எத்தனை பேர் வேலை பாக்கறாங்க”
 
“மேனேஜர், சமையல் காரர், சப்ளையர் இப்படி 25 பேர் இருக்காங்க”
 
“முக்கியமான கேள்வி, பிரபலங்கள் யார் யார் உங்க உணவகத்தோட ரெகுலர் வாடிக்கையாளர் அதை சொல்லுங்க”
 
“பெருந்தலைவர் காமராஜர் அடிக்கடி வருவார், அவருக்கும் வெள்ளையப்பம்னா இஷ்டம், பிரபல வயலின் இசைக் கலைஞர் மேதை மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன் அடிக்கடி வருவார்”
 
“இப்போ உள்ள பிரபலங்களில் யாரவது...” 

Picture
“மதுரைக்கு வந்தாலே காலைல வாக்கிங் போகும் போது நம்ம கடைக்கு வந்து காபி பலகாரம் எல்லாம் ‘அவர்’ சாப்பிட்டு போவார். கடையில் வேலை செய்யற நிறைய பேரோட பெயர் கூட அவருக்குப் பரிச்சயம். பெயர் சொல்லி கூப்பிட்டு நலம் விசாரிப்பார். யாருன்னு யூகிக்க முடியுதாங்க, அவர் ஒரு அரசியல் பிரபலம்”
 
“தெரியல யாருங்க?”
 
“மு.க. ஸ்டாலின்”
 
“உங்க உணவகம் பத்தி கேள்விப்பட்ட உடனேயே புதுசா ஆரம்பிக்கற தொடரில் முதல் அத்தியாயத்தில் உங்க கடை பத்தி வரணும்னு ஆசைப்பட்டேன், நீங்களும் உங்க பிஸி ஷெட்யூல்ல நேரம் ஒதுக்கி கடை பத்தி தகவல்கள் சொன்னீங்க, நீங்க மேலும் மேலும் சிறப்பா வளர்ந்து மக்களின் உணவுத் தேவையை உங்க தரமான சேவை மூலம் பூர்த்தி செய்து சிகரம் தொட்டு மேலும் புகழ் பெற வேண்டும்னு எல்லாம் வல்ல ஈசன் கிட்ட வேண்டிக்கறேன்”
 
“ரொம்ப நன்றிங்க, மதுரைக்கு வரும் போதெல்லாம் அவசியம் நம்ம கடைக்கு வாங்க, மீண்டும் நன்றி, வணக்கம்”  
             
7 Comments

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    July 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.