Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

சிறுகதை – அசோக் ராஜ்

6/21/2019

0 Comments

 
தொப்பை
உஷா கல்யாணத்திற்குப் போகலாம் என்று நேற்று வரை நினைத்துக் கொண்டிருந்தான் பரமு. ஆனால் ஏனோ இன்று காலை எழுந்ததிலிருந்தே தயக்கமாக இருந்தது. அதனாலோ என்னவோ வழக்கமாக கறிக்கடைக்குச் செல்ல ஆறு மணிக்கே எழுந்திருக்கும் அவன் இன்று எட்டு மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை. கக்கத்தை சொறிந்து கொண்டு கொட்டாவியோடு ரூமிலிருந்து வெளிப்பட்ட அவனை ஹாலில் டிவியில் செய்தி கேட்டுக் கொண்டிருந்த அப்பா ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு ''நீயும் வர்றியாடா..?'' என்றார். அவர் குளித்து வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் பளிச்சென்று உட்கார்ந்திருந்தார்.
 
பரமு முதலில் ''எங்கே?'' என்றான், பிறகு ''நான் வரலை'' என்றான்.
 
''நீயும் வந்தா உன் பைக்ல அம்மா வந்துடும். நான் பஸ்ல வந்துடறேன்'' என்றார் அப்பா. அவர் சொன்னவுடன் பட்டீஸ்வரத்திலிருந்து அம்மாப் பேட்டைக்கு பைக்கில் செல்வதை நினைத்துப் பார்த்தான் பரமு. வயல்வழி ஊடே, பச்சை நெல் வாசனையை முகர்ந்து கொண்டு பைக்கில் செல்வது அவனுக்கு பிடிக்கும். ஆனால் ''வேண்டாம் அம்மாவும் பஸ்லயே வரட்டும்'' என்றான்.
 
அவர்கள் கிளம்பும் போது வாசல் வந்த அவனிடம் ''ஏண்டா நேத்து வரைக்கும் வர்றேன்னு சொல்லிட்டிருந்த.. கடையும் போடலை.. கல்யாணத்துக்கும் வரலை?'' என்று அம்மா கேட்டாள். ''வேலை இருக்கும்மா'' என்று மட்டும் சுரத்தில்லாமல் சொன்ன பரமு,
 
எதிரில் உஷா வீட்டில் பந்தல் போட்டு வாழைமரம் கட்டி வெல்கம் மற்றும் இரண்டு பக்கமும் குத்துவிளக்கு சீரியல் செட்டுகள் பளபளத்துக் கொண்டிருந்ததையும், ஒன்றிரண்டு பேரைத் தவிர ஏனையோர் வேனில் மண்டபத்திற்கு சென்றுவிட்டதையும் பார்த்தான். 
 
''பரமம்மா நீங்க இன்னும் கிளம்பலையா? எதிர்த்த வீட்டுக் காரங்க... நீங்களே இப்படி முகூர்த்த நேரத்துக்கு கிளம்பினா எப்படி? அங்க தான் போறேன். ரெண்டு பேரும் ஏறுங்க முதல்ல' அடுத்த ரவுண்டு போக நின்ற வேனைக் காட்டினான் சிங்காரம்.
 
''சொந்தக் காரங்கள்லாம் போறீங்க.. இடம் இருக்காது.. நாங்க பஸ்ல'' என்று இழுத்த அப்பாவை பேசவிடாமல் வேனில் ஏற்றிவிட்டார்கள். இருவரும் ஏறியதும், மேல் துண்டை உதறிக் கொண்டு உள்ளே வந்த பரமு அடுக்களை சென்று தண்ணீர் குடித்தான். இப்படித் தண்ணீர் குடிக்கும் போது மட்டும் அவன் கை தன்னியல்பாக அவன் தொப்பையைத் தடவும்.
 
தன் தொப்பையைக் குனிந்து பார்த்தான். தன்னையும் உஷாவையும் பிரித்த நந்தி போல் தெரிந்தது அவனுக்கு. 'முதல்ல தொப்பையைக் குறைங்க' என்ற உஷாவின் அந்த வார்த்தைகள் மனதில் ஒலித்தது.
 
பழைய யமஹா பைக்கிற்கென்று பிரத்யேக ஒலியிருக்கும். சின்னத் தெரு ஆகையால் அந்த ஒலி தெரு முனையில் நுழைந்தவுடனே பரமு வீட்டிற்கும் உஷா வீட்டிற்கும் கேட்கும். சரியாக பரமு வீட்டண்டை வரும் நேரம், வாசலில் வந்து நிற்பாள் உஷா.
 
