Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

கீதா (அ)ஞ்சலி – ராஜ்குமார் பார்த்திபன்

6/21/2019

0 Comments

 
பேரன்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்வு அது. இயக்குனர் ராம் படத்தில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரங்களையும் மேடைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நட்சத்திரத்தை இப்படி அழைக்கிறது ராமின் குரல்.

"உங்களுக்கெல்லாம் அஞ்சலி, எனக்கு ஆனந்தி. சினிமாத்துறைக்கு வந்து பத்து வருசத்துக்கும் மேல ஆகுது. எந்த பெரிய நடிகர்களோட படத்துலயும் நடிக்காம இவ்ளோ வருசம் சினிமாவுல இருக்கணும்னா நடிக்கத் தெரிஞ்சிருக்கணும். அப்படி நடிக்கத் தெரிந்த நடிகைதான் ஆனந்தி. ஆனந்தியை அன்போடு மேடைக்கு அழைக்கிறேன்"
 
ராமின் வார்த்தைகளை வழக்கமான மேடை மரியாதையாக புறந்தள்ள முடியாது. ஒரு இயக்குனர் தான் உருவாக்கிய "ஆனந்தி" கதாபாத்திரத்திலிருந்து பத்து வருடங்களுக்கு மேல் வெளிவராமல் அந்தக் கதாபத்திரத்தில் நடித்த நடிகையை இன்னமும் ஆனந்தியாகவே பார்க்கிறார் என்றால் அந்த நடிகை எப்பேர்ப்பட்ட நடிப்பைத் தந்திருக்க வேண்டும். அதுவும் முதல் படத்திலேயே. ஆம். அவர்தான் அஞ்சலி. சமகாலத் தமிழ் சினிமாவின் நடிகையர் திலகம்.
 
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரஸோல் என்னும் ஊரில் வறுமையில் பிறந்த பாலா திரிபுர சுந்தரி (அஞ்சலியின் நிஜப்பெயர்) பின்னாட்களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமான நாயகியாக, ஜொலிக்கும் திரை நட்சத்திரமாக உயர்ந்தார். வழக்கமானதாய் இருந்தாலும் இதைச் சொல்ல வேண்டும். அஞ்சலி இந்த உயரத்தை எட்டக் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. கரடுமுரடானது. மற்ற முன்னணி நடிகைகள் போல வாய்ப்புகள் அஞ்சலிக்கு மிகச்சாதாரணமாய்க் கிடைத்து விடவில்லை. ஒவ்வொரு தடவையும் பெரும் போராட்டத்தையும் தோல்வியையும் சந்திக்க வேண்டி இருந்தது. வறுமை, குடும்ப சூழ்நிலை என அவரைச் சுற்றி இருந்த நெருக்கடிகள் சினிமாவில் ஒரு வெற்றிக்காக அவரைத் தொடர்ந்து துரத்தின.       
Picture
2006 ஆம் ஆண்டு வாக்கில் மாடலிங் செய்து கொண்டிருந்த போது சிவநாகேஸ்வர ராவ் இயக்கிய ஃபோட்டோ என்ற தெலுங்குப்படம் மூலம் அஞ்சலி முதல் முறையாக திரையுலகிற்கு அறிமுகமாகிறார் ஆனால் அப்படி ஒரு படம் வந்ததே பலருக்கும் தெரியாமல் போனது. படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் அடுத்து "பிரேமலேகா ராசா" என்ற இன்னொரு தெலுங்குப்பட வாய்ப்பும் அஞ்சலிக்குக் கிடைக்கிறது ஆனால் முதல் படத்தை விடவும் இது இன்னும் மோசமான தோல்வியைச் சந்திக்கிறது.
 
இந்தத் தோல்விகளெல்லாம் அஞ்சலியை முடக்கிப் போடவில்லை. சினிமாவில் வென்றே தீருவது என்ற உறுதியோடு ஓடிக் கொண்டிருந்தார். அதே காலகட்டத்தில்
சென்னையில் வந்து தமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். அப்போது இயக்குனர் களஞ்சியத்தின் "சத்தமின்றி முத்தமிடு" என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் நிதிச்சிக்கலில் மாட்டிக் கொண்ட அந்தப்படம் பாதி வளர்ந்து கொண்டிருந்த நிலையிலேயே நிறுத்தப்பட்டது.
 
இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழலில்தான் "கற்றது தமிழ்" படத்துக்காக அஞ்சலியை அழைத்தார் இயக்குனர் ராம். அஞ்சலியின் தோற்றமும் நடிப்பும் ராமைக் கவர்ந்து விட கற்றது தமிழின் நாயகியானார் அஞ்சலி. கற்றது தமிழின் அஞ்சலி அறிமுகக் காட்சியை கவனியுங்கள். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு கதாநாயகி தன் முதல் படத்தின் அறிமுகக் காட்சியிலேயே கதறி அழுதபடி அறிமுகமானது அஞ்சலியாகத்தான் இருக்கும். ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். உதடு துடித்துத் தேம்பல் அடக்கி கண்கள் கலங்க அஞ்சலி கேட்கிற "நெஜமாதான் சொல்றியா" அனைவரது மனதையும் என்னமோ செய்தது. அந்தப்பெண் வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கினாள்.
 
என்ன தான் கற்றது தமிழ் பேசப்பட்ட படமானாலும் கமர்ஷியலாய் அது வெற்றிப்படமில்லை. இந்நிலையில் ஹோங்கனஸ் என்ற படம் மூலம் கன்னடத் திரையுலகிற்கும் அறிமுகமாகிறார் அஞ்சலி. அந்தப்படமும் தோல்வியையே அஞ்சலிக்குப் பரிசாகத் தருகிறது. மீண்டும் தமிழில் இயக்குனர் சுந்தர்.சி நாயகனாக நடித்த ஆயுதம் செய்வோம் படத்தில் நாயகியாக நடித்தார். தோல்வி தொடர்ந்தது.
வெற்றியை நோக்கிய வைராக்கியத்தோடு திரையுலகில் அடிமேல் அடி வைத்து நகர்ந்து கொண்டிருந்த அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போட்டது ஒரு படம்... அங்காடித்தெரு.
 
ஒரு வெற்றி... ஒரே ஒரு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை கோபுரத்தின் உச்சியில் அமர்த்தி அழகு பார்த்தது அந்தப்படம். ஆயுதம் செய்வோம் படத்திற்குப் பிறகு செய்வதறியாது திகைத்த அஞ்சலியை அங்காடித்தெருவுக்காக அழைத்தார் இயக்குனர் வசந்த பாலன். படத்தின் அதிமுக்கியமான காட்சிகளை முதல் மூன்று நாட்கள் அஞ்சலியை வைத்துப் படமாக்கினார். அப்போது அவரே எதிர்பாராத நடிப்பை அஞ்சலி நடித்துக் காட்டினார். குடும்ப வறுமை, வென்றே ஆக வேண்டிய கட்டாயம்... இதெல்லாம் வேறு அந்தப் பெண்ணின் யதார்த்த நடிப்பிற்குக் கூடுதலாய் துணை நின்றது. வசந்த பாலனின் முகம் மலர்ந்தது. அன்று அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை.
“எத்தனை பேர இந்தக் கேரக்டருக்கு தேடிருப்பேன். நீ வந்துதான் நடிக்கணும்னு இருந்துருக்கு. சரிதா, ரேவதி, சுஹாசினி வரிசைல ஒனக்கும் ஒரு நிச்சய இடமுண்டு"
 
படத்தில் சேர்மக்கனி என்ற கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்து அத்தனை ரசிகர்களையும் தன் நடிப்பால் கட்டிப்போட்டார். உன் பேரைச் சொல்லும் போது, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, கதைகளைப் பேசும் விழி அருகே பாடல்களெல்லாம் இதுவரை அஞ்சலியை யார் என்றே தெரியாதவர்களை எல்லாம் தெரிய வைத்தது. பட்டிதொட்டியெங்கும் அஞ்சலி என்ற நடிகை போய்ச் சேர்ந்தார். வாய்ப்புகள் வரிசை கட்டத் தொடங்கின.  


