Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

சிறுகதை – சத்யா GP

10/26/2019

0 Comments

 
உப்பு மாமா
கீழ வாசலில் கிளம்பி வழியில் எங்கேயும் நிறுத்தக் கூடாது என்று நினைத்தபடி சிவராமன் எக்ஸ்எல் சூப்பரை ஓட்டிக் கொண்டு வந்தார். வாகனத்தின் முன்னே வைக்கப்பட்டிருந்த இரண்டு பைகள், வண்டியின் பக்காவாட்டில் க்ளாம்ப் பொருத்தப்பட்ட இடத்தில் இரு பைகள், சுமை அதிகம் ஆனால் ஒவ்வொரு முறையும் நினைப்பு பிரசவ வைராக்கியமாகத்தான் மாறிப் போகிறது.
 
பள்ளியக்ரஹாரத்தில் ஒரு வட்டம் அடித்து அந்தப் பக்கம் இருக்கும் தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் வண்டியை நிறுத்தி மனமுருக பிரார்த்தனை செய்து, நெற்றி நிறைய திருநீரை அள்ளிப்பூசி வண்டியை திட்டை நோக்கி சீரான வேகத்தில் ஓட்டிச் செல்லும் போது கிடைக்கும் மனதிருப்தியை சிவராமனுக்கு யாராலும் தர இயலாது.              ​
Picture
சிவ தரிசனம் முடித்து வண்டியை சீரான வேகத்தில் ஓட்டி திட்டைக்குப் போய் சேர்ந்த போது மணி ஏழு. ஆறரை மணிக்கெல்லாம் வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள். ப்ளஸ் டூ படிக்கும் மகன் சர்வேஷை அதிகம் தொந்தரவு செய்வதாக சிவராமன் நினைத்தார். ரகு கடையைப் பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியம் உள்ளவன் தான். இருந்தாலும் தனி ஆளாக சமாளிப்பது கஷ்டம்!
 
முதல் நாள் இரவும், மறு நாள் முழுதும் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையால் குளத்தில் வறட்சி இல்லை. நிறையவும் இல்லை. சிறு ஓடை போல் நீர் கண்ணுக்குப் புலப்பட்டது. சனிக்கிழமை கோயிலில் திரக்கு காணப்படவில்லை. வியாழக்கிழமைகளில் ஜனம் அதிகம் கூடும். இறைவி மற்றும் இறைவனின் பெயர்களை மறந்து நவக்கிரக கோயிலாகவும், பரிகார ஸ்தலமாகவும் மாற்றி, ஆன்மீகப் பத்திரிகைகளும் அப்படியே எழுத இவை கண்டு மக்களும் புத்தி மாறிப் போய்விட்டார்களே என்று சிவராமன் முன்பெல்லாம் அடிக்கடி அங்கலாய்ப்பார். இப்போது சில நிமிடங்களுக்கு பெருமூச்சு, அவ்வளவு தான்! புத்தி பழகிவிட்டது.
 
மகன் சர்வேஷை மெஸ் வியாபாரத்தில் நிறுத்துவது உறுத்தல் தான் ஆனால் ரகுவுக்கு அவ்வளவு சூசனை கிடையாது. பணத்தை வேகமாக எண்ணும் கலை கை கூடவில்லை. ஒரே சமயத்தில் பலர் ஆர்டர் சொன்னால் பதட்டம் அடைவான். வாளியில் இருந்து சாம்பார் கீழே சிந்தும். கைகள் நடுங்கும். கல்லாவில் சர்வேஷ், பரிமாற ரகு. இது சரியாக இருக்கும். அவ்வளவு கூட்டம் இல்லை. இட்லி மாவை அரைத்து, உப்பு சேர்த்து, கரைத்து பெரிய சம்படத்தில் வைத்தாகிவிட்டது. தேங்காய் சட்னி அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு தான் கிளம்பினார். ஆறே முக்கால் மணிக்கு ராப்பலகாரத்திற்கு இலை போடுவது “அன்னப்பூரணி மெஸ்”ஸின் வழக்கம். ஒன்பதரை மணிக்கெல்லாம் கடைக்கு ஜன வரத்து குறைந்துவிடும் ஆனால் சிவராமன் பத்தரை மணிக்கு தான் கடை சாத்துவார். சொல்லி வைத்தார் போல் இரண்டு மெடிக்கல் ரெப்புகள் தினமும் பத்தே கால் மணிக்கு வந்து சப்பாத்தி, தோசை சாப்பிட்டு மோர் குடிப்பார்கள். அவர்களுக்காக காத்திருப்பது பழக்கமாகிவிட்டது. அவர்கள் ஊரில் இல்லையென்றால் போன் செய்து முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள்.
 
