Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

தீபாவளி சிந்தனைகள் – பரிவை சே. குமார்

10/26/2019

0 Comments

 
பண்டிகையின் உற்சாகத்தைத் தொலைக்காதிருப்போம்
தீபாவளி...
 
இதைப் பற்றி எழுத எண்ண இருக்குன்னு யோசிக்கும் போதுதான் எவ்வளவோ இருக்கேன்னு தோணுச்சு... ஆமா... அகல் மின்னிதழின் தீபாவளி மலருக்கு ஏதாவது எழுதுங்களேன் என நண்பர் சத்யா கேட்டபோது சிறுகதை அனுப்பலாம் என ஒரு எண்ணம்... அதன் பின்னே எந்தச் சிறுகதை என்ற ஒரு கேள்வி... பண்டிகை என்றால் அதை ஒட்டிய சிறுகதைதான் எழுதணும் என்பது தமிழ்ப் பத்திரிக்கைகள் வகுத்து வைத்த ஒரு வடிவம் என்பதால் இனி உட்கார்ந்து சிறுகதை எழுதணுமான்னு ஒரு யோசனை... சமீபமாய் சில மனக் கஷ்டங்களால் சிறுகதை எழுதும் மனநிலைக்கு மாறுவதென்பது கடினமாக இருக்கிறது... அதனால் அம்முடிவுக்கும் முடிவு கட்டியாச்சு. 
Picture
அகலுக்கும் எனக்கும் எப்பவும் ஒரு ராசி உண்டு... எல்லா மின்னிதழ்களுக்கும் சிறுகதைகள் மட்டுமே கொடுப்பவன் அகல் என்றால் கட்டுரைகள்தான் அதிகமாய்க் கொடுத்திருக்கிறேன். அந்த ராசிப்படி இப்போதும் கட்டுரையே.
 
முதலில் நட்புக்கள், உறவுகள், அகல் மின்னிதழ் எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
 
தீபாவாளி...
 
அன்றைய தீபாவளிக்கும் இன்றைய தீபாவளிக்கும் எத்தனையோ வேறுபாடுகள் வந்துவிட்டன... அன்று பண்டிகை தினம் என்பது சொந்தங்கள் எல்லாம் கூடிக் களிக்கும் ஒரு தினமாக, திருநாளாக இருந்தது. இன்று கலைஞர் தொலைக்காட்சி சொல்வது போல் விடுமுறை தினமெனக் கடந்து விடுகிறது. கலைஞர் தொலைக்காட்சிக்கு விடுமுறை தினமென்பது இந்துக்களின் பண்டிகை மட்டுமே என்பது வேறு விஷயம். விழிகளில் மகிழ்வை, சந்தோஷத்தை நிரப்பாமல் வெறுமையை மட்டுமே நிரப்பி, ம்ம்ம்.... அப்பல்லாம் தீபாவளின்னா... என்ற நினைவு மீட்டுபுடன் மரணித்து விடுகின்றன பண்டிகை நாட்கள்.
 
தீபாவளி வரப் போகிறதென்றால் இரண்டு மாதம் முன்னதாகவே பள்ளிக்கு அருகில் இருக்கும் பெட்டிக் கடைகளில் துப்பாக்கி, பொட்டு வெடி, ரோல் கேப், உதிரிச் சீனி வெடி எல்லாம் விற்பனைக்கு வரும். துப்பாக்கி உள்ளிட்ட எல்லாவற்றையும் சணலில் சரமெனக் கட்டித் தொங்க வைத்திருப்பார்கள். பார்க்கும் போதே வந்து என்னை வாங்கிக் கொள் என அழைக்கும். எப்படியும் வாங்கிவிடுவோம் என்பது வேறு விஷயம்.
 