Picture
அங்காடித்தெரு அஞ்சலிக்குப் பல விருதுகளையும் வாங்கித் தந்தது.
தொடர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் சிகரம் பாலசந்தர் இணைந்து நடித்த ரெட்டச்சுழி படத்தில் பாரதிராஜாவின் பேத்தியாக நடித்தார் அஞ்சலி. இந்தப்படம் கமர்ஷியல் வெற்றி அடையவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு முறை பாலசந்தர் அஞ்சலியிடம் "நீ என் பட கதாநாயகிகளை நினைவுபடுத்துகிறாய்' என்று பாராட்டியதை இப்போதும் பேட்டிகளில் மறக்காமல் குறிப்பிடுவார் அஞ்சலி.
 
இயக்குனர் வ. கவுதமன், நீல. பத்மநாபனின் தலைமுறைகள் நாவலைப் படமாக்கினார். அக்கா தம்பி அன்பை மையப்படுத்திய வட்டார வழக்குத் திரைப்படம் இது. திரைப்படம் மிக நேர்த்தியாகப் படமாக்கப் பட்டிருந்தாலும் ஏனோ படம் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லை. இந்தப் படத்தில் குழலி என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார் அஞ்சலி.
 
அஞ்சலி தன் திரையுலக பயணத்தில் சில தவறான படங்களையும் தேர்வு செய்திருக்கிறார். அப்படி தேர்வு செய்து அஞ்சலி நடித்த படம் கருங்காலி. கொஞ்சங்கூட ஏற்றுக்கொள்ளவே முடியாத திரைக்கதை அமைப்பு கொண்ட இந்தப் படத்தின் ஒரே ஆறுதலான அம்சம் அஞ்சலியின் நடிப்பு தான் ஆனாலும் இந்தப்படம் அஞ்சலியின் இமேஜைக் காலி செய்தது.
 
அங்காடித்தெருவுக்குப் பிறகு ஒரு க்ளீன் வெற்றி அஞ்சலிக்குத் தேவைப்பட்டது. இந்த நேரத்தில்தான் அஜீத்தின் மங்காத்தா படத்தில் ஒரு சிறு வேடத்தில் கமிட் ஆகிறார். மங்காத்தா என்ன தான் பெருவெற்றியடைந்த படமானாலும் அஞ்சலிக்கு அதில் குறிப்பிடத்தகுந்த கதாபாத்திரம் இல்லை. இருப்பினும் அந்தப் படத்தில் தன் இருப்பைப் பதிவு செய்தார். மங்காத்தாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் "எங்கேயும் எப்போதும்" என்ற படம் வெளி வருகிறது. ஒரு சாலை விபத்தை மையப்படுத்திய முதல் தமிழ்ப்படம். படத்தில் அஞ்சலிக்கு செவிலியர் வேடம். அங்காடித்தெரு போன்று அஞ்சலிக்கு பெரும் பெயரையும் புகழையும் குவித்தது எங்கேயும் எப்போதும்.
 
படத்தில் மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் வந்து கலக்கியிருப்பார். படபட தடதடவென ஜெய்யை இவர் காதலிக்கிற காட்சிகள் படத்தின் அல்ட்டிமேட்டாய் அமைந்திருக்கும். படத்தில் இன்னொரு நாயகியாக அனன்யா இருந்தாலும் படம் முழுக்க தன் அதிரடி நடிப்பின் மூலம் அஞ்சலியே வியாபித்திருப்பார். குறிப்பாய் க்ளைமேக்ஸில் ஜெய்யை சடலமாகப் பார்த்து ஒரு சிறு அமைதி இடைவெளி விட்டு வெடித்துக் கதறுவார் பாருங்கள்... நிச்சயமாய் அஞ்சலியைத் தவிர யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது அந்தக் கதாபாத்திரத்தில். இந்தப்படத்துக்காகவும் விருதுகளை வாங்கிக் குவித்தார்.
 
மங்காத்தா, எங்கேயும் எப்போதும் படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு அஞ்சலி தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை ஆனார். தம்பி வெட்டோத்தி சுந்தரம் என்ற படம் அஞ்சலி என்ற அடையாளத்துடனேயே வெளி வந்தது. கதாநாயகி நயன்தாரா போன்று நடிகை அஞ்சலிக்கும் தியேட்டர்களில் ஒரு ஓப்பனிங் இருந்தது. படத்தில் லூர்து மேரி என்ற கதாபாத்திரத்தில் வழக்கம் போல சிறப்பாகவே நடித்திருந்தார். கொலைகாரா... பாடல் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்.
இடையில் பையன்ஸ் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரைக்கும் அறிமுகமானார் அஞ்சலி.
 