சாப்பாட்டு அரிசி, இட்லி அரிசி, உளுந்து, கோதுமை மாவு, வெந்தயம், பெருங்காயத்தூள், கடலெண்ணெய், பசுநெய், காபித்தூள், ஜீனி, வர மிளகாய், தனியா, உப்பு, து. பருப்பு, பா. பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மணத்தக்காளி வற்றல், அப்பளம், வாழை இலை, காய்கறிகள்... சகலமும் வாங்கி வந்தார். வெங்காயம், உருளை, சேனை போன்ற அதிக நாட்கள் தாங்குபவற்றை பேரம் பேசி மொத்தமாக வாங்கி வந்துவிடுவார். தினமும் காலை ஐந்தரை மணிக்கு லக்ஷ்மி கீரைக் கட்டுகள் தருவது வாடிக்கை. வண்டியிலிருந்து பைகளைப் பிரித்தார். கனத்தது... மெஸ்ஸுக்குள் நோட்டம் விட்டார். உள்ளே உப்பு மாமாவுக்கு இலை பரிமாறப்பட்டு இருந்தது. அவர் சாப்பிட்டபடி சர்வேஷிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். உப்பு மாமாவின் ரா போஜன நேரம் அதுவே!
 
“என்ன மாமா நாழியாகிடுத்து? நானே புளி, மிளகாய் அரைச்ச சட்னி தாளிச்சுட்டேன்”
 
“நாலுக்கு கிளம்பி இருக்கணும் ரகு அஞ்சு மணிக்கு புறப்பட்டேனா அதான் தாமசம்”
 
சிவராமன், உப்பு மாமா அமர்ந்திருந்த டேபிளை கவனித்தார். இலைக்கருகே ஒரு சின்ன கப், அதில் வழக்கம் போல் உப்பு.
 
“என்ன ஓய் மெஸ்ஸுக்கு தானே மளிகை வாங்க கீழ வாசல் போன, என்னமோ கல்யாணத்துக்கு சாமான் வாங்கப் போன மாதிரி வர”
 
“உப்பு மாமா பேரு சரியாத்தான் இருக்கு” சிவராமன் முணுமுணுத்தபடி, “ஒண்ணுமில்லை மாமா எப்பவும் வாங்கறது தான்”
 
“நீ முணுமுணுக்கறது காதுல விழுந்துது”
 
“...”
 
உப்பு மாமா அவருக்கு இஷ்டமான வெங்காய ஊத்தப்பத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஊத்தப்பத்திற்கு அவர் சொன்ன செய் முறை விளக்கத்தை சிவராமன் மறக்கவே இல்லை. அதை ரகுவிடமும் தெளிவாக சொல்லி இருந்தார்.
 
மாவை கல்லில் ஊற்றி விட்டு மொளாப்டியைத் தூவ வேண்டும். அதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அள்ளித் தெளிக்க வேண்டும். மீண்டும் மேலே மொளாப்டி, நிறைய எண்ணெய் விட்டு நன்கு வெந்ததும் பதமாக எடுத்துத் திருப்பிப் போட வேண்டும். இரு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் பரிமாற வேண்டும்.
ஊத்தப்பத்தின் நடுவே உப்பலாகவும் ஓரத்தில் முறுகலாகவும் இருப்பதே உண்மையான ஊத்தப்பம் என்பார் உப்பு மாமா.
 
