Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

சிறுகதை – சத்யா GP

7/19/2019

0 Comments

 
நீர் விளையாட்டு
“வண்டில அழகா நம்பர் ஒன் டோல்கேட்ல இறங்கி பஸ் பிடிச்சு போகலாம், ஆக்டிவாவை நான் வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வந்துருவேன். ரிட்டர்ன் வரும் போது டோல்கேட்ல இறங்கிட்டு கால் அடிக்கிறேன் வண்டி எடுத்துட்டு வாம்மான்னு சொல்லத் தெரியுதுல்ல? எதுக்கு சத்திரம் போய்கிட்டு?”
 
“வயசாகுது உமா, அரியலூர் வண்டி எல்லாம் ஃபுல்லா தான் வருவான், சத்திரம் போய் உட்கார்ந்துட்டு போறது தான் நல்லது”
 
“சரி சரி வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வந்து சேரு”
 
‘அந்த டாக்டர் நான் ரெப்பா இருக்கற காலத்துல இருந்து எனக்கு நல்லா சப்போர்ட் செய்யறார், டிஸ்ட்ரிபியூஷன் எடுத்துருக்கேன்னு சொன்ன உடனே, ஆசிர்வாதம் செஞ்சு ஐயாயிரம் ரூபாய்க்கு ஆர்டர் தந்தார். முதல் பில்லிங் அவர் தான், அவரை மாதிரி நல்ல மனுஷங்களால தான் பிஸ்னஸ் டெவலப் ஆகி உனக்குத் தாலி கட்டி மூணு வேளை சோறு போட முடியும்னு நம்பிக்கை வந்து...”

Picture
“சரி ராஜு, அவர் புது ஹாஸ்பிட்டல் பில்டிங் கட்டிருக்கார், அழைப்பிதழ் வெச்சுருக்கார் அவசியம் போகணும் அதானே?, எதுக்கு வழக்கமான எஸ்டிடியை ஆரம்பிக்கிற? போயிட்டு வா”
 
உமா எப்போதும் போல் சகஜமாகப் பேசினாலும் ஏனோ மனம் இடறியது. உள்ளுணர்வு சரியில்லாது தவித்தான் ராஜு.
 
ரஹ்மான், ஹாரீஸ், அனிருத் என எல்லா இடமும் புழங்கினாலும் திருச்சி டு அரியலூர், ஜெயந்கொண்டம், செந்துறை... தஞ்சை டு பட்டுக்கோட்டை, கும்பகோணம், மாயவரம்... இந்த சாலை மார்க்க பேருந்து பயணங்களில் மட்டும் பெரும்பாலும் “ராஜா”ங்கம் தான்!
 
லால்குடி வரை நரைக்கத் துவங்கிய காலப் பாடல்கள். லால்குடி தாண்டிய பின் டவுஸர் அணிந்து சுற்றிய விவரம் அறியா காலத்து கீதங்களை படையல் வைக்கத் துவங்கினார் டிரைவர். ஆடி மாதம், பால்யத்தில் அடிக்கும் காற்றானது உடல் வலியைத் தோற்றுவிக்கும். இரு நாள் காய்ச்சலில் படுக்க வைக்கும். இப்போது ஆடிக் காற்று இருந்தாலும் அப்போது போல் இம்மியளவும் இல்லை ஆக அம்மியும் நகரவில்லை. ராஜு எப்போதும் ராஜாங்கத்தை தவிர்க்க காரணமே இது தான், எதை எதையோ நினைக்க வைக்கும். இறுதியில் இழந்த அனைத்தையும் யோசிக்க வைக்கும். குறிப்பாக பறி போன அப்பாவித்தனத்தை நினைத்து நினைத்து அழ வைக்கும்!
 
புள்ளம்பாடியைப் பேருந்து கடக்கும் போது இனம் புரியாத வலியுணர்வு. காரணம் விளங்கவில்லை. கல்லக்குடி அருகே பேருந்து செல்லும் போது ஏனோ மனது அம்பாள் டாக்கீஸையும், பாக்யராஜ் – டி. ராஜேந்தர், ரஜினிகாந்த் – கமல்ஹாசன் என்ற பள்ளி காலத்தையும் அதிகம் அசை போட்டது.
 