அஞ்சலியால் இப்படியும் நடிக்க முடியுமா என்று எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்த ஒரு திரைப்படம் வெளிவந்தது. கலகலப்பு. பெயருக்கேற்ற மாதிரி படு கலகலப்பாய் அமைந்த இந்தப்படத்தில் அஞ்சலி ஒரு முழு கமர்ஷியல் கதாநாயகி ஆனார். கலகலப்பு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது அஞ்சலிக்கு.
கலகலப்பு படத்திற்குப் பிறகுதான் ஆர்யா, விஷால் என ஓரளவுக்கு தெரிந்த ஹீரோக்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் அஞ்சலி. இதற்கிடையே 2013ல் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் மீண்டும் வத்திக்குச்சி படத்தில் நடித்தார்.
 
ஹிந்தியில் ஆமிர்கான் தயாரிப்பில் டெல்லிபெல்லி என்ற அடல்ட் காமெடித் திரைப்படம் சக்கை போடு போட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தப்படம் தமிழில் பெரிய பேனரில் சேட்டை என்று ரீமேக் செய்யப்பட்டது. இதில் இதுவரையிலான அஞ்சலியை முழுதாக மாற்றி ஆங்கிலப் பத்திரிக்கையின் நிருபராக நடிக்க வைத்திருப்பார்கள். குடும்ப பாங்கான, விளிம்புநிலைக் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த அஞ்சலிக்கு இந்தப்படத்தில் முற்றிலும் நேர்மாறான மாடர்ன் கதாபாத்திரம். உடல் மொழியில் அத்தனை மாற்றங்களை அசாத்தியமாகக் கொண்டு வந்திருப்பார். வழக்கமாய் எல்லாப் படங்களுக்கும் சொந்தக் குரலிலேயே பேசும் அஞ்சலி இந்தப்படத்தில் டப்பிங் பேசியிருக்க மாட்டார். தீபா வெங்கட் அஞ்சலிக்குக் குரல் கொடுத்திருந்தார். கொஞ்சங் கூட புதுக்குரல் துருத்தித் தெரியாது. காரணம் அஞ்சலி தன் நடிப்பால் அனைத்தையும் ஈடு கட்டியிருப்பார். சாதாரண கதாபாத்திரங்களைக் கூட பிரகாசிக்கச் செய்கிற திறமை அஞ்சலிக்கு இருந்தது.
ஆம்... கண்களிலேயே நடிப்பைக் கடத்துவார். இன்றைக்கு கேமராவை நேருக்கு நேர் பார்த்து க்ளோஸப் ஷாட்டில் அழும் கதாநாயகிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நடிகைகளில் சோனியா அகர்வாலைக் கவனித்தால் அவர் கண்களில் ஒரு மெல்லிய சோகம் தெரியும். ஜஸ்ட் லைக் தட்... நடித்துவிட்டுப் போவார். அந்த சோகம் அஞ்சலியின் கண்களிலும் இருக்கிறது. எவ்வளவு அழுத்தமான கதாபாத்திரங்களையும் ஏன்... படத்தையே தூக்கி நிறுத்துகிற பாத்திரங்களைத் தாங்கும் திறமை கொண்டவர் அஞ்சலி.    
Picture
இந்த இடைப்பட்ட நேரத்தில் அஞ்சலிக்குத் தெலுங்கு சினிமாவில் ஒரு மாபெரும் அதிர்ஷ்டம் அடித்ததைச் சொல்லியே ஆக வேண்டும். ஃபோட்டோ, பிரேமலேகா ராசா படங்களுக்குப் பிறகு தெலுங்குத் திரையை விட்டுத் தள்ளியே இருந்தார் அஞ்சலி. அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் படங்களெல்லாம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கே பெரிய வரவேற்பு பெற்றிருந்தாலும் நேரடியாக எந்தத் தெலுங்குப் படத்திலும் அஞ்சலி நடிக்கவில்லை.
 
