Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

சிறுகதை – சுப்ரஜா ஸ்ரீதர்

10/26/2019

0 Comments

 
"அம்மா" 
உறக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன்.  இன்னமும் விடியவில்லை. நேரம் என்ன இருக்கும்?

காகம் ஓன்று ஜன்னலில் உட்கார்ந்து கரைய ஆரம்பித்தது. விடியும் முன் காகம் கரைவது வித்தியாசமாய்இருந்தது. இது அதிகம் பசி பிடித்த காகம். கண்ட கண்ட வேளைகளில் கரையும்.  

Picture
சூ என்று விரட்டினேன். அது சட்டை செய்யாமல் மீண்டும் 'கா கா 'வென்று இன்னமும் உச்ச ஸ்தாயியில் கரைய ஆரம்பித்தது. எரிச்சல் மிக எழுந்தேன். அது கொஞ்சம் கூட அசராமல் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தது. விளக்கைப் போட்டு கடிகாரம் பார்த்தேன். மணி மூன்று நாற்பது. இந்த நேரத்தில் இது என் இப்படி கரைத்து எரிச்சலை உண்டு பண்ணுகிறது. மீண்டும் கையை தூக்கி விரட்டினேன். அது இன்னமும் வேகமாக கரைய ஆரம்பித்தது.
 
கதவு தட்டப்படும் ஓசை. இந்த நேரத்தில் யார்?
 
"யாரு?" என்றேன்.
 
"நான் வாசு?"
 
"வாசுன்னா" என்று கேட்டபடியே கதவை திறந்தேன்.
 
அந்த பையன் அங்கு நின்றிருந்தான்.
 
அரை இருட்டில் அவன் முகத்தை என் நினைவறைகளில் தேடினேன்.ம்ஹும் .யார் என்று தெரியவில்லை.
 
"யாருப்பா நீ?"
 
"சார் என்னை அடையாளம் தெரியலையா.. நான்தான் வாசு, உங்க பெரிய அண்ணன் முரளி வீட்டு சொந்தக்காரர் பையன்..உங்கம்மா இறந்துட்டாங்க உடனே உங்களை கூட்டு வரச் சொன்னாரு"
 
"நீ எதுலப்பா வந்த?"
 
"சைக்கிள் சார், வாங்க நான் டபுள்ஸ் அடிப்பேன்"

சைக்கிளில் அவன் பின்னால் உட்கார்ந்து போனேன்.அவன் மேல் இருந்து வியர்வை ஸ்மெல் அடித்துக் கொண்டிருந்தது. வேகமாக மிதித்து போனான்.
 
அம்மாவை ஹாலில் கிடத்தியிருந்தார்கள். எந்த சலனமும் முகத்தில் இல்லை. வயதின் முதுமை ரேகைகள் மட்டுமே.
 
"எப்படி?" அண்ணன் பக்கம் திரும்பி கேட்டேன்.
 
மன்னி பதில் சொன்னாள். " சீக்கிரமே எழுந்துட்டாங்க. .. காபி கேட்டாங்க .. பால் இன்னும் வரலைன்னு சொன்னேன்.. ஒரு டம்பளர் சுடு தண்ணியாவது கொடுன்னாங்க.. கொண்டு வரதுக்குள்ள கூப்டுப் பார்த்தேன் பதில் இல்ல.. தொட்டு எழுப்பலாம்னு தொட்டேன்.. சில்லிப்பாய் இருந்தது.. எதிர்த்தால இருக்கிற டாக்டரை எழுப்பி இவர் கூட்டிண்டு வந்தார்.. பார்த்ததும் சொல்லிட்டார் ."
 
“சம்பத்துக்கும், சாரிக்குக் சொல்லிட்டேன்.. அவங்க மதுரையில் இருந்து கிளம்பியாச்சு.. சந்தானத்தை தான் எப்படி காண்டக்ட் பண்றதுன்னு தெரியலை"
 
"நான் பார்த்துக்கறேன்" என்றேன்.
 
"எப்படி? சொல்லாம விட்டுட்டோம்ன்னு குதிப்பான்.. தூரத்தில இருக்கான்.. சொல்ல வேண்டியது நம்மா கடமை. வரானோ இல்லையோ?" அண்ணன் இழுத்தான்.
 
