Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

புக்... புக் ஃபேர்... புக் ஃபேரில் புக் ரிலீஸ் – சத்யா GP

6/21/2019

0 Comments

 
புஸ்தகங்களை விரும்பிப் படித்துக் கொண்டும், தேடிப் பிடித்து தேவையானதை வாங்கிக் கொண்டும் வளைய வரும் வரை சத்யாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரு புஸ்தகம் எழுதி அதை வெளியிட முடிவெடுத்த போது தான் பல விசித்திரமான சம்பவங்கள் நடந்தேறத் துவங்கின.
 
சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய முதல் புத்தகமான “சர்வேஷின் கதைகள்” (சிறுகதைத் தொகுப்பு) வெளியானது. அந்தப் புத்தக வெளியீடு ஏன் என்பதற்கே ஒரு கதை உண்டு. அனைத்தையும் சொல்லத் துவங்கினால் மஹாபாரதம் போல் கதை... கதைக்குள் கதை... கதைக்குள் கதைக்குள் கதை என நீளும் என்பதால் அதைத் தவிர்த்து முதல் புத்தக வெளியீடு தொடர்பாக சுருக்கமாகவும், இந்த 2019 ஆம் ஆண்டு நந்தனம் ஒய்.எம்ஸி.ஏ மைதானத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட இரண்டாவது புத்தகமான “முகங்கள்” குறித்தும் பார்ப்போம்.
 
முதல் புத்தக வெளியீட்டுக்கான நாள் குறிப்பதிலேயே ஈசனின் திருவிளையாடல்கள் பிரமாதமாக அரங்கேறின. மூன்று முறை தேதிகள் மாற்றி இறுதியில் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வருடம் 2018 என்று முடிவானது. தேதிகள் பல முறை மாறியும் அரங்கம் மாறவில்லை. அதன் உரிமையாளருக்கு ஆயுள் முழுதும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
 
புத்தக வெளியீடு 29 ஆம் தேதி மாலை ஐந்து மணி என முடிவானது ஆனால் அன்று மதியம் ஒரு மணி வரை அந்த நிகழ்வு சொன்னது போல் நடக்குமா? என்னும் ஊசலாட்டம், தவிப்பு, பதட்டம் என சகலமும் இருந்தது. இறுதியில் வெற்றிகரமாக வெளியீடு இனிதே நடந்து முடிந்தது. புத்தக விற்பனையும் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.
 
2019 ஆம் வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் அடுத்த புத்தகம் என்று ஒரு நாள் முடிவானது. முதல் புத்தகத்தை நண்பர்கள் பதிப்பகம் வெளியிட இரண்டாம் புத்தகத்தை வெளியிட முன் வந்தவர் வாதினி பதிப்பக உரிமையாளர் திரு. சுப்ரஜா ஸ்ரீதரன். இவர் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர் என்பதால் துவக்கம் முதல் பரஸ்பர புரிதலும், இணக்கமான சூழலும் இயல்பாக அமைந்தது. 

Picture
மின்னஞ்சல் ஒன்று அனுப்புவேன். அடுத்த நாள் “சார் அதுல ஒரு மாறுதல் இருக்கு இப்போ இன்னொரு மெயில் அனுப்பி இருக்கேன் இதை இறுதியா வெச்சுக்கோங்க” இது ஒரு டெம்ப்ளேட் வசனமாகி ஆறே முக்கால் முறை அச்சிட வேண்டிய சங்கதிகள் மின்னஞ்சல் வழியே மாறி மாறி என்னிடமிருந்து ஸ்ரீதரன் சாருக்கு போனது ஆனால் சார் அசரவே இல்லை. “ஒன்னும் பிரச்சனை இல்லை. இதையே செய்துடலாங்க” இது ஒவ்வொருமுறையும் அவர் சொல்லும் டெம்ப்ளேட் வசனம்.
 
புத்தக வெளியீடு தொடர்பாக அவர் குறிப்பிட்டு எதுவும் முன்வைக்கவில்லை. அனைத்தையும் என் விருப்பத்திற்கே விட்டுவிட்டார். “நான்காம் தேதி கண்காட்சி துவக்கம். அன்று அதிகமாக வேலை இருக்கும். மறு நாள் சற்று ஆசுவாசபடுத்திக்கணும். ஐந்தாம் தேதிக்குப் பிறகு எந்த தேதியில் வேண்டுமானாலும் வெளியிடலாம்” என்று மட்டும் சொன்னார். என்னுடைய பதில் கேள்வியானது “ஆறாம் தேதி வெச்சுக்கலாமா சார்?” அவர் மனதுள் என்ன நினைத்தாரோ அந்த சர்வேஸ்வரனுக்கே வெளிச்சம். வாய் வார்த்தை “சரிங்க”. அவ்வளவு தான்!
 