துப்பாக்கியும் ரோல் கேப்பும் வாங்கி, திருடன் போலீஸ் விளையாடும் போது போலீஸ் அதை வைத்துத் திருடனைச் சுடுவதாய் விளையாடியிருக்கிறோம். உதிரிச் சீனி வெடியை 25, 50 காசுகளுக்கு வாங்கி வந்து வீட்டில் அடுப்பில் எரிந்து கொண்டிருக்கும் விறகை எடுத்து வந்து அதில் சீனி வெடியின் கிள்ளிய முனையைத் தொட்டுத் தூக்கி வீச அது அந்தரத்தில் வெடிக்கும்... அதில் கிடைக்கும் சந்தோஷமே தனிதான் இல்லையா..? அதுவும் மற்றவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க... ஹீரோவாய் கொள்ளிக்கட்டையில் வெடியைப் பிடித்துத் தூக்கி உயரத்தில் வீசி வெடிக்க வைக்கும் போது மகிழ்ச்சிக்குச் சொல்லவா வேண்டும்... இரண்டு மூன்று வெடிகளை ஒன்றாய் இணைத்துப் பிடித்து தூக்கிப் போட்டு என்னைய மாதிரி உன்னால விட முடியுமாடா அப்படிங்கிற பார்வையை பக்கத்தில் வேடிக்கை பார்ப்பவன் மீது செலுத்தி, தூக்கிப் போடும் வெடி வெடித்துக் காகிதங்கள் பறந்து வந்து முகத்திலடிக்கும் போது கிடைக்கும் சுகம் தனி சுகம்தானே....
 
தீபாவளி என்றாலே பலகாரங்கள்தானே முக்கியம்... பலகாரம் இல்லாத தீபாவளியா... பொங்கலுக்குப் பொங்கல் எவ்வளவு முக்கியமோ அதேபோல வெடி,  புத்தாடை என்பதைத் தாண்டி பலகாரமே முக்கியமானதாக இருக்கும். ஒரு மாதத்துக்கு முன்னரே என்னென்ன பலகாரம் செய்வதென வீட்டில் முடிவு செய்து விடுவார்கள். அதிரசம், முறுக்குக்கு எல்லாம் மாவு அரைத்து வைத்து விடுவார்கள். அதிரசத்துக்கான மாவை நாலைந்து நாள் முன்னதாகவே தயார் பண்ணி, கை படாமல் அறைக்குள் வைத்து விடுவார்கள். அப்பத்தான் அதிரசம் அதீத சுவையுடன், கல்லுப் போலில்லாமல் இருக்கும். அதிரசம் செய்து மிச்ச மாவை அப்புறம் செய்து சாப்பிடலாம் என வைக்கும் போது அந்த மாவை எடுத்துத் தின்பதில் போட்டியிருக்கும்... சில நேரங்களில் அடிதடியும் இருக்கும்.... அப்போதெல்லாம் குறைந்த வீட்டுக்கு நாலு இருக்கும்... எங்க வீட்டில் எல்லாம் ஏழு... இப்பத்தானே ஒன்றே போதும் அப்படின்னு சொல்லி உறவு தெரியாம வளர்க்கிறோம்.
 
பெரும்பாலும் முறுக்கு, அதிரசம் என சில நாட்களுக்கு வைத்துச் சாப்பிடும் பலகாரங்களைத்தான் அதிகம் செய்வார்கள்... அதுவும் முறுக்குச் சுடும் போது பாதி வெந்தும் வேகாமலும் எடுத்துக் கொடுத்து சாப்பிடச் சொல்வார் எங்கம்மா.... ஆஹா... அந்தச் சுவையே தனிதான்.... அதுக்காகவே அம்மாவுக்கு உதவியாய் அடுப்பருகே அமர்ந்து முறுக்குக் கட்டையில் மாவு வைத்துக் கொடுக்கும் வேலையையோ, முறுக்கைத் திருப்பி விட்டுப் பதம் பார்த்து எடுக்கும் வேலையையோ செய்வதுண்டு. எங்கம்மா சுருள் போளி என்று ஒன்று செய்வார்கள். மாவை சப்பாத்தி மாதிரித் தேய்த்து எண்ணெயில் போட்டு எடுத்து அதில் சீனி, பொட்டுக்கடலை இன்னும் சில பொருட்கள் சேர்த்து அரைத்ததை வைத்துச் சூட்டோடு சுருட்டி வைக்க வேண்டும்... பல நாள் வைத்துச் சாப்பிடலாம்... அந்தச் சுவை சாப்பிட்டால் மட்டுமே தெரியும்.
 