மூன்று இட்லி, ஒரு வெங்காயப் பொடி ஊத்தப்பம், ஒரு கிளாஸ் மோர் இது தான் அவரின் இரவு உணவு மெனு. அதில் மாற்றமே கிடையாது. சாப்பிடும் போது அருகே சிறு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் உப்பு வைத்துவிடுவது உத்தமம். சாம்பார், சட்னி போன்றவற்றில் உப்பு பத்தல என்று சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். “உப்பிட்டவரை...” இது உனக்குத் தான் பொருந்தும் சிவராமா என்று அவ்வப்போது பகடி செய்வார். திடீரென சர்வேஷின் படிப்பு பற்றி பேச ஆரம்பித்தார்.
 
“ஏன் டா உன் பிள்ளையாண்டான் பத்தாவதுல மார்க் கம்மியா வாங்கினானா, காமர்ஸ் க்ரூப் சேர்த்துருக்க?” மாமா திட்டை வந்து ஒன்றரை வருடம் ஆகிறது. இது வரை கேட்காத கேள்வி. சிவராமன் பேச ஆரம்பித்தார்.
 
“கணக்குல நூத்துக்கு நூறு, சைன்ஸ்லயும் சென்டம், தமிழ்ல தொண்ணுத்தி ஏழு, இங்கிலீஷ்ல தொண்ணுத்தி அஞ்சு, சோஷல் சைன்ஸ்ல தொண்ணுத்தி எட்டு”
 
“ஐந்நூறுக்கு நானூத்தி தொண்ணுறு எடுத்துருக்கான், ஃபர்ஸ்ட் க்ரூப் சேர்த்துருக்கலாமே ஏன்?”
 
“அவனுக்கு மெடிக்கல் படிக்க இஷ்டம்”
 
“அப்புறம் என்ன படுபாவி?”
 
“என்ன செய்ய, இந்த ஏழை கடன்கார பிராமணனுக்கு மகனா பிறந்துட்டான், மெடிக்கலுக்கு எல்லாம் கொடுப்பினை வேணும். தாய் இல்லாத பிள்ளை, ஏதோ குறை வைக்காம படிக்க வைக்கறேன், பி.காம் சேர்க்கலாம்னு?”
 
“அது படிச்சா மட்டும் பணக்காரனாகிடுவானா?”
 
“ஆயிரத்தி இருநூறுக்கு ஆயிரத்தி இருநூறு எடுத்தாலும் இவன் பொறப்புக்கு மெடிக்கல் கிடைக்காது மாமா விட்டுடுங்கோ”
 
“அடப் போடா பிரும்மஹத்தி, டேய் சர்வேஷ் உன்னை சி.ஏ சேர்த்து விட்டா படிப்பியா? செலவை நான் பாத்துக்கறேன்”
 
“சரி மாமா”
 
“டேய் உங்கப்பனும் மாமான்னு சொல்றான், நீயும் மாமான்னு சொல்றியே, வாய் நிறைய தாத்தான்னு கூப்பிடுறா”
 
“சரி தாத்தா”
 
மழை இரு நாள் கூத்தாகி வழக்கம் போல் சூரியன் மண்டையைப் பிளக்க நாட்கள் இயல்பாகிப் போனது. உப்பு மாமாவும் கோயில், மெஸ், வாரம் ஒரு நாள் பெரிய கோயில், இரு வாரங்களுக்கொரு நாள் வைத்தீஸ்வரன் கோயில், மாதமொரு முறை ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் என்று ஏகாந்தமாக வளைய வந்து கொண்டிருந்தார். ஒரு நாள் காலை காபி குடிக்க வந்தவர். சிவராமனிடம் “என்னமோ தெரியல படபடப்பா இருக்கு” என்றார். உப்பு மாமாவுக்கு காபி கொஞ்சம் கசப்பாக இருக்க வேண்டும். நுரை தளும்ப இருந்தால் தான் தொண்டைக் குழிக்குள் இறங்கும்.
 
