Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

ஊர் சுற்றி... போஜனம் தேடி... – சத்யா GP

7/19/2019

7 Comments

 
மெஸ் வடிவமைப்பைக் கொண்ட ஒரு சைவ சிற்றுண்டி உணவகம் வெற்றிகரமாக நூறாவது ஆண்டை அடி எடுத்து வைத்து தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருகிறது. உணவகத்தைத் துவக்கிய அதே குடும்பத்தாரின் நிர்வாகத்தின் கீழ் சீரும் சிறப்புமாக கோலாச்சுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
 
நம்பித்தான் ஆக வேண்டும். அந்த சைவ சிற்றுண்டி உணவகம் தாயார் மீனாட்சியம்மன் அவதரித்த தூங்கா நகரம் மதுரையில் இயங்குகிறது. நான் வணங்கும் மீனாட்சி தாயார் சந்நிதி அருகில் அமையப்பெற்று மக்களின் பசியைப் போக்குகிறது என்பது தமிழர்களாகிய நம் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டிய சங்கதி.
 
பாசக்கார மதுரைக்கார தோஸ்த் ஒருவன் இந்த உணவகத்தைப் பற்றி எடுத்து சொன்ன போது என்னால் நம்பவே முடியவில்லை. தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்டு திருச்சியில் கல்வி பயின்று, வேலை பார்த்து சுமார் 27 வருடங்கள் திருச்சியுடன் குடும்பம் நடத்திய எனக்கு மதுரை பரிச்சயமான பிராந்தியம். மெடிக்கல் ரெப்பாக இருக்கும் போது மதுரையிலும் சில காலம் பிழைப்புக்காகத் தங்கி வேலை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த சிற்றுண்டி சாலை பற்றி எனக்குத் தெரியாது. தகவல் தெரிந்த உடனே மதுரையில் வசிக்கும் நண்பர் சந்திர மெளலி சாரிடம் மெஸ் பற்றி கேட்க அவர் புளகாங்கிதம் அடைந்தார்.
 
“மீனாட்சியம்மன் கோயில் பக்கத்துல இருக்கு, டிஃபன் பிரமாதமா இருக்கும், நான் நிறைய தரம் அங்க போய் சாப்பிட்டு இருக்கேன். இடம் சுத்தமா இருக்கும். எல்லா டிபன் வகையும் டேஸ்ட்டாவும் இருக்கும், உடம்பையும் எதுவும் செய்யாது, அடுத்த முறை நீங்க மதுரை வரும் போது அவசியம் உங்களைக் கூட்டிட்டுப் போறேன்”
 
  • சந்திர மெளலி சார் சொன்னது இது.   ​ ​
Picture
உணவகத்தின் மேலாளர், உரிமையாளர் ஆகியோரது அலைபேசி எண்களைத் தந்து, மேலதிகத் தகவல்களுக்கு நேரடியாக பேசிக்கொள்ளுமாறு என்னிடம் சொன்னார்.
 
சைவ சிற்றுண்டி சாலை, மெஸ், உணவகம் என மீண்டும் மீண்டும் எழுதி வருகிறேனே அதன் பெயர் “கோபு ஐயங்கார் டிஃபன் சென்டர்”              
 
இந்த உணவகத்தின் ஸ்பெஷல் பதார்த்தம் “வெள்ளையப்பம்” தினமும் மாலை மூன்று மணிக்கு மேல் சுடச்சுட தயாராகும் இதை உணவகத்திற்கு வரும் மக்கள் விரும்பி உண்கிறார்கள். ஏராளமான ரசிகர்கள் வெள்ளையப்பத்திற்காகவே தினசரி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். வெள்ளையப்பத்துடன் தொட்டுக் கொள்ளத் தரும் காரச் சட்னியும் இவர்களின் தனித்துவமான தயாரிப்பு.
 
காலை ஆறு மணியிலிருந்து நண்பகல் பதினோரு மணி வரை இட்லி, தோசை, வடை, பூரி, பொங்கல், ஃபில்டர் காஃபி போன்ற பதார்த்தங்களை தயாரித்து விற்கிறார்கள். பின்பு கடை சாத்தப்படுகிறது, மீண்டும் மூன்று மணிக்கு வெள்ளையப்பத்துடன் திறக்கப்படுகிறது. இரவு பத்து மணி வரை கடை உண்டு.     
 