ராஜுவால் இயல்பாக வளைய வர முடியவில்லை. டாக்டரைப் பார்த்து சிரித்த சிரிப்பில் ஒரு செயற்கைத்தனம் இருந்ததை அவனால் உணர முடிந்தது. வெள்ளிக் குத்துவிளக்கைத் தந்து, பேச வேண்டும் என்பதற்காக அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
 
Moxi kind – 5 box
panta kind – 6 box
electral – 151 sachet
Pot chlor – 51 bottle  
 
“புது பில்டிங் திறப்பு விழாவை முன்னிட்டு ராஜுக்கு ஆர்டர், ஏற்கனவே போட்டு வெச்சுட்டேன் இந்தாப்பா” டாக்டர் தந்ததை அமைதியாக வாங்கிகொண்டான்.
சம்பிரதாயத்துக்கு மருத்துவமனையை சுற்றிப் பார்த்தான். விசாரிப்பதாக சொல்லி ஏனோதானோவென கேள்விகள் கேட்டான். ஒப்புக்கு சாப்பிட்டுவிட்டு கிளம்பினான்.
 
உண்ட களைப்பால் பேருந்தில் ஏறி வண்டி புறப்பட்ட ஐந்தாவது நிமிடம் தூங்கிப்போனான். விழிப்பு வந்த போது முகம், கை, கழுத்து, முதுகு என உடலின் பல இடங்கள் வியர்த்திருந்தன. நன்றாக அமர்ந்து கொண்டான். கடிகாரம் இரண்டு மணி என்று காட்டியது. காற்று சகல இடங்களிலும் ஊடுருவி வியர்வையை உறிஞ்சியது. ஒரு ட்ராக்டர் சாலையில் குப்புற கவிழ்ந்திருந்ததால் வாகனத்தின் வேகம் மட்டுப்பட்டது. ரோடும் அந்தப் பிராந்தியமும் மாந்துறை என்பதை தெளிவாக விளக்க, பின் இருக்கையில் இருந்தவர் அவன் மனதை படித்தவர் போல “ஒரு காலத்துல அய்யவாய்க்கால்ல என்னாமா தண்ணீ ஓடும், இப்போ வறண்டு கிடக்கு, இதெல்லாம் முப்போகம் வெளஞ்ச பூமின்னா யாராவது நம்புவாங்களா?” என்றார்.  
 
“டேய் முத்து நீ சொன்னியே தூறல் நின்னு போச்சு படம், இந்த சனிக்கிழமை  தான் டா அம்பாள் டாக்கீஸ்ல நைட் ஷோ பாத்தோம். நீ சொன்ன பாட்டை விட என் சோக கதையைக் கேளு தாய்குலமே பாட்டு தான் எனக்குப் பிடிச்சுது”
 
“எங்க ஊரு தங்கம் தியேட்டர்ல முன்னாடியே படம் வந்துருச்சு டா. பயங்கர கூட்டம், அப்பா தியேட்டர்காரர் கிட்ட சொல்லி பாக்ஸ்ல டிக்கெட் பிடிச்சார். வீட்ல எல்லாரும் போய் பார்த்தோம். அதென்னமோ பாக்யராஜ் படம்னா குடும்பம் குடும்பமா போய் பாப்பாங்களாம், டி. ராஜேந்தர் படம்னா விசிலடிச்சான் குஞ்சுக தான் வருவாங்களாம், எங்கம்மாவும் பக்கத்து வீட்டு ஜி. லக்ஷ்மி அம்மாவும் சொல்றாங்க”
 
“நான் பாட்டைப் பத்தி சொன்னா நீ எதையோ சொல்றியே/”
 