சந்தானம் வேலை செய்வது சிப்சாகர், அஸ்ஸாம் கேந்திர வித்யாலயாவில்... ஆறு வருடம் முன்னால் அங்கே வேலைக்குப் போனவன் அங்கேயே ஒரு அஸ்ஸாமியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். அதற்கு பின் வரவேயில்லை.. அம்மாவுக்கு அவனை ரொம்ப பிடிக்கும்.. அவனுக்கு பிடிச்சிருக்கும் பண்ணிண்டிருப்பான்... அவன் ஒருத்தன் தான் டான்னு ஒண்ணாம் தேதியானா ஆயிரம் ரூபாய் சொளையா அனுப்பறான்.. வேற யார் எனக்கு சேசரா?" என்பாள்.
யாருக்கு தெரியும் அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று.
 
கேந்திரிய வித்யாலாவிற்கு செய்தி அனுப்ப ஒ.என்.ஜி.சி.யை தான் நாட வேண்டும்.அவர்களிடம் நிச்சயம் ஹாட் லைன் இருக்கும். சாவு வேறு கோரிக்கை வைத்தால் செய்வார்கள். கதீட்ரல் சர்ச் அருகே அவர்களின் அலுவுலகத்தைப் பார்த்த நினைவு.
 
வாசுவின் சைக்கிளை வாங்கி கொண்டு வேகமாய் மிதித்துப் போனேன்.
 
டூட்டியில் இருந்த வாலிபர் செண்டிமெண்டலானவராய் இருப்பார் போல் இருக்கிறது.
 
விஷயம் சொன்னதும் "வயசு என்ன?" என்று கேட்டார்.
 
சொன்னேன்,
 
"ஒ எழுபதா, நடமாடிட்டு இருந்தாங்களா..?"
 
"ம்?"
 
"அட்டாக்கா?"
 
"ஆமாம்"
 
"அஸ்ஸாமுக்கு தான் சொல்ல முடியும், சொல்லிடறேன். அவங்க சிப்சாகர் பாஸ் பண்ணிடுவாங்க. எப்படியும் அவர் அஸ்ஸாம் வரைக்கு ரயில்தான் வரணும். அங்க வந்து பிளைட் பிடிக்கலாம்"
 
விவரங்களை எழுதித் தர சொன்னார்.
 
எழுதிக் கொடுத்தேன்.
 
"நான் சொல்லிடறேன் நீங்க போய் உங்க வேலைகளை பாருங்க?"
 
"நன்றி சார்?"
 
"இதுக்கு ஏன் நன்றி, கிளம்புங்க.. எங்கம்மாவுக்கு வயசு அறுபத்து ஆறு" என்றார்.
 
வீட்டிற்கு திரும்பிய போது சில சொந்தக்கார்கள், உள்ளூர்காரர்கள் வந்திருந்தார்கள். காசி பாட்டி நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். காசி பாட்டிக்கு வயது தொன்னூற்று ஆறு. இன்னமும் கிழங்கு மாதிரி இருந்தாள்.
 
பாட்டியின் பெயர் வேறு ஆனால் எப்பொழுது சண்டை வந்தாலும்" எனக்கு என்ன இருக்கு.. வேண்டாம்னு தீர்மானம் பண்ணேன்னா கிளம்பி காசி போயிடுவேன்.. அங்க ஒரு மூலையில உட்கார்ந்தா ஒரு உருண்டை சாதம் கிடைக்காதா?" என்பாள். அதனால் அவர் பெயரே காசி பாட்டி என்றாகி விட்டது.
 
என்னைப் பார்த்ததும் "ஸ்ரீதரா எங்கடா போனே, சந்தானத்துக்கு சொல்லிட்டியா?" என்று கூப்பிட்டாள். வந்த உடன் செய்திகளை சேகரித்து விட்டாள் போல.
 
பக்கத்தில் போன என் கைகளை தன் தளர்ந்த சுருங்கிய கைகளால் பிடித்துக் கொண்டாள்.
 
"என்னடா பண்றே உன் கல்யாணத்தை பார்த்துட்டு தான் கண்ணை மூடுவேன்னு சொன்னா மகராசி போயிட்டா சந்தானம் சந்தானம்னு மூச்சுக்கு மூச்சு சொல்வாளே அவன் வர வரைக்கும் வச்சிக்க முடியாதா?"
 
"தூரத்திலே இருந்து கவனித்து கொண்டிருந்த அண்ணன் வந்து விட்டான்.
 
"நான் தான் சொன்னேனே பாட்டி வீட்டு ஓனர் ஒத்துக்க மாட்டார்னு அவர் வீட்டுல சின்ன பொண்ணுங்க எல்லாம் இருக்கு ரெண்டு தடவை வந்து பார்த்துட்டு போயிட்டார்"
 
"ஆமாம்"
 
“அண்ணன் உங்களை பின்னாடி கூப்பிடறா காபி இருக்காம்" பாட்டி எழுந்து போனாள்.
 
