Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

பிறவா நெறியானே – பேரூர் ஹரிஹரன் சுரேஷ்

6/21/2019

3 Comments

 
காஞ்சி மாநதியின் கரையில் விளங்குபவரை, பேரூர் கடவுளை புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோமன்றோ, இனி நாம் பெறுவது யாது … என சுந்தரர் 7 ஆம் திருமுறையில் 90 ஆவது பதிகத்தில் 10 ஆவது பாடலில் குறிப்பிடுகிறார்.
 
புலியூரில் பேரூரானை நினைத்து பரவசமடைந்தார் சுந்தரர். நான் அன்றாடம் பேரூர் பட்டிஸ்வரர் பாதத்தில் நிற்பவன். இங்கு இருக்கும் அற்புதங்களை, ஆசிகளை அள்ள அள்ள குறையா தெய்வீக பிரவாகத்தை அனுதினமும் அனுபவிக்கப் பெற்றவன்.
 
இதன் புராதானப் பெயரான பிப்பலாரண்யம் (பிப்பலம் – அரச மரம், ஆரண்யம் – காடு) ஆதிபுரி, தட்சிண கயிலாயம், கல்யாணபுரம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம், ஞான புரம் என இத்தலம் கொண்டிருக்கும் பெயர்கள் ஏராளம். ஒவ்வொறு உருவத்திலும், ஒவ்வொறு திருப்பெயரிலும் அவர் நிகழ்த்திய திருவிளையாடல்களை, மனித குலத்திற்கு அவரளித்த ஞானக்கொடையை சிந்தித்து பார்த்தாலே நம் வினைகள் வேரருந்து வீழக்கூடும்.
 
யுகங்கள் கடந்திருக்கும் இத்திருக்கோவிலின் கண்கூட சாட்சி அரசம்பலவாணர். காலவமுனிவரால் காசியில் அமைந்துள்ள இறைவனை நினைத்து தவமிருந்து அரசம்பலவாணராக பேரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் அரசம்பலவாணர். இங்குள்ள காலவேசுவர சுவாமியும், அகிலாண்டேஸ்வரியும் பல முனிவர்களால், சித்தர்களால் வழிபடப்பட்டவர்கள்.
 
இன்று இருக்கும் பேரூர் ஆலயம் பெரிய கோவில், அரசம்பலவாணர் கோவில் சின்ன கோவில் என அழைப்பதே உள்ளூர் மக்களின் வழக்கம். காரணம் இதுவே ஆதிக்கோவில். இது ஆதிக்கோவிலாய் இருப்பதாலே இதற்கு கோபுரம் இல்லை. இன்றும் இத்திருத்தலத்தில் நிற்கிற வேளையில் சிரசுக்கு ஏறும் ஆற்றலை எப்படி விளிப்பது?
 
உள்ளூர் மக்கள் துவங்கி, வெளிநாட்டவர் வரையிலும் இங்குள்ள ஐந்து அதிசயங்களை குறித்து எண்ணி நெகிழ்ந்தவர் பலர், எழுதி எழுதி தீராத ஆய்வு கட்டுரைகள் ஏராளம். இது குறித்த காணொளிகல் சமூக வலைத்தளங்களில் கொட்டி கிடக்கின்றன ஆனால் அந்த அதிசயங்களின் நிழலிலேயே வளர்ந்தவன் என்பதால், அதை பார்க்கிற, கடக்கிற ஒவ்வொறு நொடிப்பொழுதும் அந்த சிலிர்ப்பிலிருந்து மீளாதவனாய் இருக்கிறேன்.
 
பூப்புக்கும், காய் காய்க்கும் பழமும் பழுக்கும் ஆனால் விதை மட்டும் முளைக்காது, கேட்க கேட்க ஆச்சர்யம் இராஜ கோபுரத்தின் எதிரில் உள்ள பிறவாப்புளி எனும் புளியமரத்தின் விதைகள் பிறப்பதேயில்லை என்பது இதன் முதல் அதிசயம்
 
பெரிய கோவிலின் வடக்கே உள்ள நொய்யலாற்றின் தென்கரையில் பிரம்மன் பூஜித்த வடகையிலாயம் என்னும் சின்ன கோவிலின் வெளிமுகப்பில் உள்ளது இறவாப்பனை. யுகங்கள் கடந்து நிற்கும் மரம். எத்தனை பிறவிகள் கடந்தாலும் நிலையான வாழ்வை தருபவன் இறைவன் என்பதை பறைசாற்றும் இந்த இறவாப்பனை இரண்டாம் அதிசயம்.

Picture
இக்கோவிலை சுற்றியுள்ள கால்நடைகளின் சாணங்களில் புழுக்கள் உருவாவதில்லை என்பது இத்திருத்தலத்தின் மூன்றாம் அதிசயம்.
 
ஆதி சங்கரர் தன் தாயின் ஈம சடங்குகளை பேரூர் காஞ்சி மா நதியில் (நொய்யல்) நடத்தினார் எனும் வரலாற்று சிறப்பு மிக்க, இந்த நதியில் கரைக்கப்படும் எலும்புகள் வெண் கற்கலாக மாறுவதாக மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை நான்காம் அதிசயம்.
 