எக்கச்சக்கமாக ஆச்சரியத்தையும், பரவசத்தையும் பரிமாறும் கோபு ஐயங்கார் டிஃபன் சென்டர் குறித்து தற்போது அதை நிர்வகித்து வரும் உரிமையாளர் (Proprietorix) ஸ்ரீமதி. சுபா அவர்களைத் தொடர்பு கொண்டு அலைபேசியில் பேசினேன். அவர் வசிப்பது பெங்களூரில். அங்கிருந்தபடி நிர்வகிக்கிறார். அவருடனான சம்பாஷணையிலிருந்து :   ​
Picture
துவக்க அறிமுக சம்பிரதாயப் பேச்சுக்குப் பிறகு, “வணக்கம் மேடம், உங்க டிஃபன் சென்டர் பத்தி ஒரு ஆர்டிக்கல் எழுதலாம்னு யோசனை, அதாவது “ஊர் சுற்றி... போஜனம் தேடி...” இப்படி ஒரு தலைப்புல ஒவ்வொரு ஊர்ல நீண்ட நெடுங்காலமா சுவையா, உடலுக்கு தீங்கு விளைவிக்காத வீட்டு சாப்பாடு மாதிரி தரத்தோட உணவு தர சைவ உணவகங்கள் பற்றி ஒரு தொடர் எழுதலாம்னு தோணுச்சு, என் ஃப்ரெண்ட் உங்க கடையைப் பத்தி சொல்ல, உங்க மெஸ்ல இருந்து ஆரம்பிக்கலாம்னு எண்ணம், நீங்க நேரம் ஒதுக்கி தகவல்கள் சொன்னால் உதவியா இருக்கும்”
 
“தாராளமா கேளுங்க சொல்றேன்” 
 
“இந்த ஸ்தாபனம் எப்போ துவங்கிச்சு, யார் ஆரம்பிச்சாங்க கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்”
 
“இந்தக் கடையை முதல்ல வேற ஒருத்தர் நடத்திக்கிட்டு இருந்தார். அந்த ஹோட்டல்ல எங்க தாத்தா (அப்பா வழி) சப்ளையரா வேலை பார்த்தார். 1920 வது வருஷம் தாத்தா கடையை வாங்கி சின்ன சின்ன ஆல்ட்ரேஷன் வேலைகள் மட்டும் செய்து “கோபு ஐயங்கார் டிஃபன் சென்டர்”ன்னு பேர் மாத்தி ஆரம்பிச்சார், அதுக்கப்புறம் எங்கப்பா கடையைப் பாத்துக்கிட்டார் அவர் பேர் ஸ்ரீநிவாசன். அப்பாக்கு பாத்துக்க சிரமமா இருக்கும் போது நான் நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பிச்சேன். கடந்த பத்து வருஷமா நான் தான் கடையைப் பார்த்துக்கறேன்”
 
“தாத்தா பேரு?”
 
“கோபாலன்”
 
“அப்பா?”
 
“அப்பா நாலு வருஷத்துக்கு முன்ன காலமாகிட்டார்”
 
“நீங்க என்ன படிச்சுருக்கீங்க?”
 
“எம்ஸிஏ, ஐடி கம்பெனி உத்தியோகத்தைப் பார்த்தபடி இதையும் கவனிக்கிறேன். கடவுள் புண்ணியத்தில் எல்லாம் நல்ல படியா நடக்குது”    
 
“கடை நடத்த ஏதாவது குறிக்கோள் மாதிரி வெச்சுருக்கீங்களா mam?”
 