அண்ணன், "வாத்தியாருக்கு சொல்லிட்டேன் பணம் ஏதும் கொண்டு வந்தியா?" என்றான்.
 
"ம்" என்றேன்.
 
அண்ணன் நகர்ந்து விட்டான். நான் அம்மாவின் உடலைப் பார்த்தேன். மதுரையில் இருக்கும் சகோதரர்கள் வீடு, அண்ணன் வீடு என மாறி மாறி இரண்டு மாசம் இருப்பாள். சந்தானம் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்பி விடுவான். அதை பெருமையாக சொல்வார்.
 
"வேற யார் இப்படி சேசரா. ஒண்ணாம் தேதியான டான்னு பணம் கைக்கு வந்துடும்" என்பாள். அப்படி சொல்லும் போது நான் எந்த பதிலும் சொல்ல மாட்டேன். என்ன சொன்னாலும் தவறாக போகும்.
 
வாத்தியார் வந்து விட்டார்.
 
"ஏன்டா எப்ப எடுக்கறதா இருக்கேள் இன்னைக்கா நாளைக்கா முடிவு பண்ணிடேள்னா... முதல்ல இடு காட்டுக்கு பணம் கட்டி ரசீது போட்டுண்டு வந்திடுங்கோ ஐஸ் பொட்டிக்கு சொல்லலையா?"
 
"ம்ஹும், ஐஸ் பாருக்கு ஆள் அனுப்பியிருக்கேன்.. மதுரையில இருந்து தம்பிங்க வந்ததும் இன்னைக்கே எடுத்துடலாம்னு"
 
"அவா எத்தனை மணிக்கு வந்து சேர்வா?"
 
"ஆறு மணிக்குள்ள வந்துடுவான்னு நினைக்கிறேன்.. பார்க்கலாம்.."
 
"சரி ஒரு மூவாயிரம் கொடு மத்த வேலைகளை நான் பார்க்கிறேன்" என்றார் வாத்தியார். அண்ணன் என்னைப் பார்த்தான்.
 
"நான் பேங்க் திறந்ததும் எடுத்துண்டு வரணும். உன்கிட்ட இருந்து மூவாயிரம் மாமாகிட்ட கொடு அப்புறம் கணக்கு பார்த்துக்காலம்" என்றான்.
 
"என் கிட்ட இரண்டாயிரம் தான் இருக்கு"
 
"மன்னி கிட்ட கேளு அவகிட்ட அப்புறம் தந்துக்கலாம் " என்றான்.
 
மன்னியிடம் பணம் ஆயிரம் வாங்கி என்னிடம் இருந்த பணத்தையும் சேர்த்து அவரிடம் கொடுத்தேன்.
 
அவர் "யாராவது ஒருத்தர் கணக்கு வைச்சுக்கோங்கோ அப்பப்ப தேவைப்படும்" என்றபடியே போனார்.
 
வந்த சொந்தக்காரர்கள் எல்லாம் அம்மாவை பற்றி விசாரித்து விட்டு அடுத்து 'ஏன் கல்யாணம் பண்ணிக்கலை' என்று என்னை துக்கம் விசாரித்தார்கள்.
 
நேரம் கரைய கரைய டென்ஷனில் தலை வலிக்க ஆரம்பித்தது. பின்புறம் போய் அங்கே கொதியில் இருந்த காபியை எடுத்து குடித்தேன். வீட்டு ஓனர் வந்தார்.
 
"உங்க அண்ணா சந்தானம் என்னோட லைனுக்கு போன் பண்ணினார்.. நாளைக்கு ராத்திரிதான் ப்ளைட்டாம் டெல்லி வந்து அங்க இருந்து மாறி வரணுமாம். உங்க அண்ணா கிட்ட சொல்லிடுங்கோ ..ஆமாம் இன்னைக்கு எடுத்துடுவேள் இல்ல"
 
நான் அவரைப் பார்த்தேன். அவர் கவலை அவருக்கு.
 
"ம் எடுத்துடுவோம்" என்றேன்.
 
ஹாலில் சம்பத் சாரி பேச்சுக் குரல் கேட்டது. வந்துவிட்டார்கள் போல் இருக்கிறது. சம்பத் நிச்சயம் கொஞ்ச நேரத்தில் பின்னாடி வருவான். காபி குடிக்காமல் இருக்க அவனால் முடியாது. சரியாய் வந்து விட்டான்.
 
"என்னடா நீ இங்க தான் இருக்கியா"
 
அவனிடம் ஒரு டம்ளர் காபியை எடுத்து கொடுத்தார் பரிசாரகர்.
 
