Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

திருக்குற்றாலம் – ராணி கணபதி சுப்பிரமணியன்

7/19/2019

3 Comments

 
இத்திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள குற்றாலத்தில் உள்ளது. அருவிகள் சூழ்ந்த குற்றாலம் தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்று. இங்கு பேரருவிக்கு அருகிலேயே இத்திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. சங்கு வடிவில் அமையப்பெற்ற இத்தலம் இரண்டாயிரமாண்டுகள் தொன்மை வாய்ந்தது.
 
"ஒருகத்தி லயனாகி யோருகத்திலரியாகி யுடையதேவனை
பெருகத்தி லரனாக வீற்றிருக்குந் தலமிதுவோ பிரமன் மாய
னாரு கத்து மழியாத வயனா மெந்தை
பூருவத்தின் புண்ணியமோ யான் புரிந்த மாதமோ புகுந்ததம்மா"

 
- திரிகூடராசப்பக் கவிராயர்
 
“குற்றாலக் குறவஞ்சி" எழுதிய திரிகூடராசப்பக்கவிராயரின் இந்தப் பாடல் தல வரலாற்றைக் கூறுகின்றது. 

Picture
இத்தலமூர்த்தி திருமாலாக இருந்திருக்கிறார். அகத்தியர் அவர் தலையில் கை வைத்து "குறு குறு குற்றாலநாதா" என்றபடியே அழுத்திச் சிவலிங்கமாக மாற்றியுள்ளார். இன்றும் மூலவர் மீது அகத்தியர் கைத்ததடம் இருக்கும்.
அகத்தியர் அழுத்தியதால் ஐயனுக்கு உண்டான தலைவலி நீங்க தினமும் அர்த்தசாமப் பூஜையில் ஐயனுக்குத் தைலாபிஷேகம் நடைபெறும். இங்கு குற்றாலநாதருக்குத் திருவனந்தல் பூஜை நடைபெறும் முன் பேரருவிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டு தீர்த்தம் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால் பேரருவிப் பாறைகளில் சிவலிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப் பட்டிருக்கின்றன.
 
இத்தலம் பாடல் பெற்ற தலம். முதலாம் திருமுறையில் "திருக்குற்றாலம் "என்ற பதிகம் இடம் பெற்றுள்ளது.
 
"வம்பார்குன்றந் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண்டி யாழ்செய் குற்றாலம்
அம்பால்நெய்யோ டாடலமர்ந்தா னலர்கொன்றை
 
நம்பான்மேய நன்னகர் போலும் நமரங்காள்"
 
- திருஞானசம்மந்தர்.
 
இத்தல விருட்சம் "குறும்பலா". தல விருட்சத்திற்கு பாடல் பெற்ற ஒரே தலம் என்ற சிறப்பைக் கொண்டுள்ள புண்ணிய திருத்தலம் இதுவே!
 
"திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந் தேவிபாகம்
பொருந்திப் பொருந்தாத வேடந்தாற் காடுறைல் புரிந்தசெல்வர்
இருந்த இடம் வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டுயாழ்செய்
குருந்த மணநாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரர் குறும்பலாவே"

 
- திருஞானசம்மந்தர்
 
11 பாடல் கொண்ட "திருக்குறும்பலா" என்னும் பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. 

Picture
இத்திருக்கோவிலின் கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அம்பாள் குழல்வாய்மொழியாளை மாணிக்கவாசர் திருக்கோவையாரில் பாடியுள்ளார்.
 
"எழில்வா யிளவஞ்சி யும்விரும் பும்மற் றிறை குறையுண்டு
அழல்வா யவிரொளி யம்பலத் தாருமஞ் சோதி யந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன் குற்றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல தில்லையில் பூந்தழையே".

 
இத்திருக்கோவிலில் அகத்தியரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட தரணிபீடம் என்னும் பராசக்தி பீடம் உள்ளது.
 
