Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

கலக்கல் (பேஸ்) புக் – சத்யா GP

7/19/2019

0 Comments

 
அரசியல், சினிமா, கிரிக்கெட் இப்படி எதுவாக இருந்தாலும் வன்மம், குரோதம், தனி மனிதத் த்வேஷம், துதிபாடல், போலியான புள்ளி விவரங்கள், பொய்யை நிஜமாக்க மேற்கொள்ளும் பிரம்மப் பிரயத்தனங்கள் என சமூகவலைத்தளங்களின் போக்கு மிகையானதொரு உலகுக்கு சென்றுவிட்டது. இனி அது மீண்டு வருவது என்பது சாத்தியமற்றது.
 
இசை, அறிவியல், மருத்துவம், பொருளாதாரம், விஞ்ஞானம், உணவு, ஊர் சுற்றுதல், கோயில்கள், சரித்திரம், புத்தகங்கள், இலக்கியம், கவிதைகள், புதுப் புது கண்டுபிடிப்புகள்... இப்படிப் பல்வேறு களங்கள், தலைப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்பதே உண்மை ஆனால் இது தொடர்பாக தரவுகளுடன் விருப்பு வெறுப்பின்றி எந்தவொரு சார்பும் இல்லாது பதிவுகள் எழுத மெனக்கெடல் அவசியம் ஆனால் அரசியல், தனி மனித த்வேஷம், துதிபாடல் போன்ற மேலே குறிப்பிட்டவற்றிற்கு கஷ்டமே தேவை இல்லை அதுவும் மீம் போட குறைந்தபட்ச சிந்தனை என்பதே தேவை இல்லை...
 
பேஸ்புக் உள்ளே நுழைந்தாலே அடிதடி, ரணகளம் தானா என்று யோசிப்பவர்களும், அது கண்டு வெறுப்பவர்களும் கணிசமான அளவிற்கு இருக்கிறார்கள் அவர்களுக்காகவே ஒரு க்ரூப் இருக்கிறது. 
Picture
மனம் விட்டு சிரிக்க, கனமான மனது இளக, ரிலாக்ஸ் செய்யத் தான் பேஸ்புக் வருகிறேன் என்று சொல்லை நிஜமாக்க... சுருங்கச் சொன்னால் நம்மை ஆசுவாசப்படுத்துவதற்காகவே இந்த குழு இயங்குகிறது. நகைச்சுவையைப் பொறுத்தவரை சுய எள்ளல் என்னும் கான்செப்ட் என்றும் அனைவராலும் ஏற்கக்கூடிய ஒன்று. வடிவேலு அவர்கள் காமெடியில் ஜொலிக்க முக்கியக் காரணம் அது. இந்தக் குழு பட்டையைக் கிளப்பக் காரணமும் அது தான்.
 
பொதுவாக ஒரு நிறுவனத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் அது லாபகரமானதாக விளங்க மார்க்கெட்டிங் பிரிவு சிறப்பாக செயல்படுதல் அவசியம். உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவாய் ஈட்டினால் தான் சம்பளம் துவங்கி அனைத்து செலவினங்களையும் சமாளிக்க முடியும்.
 
மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்களின் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. அவர்களின் பணிச்சுமையும் கடினமானது. செக்டார் வாரியாகப் பிரிக்கும் போது வித விதமான முறையில் மார்க்கெட்டிங் செய்யப்படுவதைக் காணலாம். நீண்ட நெடுங்காலமாக ஒரே பாணியில் இயங்கும் மார்க்கெட்டிங் எது என்று பார்த்தால் 1. டைரெக்ட் மார்க்கெட்டிங் (வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்வது, வாக்வம் கிளீனர், அக்வா கார்ட் போன்றவை இதிலடங்கும்) 2. பார்மா செல்லிங் அதாவது மெடிக்கல் ரெப்.
 
