Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

அவள்(ன்) கணக்கு – சத்யா GP

6/21/2019

0 Comments

 
சில நாட்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என நண்பரும் நானும் திட்டமிட்டோம். அதிகாலை யானை தான் சன்னிதானத்தைத் திறக்கும் என்று நண்பர் திருத்தலம் பற்றி சொன்னது ஆவலை அதிகப்படுத்தியது. இரு சக்கர வாகனத்தில் மெட்ராஸில் இருந்து செல்ல முடிவானது.
 
காலை நான்கு மணிக்குப் புறப்பட்டு கோயிலுக்குப் போய் பெருமாளை தரிசித்து திரும்பி வரும் போது உணவு முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்வது என ஏற்பாடு. என்ன கணக்கு நாம் போட்டாலும் அவள்(ன்) கணக்கு வேறல்லவா?
 
காலை வீட்டிலிருந்து புறப்பட்டபோது மணி ஐந்தரை. ஏழு மணியளவில் கோயிலுக்குப் போனால் அங்கு நடை திறக்கவில்லை. கோயிலுக்கு சம்பந்தமுடைய நபர் ஒருவர் இறந்துவிட்டதால் மதியம் பன்னிரெண்டு மணிக்கு மேல் தான் கோயில் திறக்கப்படும் என்று சொல்லிவிட்டார்கள். அருகே உள்ள வேறு இரு பெருமாள் சந்நிதிகளுக்கு செல்ல முடிவெடுத்தோம்.
 
முதலில் சென்றது மதுரமங்கலம் கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுந்த பெருமாள் கோயில் (எம்பார் கோயில்) இந்த புண்ணிய ஸ்தல வரலாறு குறித்து பிறிதொரு சமயத்தில் விரிவாக எழுதுகிறேன்.
 
காலை நைவேத்தியம் மற்றும் பூஜை நடக்கும் நேரம். அமைதியான கோயில். கிணற்றில் ஒரு சொம்பை உள்ளே விட்டு நீரை எடுத்து குடிக்கலாம். தண்ணீர் ஸ்படிகம் போல் சுத்தமாக இருந்தது. நைவேத்தியம், ஆராதனை முடித்து பெருமாளையும், தாயாரையும் சேவித்து பட்டருடன் அரை மணித்தியாலத்திற்கு பேசி அடுத்து இடையார் பாக்கத்தில் உள்ள பத்மாவதி தாயார் சமேத வைகுண்ட ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். இருவருக்கும் தெரிந்த நண்பர் வேறு அங்கிருக்க நிதானமாக மனம் குளிர பெருமாளை தரிசித்தோம்.
 
மதியம் அங்கிருந்து புறப்பட்டு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சென்றோம். நடை திறந்திருந்தது. மதிய நைவேத்தியம் அமர்க்களமாக நடந்தது. தாயார், பெருமாள் (விஸ்வரூப தரிசனம்) & ராமானுஜர் என தரிசனம் தந்த மன திருப்தி எங்கும் கிடைக்காத ஒன்று. பிரசாத தீர்த்தம் பருகி கோயில் பிரகாரத்தை வலம் வந்து முடிக்கும் போது நடை சாத்தும் முஸ்தீபுகளை ஆலயப் பணியாளர்கள் மேற்கொள்ளத் துவங்கி இருந்தார்கள்.
 
“காலைல திட்டப்படி வெள்ளன வந்திருந்தாலும் யானை கதவை திறந்து பக்தர்கள் உள்ள தரிசனத்துக்கு போவதை பார்த்திருக்க முடியாது. என்னமோ நமக்கு கொடுப்பினை இல்லை. பெருமாள் புண்ணியத்துல தரிசனம் கிடைச்சுதே” என்று நண்பர் அங்கலாய்த்தார்.
 