"அப்பெரும் பீடமன்றே யருட்பரா சக்திபீடம்
ஒப்பரும் பரமயோகத் துறைதலால் யோகபீடம்
தப்பிலா வகில மூலந் தரித்திலாற் தரணிபீடம்
இப்பெரும் பீடத் துள்ளல் இறைவர்பால் எம்பிராட்டி"

 
- திரிகூடராசப்பக் கவிராயர்.
 
கூத்தபெருமானின் பஞ்ச சபைகளுள் ஒன்றான சித்திர சபை இங்கு தான் உள்ளது.
கோவிலிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் தெப்பத்திற்கு எதிரில் உள்ளது.
செப்போடுகள் வேயப்பட்ட அறையில் நடராஜரின் திருவுருவமும் ஈசனின் 64 திருவிளையாடல்களும் மூலிகைச் சாயங்கள் கொண்டு வரையப்பட்டிருக்கும். அதனாலேயே சித்திர சபை எனப் பெயர் கொண்டுள்ளது. மார்கழி ஆருத்ராவில் இந்த நடராஜருக்குத் தாண்டவ ஆரத்தி நடந்த பின் தான் கோவிலிலிருக்கும் நடராஜருக்குத் தாண்டவ ஆரத்தி நடைபெறும்.
 
சித்திரை விசு, ஐப்பசி விசு இந்த இரு உற்சவங்களுக்கும் 7 ஆம் திருநாளன்று நடராஜ மூர்த்தி கோவிலிலிருந்து சித்திர சபைக்குச் செல்வார். அங்கு 8 ஆம் திருநாளில் கூத்தபெருமானுக்கு அபிஷேகமும் தாண்டவ ஆரத்தியும் நடைபெறும்.
மார்கழி திருவாதிரைத் திருநாள் கொடியேற்றத்தின் போது பன்னிரு திருமுறைகளுக்கும் காப்பு கட்டப்படும். சுவாமி சன்னதியில் நடராஜமூர்த்தி மார்கழி உற்சவத்தின் போது கொடித்தடி மண்டபத்தில் எழுந்தருள்வார். அவருக்கு இருகாலம் அபிஷேகமும் தாண்டவ ஆரத்தியும் நடைபெறும். ஐயனுக்கு நாட்டியாஞ்சலி செலுத்தப்படும்.  

Picture
குற்றாலத்திலிருந்து 3 கிமீ தொலைவில் இலஞ்சி என்னும் ஊரில் "திருக்கோவிலிஞ்சிக் குமாரர் கோவில்" உள்ளது. இது இரண்டாயிரமாண்டுகள் தொன்மை வாய்ந்த முருகப்பெருமான் திருக்கோவில். இங்கு எழுந்தருளும் திருவிலஞ்சிக் குமாரர் குற்றாலநாதரின் ஒவ்வொரு உற்சவத்திற்கும் வருகை புரிவார். தந்தையின் உற்சவம் முடிந்ததும் விடைபெறும் இலஞ்சிக் குமாரருக்கு பிரியாவிடை உபச்சாரங்கள் நடைபெறும். பலகார பட்சணங்களும் தந்தை குற்றாலநாதரிடம் பட்டு வஸ்திரமும், பவுன் தங்கமும் பெற்றுக் கொண்டு இலஞ்சி திரும்புவார்.
 
தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் மட்டுமே நடராஜருக்குத் தேர் உண்டு. சிதம்பரம், செப்பறை, குற்றாலம். சித்திரை விசு, ஐப்பசி விசு திருவிழாக்களில் ஐந்தாம் திருநாளிலும், மார்கழி திருவாதிரையன்றும் இங்கு தேரோட்டம் நடைபெறும்.
 