இந்தியாவில் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பெருமளவில் உள்ளே புகுந்து அத்துறையில் வேலை வாய்ப்பு அதிகமான போது மெடிக்கல் ரெப்கள், பார்மா செல்லிங்கில் இருந்த ஏரியா சேல்ஸ் மேனேஜர்கள், ரீஜினல் சேல்ஸ் மேனேஜர்கள் போன்ற பொறுப்பில் இருந்தவர்கள் பெருமளவில் தங்கள் பணியிலிருந்து விலகி இன்ஷூரன்ஸ் துறைக்குள் நுழைந்தார்கள். மருந்துகள், நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான அனுபவறிவு இருந்ததால் இவர்களை இன்ஷூரன்ஸ் துறை இரு கரம் கூப்பி தம்முடன் ஐக்கியப்படுத்திக் கொண்டன. 2008 ஆம் ஆண்டு காலவாக்கில் இது அதிகளவில் நடந்தேறியது. மெடிக்கல் ரெப் உத்தியோகத்தில் வேலைக்கு சேர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. அதன் பின் தங்க முட்டையிடும் வாத்தை அறுப்பது போல் அப்போதைய நடுவண் அரசின் கொள்கையால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தள்ளாடின. பெருமளவு தங்களின் கிளைகளை இழுத்து மூடின. தேசம் முழுதும் ஏராளமானோர் வேலையைப் பறி கொடுத்து நிர்கதியானார்கள். பலர் மீண்டும் பார்மா செக்டாருக்குள் புகுந்தார்கள்.
Picture
மெடிக்கல் ரெப் வேலை தனித்துவமானது. ஒரு எஃப்.எம்.ஸி.ஜி செக்டாரில் பணிபுரியும் விற்பனைப் பிரதிநிதி தம்முடைய ஸ்டாக்கிஸ்ட்டிடம் விற்கும் பொருட்களை ஆர்டர் எடுத்து வைக்க வேண்டும். அதற்குரிய தொகையை நிறுவனத்தின் தரத்திற்கேற்ப கேஷ் & கேரி அடிப்படையிலோ அல்லது அதிகபட்சம் முப்பது நாட்கள் கடன் என்னும் கால அளவிலோ வசூல் செய்வார்கள். இதைத்தவிர ஸ்டாக்கிஸ்டுகளின் வாடிக்கையாளர்களான ரீடெய்லர்களிடம் சென்று தங்கள் நிறுவனத் தயாரிப்புகள் குறித்து கம்பு சுற்றி, டிஸ்கவுண்ட் தந்து பொருட்களின் விற்பனை அதிகரிக்க உதவுவார்கள். இது கடினமான பணியானாலும் மெடிக்கல் ரெப்புகளுடன் ஒப்பிடும் போது எளிதானதே ஆனால் மெடிக்கல் ரெப்?
 
மெடிக்கல் ரெப்புகள் ஸ்டாக்கிஸ்ட்களிடம் மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். இது ப்ரைமரி ஆர்டர். மாதா மாதம் ஒவ்வொரு மெடிக்கல் ரெப்புக்கும் இது தான் இலக்கு. அடுத்து கெமிஸ்ட் (மெடிக்கல் ஷாப்) அவர்களிடம் தங்கள் நிறுவன மருந்துகளை ஸ்டாக் வைக்க ஆர்டர் எடுக்க வேண்டும். இது செகன்டரி ஆர்டர். இதில் பல இம்சைகள் உண்டு. நாம் ஆர்டர் எடுக்கும் மருந்தகங்களை நம்முடைய ஸ்டாக்கிஸ்ட் கறுப்புப் பட்டியலில் சேர்க்காமல் இருக்க வேண்டும். இருந்தால் ஆர்டர் வீண். அடுத்து மருத்துவர்களைத் தொடர்ந்து சந்தித்து நம் நிறுவன மருந்துகளைப் பரிந்துரைக்க வைக்குமாறு செய்ய வேண்டும்.
 
மெடிக்கல் ரெப் உத்தியோகத்தில் முக்கிய சிக்கல் என்னவென்றால் மற்ற சேல்ஸ் ரெப்பைப் பொறுத்தவரை அவர் விற்கும் பொருட்களுக்கு அவரே ராஜா. ரீடெயிலர்ஸ் வியாபாரத்தில் அனுபவசாலிகள் எனில் அவர்களிடம் அடக்கி வாசித்தால் போதும் ஆனால் இங்கே மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவரிடம் இந்த நோய்க்கு, குறைபாடுக்கு இன்ன மருந்து என்று விவரிக்கிறோமோ அந்த நோய் மற்றும் குறைபாடு பற்றி அதிகம் அறிந்தவர் மருத்துவரே, ஆதலால் விஷய ஞானம் அதிகம் உள்ளவர் மருத்துவர் என்பதால் பாடம் நடத்துவது போல் மருந்துகள் குறித்து (detailing) விவரிப்பதை தவிர்த்தல் என்ற பாடமும் உண்டு. 
 