அதே போல் நான்கு மற்றும் ஐந்து தேதிகளில் புத்தக கண்காட்சி அரங்கிற்கு வர சொன்னார். நிகழ்வு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து பேச, திட்டமிட! நான் வேறொரு அலுவலில் வசமாக சிக்க, அனைத்தையும் ஸ்ரீதரன் சார் தனியாளாக சமாளித்தார். ஏற்பாடுகளை செய்து முடித்தார்.  
 
ஆறாம் தேதி என்றவுடன், ஒரு நண்பர் நிறைய எடுத்து சொன்னார். “அன்னிக்கு வேண்டாமே, பாட்டி அம்மாவாசை, அப்புறம் மத்தியானம் வெயில் நேரம் பன்னெண்டு மணின்னு சொல்ற, வேற நாள் வை”
 
எனக்கு நாள், கிழமை, நல்ல நேரம் அனைத்திலும் நம்பிக்கை உண்டு. இருப்பினும் அவருக்கு சொன்ன பதில்.
 
“மாதந்தவறாம பாட்டி அம்மாவசை வரும் பாஸ் ஆனால் வருஷத்துக்கு ஒரு நாள் தான் ஜனவரி ஆறு வரும்”
 
“அப்படி என்ன ஜனவரி ஆறில் விசேஷம்”
 
“அன்னிக்கு ஏ.ஆர். ரஹ்மான் பிறந்த நாள்”
 
“ரைட்டு” என்பதே அவரிடமிருந்து வந்த ஒற்றைச் சொல்.
 
எழுத்தாளர் வித்யா மேடம், விருட்சம் அழகிய சிங்கர் சார் அனைவரிடமும் சொல்லி ஒப்புதல் வாங்கி, நண்பர்களிடம் தகவல் சொல்லி, அழைப்பிதழை பேஸ்புக்கில் பதிவிட்டு சமூக (வலைத்தள) கடமைகள் அனைத்தையும் முடிக்க ஆறாம் தேதி இனிதே விடிந்தது.
 
அனைவருக்கும் அலை பேசி நினைவூட்டினேன். எல்லோரும் சரியான நேரத்திற்கு வந்து விட்டார்கள். நான் தான் தாமதமாக பன்னிரெண்டே முக்கால் மணி அளவில் போய் சேர்ந்தேன். பொதுவாக தாமதமாக எந்த நிகழ்வுக்கும் செல்ல மாட்டேன். ஆனால் விதி கிண்டியில் இருபது நிமிடங்களுக்கு வாகனத்தை வரிசையாக நிறுத்தி வைத்து விளையாடியது. அதில் எங்கள் வாகனமும் தப்பவில்லை.
 
அரங்க ஏற்பாடுகள் எல்லாம் முடித்து நிகழ்வு துவங்கிய போது மணி ஒன்றரை. வித்யா மேடம் அவர்கள் பன்னிரெண்டு மணிக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு மணி வாக்கில் வீட்டுக்கு புறப்படுவது போல் திட்டமிட்டு வந்திருந்தார். அவருக்கு மருத்துவமனை தொடர்பாக வீட்டிலிருந்து தொடர் அலைபேசி அழைப்புகள் வர, காரணத்தை சொல்லி வாழ்த்திவிட்டு புறப்பட்டார். ஸ்ரீதரன் சார் அவர்கள் வெளியிட, அழகிய சிங்கர் பெற்றுக் கொள்ள அரங்கில் நிறைந்திருந்த “இருபது நண்பர்களின்” (செம கூட்டம்ல!) பலத்த கரகோஷத்திற்கிடையே புத்தகம் வெளியீடு முடிந்தது.
 
