Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

புத்தக வாசிப்பும் எதிர்கால தலைமுறையும் – ப்ரியா ராஜூ

6/21/2019

0 Comments

 
37 வது சர்வதேச புத்தக கண்காட்சி ஷார்ஜாவில் நவம்பரில் நடந்து முடிந்தது. அதை ஒட்டி நடந்த விவாதங்களும் எழுந்த நினைவுகளுமே இக்கட்டுரையின் தொடக்கம். நான் இங்கு குடியேறி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. அதில் நான் சென்றிருந்த இரண்டாவது கண்காட்சி இது. கடந்த முறை தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கண்காட்சிக்கு வந்திருந்ததாய் வந்த செய்தியே எங்களை கண்காட்சியின் பக்கம் உந்தி தள்ளியது ஆனால் சென்ற தமிழர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு தமிழ் புத்தகம் கூட அங்கு கிடைக்கவில்லை. ஆர்வத்துடன் வந்த அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.
 
இந்த வருடம் அப்படியானதாய் அமையவில்லை உலக அளவில் மூன்றாவது பெரிய புத்தக கண்காட்சியில் உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழிக்கு முதல் முறையாய் அரங்கு. தமிழுக்கு மட்டுமே தனியாய் அரங்கு அமைத்தும் பக்கத்து மாநிலமாம் கேரளத்து பதிப்பாளர்களுடன் கை கோர்த்து அவர்களுடன் இணைந்து அமைத்த அரங்கு என மொத்தம் மூன்று அரங்குகளில் தமிழ் புத்தகங்கள். எத்தனை மகிழ்ச்சியான செய்தி.
 
சரி இதுவெல்லாம் இருக்கட்டும் நான் இங்கு பேச நினைப்பது இதை பற்றியல்ல இதையும் தாண்டிய இதை வளர்க்கத் தேவையான வாசிப்பு பழக்கம் குறித்து. எத்தனைதான் பதிப்பாளர்கள் ஆர்வத்துடன் வந்தாலும் அரங்குகள் அமைத்தாலும் உண்மையில் இதுபோன்ற கண்காட்சிகளின்  வெற்றி என்பது வாசகர்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததே. நான் இங்கு மட்டும் கூறவில்லை தாயகத்தையும் சேர்த்தே கூறுகிறேன். இன்றைய பொழுதுகளில் இது போன்ற கண்காட்சிகளுக்கு வரும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை தூரம் உற்சாகம் தருவதாய் இருக்கிறது? புத்தக வாசிப்பில் இளைஞர்களின் பங்களிப்பு எத்தனை தூரம் பெருமைப்படத்தக்க வகையில் இருக்கிறது? நம் முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி இது. யோசிக்கையில் சிறிது பயத்தையும் சேர்த்தே விதைக்கிறது இல்லையா?
 
இங்கு வாசிப்பு பழக்கம் உள்ள எத்தனை பேர் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு அதைக் கொண்டு சேர்த்திருக்கிறோம்? எத்தனை இளைஞர்கள் தத்தமது வீட்டிலுள்ள புத்தகங்களை குறைந்தபட்சம் தொட்டாவது பார்த்திருப்பார்கள்? அவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லுவது புத்தகம் படித்தால் எங்களுக்கு தூக்கம் தான் வருகிறது. சொல்ல நினைப்பதை வீடியோவாக சொல்லுங்களேன் நாங்கள் யூ டியூபில் பார்த்து கொள்கிறோம் என்பது. ஒரு வகையில் இது சரி என்றாலும் அத்தனை விஷயங்களுக்கும் இது பொருந்துமா? வாசிப்பு பழக்கம் இல்லையெனில் நம் சங்க இலக்கியங்களையும் பழந்தமிழர் ஏடுகளையும் அடுத்த தலைமுறை
 
எங்கனம் கண்டுணர முடியும்?  அவைகள் அவர்களிடம் கொண்டு சேர்க்கப்படாமலே அழிந்துவிடுமா? எத்தனை பெரிய பொக்கிஷங்கள் அந்த நூல்களெல்லாம். இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க நம்முடைய பங்களிப்பென்ன? நாம் எடுக்க போகும் முயற்சிகள் என்ன? கேள்விகள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.
 