இந்நிலையில் தெலுங்கில் வெங்கடேஷ், மகேஷ்பாபு அண்ணன் தம்பிகளாக நடிக்க "சீதம்மா வகிட்லோ ஸ்ரீமலே செட்டு" என்ற படத்தின் அறிவிப்பு வெளி வருகிறது. இந்தப்படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி விட வெங்கடேஷ் ஜோடியாக டைட்டில் ரோலில் நடிக்க அனுஷ்கா, பூமிகா, சினேகா உள்ளிட்ட எந்த நடிகையும் முன்வரவில்லை. காரணம், வெங்கடேஷ் ஜோடியாக நடித்தால் மகேஷ்பாபுவுக்கு அண்ணியாகி விடுவோம் என்று அனைவரும் ஒதுங்கினர். அமலாபால் நடிக்க ஒப்புக் கொண்டு ஓரிரு நாள் நடித்து பிறகு படத்திலிருந்து வெளியேறினார். இறுதியாக அந்த வாய்ப்பு அஞ்சலிக்குக் கிடைத்தது. அவர் எது பற்றியும் யோசிக்கவில்லை. தனக்குக் கிடைத்த வாய்ப்பை ஒரு கொழு கொம்பு போல் பற்றிக்கொண்டு சீதா என்ற அந்தக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்தார். படம் 2013 சங்கராந்தி அன்று வெளியாகி ஆந்திர சினிமாவையே வசூலில் மிரளச் செய்தது. எந்தத் தெலுங்கு சினிமா அஞ்சலியை நிராகரித்து ஒதுக்கியதோ அதே தெலுங்கு சினிமா அஞ்சலிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. ஆந்திர ரசகர்கள் அஞ்சலியை இப்போதும் சீதா என்றே அழைக்கிறார்கள். அந்தளவிற்கு அஞ்சலியின் வாழ்நாள் கதாபாத்திரம் சீதா. இந்தப்படத்திற்காக ஆந்திர அரசின் உயர்ந்த விருதான நந்தி விருதை வென்றார்.
 
இதன் பிறகு தெலுங்கில் ரவிதேஜாவுடன் பலுபு, மீண்டும் வெங்கடேஷ் உடன் மசாலா... படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் அஞ்சலி. இந்த நேரத்தில் அஞ்சலிக்கு சில குடும்பப் பிரச்சினைகள் எழுந்தது. நடிப்பில் தற்காலிக இடைவெளி விழுந்தது. இருப்பினும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட பலுபு, மசாலா படங்களில் நடித்துக் கொடுத்தார். அந்தப்படங்கள் வெளியாகி பலுபு நல்ல வரவேற்பையும் மசாலா சுமாரான வரவேற்பையும் பெற்றது. அதன் பிறகு நடிப்பில் ஓர் இடைவெளி எடுத்துக் கொண்டார் அஞ்சலி. இடையில் அவரைப் பற்றி பல்வேறு வதந்திகள். அஞ்சலிக்குக் கடுமையான நோய், அரசியல் புள்ளி மருமகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார் என ஒவ்வொரு வதந்தியும் ஒவ்வொரு த்ரில்லர் ரகம்.
 
தன்னைப் பற்றிய அத்தனை வதந்திகளையும் உடைத்து 2014 ஆம் ஆண்டிலேயே தெலுங்கில் ஒரு மாபெரும் வெற்றிப்படத்துடன் ரீ என்ட்ரி கொடுத்தார் அஞ்சலி. முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தியே எடுக்கப்பட்ட அந்தப்படம் கீதாஞ்சலி. அஞ்சலி முதன்முதலாய் இரட்டை வேடம் ஏற்று நடித்த இந்தப்படம் ஹாரர் காமெடி வகையைச் சேர்ந்தது. அஞ்சலி என்ற ஒற்றை முகமே இந்தப்படத்தின் அடையாளம். ஏற்கனவே சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லே செட்டு படத்திற்காக ஆந்திர அரசின் மிக உயரிய விருதான நந்தி விருதை வென்றிருந்த அஞ்சலி மீண்டும் இந்தப்படத்துக்காக 2014ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும் வென்றார்.
 