இது தவிர பெரிய மருத்துவமனைகளில் உள்ள ஸ்பெஷாலிடி டாக்டர்களை சந்திக்கப் போவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட வேண்டும். நிறைய மருத்துவர்கள் மெடிக்கல் ரெப்களை குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பார்ப்பார்கள். அதை சமாளிக்க வேண்டும். மெடிக்கல் ரெப் என்றால் முகம் சுளிக்கும் மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவ ஆலோசனைக்கு காத்திருக்கும் நோயாளிகளின் வெறுப்பு முகபாவத்தை தினமும் எதிர்கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் சகிப்புத்தன்மையின் உச்சம் தொட வேண்டும். பச்சையாகச் சொல்ல வேண்டும் என்றால் எருமைத் தோல் அவசியம்.  

Picture
தஞ்சையில் ஒரு பிரபலமான குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் இருந்தார். எப்போதும் அவரிடம் கூட்டம் அள்ளும். வாரத்திற்கு மூன்று நாட்கள், ஒரு நாளைக்கு பதினைந்து மெடிக்கல் ரெப்கள் என முறை வைத்து பார்ப்பார். மெடிக்கல் ரெப்கள் அவரைக் காண முன்பதிவு செய்ய வேண்டும். அதாவது புதன் கிழமை இரவு எட்டு மணிக்குப் பிறகு ரெப் பார்வையெனில் ரெப்கள் காலை ஐந்து மணிக்கு தத்தமது விஸிடிங் கார்டுகளை மருத்துவமனையில் தந்து ஒப்புதல் பெற வேண்டும்.
 
ஃபீல்ட் வொர்க்கின் போது ஏரியா சேல்ஸ் மேனேஜர், ரீஜினல் சேல்ஸ் மேனேஜர் வருவது, ஸ்டாக்கிஸ்ட்டுடன் மாதக் கடைசியில் அல்லாடி ஆர்டர் பெற்று செக் வாங்குவது, ஒரு மாதம் முழுக்க உள்ளூரில் வாகனத்தில் எரிபொருள் நிரப்பி சுற்றுவது, வெளியூர் சென்று விடுதிகளில் தங்கி வேலை பார்ப்பது, அனைத்து செலவுகளையும் குறிப்பிட்டு எக்ஸ்பென்ஸ் ஸ்டேட்மெண்ட்டை பணிபுரியும் நிறுவனத்திற்கு அனுப்பி இரு மாதங்கள் கழித்து தான்  அத்தொகையைப் பெற முடியும். அதாவது ஜூன் மாதம் செய்த செலவுகளை ஜூலை முதல் வாரம் குறிப்பிட்டு கம்பெனிக்கு தகவல் அனுப்பினால் ஆகஸ்ட் மாதம் அத்தொகையை நமக்கு அனுப்புவார்கள். இடையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் முதல் வாரம் நம் பணி தொடர்பான செலவினங்களையும் நாம் சமாளிக்க வேண்டும்.  
 
அனைத்திலும் சில்மிஷங்கள் உண்டு அதற்கு இந்தப் பணியும் விதிவிலக்கல்ல. எக்ஸ்பென்ஸ் ஸ்டேட்மெண்ட். டெய்லி ரிப்போர்ட் போன்றவற்றில் மெடிக்கல் ரெப்கள் செய்யும் சேட்டைகள் தனிக் கதை.
 
மெடிக்கல் ரெப்களின் வாழ்க்கையை நான் விவரித்தது ஒரு துளியே அதாவது டீசர் போல! முழுப் படம் இன்னும் நீளம்.
 
பேஸ்புக் குழு என்று சொல்லி ஏன் மெடிக்கல் ரெப்கள் குறித்து இப்படி அளவளாவுகிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம்.
 