அழகிய சிங்கர் சார் “முகங்கள்” தொகுப்பில் உள்ள “நூல் முகம்” அத்தியாயத்தை ஸ்லாகித்துப் பேசினார். வந்திருந்த நண்பர்கள் அனைவரும் தவறாமல் “முகங்கள்” தொகுப்பை வாங்கினார்கள். இந்த நிகழ்வுக்காக என் பூர்வீகப் பிராந்தியமான தஞ்சை ஜில்லாவிலிருந்து நண்பர் ஒருவர் வெளியீடு விழாவுக்கு வந்து நெகிழ்வுணர்ச்சியை அதிகமாக்கினார். அவர் முதல் நாள் அதிகாலை மூன்று மணிக்கு மெட்ராஸ் வந்தது. அந்த அகால வேளையில் காலச்சுவடு, சாரு நிவேதிதா, அராத்துவின் “பொண்டாட்டி” என்றெல்லாம் பேசியது மற்றொரு கிளைக்கதை. நண்பர்களின் ஆதுரமான ஆதரவு, வாழ்த்துகள் போன்றவை மனதை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்தாலும், தேடித் தேடி அழைத்தும் அதிக அளவில் நண்பர்கள் ஞாயிற்றுக் கிழமை கூட வராமல் இருந்தது கொஞ்சம் கண்ணை வியர்க்க வைத்தது.
 
நிகழ்வு முடிந்து, மதிய போஜனம் கடந்து, நண்பர்களுடன் அரங்குகள் அனைத்தையும் சுற்றி வந்து, துவக்க நாள் பாராம்பரியத்தைக் காப்பாற்ற மூன்று சிறப்பான புத்தகங்கள் வாங்கி... அனைத்தும் முறை தவறாமல், புத்தகக் கண்காட்சி ஆகம விதிப்படி நடந்தன. நண்பர்கள் ஒவ்வொருவராக புறப்பட, இரவு ஒன்பது மணிக்கு ஸ்ரீதரன் சாருடன் சேர்ந்து அவரவர் இல்லம் திரும்புவது என முடிவெடுத்தோம்.
 
அரங்கில் உட்கார்ந்திருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என யோசித்து வாங்கிய புத்தகங்களை சில நொடிகள் நோட்டம் விட்டேன். அடுத்த சில வினாடிகளில்  கையில் சுஜாதா அவர்கள் எழுதிய “சிறுகதை எழுதுவது எப்படி” புத்தகத்துடன் கண்காட்சி எனக்கு களைகட்டியது. புத்தகக் கண்காட்சியில், படிப்பதற்காக மக்கள் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருக்க நான் படிக்க வாங்கிய ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஸ்ரீதரன் சார் சொன்னது “ஏகப்பட்ட புக் ஃபேர், பல வருடங்கள் பார்த்தாச்சு, இங்க தினமும் வந்து உட்கார்ந்தாலே போதும் எழுத ஏகப்பட்ட கரு கிடைக்கும்” என்றார். நான் ஆச்சரியப்பட்டு “உங்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஏதாவது...” வாயைக் கிளற அவர் பேசத் துவங்கினார்.
 
“என்னோட அரங்குக்கு ஒரு குடும்பம் வருஷா வருஷம் தொடர்ந்து வருவாங்க. கணவன், மனைவி, அப்புறம் அவங்க மகள். அந்தப் பொண்ணை குட்டி வாண்டா இருக்கறதுல இருந்து பாக்கறேன். இப்போ பெரிய மனுஷி ஆகிட்டா, ப்ளஸ் ஒன் படிக்கிறா, நிறைய புக்ஸ் வாங்குவாங்க, என்கிட்ட நிறைய ஆலோசனையும் கேட்பாங்க”
 
சார் சொல்ல சொல்ல ஆச்சர்யம். “அவங்க கிட்ட சர்வேஷின் கதைகள் & முகங்கள் வாங்க சொல்லுங்க சார்” என்றேன். ஏதோ என்னால் முடிந்தது.
 
இரவு உணவு முடித்து, சார் வீட்டில் அவர் எனக்காக வைத்திருந்த அச்சிட்ட புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது மணி இரவு பத்து. சார், ஓலா ஆட்டோ புக் செய்து தர வாகனம் புறப்பட்டது. வாகன ஓட்டி நங்கநல்லூரில் வசிப்பவர். என் இருப்பிடம் அருகே தான் அவர் வீடு. விலாசம், சாலை அனைத்தும் அறிந்தவர். “வேறென்ன வேறென்ன வேண்டும்” என்ற பாடலை என்னையறியாமல் வாய் முணுமுணுத்தது.
 