''பரமு, அம்மா ரத்தம் கேட்டிருந்துச்சாம், கொண்டாந்திங்களா?'' என்பாள்.
 
''அதென்ன அடிக்கடி உங்கம்மா ரத்தம் மட்டும் கேக்கறாங்க? ஆட்டுல தொடைக்கறி இருக்கு, நெஞ்செலும்பு இருக்கு, குடல் இருக்கு, ஈரல் இருக்கு''
 
''போதும் போதும், ஆட்டுல எல்லாம் இருக்கு எங்களுக்கும் தெரியும் ஆனா இது தான் எனக்குப் பிடிக்கும், எங்கம்மா ரத்தத்துல பொரியல் செஞ்சா இன்னிக்குப் பூரா சாப்பிடலாம் தெரியுமா?''
 
''ரத்ததுல கல்லப்பருப்பு போட்டு குருமா செய்வாங்க தெரியுமா? இட்லி தோசை இடியாப்பம் எல்லாம் சும்மா பூ மாதிரி இறங்கும்'' என்பான் பரமு.
 
''ஆட்டு ரத்தத்துல என்னன்ன செய்ய முடியுமோ அதெல்லாம் எங்கம்மாவுக்குத் தெரியும் ஆட்டுக்கறி தான் அம்மாவுக்கு ஆகாது'' என்பாள் உஷா. சொல்லும் போது என்னவோ ஆட்டின் இரத்தத்தில் சமையல் செய்வதற்கு உலக ரீதியில் அவள் குடும்பம் தான் உரிமை கோரியிருப்பது போல் ஒரு பாவனை இருக்கும்.
 
ஒரு நாள் ஆட்டு ரத்தம் தீர்ந்து போய், பரமு நெஞ்செலும்பும், ஈரலும் கொண்டு வந்தான். வழக்கமாக ஆட்டு ரத்தத்திற்கு நாற்பது ரூபாய் கொடுப்பாள் உஷாவின் அம்மா. கையால் நிறுத்துப் பார்த்த அவள் ''என்ன பரமு அரை கிலோ தேறும் போல அம்புட்டு காசுக்கு எங்க போவேன்'' என்றாள். அன்று தான் ஆட்டுக் கறி அவள் குடும்பப் பொருளாதாரத்திற்கு ஆகாதது என்பது புரிந்தது பரமுவுக்கு.
 
''காசு யாரு கேட்டாம்மா? இன்னிக்கு ஒரு பாய் வீட்டு ஆர்டர், முழுக்கெடா மொத்தமா வீட்டுக்கே போய் வெட்டிக் கொடுத்துட்டு வந்தேன். அதுல ஒதுங்கினது, சும்மா ஜமாய்ங்க” என்ற பரமுவிடம் உஷா ''பரமு.. இப்படியே கொடுத்திட்டிருந்தீங்கன்னா நானும் தின்னுட்டிருந்தன்னா உங்களை மாதிரி எனக்கும் புள்ளதாச்சி கணக்கா தொப்பை விழுந்துடும்'' என்று சிரித்தாள். பரமுவுக்கு அந்த நேரம் எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை ஆனால் வீட்டிற்கு வந்ததும் பீரோ கண்ணாடியில் சட்டையைக் கழட்டிவிட்டு நேராகவும், திரும்பித் திரும்பியும் தன் தொப்பையைப் பார்த்துக் கொண்டிருந்தான் பரமு. வாழ் நாளில் முதல் முதலாக இத்தனை நாள் கூடவே வந்திருந்த தொப்பையை, இன்று மட்டும் உபரியாக ஒட்டிக் கொண்டது போலப் பார்த்தான்.
 
என்றிலிருந்து இந்தத் தொப்பை தன்னுடன் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தான். அவனுக்கு நினைவு தெரிந்த காலங்களிலெல்லாமும் அது தன்னுடனே வருவதாகத் தான் தோன்றிற்று. பூபதி சித்தப்பா.. வாடா பலூன்! என்று தொப்பையில் குத்துவது, 'இவனுக்கு வயிறு நிறையறதே தெரியாது.. சாப்பிடு' என்று கேட்க கேட்க அம்மாச்சி இவனுக்கு ஊட்டிவிடுவது, பாலா என்ற ஒருவன், மூன்றாம் வகுப்பில் ரப்பரைப் பிய்த்துவிட்டதற்காக தொப்பையைக் கிள்ளியது, மூளையை என்ன வயித்துல வச்சிரிக்கியா என்று கணக்கு வாத்தியார் அவன் வயிற்றிலேயே ஸ்கேலால் அடித்தது என்று பலதை நினைத்துக் கொண்டிருந்தான் பரமு.
 