"ஏன்னா" என்றபடியே சின்ன மன்னியும் அங்கு வந்து விட்டாள். ஒரு நிமிடம் அவனை தனியாய் யாருடனும் பேச விட மாட்டாள்"



"ஸ்ரீதர், அம்மாக்கு உன் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசை, போன மாசம் வந்திருந்தபோது கூட சொன்னா.. எனக்கு என்னமோ தோணித்து.. இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போங்களேன்னு? பெரியவனைப் பார்க்கணும்ன்னு கிளம்பி வந்துட்டா"
 
வாத்தியார் குரல் தான் பிரதானமாய் கேட்டது.
 
"எல்லோரும் முடி எடுத்துட்டு தலையில தண்ணி ஊத்திண்டுட்டேளா"
 
"ம்." என்றோம்.
 
"இங்க வா"
 
புடவையின் ஒரு முனை அம்மாவின் மேல் கிடந்தது.இன்னொரு முனையைப் பிடித்து என் கையில் கொடுத்தார்.
 
"இத அப்படியே வாசல் படியில கொண்டு போடு"
 
போட்டேன்.
 
வெளியில் மூங்கில் தயாரக இருந்தது. வேனும் நின்று கொண்டிருந்தது. அண்ணன் என்னைப் பார்த்தான்.
 
"நீ அம்மா கூட வேன்ல வந்துடு.. நாங்க முன்னாடி கார்ல போயிடறோம்"
 
"ம்"
 
வேனில் ஏற்றியதும் எல்லோரும் காருக்கு பாய்ந்தார்கள்.
 
நான் வேனில் அம்மாவின் பாடைக்கு அருகில் உட்கார்ந்தேன்.
 
"என்ன எல்லோரும் மாறி மாறி பந்தாடறா? இங்க ரெண்டு மாசம் அங்க ரெண்டு மாசம்னு, சமைக்கவும் விட மாட்டேங்கறா சரியில்ல"
 
அந்த நாள் எனக்கு நினைவில் வந்தது. அன்று சனிக்கிழமை. வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தேன். கதவைத் தட்டும் ஓசை. திறந்தேன்.
அம்மா!
 
"உள்ள வாம்மா"
 
"எப்படிடா இருக்க, கோவிலுக்கு போறேன்னு சொல்லிண்டு வந்திருக்கேன். உன்னை பார்க்க வரேன்னு தெரிஞ்சா தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்பா அந்த ராட்சஸி வாய்க்கு இதமா சாப்பிட்டு இரண்டு வருஷம் ஆறது. கொஞ்சம் வேப்பம் பூ ரசம் பண்ணி அப்பளம் சபொரிச்சு தா டா"
 
"நல்ல மணமா பண்ற ஒரு வேளை சமைக்க தெரியாம இருந்தா கல்யாணம் பண்ணிண்டு இருப்பியோ என்னமோ”
 
நான் எந்த பதிலும் சொல்லவில்லை.
 
போகும் போது ஒரு டம்ளரில் ஊற்றி தரச் சொல்லி வேப்பம் பூ ரசத்தை குடித்து விட்டு போனாள். அதன் பின் இப்பொழுதுதான் பார்க்கிறேன். இடுகாடும் வந்து விட்டது. வேனில் இருந்து இறக்கி தயாராக இருந்த சிதையை நோக்கி தூக்கிப் போனோம். நான் கால் மாட்டில் ஒரு பக்கம் பிடித்திருந்தேன். சிதையை நெருங்கும் போது தான் கவனித்தேன். நான் பிடித்திருந்த பக்கம் அம்மாவின் கட்டை விரல் துணி தாண்டி வெளியல் தெரிந்தது. அது மெல்ல அசைந்தது. எனக்கு தூக்கி வாரி போட்டது.
 
பிரமை இல்லை உண்மைதான். உயிர் போகவில்லை. வேறு யாரும் கவனிக்கவில்லை.
 
"எப்படிடா இருக்க? கோவிலுக்கு போறேன்னு சொல்லிண்டு வந்திருக்கேன். உன்னை பார்க்க வரேன்னு தெரிஞ்சா தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்பா அந்த ராட்சஸி வாய்க்கு இதமா சாப்பிட்டு இரண்டு வருஷம் ஆறது. கொஞ்சம் வேப்பம் பூ ரசம் பண்ணி அப்பளம் பொரிச்சு தாடா"
 
அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது.
 
சடுதியில் கோட்டி துணியை இழுத்து விட்டேன். விரல்கள் வெளியே தெரியாதவாறு மூடினேன்.
 
சாம்பலாக இன்னும் சில வினாடிகள் தான்.
 

0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    October 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.