குற்றாலநாதர் கோவிலின் வெளிப்புற வாயிலின் வலதுபுறத்தில் செண்பகவிநாயகர் அரசமரத்தடியில் வீற்றிருக்கிறார். கார்த்திகை சோமவாரங்களில் இந்த விநாயகரை ப்ரதட்சணம் செய்ய தென்காசி சுற்றுவட்டாரப் பெண்கள் கூட்டம் கூட்டமாக வருவர். ப்ரம்ம முகூர்த்த வேளையில் குற்றாலம் நகரே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
ஞாயிறு இரவு 1 மணியிலிருந்து குற்றாலத்திற்குச் செல்ல, பெண்களுக்கென சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். காலை 7 மணி வரை பேரருவியில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. பெண்கள் அருவியில் நீராடிவிட்டு கையில் 11 விரலிமஞ்சள் துண்டுகளை வைத்துக்கொண்டு தீர்க்க சுமங்கலியாய் இருக்க வேண்டுமென வேண்டியபடி இந்த விநாயகரை ப்ரதட்சணம் செய்வர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஒரு மஞ்சள் துண்டை விநாயகர் மீது எறிவர்.
 
திருக்குற்றாலநாதர் கோவிலின் பின்புற வெளிப் பிரகாரத்திலிருந்து 1.மேற்கு முக விநாயகர் 2.மேற்கு சோமலிங்கம் 3.தெற்கு முக சுவாமி விமானம் 4.திரிகூடமலை 5.சித்ர மது கங்கை எனப்படும் பேரருவி இவை ஐந்தையும் ஒரே சமயத்தில் பஞ்ச தரிசனமாகக் காணலாம்.
 
இத்திருத்தலம் முக்தி தலமாகும். அதற்குச் சான்றாக நிறைய பாடல்கள் உள்ளன. அவற்றுள் சில, 

Picture
"உற்றா ராருளரோ உயிர்கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல் லால்நமக் குற்றா ராருளரோ"

 
- திருநாவுக்கரசர்
 
"உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா உன்குரை கழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுனே"

 
- மாணிக்கவாசகர் (திருப்புலம்பல்)
 
"காலன் வரும்முன்னே கண்பஞ்சடை முன்னே
பாலுன் கடைவாய் படும் முன்னே - மேல் விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு"

 
- பட்டினத்தார்
 
திரிகூடராசப்பக் கவிராயர் இத்தலத்தின் வழிபாட்டுப் பலனை,
 
"ஒரு தலத்தில் ஆயிரம் யாண்டுதவுபலன் ஓராண்டில் உதவுங்காசி
அருணைதரும் ஓராறு திங்களின்முத் திங்களிலே யருளும் ஆரூர்
இரு மதியிற் கேதாரம், ஒருமதியிற் கோகருணம்,ஏழுநாளில்
திருவளர்நெல் வேலிதரும் ஒருநாளில் கொடுத்தருளுந் திருக்குற்றாலம்"

 
என்ற பாடலில் கூறுகிறார். 

Picture
 இத்தனைச் சிறப்புகள் கொண்ட இத்திருத்தலத்தை தரிசிக்க பூர்வ புண்ணியம் வேண்டுமெனத் தல வரலாற்றுப் பாடலிலேயே திரிகூடராசப்பக்கவிராயர் கூறுகிறார்.
 
"சீதமழை முகில்பொழிக தேசமெலாம் பயிர்விளைக செல்வ மோங்க
மாதர்குழா மக்கள்குழா மனையறங்க ளுடன்
பொலிந்து மலிந்து வாழ்க
மேதகுசீர்ச் சைவநெறி வேதநெறி தழைத்தோங்க மேலும் மேலும்
பூதமேற் சிவபெருமா னாலயங்கள் பூசனைகள் பொலிக மாதோ"

 
- திரிகூடராசப்பக் கவிராயர்.
 
வற்றாக் குடிநீர் கொண்ட குற்றாலநாதரைக் கண்டு குன்றாத நலமும் வளமும் பெற்றுச் செல்வீர்.
வாழிய எம்மான். 

 
சிவாய நம...  
3 Comments
ம.சக்திவேலாயுதம்
7/19/2019 06:40:13 am

அருமை அக்கா..வாழ்த்துக்கள்

Reply
Kala
7/19/2019 07:39:49 am

Very informative article. Good job 👍

Reply
S.kalyaniSubramanian
7/19/2019 07:57:55 pm

Superb.well done.Rani sister

Reply



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    July 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.