நான் குறிப்பிட்ட குழுவின் பெயர் : Pharma Memes பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மெடிக்கல் ரெப்களை பேஸ்புக் என்ற சமூகவலைத்தளம் இணைக்க அவர்கள் ஒன்று சேர்ந்து இந்தக் குழுவை நடத்துகிறார்கள். அன்றாடம் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், இடர்பாடுகள், தாங்கள் செய்யும் கோமாளித்தனங்கள் என சகலத்தையும் மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தி தங்களையும் மக்களையும் பரஸ்பரம் இளைப்பாறும் வித்தையை செய்கிறார்கள்.  

Picture
ஒரு மருத்துவமனையில் டாக்டருக்காக காத்திருக்கும் நேரத்தில் இந்த க்ரூப்பின் மீம்ஸ்களை மெடிக்கல் ரெப் பார்த்து ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். சுய பகடி என்ற வஸ்துவில் இவர்கள் முத்திரை பதிக்கிறார்கள். மெடிக்கல் ரெப்பாக இருந்து இப்போது அத்துறையில் இல்லாதவர்களை நாம் ரெப்பாக இல்லையே என்று ஏங்க வைக்கிறார்கள்.
 
ராதா / சிவாஜி (முதல் மரியாதை திரைப்படம்) டெம்ப்ளேட்டை வைத்து இவர்கள் உருவாக்கிய மீம்ஸ்கள் ஏராளம். ஒவ்வொன்றும் குபீர் சிரிப்பை வரவழைப்பவை.
மெடிக்கல் ரெப் குறித்து நீட்டி முழக்கி பதிவுகள் எழுதாமல் ஜஸ்ட் லைக் தட் மீம்ஸ் வடிவத்தில் ஆழமான விஷயங்களையும் எடுத்து சொல்வது இவர்களின் பலம்.
 
அரசியல் களத்தில் மீம்ஸ் என்பது வறண்ட நிலைக்கு செல்கிறது, மோடி மீதான காழ்ப்புணர்வு, திமுகவின் குடும்ப அரசியல், அதிமுக பலவீனமாவது, ஜாதி மோதல்... இப்படி குறுகிய வட்டத்திலேயே மீம்ஸ்கள் அதிகம் புழங்குகின்றன ஆனால் மெடிக்கல் ரெப் என்ற குறுகிய களத்தில் வெரைட்டி காண்பித்து அசத்துவதில் இவர்களை மிஞ்ச யாருமே இல்லை. கன்டென்ட் தொடர்பாக இவர்கள் தடுமாறுவதே இல்லை.  

Picture
முப்பத்தி நான்கு அட்மின்கள் மற்றும் மாடரேட்டர்கள் கொண்ட பக்காவான டீம் இக்குழுவை சிறப்பாக நிர்வகிக்கிறது.
 
இக்குழுக்கு சென்று மீம்ஸ்களை ரசிக்க விரும்புபவர்கள் இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.facebook.com/groups/pharmamemes/
 
அடுத்த முறை ஏதாவது ஒரு கிளினிக்கில் டாக்டரின் ஆலோசனை பெற நீங்கள் காத்திருக்கையில் யாராவது ஒரு மெடிக்கல் ரெப்பை காண நேர்ந்தால் அவரிடம் இந்த க்ரூப் பற்றி எடுத்து சொல்லுங்கள். அவருக்கு இந்த க்ரூப் பரிச்சயம் இல்லையெனில்... கவலை வேண்டாம், உடனே அவர் தம்மை குழுவில் இணைத்துக் கொள்வார்.
 
ஒரு குழு குறித்து எதற்கு இவ்வளவு பெரிய கட்டுரையை இவன் எழுதுகிறான் என்று யோசிக்கிறீர்களா?  
Picture
பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை நானும் மெடிக்கல் ரெப்பாக இருந்தவன் தான். அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து முகம் கழுவி, பல் துலக்கி, விஸிடிங் கார்டு ஏற்கப்பட வேண்டும் என்று விக்ன விநாயகரிடம் துரித கதியில் வணங்கி தஞ்சை தெற்கலங்கம் சென்று ஐந்து மணிக்கு கார்டு தந்து சாதித்த சந்தோஷத்தில் அறைக்குத் திரும்புவனாக இருந்தவன் சாட்சாத் இந்த சத்யா தான்.
 
I am Proud to be a (Ex) Medical Rep 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    July 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.