“காபி கசப்பா குடிக்கணும் ஆனா டீ அப்படியில்லை. கொஞ்சம் பால் வட்டமா, சக்கரை குறைவில்லாம, ஏலக்காய், இஞ்சி போட்டு இருக்கணும்” மாமாவுக்கு எல்லாவற்றிலும் டேஸ்ட் முக்கியம்.
 
“உன்னி கிருஷ்ணன், சஞ்சய் சுப்பிரமணியம் ஏதோ நன்னா பாடறா இருந்தாலும் அந்தக் காலத்துல...” பேசிக்கொண்டிருந்தவர் திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். வியர்த்துக் கொட்டியது. மாமாவுக்கு ஷுகர், பிபி போன்ற எந்த தொந்தரவும் கிடையாது. சிவராமன் பதறினார்.
 
“என்னாச்சு மாமா?”     
 
“ஒன்னும் இல்லை, இந்த காபி தம்ளர வாங்கு”
 
பாதி குடித்த தம்ளரை சிவராமன் வாங்க, “ராமா” என்று சொல்லியபடி மாமா டேபிளில் சரிந்தார். பதறிய சிவராமன் ரகுவை அழைத்து அடுத்த தெருவில் உள்ள டாக்டரை அழைத்து வர சொன்னார்.
 
டாக்டர் “எல்லாம் முடிந்துவிட்டது” என்று சொன்னபோது சிவராமனுக்கு ஈஸ்வரனுக்கு தீபாராதனை காட்டும் அர்ச்சகர் லிங்கத்தைப் பார்க்க விடாமல் முதுகு காட்டி நிற்பது போல் இருந்தது.
******************   
மாமா எப்போதும் சொல்லும் டயரி அவர் வீட்டு டிவிக்கு அருகே உள்ள செட்டப் பாக்ஸ் பக்கத்தில் அமைதியாக இருந்தது. உயிரற்ற காகிதக் குவியலில் உயிருடன் இருக்கும் போது ஒரு ஜீவன் எழுதிய முக்கியக் குறிப்புகள். சிவராமனுக்கு, தனியாக இருந்த மாமாவின் ரத்த சொந்தங்களை அழைக்க வேண்டும். கடைசிக் காரியங்களை செய்ய வாரிசு வர வேண்டாமா? மாமாவின் கட்டை வேக வேண்டாமா? டயரியைப் புரட்ட ஆரம்பித்தார். அவரின் பிறந்த நாளானா மே பதினைந்தாம் தேதி சொத்துப்பங்கீடு குறித்து விரிவாக எழுதி இருந்தார்.
 
முடிச்சூரில் உள்ள வீடு மேஜர் ஆன பின் அவரது பேரனுக்கு, தவிர வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள பணம், மூன்று வங்கி மற்றும் இரு நிறுவனங்களில் உள்ள வைப்பு நிதி, அவரது டீமேட் கணக்கில் உள்ள பதினோரு ப்ளூ சிப் நிறுவனப் பங்குகள் குறித்த விவரம்... அனைத்தும் அவர் மகனுக்கு என்று எழுதி இருந்தது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தங்க விரும்பினால் தங்கிக் கொள்ள எதுவாக திட்டை வீட்டை நிர்வகிக்க வேண்டும் என்றும், திட்டை வீடு சிவராமனுக்கு என்று மாமா குறிப்பு எழுதி இருந்தார். இது தவிர டாடா மோட்டர்ஸ் போன்ற பதினோரு பெரிய நிறுவனங்களில் ஓர் ஆண்டு காலத்திற்கு சேமிப்பு என்னும் காலக்கெடுவில் உள்ள பத்து லட்ச ரூபாய் வைப்பு நிதியானது சிவராமனின் மகன் சர்வேஷின் மேற்படிப்புக்குப் பயன் படுத்த வேண்டும் என்றும் அத்தொகையை சிவராமன் எடுத்துக் கொள்ளலாம் என்று தெளிவாக எழுதி இருந்தார். அனைத்தும் உயிலாக எழுதப்பட்டு பதிவு செய்துள்ளதாகவும் உயிலின் ஒரு பிரதி அலமாரியிலும் மற்றொரு பிரதி திருச்சியில் உள்ள வழக்கறிஞர் நீலகண்டனிடமும் உள்ளதாக தகவல் தந்திருந்தார்.
 