அம்மா ''அது தாண்டா உனக்கு அழகு!'' என்பாள். அப்பா இன்னும் மோசம் ''தொப்பை ஆம்பளைக்கு வேணும்டா.. இல்லாட்டி தம் இருக்காது. அதுலயும் நமக்கு இருக்கிறது பரம்பரைத் தொப்பை!''
 
பரம்பரை வழுக்கை கேள்விப்பட்டிருக்கும் பரமுவிற்கு பரம்பரைத் தொப்பை என்பது ஒரே நேரம் சிரிப்பாகவும் கோபமாகவும் வந்தது. ஒரு முடிவுக்கு வந்தான். அதிகபட்சம் மூன்றே மாதத்தில் தொப்பையைக் குறைப்பது. இன்னும் சொல்வதென்றால் சினிமா நாயகர்களைப் போல சிக்ஸ் பேக் வைப்பது தான் லட்சியம் என்று சங்கல்பம் செய்து கொண்டான் பரமு. ஒரு நாள் ஆறு கிலோ டம்பெல் இரண்டு வாங்கி வந்தான். பதினைந்து கிலோவில் ராடும் டிஸ்கும் வாங்கி வந்தான். படுத்துக் கொண்டு பாரைத் தூக்க ஒரு மர பெஞ்சு வாங்கி வந்தான்.
 
மொட்டை மாடியில் இவையெல்லாவற்றையும் ஏற்றி, மூன்று மாதம் என்ன முப்பதே நிமிஷத்தில் தொப்பையைக் குறைக்கும் முஸ்தீபில் உடலை வருத்திக் கொண்டிருந்ததைப் பார்த்த பரமுவின் அப்பா ''என்னடா இதெல்லாம்?'' என்றார். அவர் கேட்ட கேள்வியில் அவருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. உறவுக்காரப் பையன் ஒருவன் இப்படித் தான் உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்து இறந்தானாம். அதைச் சொல்லி ''இதெல்லாம் வேண்டாம்டா நீ பார்க்கிற வேலையே போதும்டா ஒரு ஆட்டை வெட்டி கறியைப் பிரிக்கிறது என்ன சாதாரண வேலையா? அதுவே பெரிய எக்ஸர்சைஸ் தான் காலைலேருந்து சாயங்கலாம் வரை செஞ்சுட்டு வர்றே, இதுவே போதும்டா எதுக்கு இந்த வேண்டாத வேலை?'' என்றார்.
 
பரமு கேட்பதாக இல்லை. ''நானும் அஞ்சு வருஷமாத்தான் கறிக்கடை வெச்சிருக்கேன். தொப்பை ஏறிட்டுத் தான் போகுது'' என்றான் பரமு.
 
''அதுக்கு நீ மிச்சம் மீதிப் படுதேனு வேண்டாத கொழுப்பு கன்றாவியெல்லாம் தின்னாம இருக்கணும். டெய்லி எடுத்துட்டு வந்து அம்மாவை சமைக்கச் சொல்றே.. கவுச்சி இல்லன்னா சோறு உள்ள போக மாட்டிங்குது உனக்கு” அப்பா உண்மையைச் சொன்னார்.
 
பரமுவின் பதிலில் ஒரு அருமையான தர்க்கம் இருந்தது. ''அப்படின்னா உடம்பு பூராவும் தானே ஏறணும் தொப்பை மட்டும் ஏன் ஏறுது கை கால் எல்லாம் குச்சி மாதிரி இருக்கு?'' என்றான், சின்னக் குழந்தை போல.
 
பரமுவின் அப்பா அவனை முறைத்தார். என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தார். வேறு பதிலே இல்லை ''உடல் வாகுடா பரம்பரை'' என்றார்.
 
அந்த பதிலை ஒப்புக் கொள்வதாய் இல்லை பரமு. மாறாக 'எது எதுக்கு பரம்பரை பெருமை பேசறதுனு ஒரு விவஸ்தை இல்லையா?' என்பதாகப் பார்த்தான்.
 