பெரும்பாலும் வைத்துச் சாப்பிடும் பலகாரங்களாகச் செய்யக் காரணம் என்னவென்றால் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை என எல்லாமே விவசாய மாதங்கள்... நல்ல மழை பருவத்தில் பெய்து கண்மாய் நிறைந்திருந்தால் எல்லாருமே பெரும்பாலும் பகல் நேரங்களில் வயல்களில்தான் கிடப்பார்கள். ஆத்துப் பூத்துப் போய் சாயந்தரம் வரும்போது நமநமண்ணு இருக்கும் வாய்க்கு எதாவது திங்கலாம்ன்னு தோணும் போது முறுக்கையோ, அதிரசத்தையோ எடுத்து வைத்துச் சாப்பிடுவார்கள். அதற்காகவே தீபாவளியைக் காரணம் காட்டி சட்டி சட்டியாக முறுக்கு, அதிரசம் செய்து வைக்கப்படும்.
 
தீபாவளி அன்னைக்கு வீட்டுல எண்ணெய் சட்டி வைக்காமல் இருக்கக் கூடாதுன்னு துக்கம் நிகழ்ந்த வீடாயிருந்தாலும் வடையாச்சும் தட்டுவாங்க... இப்போது இந்த நடைமுறையை எல்லாம் பெரும்பாலும் யாரும் பார்ப்பதில்லை.... பல வீடுகளில் எண்ணெய் சட்டி வைப்பதேயில்லை.  இனிப்பு, காரம், அதிரசம், முறுக்கு என எல்லாமே கடையில் இருந்தோ அல்லது தீபாவளிக்காகச் செய்து விற்பவர்களிடம் இருந்தோ வாங்கிக் கொள்கிறோம்... இட்லி, சாம்பார் மட்டுமே வீட்டில் செய்கிறோம். தீபாவளி அன்று ஹோட்டல்கள் இருக்காது என்பதால் அதைச் செய்கிறோம்... இல்லைன்னா அதையும் ஆர்டர் பண்ணி வாங்கிச் சாப்பிட்டு தீபாவளியைக் கொண்டாடி முடித்து விடுவோம் இல்லையா..?
 
தீபாவளி அன்று அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது மிகப்பெரும் சடங்காய் இருந்தது அப்போது... தீபாவளிக்கு மளிகைச் சாமான் வாங்கும் போது நல்லெண்ணெய், சீயக்காய் எல்லாம் மறக்காமல் வாங்கி வந்து விடுவார்கள். புலி மார்க் பாக்கெட் சீயக்காய்தான்... ஒரே பாக்கெட்தான்... அதை ஒரு டப்பாவில் கொட்டி காற்றுப் போகாமல் மூடி வைத்திருப்பார்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கப் போகும் போது டம்ளரில் கொஞ்சம் சீயக்காயும் எடுத்துச் செல்ல வேண்டும். உடம்பில், தலையில் தேய்க்கும் போது நுரை அவ்வளவாக வராதென்றாலும் உடம்பில் இருக்கும் எண்ணெய்ப் பிசுக்கைச் சுத்தமாக எடுத்துவிடும்... தலை முடி பஞ்சு பஞ்சாக இருக்கும்... அப்புறம் மீரா சீயக்காய் வந்தது.... நுரை நல்லா வந்தது... அதன்பின் ஷாம்பு வர, நுரை நுரையாய் வந்தது. புலி மார்க் பலியாகிப் போனது... புலியைப் போல் காணாமலும் போனது.
 