ஐந்தாவது அதிசயமாக சொல்லப்படுவது, இத்தலத்தை சுற்றி உயிர் பிரியும் வேளையில் அவர்கள் தங்கள் வலது காதினை எப்போதும் மேல் புறம் நோக்கி வைத்திருப்பார்களாம். சிவபெருமான் நமசிவாயத்தை ஓதி தன்னடியில் சேர்த்து கொள்வார் என்பதனாலாம் .
 
இவையெல்லாம் பொதுவான அதிசயங்கள் எனினும், அன்றாடம் தொழும் பட்டீஸ்வரரின் அர்த்தஜாம பூஜை என்பது என் ஆன்மாவினை வருடி செல்லும் ஓர் வைபவம். அன்றாடம் இரவு செய்யப்படுவது தான், வாய்ப்பிருக்கும் வேளையில் எல்லாம் அப்பூஜையில் பங்கேற்று, பார்த்து, தரிசித்து மனம் மகிழ்ந்து கொள்வேன்.
 
சாந்த சொரூபராக, ஜோதி சொரூபராக பல்லக்கில் ஏறி பவனியை துவக்குவார் உற்சவர், அவர் பல்லக்கு அசைந்து வர என் சிந்தை மட்டும் நிலையாய் அவரை நோக்கியே குவிந்திருக்கும் பொழுது, உழவார பணிக்குழுவினர் அவர் வலம் வரும் பாதையெங்கும் பட்டு கம்பளத்தை இரத்தின கம்பள தோரணையில் விரிக்க, அந்த காரிருளில் நம் ஆற்றலை சுண்டியிழுக்கும் கையிலாய வாத்தியம் முழங்க, நாசி வழியேறி எண்ணத்தை சுத்திகரிக்கும் நறுமணம் கமழ, கவரி மான் உதிர்த்த வெண் சாமாரம் அசைய, ஒவ்வொறு இரவும், அதிரூப அழகனாய், அண்டத்தின் பேரரசனாய் இக்கோவிலின் அம்பாள், மரகதம்பாள் என்னும் பச்சைநாயகியை நோக்கி பவனி வரும் அத்தருணம் காண கண்கள் இரண்டு நிச்சயம் போதாது. பள்ளியறை ஊஞ்சலை தங்களால் கைகளால் தொடுத்த மலர் சரத்தால் மக்கள் அலங்கரித்திருக்க, ஒவ்வொறு இரவும் பல்வேறு விதமான பலகாரங்களை செய்து பரிமாற, செவிகள் திளைக்க பதிகம் பாட பள்ளியறை பூஜை நிறைவு பெறும் அக்கணப்பொழுதில் கண்களும், நெஞ்சமும் தழும்ப நின்றிருப்பேன்.
 
அத்தனை தெய்வீகம், ஆன்மீக தேடலுக்கு பலனாய் கிடைக்கும் ஓர் அற்புத காட்சி. பக்தி மார்கத்தில் தோய்ந்து அந்த பரம்பொருளை தரிசிக்க காத்திருப்போருக்கு ஒவ்வொறு இரவும் அவனளிக்கும் அருட்கொடை அக்காட்சி.
 
ஒவ்வொறு யுகமாக மாறி, கலியுகத்தில் தல விருட்சமாய் இருக்கும் பன்னீர் மரம் துவங்கி, சைவமார் நால்வரில் சுந்தரர் வருகை புரிந்த தலம், அருணகிரி நாதர் பாடிய தலம், கச்சியப்ப முனிவர் தம் பேரூர் புராணத்தில் பாடிய திருத்தலம்.
 
கலைக்கு கனக சபை, சிற்ப வல்லமைக்கு வியத்தகு எட்டுச்சிற்பங்கள், வண்ணம் சூழ் ஓவியங்கள் என எடுத்து வைக்கும் அடியெங்கும் வரலாறு, தொட்டு தீண்டும் இடமெல்லாம் தொன்மம், பார்வை படரும் இடமெல்லாம் புராண கதைகள். தெய்வீக சாரம், திருநீற்று வாசம், தீவிரமான தேடலை உடைய யாவரையும் ஒரு கணம் அருளின் துளியை, ஆன்மீக ருசியை உணர்த்த கூடிய இத்திருத்தலத்தை, வணங்கினால் மட்டுமல்ல நினைத்தாலே முக்தி என்பது சான்றோர் வாக்கு!!
 
ஆரூர் அத்தா ஐயாற் றமுதே
அளப்பூர் அம்மானே
 
காரூர் பொழில்கள் புடைசூழ்
புறவிற் கருகா வூரனே
 
பேரூர் உறைவாய் பட்டிபெருமான்
பிறவா நெறியானே
 
பாரூரு பலரும் ப்ரவப் ப்புடவாய்
பாசூர் அம்மானே
 
பிறவா நெறி தந்தருளும் பேரூர் பட்டி பெருமான் அருளை பெற்று எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.

3 Comments
Hari Raman
6/21/2019 06:50:15 am

Super

Reply
Arulmozhimangai
6/21/2019 11:46:44 am

Hari..naanum athe mannil piranthaval..un sagothari aaven...new partha anupavitha anaithum naanum ..unarthathe..migavum santhosamaga
Ullathu..nandrgal Hari..Thennadudaiya sivane potri..en natavarkum iraiva pottri..OHM Nanashivaya..

Reply
Perur Hariharan Suresh
6/22/2019 12:52:03 am

மிக்க மகிழ்ச்சி...
என் கடன் பணி செய்து கிடப்பதே

Reply



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    June 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.