கையில் இருந்த டயரி கனப்பது போல் சிவராமனுக்குத் தோன்றியது. டயரியில் இருந்த மாமாவின் மகன் ஸ்ரீநிவாசனின் அலைபேசி எண்ணை எடுத்துப் பேசத் துவங்கினார்.
*************
சொன்ன சொல்லை ஸ்ரீநிவாசன் தட்டவே இல்லை. சென்னையில் இருந்து இரண்டு மணி நேரத்தில் கிளம்பி மனைவி மற்றும் மகனுடன் திட்டைக்கு அவர் கார் வரும் போது மணி மாலை நான்கு. பிரயாணத்தின் போது மணிக்கொரு முறை சிவராமனிடம் ஸ்ரீநிவாசன் பேசத் தவறவில்லை.
 
பெரிய அளவில் கூட்டமிருக்காது என்று சிவராமன் நினைத்தார். உப்பு மாமா விஷயத்தில் எது எதிர்பார்த்தது போல் நடந்திருக்கிறது. மெட்ராஸ், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மாயவரம், வைத்தீஸ்வரன் கோயில், குளித்தலை, பெரம்பலூர், திருவையாறு, திருவாரூர், நாகப்பட்டினம்... பல்வேறு ஊர்களிலிருந்து ஏகப்பட்ட நண்பர்கள் வருகை அனைத்தையும் பிரமிக்க வைத்தது. இரண்டு நாட்களுக்கு மெஸ் மூடப்பட்டது. ஈமக்கிரியை முடித்து பத்தாம் நாள் காரியமும் முடிந்தது. கிரேக்கியத்திற்கு தஞ்சை மஹாராஜாவில் புத்தாடை வாங்கப்பட்டது. சிவராமனின் நளபாகம். போஜனத்தில் அவர் குறை வைக்கவே இல்லை. குட மிளகாய் சாம்பார், அவரைக் காரக் குழம்பு, தக்காளி எலுமிச்சை ரசம், டாங்கர்ஸ் பச்சடி... பார்த்து பார்த்து செய்தார். உப்பு மாமா இறந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள். ஸ்ரீனி புறப்படத் தயாரானான். சிவராமன் பேச ஆரம்பித்தார்.
 
“நான் மூணு நாள் தாயாதிக்காரன் கூட கிடையாது, அவர் என்னமோ எழுதி வெச்சுட்டுப் போயிட்டார், நான் வேணா எதுவும் வேண்டாம்னு எழுதி...”
 
ஸ்ரீனி இடைமறித்தான்.
“வேண்டாம் மாமா, சட்டப்பூர்வமா உயில் எழுதி இருக்கார், அவரோட புள்ளையா நான் செய்யற கடமை அவரோட கடைசி ஆசையை நிறைவேத்துறது தான் ப்ளீஸ்” ஸ்ரீனியின் மனைவியும் அதை ஆமோதித்து தலையாட்டினாள்.
 
“ஸ்ரீனி சொல்றது தான் சரி. நீங்க பெரியவங்க எல்லா சம்பிரதாயமும் தெரிஞ்சவங்க, அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டாமா?
 
“உங்க கூடவே இருந்திருக்கலாம் அவர் ஏன் தனியா பிரிஞ்சு இருந்தார்?”
 
“அம்மா காலமான போது எனக்கு பதினாலு வயசு, வீட்டுக்கு ஒரே பையன், எல்லாரும் அவரை இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க சொன்னாங்க, என் பையன் முக்கியம்னு மறுத்துட்டார், என்னை நல்ல படியா வளர்த்தார், படிக்க வைச்சார், சொந்தக் கால்ல நான் நிக்கிற வரைக்கும் தாங்கினார், கல்யாணம் செஞ்சு வெச்சார், நான் தான்...” சொல்லியபடி ரோஹிணியைப் பார்க்க அவள் மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். ஸ்ரீனியின் மகன் சந்துருவும் சகஜமாக சிவராமனிடம் பேசத் துவங்கி இருந்தான். அம்மாவுடன் அமைதியாக வெளியே கிளம்பினான்.
 