“இல்லை டா நா சொன்ன பாட்டு நல்லா இருக்கும். நீ பாத்த தானே, முதல்ல பொம்பளை குரல் பாடும் அப்புறம் மியூசிக் பொறவு ஆம்பளை குரல் பொம்பளை குரல் அப்புறம் திரும்ப முதல்ல பொம்பளை குரல் பாடினதே வந்துட்டு ஒரு மியூஸிக் வருமே ‘டேன்டுன்டுன்டேன் டின் டேன் டன்ன்னு’ தண்ணி நிறைய ஓட பரிசல்ல பாக்யராஜ் ஒரு பொம்பளையோட போற மாதிரி இருக்கும். அந்த மியூஸிக் எனக்கு ரொம்ப பிடிக்கும் டா, பேட்டரி போட்டு ட்ரான்சிஸ்டரை எடுத்துட்டு குளத்தாங்கரைப் பக்கம் போயிரனும். இந்த மியூஸிக் கேட்கும் போது தண்ணில காலை தூக்கி தூக்கி அடிக்கணும், எப்படி இருக்கும் தெரியுமா”
 
“அதெல்லாம் கஷ்டம், நீ குளத்துல உட்கார்ந்திருக்கும் போது ரேடியோல இந்தப் பாட்டை போடணும், இல்லைன்னா என்ன செய்வ?”
 
“ஆமால்ல?”
 
“நான் ஒன்னு சொல்றேன். அப்பாட்ட வீட்ல டேப்ரெக்கார்டர் வாங்க சொல்லு, இந்தப் பாட்டைப் போட்டுட்டு மியூஸிக் வரும் போது பாத்ரூம்ல பைப்பை திறந்துவிட்டு தண்ணீல காலை வெச்சு அடி, குதி”
 
“போடா லூசு, எனக்கு கண் முன்ன நிறைய தண்ணீ ஓடனும் அதை நான் பாத்துக்கிட்டே...”
 
“அது சரி”
 
பேருந்து வேகமெடுத்து சென்று கொண்டிருந்தது மீண்டும் ராஜு கண் அசந்தான். விழிப்பு வந்த போது வண்டி வாளாடியைத் தாண்டியிருந்தது. டோல்கேட்டில் இறங்க வேண்டும் என்று தயாராக ஆரம்பித்தான்.
 
டோல்கேட்டில் வண்டி நிற்க கீழே இறங்கி நடக்கலானான். டீ குடித்தால் தேவலை என்று வறண்ட நாக்கு உத்தரவிடும் போது போன் ரிங்கியது. உமாவுக்கு வைத்திருந்த ரிங் டோன் அவளின் அழைப்பு என்பதை சொல்ல எடுத்து பேச ஆரம்பித்தான். உமா குரலில் பதட்டம்.
 
“ராஜு, நம்ம கூட பத்தாவது வரைக்கும் படிச்ச முத்து அதான் இப்போ வயலூர்ல இருக்காரே?”
 
“ஆமா பாக்யராஜ் ரசிகன்”
 
“முத்து ஹார்ட் அட்டாக்ல இன்னிக்கு...”
 
“ஐயோ” தன்னை மீறி ராஜு அலறினான்.
 
“பதட்டப்படாத ராஜு ப்ளீஸ், மதியமே காலமாகிட்டாப்ள எனக்கு இப்போ தான் தகவல் வந்துச்சு நான் அங்க போய்கிட்டு இருக்கேன் ஷீலா, பாப்பா எல்லாரும் அவரை கூட்டிக்கிட்டு புள்ளம்பாடி கிளம்பறாங்க அவங்க கூட நான் போறேன்.. அங்க தான் தகனம் செய்யப் போறாங்களாம்” 
 
“ஷீலாவை பத்திரமா பாத்துக்க, பொம்பளைப் பிள்ளை வேற இருக்கு”
 
:”சரி, நீ எங்க இருக்க ராஜு?”  
 
“இப்போ தான் டோல்கேட் வந்தேன், பொண்ணு எங்க?”
 
“கேப்ஸ் செல்வம் அண்ணன் வீட்ல தான் விட்டுட்டு வந்துருக்கேன், அவர் தான் வயலூர் போக இண்டிகா அனுப்பினார், நீ நேரா புள்ளம்பாடி வா”
 
பெரும் ஜனத்திரளுடன் வந்த அரியலூர் ரூட் வண்டியில் பாய்ந்து ஏறினான். “பாவிப்பயலே நீ...” சுனிதி செளஹான் பேருந்துக்குள் பாடிக் கொண்டிருந்தார் லயிக்கவில்லை.
 