நான் சிறுமியாக இருக்கையில் என் பள்ளிக்கூட நாட்களில் என் அம்மா நூலகத்தில் உறுப்பினர். பல நேரங்களில் அவர் வேலையாக இருக்கும் போது நூலகத்திற்கு புத்தகத்தை மாற்றி வர என்னைத்தான் அனுப்புவார். தாயகத்தில் இருந்த வரை நான் அந்த நூலகத்தின் உறுப்பினர். எனக்கும் புத்தகங்களுக்குமான தொடர்பு என்பது அப்படித்தான் ஆரம்பித்தது. அதைத்தாண்டி படிக்கு ஆர்வம் வளர்வதற்கான காரணம் அந்த நூலகர்.
 
அம்மா கொடுக்கும் புத்தகத்தை அவரிடம் கொடுத்து விட்டு அவரிடமே எடுத்து தர சொல்லி அடுத்த புத்தகத்தை அம்மாவிற்கு மாற்றி எடுத்து செல்வேன் இவ்வளவுதான் ஆரம்பத்தில் எனது வேலை. இதில் ஒரு நாளில் நூலகர் சில புத்தகங்களை என்னிடம் கொடுத்து இதையெல்லாம் படி என்றார். முதலில் தயங்கினாலும் பின்னர் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். அம்புலிமாமா, கோகுலம் போன்ற சிறுவர் புத்தகங்களே அவை. பின்னர் அதிலிருந்து படிப்படியாக வேறு சில சிறுவர் இலக்கிய நூல்களையும் அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்படி ஆரம்பித்து அங்கு தொடங்கியதுதான் எனது வாசிப்பு பழக்கம், அதன் அச்சாணி அந்த நூலகரே.
 
அதன்படி இன்று முதலில் நம்மில் எத்தனை பேருக்கு நூலகம் செல்லும் பழக்கம் இருக்கிறது? நேரமின்மை என்ற பதில் மட்டுமே பெரும்பாலும் இங்கு கிடைக்கும். நேரம் என்பது நாம் உருவாக்கிக் கொள்வதுதானே? சரி இதற்கெல்லாம் என்னதான் தீர்வு எப்படித்தான் இவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை கொண்டு செல்வது, இதோ எனக்கு தெரிந்த சில வழிமுறைகளை இங்கே சொல்கிறேன் முடிந்தால் செயல்படுத்துங்கள். உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளையும் பிறருக்குத் தெரியப்படுத்துங்கள்.
 
உங்கள் வீட்டில் புத்தக அலமாரி இருக்கிறதா? அதை முதலில் எல்லோர் கண்ணிலும் படும்படி ஒரு இடத்தில் வையுங்கள். அது உங்கள் வரவேற்பறையாகவும் இருக்கலாம். குடும்பத்தில் அனைவர் கண்ணிலும் படும்படியாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு புத்தகத்தை எடுத்து வாசியுங்கள். அலைபேசிக்கான நேரத்தைக் குறைத்து அதை புத்தகங்களுக்கான நேரமாக மாற்றுங்கள். முதலில் யாரும் உஙகளை கண்டுகொள்ளாமல் போகலாம்.நாள் செல்ல செல்ல அப்படி என்னதான் படிக்கிறீர்கள் என்ற கேள்வி வரும் பின்பு அந்த புத்தகங்களை எடுத்து பார்க்கும் எண்ணம் வரும், பின்பு புரட்டி பார்க்கவும் தோன்றலாம், படிக்கவும்.
 
உங்கள் வீட்டில் 3-4 வயது குழந்தைகள் இருக்கிறார்களா? கட்டாயம் அவர்கள் முன்பு சிறிது நேரம் புத்தகங்களைப் புரட்டுங்கள், அவர்களை புத்தகங்களைத்  தொட அனுமதியுங்கள். புத்தகங்களை சுத்தம் செய்து அடுக்கி வைக்கும் போது அவர்களைத் துணைக்கு அழையுங்கள், பிஞ்சு விரல்கள் புத்தகங்களைத் தொடட்டும் அதன் வாசம்தனை நுகரட்டும், தானாகவே அவர்கள் புத்தகங்களுடன் நெருக்கம் கொள்வார்கள். பெரும்பாலும் குழந்தைகள் நம்மை பார்த்துதான் அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். நம் நேரம் எதில் அதிகம் செலவாகிறதோ  அதிலேயே அவர்களும் செலவழிப்பார்கள். நம்மை புத்தகத்துடன் அதிகம் பார்த்தால் அவர்களுக்கும் அப்பழக்கம் எளிதில் வரும். குழந்தைகள் புத்தகத்தை கிழித்து விடுவார்கள் என்ற பயம் வேண்டாம் ஆரம்பத்தில் அதை செய்தாலும் கற்றுக் கொடுத்தால் புரிந்து கொள்வார்கள். அதே தவறு திரும்ப நடக்காது. ஆரம்ப நாட்களில் வேண்டுமானால் சிறிது கண்காணிப்புடன் இருங்கள் பின்னால் அவர்களே பழகிக் கொள்வார்கள். பிஞ்சு மூளைகளில் எதையும் விதைப்பது சுலபம்.
 
நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் ஒன்று கூடும் அனைத்து இடங்களிலும் புத்தகங்கள் குறித்த ஒரு விவாதத்தினை நடத்துங்கள். அது சங்க இலக்கியமாகவோ பெரிய எழுத்தாளரின் புத்தகமாகவோ மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை எந்த புத்தகமாக இருந்தாலும் விவாதியுங்கள். ஏதேனும் ஒன்றின் தொடக்கமாக இது அமையட்டும். விவாதம் நடத்த பெரிய அரங்கொன்றைத்  தேடிப்பிடுத்து அங்கேதான் நடத்த வேண்டுமென்றில்லை உங்கள் வீட்டின் அருகில் உள்ள பூங்கா கூட சிறந்த இடம்தான்.அனைத்து செயல்பாடுகளின் தொடக்கமுமே, விவாதம் தான் விவாதம் மட்டும் தான். நாலு பேரில் ஆரம்பிக்கும் ஒன்று கூடல் சில சமயம் நாற்பதாகலாம் நானூறாகலாம் இல்லை நான்கிலேயே முடிந்தும் போகலாம். இருக்கட்டுமே தவறென்ன? தொடக்கம்தான் முக்கியம், தொடங்குவதுதான் முக்கியம். எத்தனையோ விவாதங்கள் தெருமுனை டீ கடைகளில் தொடங்கி பெரும் பேசுபொருளாயிருக்கின்றன.
 
ஏதேனும் ஒரு வகையில் புத்தகங்களையும், வாசிப்பையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றே தீரவேண்டிய காலகட்டம் இது. நமக்கு முந்திய தலைமுறைக்கு அந்த பிரச்சினை இருக்கவில்லை. அவர்கள் காலத்தில் வாசிப்பு என்பது பெருமைக்குரிய ஒன்றாக இருந்தது, மரியாதைக்குரிய ஒன்றாக இருந்தது. அதிகம் வாசிப்பு பழக்கம் இருந்தவருக்கு  சமூகத்தில் பெரும் மதிப்பு இருந்தது. ஆனால் இப்போதைய காலகட்டம் அப்படியானதில்லை. இங்கு வாசிப்பு மதிப்பற்றதாய மாறியிருக்கிறது, நேர விரையம் என்றாயிருக்கிறது. புத்தகங்கள் வாங்குவது தேவையற்ற செலவில் சேர்ந்திருக்கிறது. சிந்தியுங்கள் இது மாற வேண்டிய ஒன்று. மாற்றப்பட வேண்டிய ஒன்று.
 
எங்கேயோ பார்த்த கருத்து சித்திரமொன்று நியாபகத்திற்கு வருகிறது. ஒரு மெட்ரோ ரயில் குழந்தைகள் பெரியவர் என அனைவரும் கலந்து பயணிக்கின்றனர். அனைவரது கைகளிலும் வழக்கம் போல் அலைபேசி, ஒரு ஒருவரும் தனித்தனி தீவாக. ஆனால் ஒரே ஒரு குழந்தை மட்டும் கூட்டத்திலே தனித்து கையில் புத்தகத்துடன் அமர்ந்திருக்கிறது, அதை வாசித்து கொண்டும் இருக்கிறது. ஆச்சர்யத்துடன் அருகே கவனித்தால் குழந்தையின் தாயும் அருகே புத்தகம் வாசித்தபடி அமர்ந்திருக்கிறார். அவ்வளவுதான் செய்தி. நாம் எதை செய்கிறோமோ அதைத்தான் அடுத்த தலைமுறையும் தொடரும். 
 
வினை விதைத்தால் வினை முளைக்கும் திணை விதைத்தால் திணை முளைக்கும். எது முளைக்க வேண்டுமென்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நல்லது வளர நல்லதையே விதைப்போம்.
 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    June 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.