எண்ணெய் தேய்த்தல் பற்றிச் சொல்ல வந்தேன் இல்லையா...? ஒரு டவராவில் எண்ணெய் ஊற்றி சாமி அறையில் வைத்துக் கும்பிட்டுவிட்டு அப்பாவிடம் கொடுக்கப்படும்... அவர் அன்று எந்தப்பக்கம் சூலமெனப் பார்த்து உக்கார, அவருக்கு எதிரே வயதுப்படி வரிசையாய் அமர, மூன்று முறை எண்ணெய்யை எடுத்துத் தலையில் தேய்த்து, உடம்பெல்லாம் தேய்த்து விடுவார்... ஒவ்வொருவருக்கும் அப்படித்தான் தேய்ப்பார்... நீண்ட நேரம் எடுப்பார்... வயது ஆக ஆக, எனக்கு எண்ணெய் ஒத்துக்காது சும்மா சாத்தரப்புக்குத் தொட்டு வையுங்க  போதும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்வதுண்டு.
 
கண்மாயில் தண்ணீர் இருந்தால் கையில் சீயக்காய் டம்ளர், சோப்பு சகிதமாய்ப் போய் ஆட்டம் போட்டுக் குளித்து, முனியய்யாவை வணங்கி வீடு வந்து சேர்வோம். தண்ணி இல்லை என்றால் அடிபைப்பில் அடித்துத்தான் குளிக்க வேண்டும். அடி பைப்தான் என்றால் அதிக எண்ணெய் தேய்க்க விடுவதில்லை... எண்ணெய் தேய்த்துக் கண்மாயில் நீந்திக் குளிப்பதுவே சுகம்... இப்பத்தான் ஷவரைத் திறந்துவிட்டுட்டு நனைஞ்சா நனஞ்சிக்க நனையாட்டிப் போன்னு... சாமிக்கு நெய் வேத்தியம் பண்ணும் போது பார்த்தா பாத்துக்க பாக்காட்டிப் போன்னு திறந்து மூடுற கணக்கால குளிச்சிட்டு வர்றோம்.
 
எண்ணெய் தேய்கிறதைப் பேசும்போது இன்னைக்குத் தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறாங்களான்னு கேட்டா, இன்றைய தலைமுறை அதை அதிகம் விரும்புவதில்லை என்பதே உண்மை... ஒண்ணு அவனுக்கு ஒத்துக்காதுன்னு அம்மா சொல்லிடுவாங்க... இல்லேன்னா சும்மா சாத்தரப்புக்குத் தலையில தொட்டு வையிங்க போதும்ன்னு அவனே சொல்லிடுவான். அப்போ வாராவாரமோ, மாதம் ஒரு முறையோ எண்ணெய் தேய்த்துக் குளித்தோம் அதனால் நல்லெண்ணை சூடு தணிக்கும்ன்னு தெரிஞ்சி வச்சிருந்தோம்.... இன்னைக்கு யாருமே எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில்லை... உடம்பு சூடா இருக்குன்னு சொன்னா பீர் சாப்பிடு கூலாயிரும்ன்னு சொல்ற காலத்துல நல்லெண்ணெய்யின் பலன் நமக்கெதுக்கு...?
 
பிறந்த குழந்தைக்கு கண், காதுல எல்லாம் நல்லெண்ணெய் விட்டு, இளம் வெயில் படுற மாதிரி கால்ல போட்டுக்கிட்டு வெயில்ல உக்காந்திருப்பாங்க... வேப்பிலை, துளசி,  ஓமவள்ளி, தூதுவலை என பல வகையான இலைகளை அரைத்துச் சாரெடுத்துக் கொடுப்பார்கள். இப்ப எங்கே இதெல்லாம் செய்யப்படுகிறது... பிறந்து வீட்டுக்கு வரும்போதே டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்து, சோப்பு என வந்து விடுகிறோம்... மண்ணில் இறங்கி விளையாட விடுவதேயில்லை... கிருமி வரும்... புண் வருமெனப் பாதுகாப்பாய் வளர்க்க ஆரம்பித்து விடுகிறோம். இங்கே பிலிப்பைனி நாம் விட்டதையெல்லாம் செய்கிறான்... காலையில் குழந்தைக்கு கண்ணில் எண்ணெய் விட்டு வெயிலில் காட்டிக் கொண்டிருக்கிறான்.
 