“கண்டிப்பா, தாத்தா, அப்பா காலத்தில் எப்படி க்வாலிட்டி மெயின்டெயின் செய்தாங்களோ அதை அப்படியே ஃபாலோ செய்யறேன், நோ காம்ப்ரமைஸ், உதாரணத்துக்கு ஒரு தரம் உபயோகப்படுத்திய சமையல் எண்ணையை திரும்ப பயன்படுத்த மாட்டோம், கீழ கொட்டிடுவோம், சாப்பிட வரவங்களுக்கு தரமான ஆகாரத்தை தரனும், எங்க motto ன்னு சொல்லலாம்”    
 
“வெள்ளையப்பம் உங்களோட signature dish ன்னு மக்கள் சொல்றாங்க, இதைத் தவிர வேறென்ன ஸ்பெஷல்?” 
 
“வெள்ளையப்பம் மட்டும் இல்லை, அதுக்கு தொட்டுக்க தர காரச் சட்னியும் ஸ்பெஷல் தான். பச்சை மிளகாய் வெச்சு அரைக்கிற அந்த சட்னியோட பக்குவம் நல்ல ருசியா இருக்குன்னு வர வாடிக்கையாளர்கள் சொல்வாங்க”
 
“விரிவாக்கம், கிளைகள், நவீனப்படுத்தறது இப்படி எதிர்காலத் திட்டங்கள் என்ன வெச்சுருக்கீங்க?”
 
“மீனாட்சியம்மன் கோயில் பக்கத்துல இருக்கற மாதிரியே, இங்க உள்ள பதார்த்தங்கள் கிடைக்கிற மாதிரி இன்னொரு கிளை பை பாஸ் ரோட்ல வெச்சுருக்கோம்”
 
“தேனி பை பாஸ்லயா?”
 
“ஆமா, காமாட்சியம்மன் கோயில் பக்கத்துல இருக்கு, அங்க இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா தினமும் சாயங்காலம் 101 வகை தோசைகள் தரோம், அப்புறம் இந்த மீனாட்சியம்மன் கோயில் பக்கத்துல இருக்கற டிஃபன் சென்டர்ல வெங்காயம், பூண்டு சேர்க்கை கிடையாது. ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கறவங்க, விரதம் இருக்கறவங்க இப்படி எல்லாரும் வந்து சாப்பிடற மாதிரி சமைச்சு தரோம்”
 
“உங்க கடைக்கு லீவே கிடையாதா?”
 
“வாரா வாரம் திங்கட்கிழமை லீவ்”    
 
“அதென்ன திங்கள், ஏதாவது காரணமிருக்கா?” 

Picture
“தாத்தா இதை நடத்தும் போது பிரிட்டிஷ் ஆட்சி காலம். வாரம் ஒரு நாள் லீவ் விடணும்னு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்டுருந்தாங்க, ஞாயித்துக்கிழமை நிறைய மனுஷா கடைக்கு வரதால தாத்தா திங்கள் லீவ் விட்டார். அது பழகிப் போச்சு”
 
“ஒரு கிளை மட்டும் போதும்னு முடிவு செய்துட்டீங்களா?”
 
“பெரிய ஸ்டார் ஹோட்டல் மாதிரி எல்லாம் கடை நடத்த எனக்கு விருப்பம் இல்லை, சுத்தம், சுகாதாரம், தரம், ருசி இப்படி எதுலயும் சமரசம் செய்துக்காம இந்த மிட் ரேஞ்சுலயே நிறைய கிளைகள் ஆரம்பிச்சு நடத்தனும் அது தான் ஆசை”
 
“நீங்க மதுரைல தான் இருக்கீங்களா?”
 
“நான் பெங்களூர் வாசி. நான் இங்க இருந்து நிர்வாகத்தைப் பாத்துக்கறேன், மாசம் ஒரு தரம் மதுரை வருவேன், என் அத்தை மகன் மதுரைல இருக்கார், அவர் ரெண்டு கடையும் பார்த்துப்பார்”
 
“எப்படி பெங்களூர்ல இருந்து?”
 
“சிசி டிவி தான்”
 
“டெக்னாலஜியைப் பயன்படுத்தறீங்க”
 
“ஆமா பணம் செலுத்துறது கூட கார்ட், வேலட், கேஷ்னு சகல விதத்திலும் செய்யற வசதி இருக்கு, பை பாஸ் கடைல ஸ்விக்கி, ஸோமேடோ கூட டீல் வெச்சுருக்கோம்”
 
“பக்காவா அப்டேட் ஆகி இருக்கீங்க, வேற பிஸ்னஸ் ஏதாவது செய்றீங்களா?”
 