இடையில் தமிழ்ப்படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த அஞ்சலி முதல்முறையாக சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்தப்படத்தின் வணிக ரீதியான வெற்றிக்கு இந்தப் பாடலும் ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டது.
இதனிடையே ஹோங்கனஸ் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் கன்னட சினிமா ஒன்றில் நடித்தார் அஞ்சலி. கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்த ராணா விக்ரமா தான் அந்தப்படம். நிகழ்காலத்தையும் வரலாற்றையும் இணைத்துச் செய்யப்பட்ட கதையம்சம் கொண்ட படம் அது. அதில் நிகழ்கால கதாநாயகியாக அதா ஷர்மாவும் வரலாற்று போர்ஷன்களில் அஞ்சலியும் நாயகியாக நடித்தார்கள். வழக்கம் போலவே அஞ்சலியின் கதாபாத்திரம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. படத்தின் ஹைலைட்டாக அந்த பீரியட் காட்சிகளும் அதிலிருந்த அஞ்சலியின் கதாபாத்திர வடிவமைப்பும் இடம் பிடித்தது. படத்தின் அறிமுகக் காட்சியில் வாள் சண்டை போடுவார் அஞ்சலி. இதற்காக முறைப்படி அவர் வாள் சண்டை கற்றுக் கொண்டார். தெலுங்கைப் போலவே கன்னட சினிமாவிலும் அழுத்தமாகத் தன் வெற்றியைப் பதிவு செய்தார்.
 
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு "சகலகலா வல்லவன்" வெளியானது. கருங்காலி படத்துக்குப் பிறகு அஞ்சலி தேர்வு செய்த தவறான படம் இது. படமும் சரி. அஞ்சலியின் பாத்திரமும் சரி. அரைகுறையாய் அமைந்தது.
 
கீதாஞ்சலி மூலம் தெலுங்கில் தனக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த கதாசிரியர் கோனாவெங்கட்டின் "சங்கராபரணம்" படத்தில் பெண் ரவுடியாக ஒரு சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்தார் அஞ்சலி. படத்தில் அஞ்சலியின் உடை, உடல் மொழி என அத்தனையையும் அவ்வளவு மெனக்கெட்டு மாற்றியிருப்பார்கள். படத்தில் இடம் பெற்ற ஒரு பாட்டில் ரவுடி பேபியாக அஞ்சலி அதகளம் செய்திருப்பார். ஒரு நடிகை ஒரே காலகட்டத்தில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை வெவ்வேறு உடல் மொழிகளில் நடிப்பது என்பது மிகவும் ஆச்சர்யம் நிறைந்தது அல்லவா? அஞ்சலி அப்படியான ஒரு நடிகை.
 
சிங்கம் 2 படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் "சரைனொடு" என்ற படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக ஒரு பாடலுக்கு ஆடினார் அஞ்சலி. யூ ட்யூப்பில் இந்தப் பாடலின் காணொளி கோடி பார்வைகளைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
 
பிறகு தமிழில் மாப்ள சிங்கம் என்ற டீசண்டான காமெடி படம் ஒன்றில் நடித்தார் அஞ்சலி. தூங்கா நகரம், கலகலப்பு படங்களுக்குப் பிறகு விமல் ஜோடியாக மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் நடித்தார். படம் ஓரளவுக்கு நன்றாக இருந்த போதிலும் ஆவரேஜான வெற்றியையே பதிவு செய்தது. காரணம் படம் வெளியாகும் ஒரு வாரம் முன்பு இந்தப்படத்தின் சென்ஸார் பிரிண்ட் முழுவதுமாக இணையத்தில் வெளியாகி எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தது.
 
இதனிடையே தெலுங்கில் கோனாவெங்கட்டின் எழுத்தில் மீண்டும் நாயகியாக பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார் அஞ்சலி. டிக்டேட்டர் என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் அங்கே கமர்ஷியலாய் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றது. படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களில் அஞ்சலி நடனத்தில் பின்னியிருப்பார்.
 