நாம் மேல் நாட்டு மோகத்திற்குள் செல்ல, அவனோ நம் பாரம்பரியத்தைக் கலாச்சாரத்தைப் பின்பற்றி நடக்க ஆரம்பித்திருக்கிறான்... நம் கஞ்சியை காசாக்குறான்... பிரண்டை, குமுட்டிக்காய், கோவக்காய், மிளகுதக்காளிப் பழம், சப்பாத்திக்கள்ளிப் பழம், நுங்கு என எல்லாவற்றையும் காசாக்கிக் கொண்டிருக்கிறான். வீட்டில், வயலில் தானே விளைந்து கிடந்ததைப் பறித்துத் தின்ன நாதியில்லாமல் இருந்தது... இன்னும் சில இடங்களில் இருக்கிறது... இங்கே பிரஷருக்கு நல்லது, சுகருக்கு நல்லதுன்னு பாக்கெட்டில் விற்பதை அதிக விலை கொடுத்து வாங்கித் தின்கிறோம்.
 
என்னைக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் என நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிப் பெட்டி வழி நம் இல்லத்தை ஆக்கிரமித்தார்களோ அன்னைக்கே பண்டிகை நாட்கள் எல்லாம் பாழாப் போய்விட்டது. ஆம் குளித்து வந்து, சாமி கும்பிட்டு, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள் சாப்பிட்டு, வெடியுடன் கோவிலுக்குச் சென்றால் அங்கே மற்றவர்கள் காத்து நிற்ப்பார்கள். எல்லாருமாய்ச் சேர்ந்து வெடி வெடித்து மகிழ்ந்து சிரித்து ஆட்டம் போட்டு வீடு வரும் போது மதியச் சமையலின் வாசம் நம்மை மல்லுக்கட்டும். சாப்பிட்ட பின்னும் மீண்டும் கோவில்... வெடி... ஆட்டம்... பாட்டம்... சந்தோஷமென இரவு புஷ்வானம், சங்கு சக்கரம், ராக்கெட் விடுவதில் முடிந்து மறுநாள் காலை வெடித்த குப்பைகளை எல்லாம் குவித்து நெருப்பு வைத்து அதில் வெடிக்காத வெடிகளைப் போட்டு வெடிக்க வைப்பதில் முடியும்... கொஞ்சம் வெடிகளை பத்திரப்படுத்தி வைப்போம் பெரிய கார்த்திகைக்குப் போட வேண்டுமென.
 
காலையில் பலகாரம் சாப்பிட்டதும் மற்ற வீடுகளுக்குக் கொண்டு போய் கொடுப்பதும், அவர்கள் கொடுப்பதை வேண்டாமெனச் சொல்லாமல் வாங்கி வருவதும், ஒருவருக்கு ஒருவர் புத்தாடையைப் பற்றிப் பேசி மகிழ்வதும் மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது என்றால் மிகையில்லை... சினிமா நட்சத்திரங்கள் வந்த பின் தொலைக்காட்சி முன்னே தீபாவளி கழிய ஆரம்பித்த போது இந்தச் சந்தோஷங்கள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. உறவுகளை மறந்து, பக்கத்து வீட்டுக்குக் கொடுப்பதைத் துறந்து, ரம்யா பாண்டியன்களின் இடுப்பு மடிப்பைப் பார்த்தபடி தீபாவளி குறித்து அவர்கள் சொல்லும் விளக்கங்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்க ஆரம்பித்து விட்டோம்.
 
பண்டிகை தினங்கள் பொலிவிழந்து வருடங்களாகிவிட்டன...
 
இனியேனும் பண்டிகை தினங்களை மகிழ்வோடு கொண்டாடுவோம்...
 
இனியேனும் பண்டிகை தினங்களை உறவுகளுடன் உற்சாகமாய்க் கொண்டாடுவோம்.
 
இனியேனும் பண்டிகை தினங்களை ரசித்துக் கொண்டாடுவோம்.
 
இழந்ததை மீட்டெடுக்க முடியுமா தெரியவில்லை... இருப்பதை இழக்காதிருப்போம்.
 
மொத்தத்தில்...
 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக பண்டிகையின் உற்சாகத்தைத் தொலைக்காதிருப்போம்.
 

0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    October 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.