வழக்கம் போல் டிரைவருடன் பேசியபடி பயணிக்கத் துவங்கினேன்.
“சார் போகும் போது நம்ம வீட்டாண்ட கடையெல்லாம் சாத்திடுவாங்க, இங்கேயே ஒரு நல்ல டீக்கடை கம் பொட்டிக்கடையா பார்த்து நிப்பாட்டுங்க, டீயும் சாப்பிட்டுப் போய்டுவோம்”
 
என் சொல்லைத் தட்டாமல் கல்கி அலுவலகம் தாண்டிய பின் உள்ள அந்த டீக்கடையில் நிறுத்தி “இங்க டீ நல்லா இருக்கும் சார்” என்றார்.
 
“தெரியுங்க, இதுவும் என் வழக்கமான டீக்கடை தான்” என்று சொல்லி அதை உர்ஜிதப்படுத்த கடை தொடர்பான சில தரவுகளை சொன்னேன். அவர் பரிசோதித்து ஆச்சர்யப்பட்டார். இருவருக்கிமிடையே இயல்பான நெருக்கம் வளரத் துவங்கியது.
 
புத்தகக் கண்காட்சி, புத்தக வெளியீடு தொடர்பாக இருவரும் பேச, அவர் விசாரிக்க நான் “முகங்கள்” பற்றி சொல்ல... அடுத்து மீண்டும் வாகனம் புறப்பட்ட போது இருவரும் அதைப் பற்றி அதிகம் பேசினோம். அவர் தன்னுடைய சொந்த ஊர் “சிதம்பரம்” என்று சொன்னதும் காவிரிக்கரை வாசியின் வழமையான புத்தி ஆனந்தக் கூத்தாடியது. என் பூர்வீகம் தெரிந்த பின் அவரும் அந்த மோன நிலைக்கு சென்றுவிட்டார். பேச்சு இயல்பு த்வனிக்கு மாறியது.
 
“எல்லா டைப் ஆளுங்களையும் இதுல எழுதி இருக்கீங்களா சார்?”
 
“ஆமா சார் டாக்டர், ஆட்டோக்காரர், கேபிள் டிவிகாரர், ஓபிஎஸ் முக ஜாடையில் ஒருத்தர், ரெஜிஸ்டர் ஆபீஸ்ல வேலை செய்யறவர், டீச்சர், மினி பஸ் டிரைவர்...”
 
“நமக்கு ஒரு புக் தாங்க”
 
“கண்டிப்பாங்க”
 
“வண்டி நங்கநல்லூர் தாண்ட அங்கே ஒரு பெட்டிக்கடை திறந்திருக்க வண்டியை நிறுத்த சொன்னேன். அவரை அழைக்க “வேண்டாம் சார், நீங்க போங்க” என்றார்.
 
“புக் கேட்டீங்களே, இந்தாங்க”
 
பெட்டிக்கடை போய் திரும்பி வந்த போது அவர் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். நான் போய் “போலாமா” என்று கேட்க, இரு நிமிடங்கள் கழித்து புத்தகத்தில் அடையாளம் ஒன்றை வைத்து மூடி ஆட்டோவைக் கிளப்பினார். “ஆட்டோ அண்ணா செம, மினி பஸ் டிரைவர் படிக்க படிக்க எங்க அம்மா நினைப்பு வந்துட்டு, நல்லா எழுதி இருக்கீங்க, இந்த ரெண்டு தான் படிச்சேன்” என்றார்.
 
வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி புத்தகங்களை எடுத்து வைக்க உதவினார்.
கட்டணம் மீட்டரில் 195 ரூபாய் என்று காட்ட அவரிடம் இருநூறு ரூபாய் தாள் ஒன்றைத் தர, அவர் நூற்றி அறுபத்தைந்து ரூபாய் மீதி தர தடுத்து “எதற்கு” என்று கேட்டேன்.
 
“புக் விலை நூத்தி அறுபதுன்னு போட்டிருக்கு”
 
“இருக்கட்டுங்க”
 
“தப்புங்க புக்குக்கு காசு எடுத்துக்குங்க”
 
“அப்போ நூறு ரூபாய் மட்டும் தாங்க, டிஸ்கவுண்ட் விலை ப்ளீஸ்”
 
பரஸ்பரம் அலைபேசி எண்ணைப் பரிமாறிக் கொண்டு நான் மாடிப்படி ஏற அவர் புறப்பட்டார். நூல் வெளியீட்டு விழாவவில் திறக்கு இல்லையே என்னும் வருத்தம் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் துவங்கியது. 
 
முகங்களில் மற்றொரு “முகம்”   
                
 
     
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    June 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.