வெளியே இரு சக்கர வாகனத்திற்கு அருகே வைத்திருந்த காலணிகளை அணியும் போது தான் ஒரு நிகழ்வைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த அனுபவம் கிடைத்தது. ஒரு பெண்மணி புஷ்பங்கள், மாலைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். ஒரு மனிதர் கையில் பெரிய கனமான துணிப் பையை சுமந்தபடி வந்தார். அவர் மனைவியும், மகனும். உடன் இருந்தனர். அவரைப் பார்த்து புஷ்ப பெண் சிரித்தார். அந்தப் பெண்மணியிடம் வந்து “என்ன வேணும்?” என்று மனிதர் சிரித்தபடி கேட்டார். 


“எப்பவும் தரதையே தாங்க சார்”
 
பையில் இருந்து ஒரு பெரிய பொட்டலம் அந்தப் பெண்ணின் கைகளை வந்தடைந்தது. அடுத்து அந்த மனிதர் அந்தக் கோயிலுக்கு வெளியே யாசகம் கேட்பவர்களாகத் தேடிப் போய் பொட்டலங்களைத் தந்தார். சிலர் உரிமையாக இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க பொட்டலங்களை மாற்றித் தந்தார். பையில் இருந்த அனைத்து பொட்டலங்களையும் தந்து காலி பையை எடுத்துக் கொண்டு புஷ்பப் பெண்ணிடம் வரேன் மா என்று சொல்லிக் கிளம்பினார்.
 
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நான் அப்பெண்ணிடம் “யாரும்மா அவர்” என்று விசாரிக்க அவர் பேசத் துவங்கினார்.
 
“அவர் இங்க ஹோட்டல் வெச்சுருக்காருங்க”
 
“சைவ உணவகம்னு அம்புக்குறி போட்டு அங்க போர்ட் இருக்கே அதுவா?”
 
“அதே தான் சார்”
 
“அன்ன தானம் செய்யறாரா?”
 
“தினமும் இருபது பாக்கெட் கலவை சாதம் கொண்டு வருவார், அதுல சாம்பார் சாதமோ, லெமன் சாதமோ, தக்காளி சாதமோ இருக்கும். அதோட போரியல், கொஞ்சம் தயிர் சாதம் & ஊறுகாய், நல்லா தாராளமா இருக்கும் சார், சாப்பிடத் திணறும், வயிறு நல்லா நிறையும்”
 
“தினமுமா?”
 
‘ஆமா சார், எல்லா நாளும் கொண்டு வருவார், ஏதாவது பண்டிகைன்னா ஸ்வீட் இருக்கும், ஒரு நாளைக்கு இருபது பாக்கெட்”
 
அந்தப் பெண் சொல்ல சொல்ல மனம் கணக்கு போட்டது.
 
எதுவும் பேசாமல் நண்பருடன் வண்டியில் புறப்பட்டேன். சிறிது தொலைவு சென்றிருப்போம், அந்த மனிதர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். நண்பரை வாகனத்தை நிறுத்த சொல்லி அந்த மனிதர் அருகே போய் “சார்” என்றேன். அவர் என்னை யோசித்தபடி பார்த்தார்.
 
“இப்போ தான் உங்களை கோயில்ல பார்த்தேன், அந்த பூக்காரப் பொண்ணு எல்லாத்தையும் சொன்னாங்க, உங்களைப் பார்த்தா வாழ்த்து சொல்லனும்னு நினைச்சேன், கடவுள் புண்ணியத்துல பார்த்துட்டேன், கிரேட் சார்”
 
“இதுல என்ன சார் இருக்கு, கோயில் பக்கத்துல ஹோட்டல், வியாபாரம் நல்லா நடக்குது, சாமி கும்பிட்டு போறவங்க நிறைய பேர் வந்து சாப்பிடுறாங்க, எல்லாம் பெருமாள் தந்தது, அவர் தந்ததை நான் கொஞ்சம் தரேன், இதென்ன பெரிய விஷயமா?”
 
அவரிடம் விடை பெற்றுக் கிளம்பினேன்.
 
யானை... நடை திறப்பு...
தாமதமாக மதிய நேரத்தில் தரிசனம்...
 
மனம் எதை எதையோ சிந்தித்தது... ஓம் நமோ நாராயணாய... கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது... வாய் ஏனோ அப்பாடலை முணுமுணுத்தது...             

​
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    June 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.