“இப்போ காவிரில போய் மொபைல் ஹெட் செட்ல பல தரம் தங்கச் சங்கிலி பாட்டை கேட்டு ஆத்துத் தண்ணியில காலால அடிச்சு அடிச்சு கூத்தாடி பாட்டை கேட்டுட்டேன் ஆனா அப்போ அந்த ஆசை... புள்ளம்பாடி ஏரிக்கு ஒரு வாட்டி கூட்டிட்டு போங்கன்னு அப்பா கிட்ட கேட்டேன், மாட்டேன்னுட்டார் அதான் நினைவுக்கு வருது”
 
“உனக்கு எதையுமே தைரியமா சந்திச்சு சாதிக்கத் தெரியல முத்து”
 
“அதென்னமோ சரி தான் ராஜு, ஒன்னு ஆசைப்பட்டது லேட்டா கிடைக்குது, இல்லை கிடைக்காம போய்டுது”  
 
பெண் குழந்தை இருப்பதால் ஷீலா அவள் முன் தன் துக்கத்தை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பக்குவமாக நடந்து கொண்டாள். உமாவுடன் அதிகம் பேசியபடி இருந்தாள். உள்ளூரில் எஞ்சியிருந்த சொற்ப சொந்தமும் எக்கச்சக்கமான திருச்சிவாசிகளும் வந்துவிட காரியக்காரன் “ஐயா எப்போ எடுக்கலாம்” என்றான்.
 
ஷீலாவிடம் சில வார்த்தைகள் ராஜு பேசினான். “பாத்தும்மா அவன் எதையும் வெளிப்படையா பேச மாட்டான், தன்னோட விருப்பத்தை சொல்ல மாட்டான், அதனாலயே நிறைய மிஸ் பண்ணி இருக்கான். பணம் போக்குவரத்து எல்லாத்துலயும் கவனமா இரு, என்ன உதவின்னாலும் கேளு, பாப்பாக்கு இனி நீ தான் எல்லாமே”
 
சுடுகாட்டில் முத்து ஐக்கியமாகிவிட்டான். ஐந்து வயது முதல் இப்போது வரை... முப்பத்தி ஆறு ஆண்டுகள் நண்பனாக ராஜுவுடன் தொடர்ந்தவன், வாழ்க்கை பிரயாணத்தை முடித்துக் கொண்டுவிட்டான்.
 
“உமா, ஷங்கர் பேமிலி கிளம்புது பாரு, நீ அவங்க கூட போ, தில்லை நகர்ல அவங்க வீடு, நான் சொல்லிட்டேன். ஸ்ரீரங்கத்துல நம்ம வீட்டு வாசல்லயே ட்ராப் செய்வாங்க”
 
“நீ எங்க போற?”
 
“கொஞ்சம் அய்யவாய்க்கால் வரைக்கும் போயிட்டு வரேன். மொபைல்ல ராஜா ஹிட்ஸ்னு பாக்யராஜ் படப் பாட்டுக நிறைய இருக்கு, அவனுக்கு உசுரு, அதைப் பாத்தாலே கில்டி ஃபீலிங் வருது, எல்லாத்தையும் அழிக்கலாம்னு இருக்கேன்”
 
“பாட்டு ஃபோல்டரை அழிக்கப் போறியா? இல்லை கில்டி ஃபீலிங்கையா?”
 
“தெரியல”
 
“எப்படி டா வாய்க்கால் புல்லா தண்ணீ, பாட்டைக் கேட்டுக்கிட்டே நல்லா குதிச்சு விளையாடி கால் முழுக்க ஈரம், உன் ஆசையை எங்கூருல நிறைவேத்திட்டேன். சந்தோஷமா முத்து?”
 
“டேய் உன்கிட்ட மட்டும் சொல்றேன் அவ என் சுலக்ஷணா டா”
 
“யாரை சொல்ற முத்து?”
 
“நம்ம உமா மகேஸ்வரி, ப்ளீஸ் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு”
 
“சத்தியம், யார் கிட்டயும் சாகற வரைக்கும் இந்த ராஜு சொல்ல மாட்டான்”   
************************************
(கல்கி வார இதழில் வெளிவந்த சிறுகதை) 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    July 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.