“மதுரைல ஒரு காஃபி ஷாப் வெச்சு நடத்தறேன். “Gobble Dobble” ன்னு பெயர்”
 
“தாத்தாவோட பெயரை இதிலும் கொண்டு வந்துட்டீங்க”
 
“ஆமா, என்ன ஸ்பெஷல்னா மதுரைல முதல் கேமிங் காபி ஷாப் (Gaming coffee shop) இது தான்”
 
“நல்ல கான்செப்ட், உங்க கிட்ட எத்தனை பேர் வேலை பாக்கறாங்க”
 
“மேனேஜர், சமையல் காரர், சப்ளையர் இப்படி 25 பேர் இருக்காங்க”
 
“முக்கியமான கேள்வி, பிரபலங்கள் யார் யார் உங்க உணவகத்தோட ரெகுலர் வாடிக்கையாளர் அதை சொல்லுங்க”
 
“பெருந்தலைவர் காமராஜர் அடிக்கடி வருவார், அவருக்கும் வெள்ளையப்பம்னா இஷ்டம், பிரபல வயலின் இசைக் கலைஞர் மேதை மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன் அடிக்கடி வருவார்”
 
“இப்போ உள்ள பிரபலங்களில் யாரவது...” 

Picture
“மதுரைக்கு வந்தாலே காலைல வாக்கிங் போகும் போது நம்ம கடைக்கு வந்து காபி பலகாரம் எல்லாம் ‘அவர்’ சாப்பிட்டு போவார். கடையில் வேலை செய்யற நிறைய பேரோட பெயர் கூட அவருக்குப் பரிச்சயம். பெயர் சொல்லி கூப்பிட்டு நலம் விசாரிப்பார். யாருன்னு யூகிக்க முடியுதாங்க, அவர் ஒரு அரசியல் பிரபலம்”
 
“தெரியல யாருங்க?”
 
“மு.க. ஸ்டாலின்”
 
“உங்க உணவகம் பத்தி கேள்விப்பட்ட உடனேயே புதுசா ஆரம்பிக்கற தொடரில் முதல் அத்தியாயத்தில் உங்க கடை பத்தி வரணும்னு ஆசைப்பட்டேன், நீங்களும் உங்க பிஸி ஷெட்யூல்ல நேரம் ஒதுக்கி கடை பத்தி தகவல்கள் சொன்னீங்க, நீங்க மேலும் மேலும் சிறப்பா வளர்ந்து மக்களின் உணவுத் தேவையை உங்க தரமான சேவை மூலம் பூர்த்தி செய்து சிகரம் தொட்டு மேலும் புகழ் பெற வேண்டும்னு எல்லாம் வல்ல ஈசன் கிட்ட வேண்டிக்கறேன்”
 
“ரொம்ப நன்றிங்க, மதுரைக்கு வரும் போதெல்லாம் அவசியம் நம்ம கடைக்கு வாங்க, மீண்டும் நன்றி, வணக்கம்”  
             
7 Comments
Badri
7/19/2019 11:38:17 pm

Super write up. சும்மா உணவகத்தைப் பற்றிமட்டும் எழுதாமல் அதன் தொடர்புடைய விவரங்களையும் தருவது ஒரு கட்டுரையின் சிறப்பு. நீங்கள் சிறப்பாக எழுதிவிட்டிர்கள்.

Reply
sathya GP
7/20/2019 12:14:29 am

மனமார்ந்த நன்றி சார்

Reply
சே.குமார் link
7/20/2019 01:06:44 am

அருமை ஜி.
தொடருங்க...
வாழ்த்துக்கள்.

Reply
sathya GP
7/20/2019 01:18:26 am

நன்றி ஜி

Reply
Swaminathan
7/20/2019 01:18:08 am

Want to know more about old types veg mess

Reply
Selvaraj
7/20/2019 02:10:28 am

Super jee

Reply
Swaminathan
7/20/2019 02:21:35 am

Want to know veg messes

Reply



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    July 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.