“என்னப்பா சொல்ற, அதான் கல்யாணம் செஞ்சுண்டு நிறைவா குடித்தனம் செய்யறியே அப்புறம் என்ன”
 
“பரம்பரை ராசி மாமா, எனக்கு கல்யாணம் இருபத்தேழு வயசுல நடந்தது. அவ மூனே வருஷத்துல போய் சேர்ந்துட்டா”
 
“அப்போ...”
 
“ரெண்டாம் கல்யாணம், உடனே செஞ்சுக்கல, மூணு வருஷம் கழிச்சு தான், அப்போ குழந்தையும் இல்லை, எனக்கும் வாழ்க்கைல ஒரு பிடிப்பு வேண்டாமா?
 
“ரோஹிணி?”
 
“ரோஹிணியும் என்னை மாதிரி தான். அவ முதல் ஹஸ்பண்ட் ஆக்சிடெண்ட்ல தவறிட்டார். அவ என் ஆஃபீஸ் கலீக், எப்படியோ பிடிச்சுப் போய் நான் ப்ரபோஸ் செய்ய, அவளும் யோசிச்சு ஒரு மாசம் கழிச்சு சரின்னு சொன்னா, கல்யாணத்துக்கு அப்புறம் சந்துரு மேல பாசம் குறையக் கூடாதுன்னு ரெண்டு பேரும் இன்னொரு குழந்தை வேண்டாம்னு முடிவு செஞ்சுட்டோம்”
 
“புரியறது”
 
“அப்பாக்கு பிடிக்கல... ரெண்டு பேருக்கும் முக்கியமான விஷயங்கள் எல்லாத்துலயும் ஒத்துப் போச்சு. அவளும் என்னை மாதிரி வெஜிடேரியன் தான். தெய்வ பக்தி, ரசனை... வேவ் லெங்த் பிரச்சனை இல்லை, என்னை விட ஒரு வயசு பெரியவ”
 
“வயசு... வளர்ந்த சூழல், எக்ஸ்போஷர், உங்கப்பாக்கு ஒட்டல”
 
“இவளுக்கு விநாயகர்னா இஷ்டம், சங்கடஹார சதுர்த்தியைக் கொண்டாடினா, சஷ்டி நினைவில்லையான்னு அப்பா கேட்பார், சிவன் கோயிலுக்குப் போனா, ராமர் ஆகாதா, சைவ சித்தாந்தமான்னு? மடக்குவார். காபில சக்கரை கூட போடு, டீல கம்மியா போடு, இப்படி தொட்டதுக்கெல்லாம்”
 
ஸ்ரீனி சொல்ல சொல்ல சிவராமன் மனதுள் எண்ணங்கள் சுழற்றி அடித்தன. அனைத்தும் விளங்கியது. பேச்சை நிறைவு செய்யும் விதத்தில் பேசினார்.
 
“சரி மத்யானம் மெஸ்ல வந்து சாப்டு புறப்படுங்க”
*******  
மெஸ்ஸில் உணவு பரிமாறிக் கொண்டிருந்தவர். மகனை அழைத்து ஸ்ரீனிக்கு  அறிமுகப்படுத்தினார்.
 
“துக்க வீட்டுல வழக்கமான ஃபார்மாலிட்டி வேண்டாம்னு பேசாம இருந்தேன். இவன் தான் என் பிள்ளையாண்டான் ப்ளஸ் 2 படிக்கறான்”
 
“நல்லா படிப்பா, வித்தை முக்கியம்”
 
“சரிங்கோ மாமா”
 
“உன் பேர் என்ன?”
 
இடை மறித்து சிவராமன் சொன்னார்.
 
“உன் தோப்பனார் பேர் தான் ஸ்ரீனி”
 
“அப்படியா?”
 
“ஆமா அதே சர்வேஷ்”           
****************************************** 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    October 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.