இப்போது மீண்டும் தமிழ். யெஸ். இந்த முறை தமிழில் அஞ்சலிக்கு உண்மையான கம்பேக் கிடைத்தது என்றே சொல்லலாம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இறைவி படம் வெளியானது. படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாய் நடித்திருந்தார் அஞ்சலி. மல்ட்டி ஸ்டார் படமான இதில் நடிப்பில் அத்தனை நடிகர்களுக்கும் சவாலாய் விளங்கினார் அஞ்சலி. படத்தில் எமோஷனலான நிறைய காட்சிகளில் உணர்வுகளை அவ்வளவு நுணுக்கமாக வெளிப்படுத்தி நடிப்புத் தாண்டவமே ஆடினார். இந்தளவுக்கு நடிப்பு தேவைப்பட்டதாலேயே அஞ்சலியை இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தேன் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் கார்த்திக் சுப்புராஜ். ஆம். அஞ்சலி இயக்குனர்களின் கதாநாயகி.
 
கீதாஞ்சலி படத்தை அடுத்து தெலுங்கில் மீண்டும் நாயகியை மையமாக வைத்துத் தயாரான "சித்ரங்கதா" படத்தின் மையப் பாத்திரத்தில் நடித்தார் அஞ்சலி. 2017 ல் வெளியான இந்தப்படம் மிக வித்தியாசமான கதையமைப்பைக் கொண்டது. உளவியல் பிரச்னைகளை த்ரில்லர் பாணியில் பேசிய இந்தப்படத்தில் நடிகைகள் யாருமே ஏற்கத் தயங்குகிற சிக்கலான ஒரு கேரக்டரை ஏற்றிருந்தார் அஞ்சலி. கிட்டத்தட்ட லெஸ்பியனை ஒத்த அந்த சித்ரங்கதா கதாபாத்திரமானது குழப்பம், பெருங்கோபம், சோகம், வியப்பு எனப் பல்வேறு உணர்வுகளை படம் நெடுகிலும் வெளிப்படுத்த வேண்டும். படத்தின் அத்தனை காட்சிகளிலும் நடிப்பின் எல்லைகளைத் தொட்டார் அஞ்சலி. முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாரான இந்தப்படத்தில் இதுவரை பார்க்காத அஞ்சலியைப் பார்க்கலாம். படம் முழுக்க மாடர்ன் உடைகளை அணிந்து நடித்திருப்பார். அஞ்சலி பன்முகத்திறமை கொண்ட ஒரு நடிகை என்பதற்கு இன்னொரு சான்றும் இந்தப்படத்தில் இருந்தது. இந்தப்படத்தில் செல்வகணேஷ் இசையில் அஞ்சலி அறிமுகப் பாடல் ஒன்றையும் பாடினார்.
 
அதே ஆண்டு தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ராமின் "தரமணி" படத்தில் வெறும் பத்து நிமிடங்களே வந்து போகும் சிறப்பு வேடத்தை ஏற்றிருந்தார் அஞ்சலி. மிகக் குறுகிய நேரமே என்றாலும் அந்தப்படத்தின் எல்லா ஊடக விமர்சனங்களிலும் அஞ்சலியின் பெயர் இடம்பெற்றிருந்தது. சௌம்யா என்ற அந்த கதாபாத்திரத்திற்கு பத்து நிமிடத்திலேயே உயிரூட்டிச் சென்றிருந்தார் நவீன சாவித்திரி.
 
எங்கேயும் எப்போதும் படத்தின் பெரு வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஜெய் அஞ்சலி ஜோடி "பலூன்" படத்தில் இணைந்தது. ஹாரர் காமெடி வகையில் அமைந்த இந்தப்படம் சுமாரான வெற்றியையே பதிவு செய்தது. படத்தில் யோகிபாபுவின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.     

​

Picture
அஞ்சலி எப்போதும் புதுமையை விரும்பும் ஒரு நடிகை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் 2018ல் அஞ்சலி நடிப்பில் வெளியான மலையாளப்படம் "ரோசாப்பூ". படத்தில் ஆபாசப்பட நடிகை கதாபாத்திரத்தில் அஞ்சலி துணிச்சலாக நடித்திருப்பார். போகப்போக அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை எப்படி மாறுகிறது என்பதைப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தப்படத்தை ப்ளாக் காமெடி ஃப்ளேவரில் கொடுத்திருப்பார்கள்.
 
விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி நடித்த காளி இதே ஆண்டு வெளிவந்தது. அஞ்சலிக்கு இந்தப்படம் பெரிதாய் பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை.
நீண்ட நாள் கழித்து அஞ்சலிக்கு பெயர் சொல்லும் படியான ஒரு படம் 2019 ல் வெளிவந்தது. படம் : பேரன்பு. இயக்குனர் ராம் மூன்றாவது முறையாக அஞ்சலிக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தைக் கொடுத்திருந்தார். படத்தில் விஜயலெட்சுமி என்ற கேரக்டரில் மம்முட்டிக்கு ஈடு கொடுத்து அஞ்சலி அண்டர்ப்ளே செய்திருப்பார். "எதுக்காக பண்ணோம்னு கேட்டுப் போங்க ஸார்..." என்ற காட்சி ஒரு சோறு பதம். நெதர்லாந்தின் ராட்டர்டேம் படவிழாவில் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 200 படங்கள் திரையிடப்பட்டது. அதில் தேர்வான 20 படங்களில் பேரன்பு படமும் இடம்பெற்றது. மேலும் கோவா உள்ளிட்ட பட விழாக்களிலும் பேரன்பு திரையிடப்பட்டது.
 
அஞ்சலி நடித்து மிகச் சமீபத்தில் மற்றுமொரு புதிய முயற்சியான இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3D ஹாரர் படம் லிசா வெளியானது. எடுத்துக் கொண்ட கதைக்கரு... நடிகர்கள் தேர்வு என எல்லாம் அபாரமாய் இருந்தும் படம் அழுத்தமில்லாமல் போனது. மகரந்த் தேஷ்பாண்டே, அஞ்சலி ஆகியோர் மிக ஈடுபாட்டோடு நடித்திருந்த போதும் நீண்ட நேரமாய் படத்தை கதையின்றி நகர்த்திவிட்டு கடைசி பத்து நிமிடத்தில் ப்ளாஷ்பேக்கை அவசர அவசரமாகச் சொன்னது ஏமாற்றமாய் இருந்தது ஆனால் அந்த ப்ளாஷ்பேக் இதுவரை யாரும் தொடாதது. திரைக்கதையை மட்டும் செழுமைப்படுத்தி இருந்தால் லிசா மிக முக்கியப் படங்களின் பட்டியலில் சேர்ந்திருக்கும்.
 
இதுவரைக்குமான அஞ்சலியின் திரையுலக பயணம் வெற்றி தோல்விகள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது ஆனால் வெற்றி தோல்விகளை புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் அஞ்சலி சமகாலத்தின் தனித்துவமிக்க சிறந்த நடிகை என்பது புரியும். இன்றைய நடிகைகளில் தான் நடிக்கிற எல்லாப் படத்துக்கும் தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசுகிற ஒரே நடிகை அஞ்சலி. டப்பிங்கில்தான் நடிப்புக்கலை முழுமை அடையும் என்பது எத்தனை உண்மை. விளிம்பு நிலைக் கதாபாத்திரம், கமர்ஷியல் நாயகி என எந்தக் கேரக்டருக்கும் பொருந்தக் கூடியவர் அஞ்சலி ஆனால் இன்னமும் அஞ்சலியின் நடிப்புத் திறனுக்கேற்ற பாத்திரங்களை எழுதும் இயக்குனர்கள் இங்கே குறைவு. திரையுலகம் இன்னமும் அவரின் திறமையை நன்றாகப் பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.
 
ஒரு நடிகை எந்த ஸ்டார் நடிகர்களோடும் நடிக்காமல் பத்து வருடங்களுக்கும் மேல் திரையிலகில் நாயகியாக நீடித்திருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. ராம் சொல்வது மாதிரி அதற்கு நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அஞ்சலி மாதிரி நடிகைகள் திரையுலகில் அபூர்வம்தான்.
 
அஞ்சலி நடித்து திரைக்கு வரவிருக்கிற படங்களான நாடோடிகள் 2, சிந்துபாத், சைலன்ஸ், ஒ, கீதாஞ்சலி 2, ஆனந்த பைரவி, அருள் நிதி, சீனுராமசாமி இணையும் படம்... என அத்தனை படங்களும் பெரு வெற்றி அடைய வாழ்த்துவோம்.
 
அவரின் தேசிய விருதுக் கனவும் நனவாகட்டும். 

0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    June 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.