இப்படியாக அவன் மாடியில் மினி ஜிம் செய்து உடலை வருத்திக் கொண்டதில் கடையில் வேலை பார்க்கும் நேரத்தில் சோர்ந்து போனான். தூக்கம் தூக்கமாக வந்தது. பகல் பனிரெண்டு மணிக்கு மேல்.. கருப்பை ''அண்ணே கொஞ்சம் வெட்டுங்கண்ணே'' என்று கட்டையில் நிற்கச் சொல்லிவிட்டு உட்காருவான்.  தொப்பையைத் தடவுவான். 'குறைய மாட்றியே?' என்று அதனிடம் பேசுவான். அதுவும் 'என்னையா அழிக்கப் பார்க்கிறாய்? உன் கூடப் பிறந்தேன்.. உன்னுடனேயே இருப்பேன்' என்பது போல் கல் கணக்காய் அவன் வயிற்றில் அழுத்தமாக உட்கார்ந்திருக்கும்.
 
கட்டுடலாக சினிமா ஹீரோ மாதிரி இருக்கும் கெளதம் சார் தினமும் கறி வாங்க வருவார். அவரிடம் ''எப்படி சார்?'' என்றான் பரமு. அவர் தான் அவருக்குப் புதிய பாடத்தை நடத்தினார்.
 
''ஒண்ணும் பெரிய விஷயமில்லை பரமு. அப்பர் பாடி டெவலப் ஆகாம லோயர் பாடி டெவலப் ஆகாது. சரி சமமா உடம்புல இருக்கிற எல்லா தசைகளுக்கும் வேலை கொடுக்கணும். தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப் போனா அப்படிச் செய்யறதுனால தசைகள் பெருசா வளராது. சோற்றுச் சாப்பாடைக் குறைக்கணும். காய்கறி, புரோட்டீன் உணவு எடுத்துக்கணும். சரியான வழிகாட்டுதல் இல்லாம செஞ்சா விபரீதமான விளைவுகள் கூட ஏற்பட்டுடும். ஒரு நாள் செஞ்சா மறு நாள் உடம்புக்கு ஓய்வு கொடுத்திடணும். அந்த நேரம் நல்லா சத்தா சாப்பிடணும். பவுடர்லாம் இருக்கு. அந்த நேரத்துல தான் வேண்டாத கொழுப்பு போறதும் தேவைப் படற தசைகள் வளர்றதும் நடக்கும்''
 
பரமுவுக்கு அவர் கோர்வையாகப் பேசுவது அப்படியே புரியவில்லை எனினும், அவர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றிற்று. அவர் பேசும் போதே தன் தொப்பை குறைந்து அவரின் கட்டுடல் வயிறு போல் ஆகிவிடுவது போல் கற்பனை செய்து கொண்டிருந்தான். 
 
ஒரு ஞாயிறன்று மதியம் கடையிலிருந்து வீட்டிற்கு வந்த போது உஷா வீட்டில் கூட்டமிருப்பதையும் வெளியே ஒரு வேன் நிற்பதையும் பார்த்தான். அம்மா  உஷாவைப் பெண் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னாள்.
 
''மாப்பிள்ளை அம்மா பேட்டை! துபாய்ல பில்டிங் வேலையாம். வேன்லருந்து இறங்கும் போது பார்த்தேன். நல்லாத் தான் இருந்தான். முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்'' என்று சாதாரணமாகச் சொன்னாள் அம்மா. பரமு பதிலேதும் சொல்லவில்லை.
 
''நம்மளைக் கூப்பிடலையா?'' என்றான்.
 
''லூசுப் பயலே... அவங்களுக்குள்ள பேசிக்குவாங்கடா... நிச்சயத்துக்குத் தான் கூப்பிடுவாங்க'' என்றதும் பரமுவுக்கு கொஞ்சம் தைரியமும் தெம்பும் வந்தது. நிச்சயம் இன்னும் ஆகவில்லை. பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். பெண்ணை அவனுக்கும், அவனுக்குப் பெண்ணும் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறதே..
 
அப்போது தான் அதன் சாத்தியங்களை நினைக்கும் போது, யாருக்கு யாரைப் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது என்று யோசித்தான் பரமு. 
 
உஷாவை நினைத்தான். அழகான ட்ராகுலா மாதிரி 'பரமு ரத்தம் கொண்டாந்திங்களா?' என்று அவள் கேட்பதை நினைத்துப் பார்த்தான். பெரும்பாலும் நைட்டி அணிந்திருப்பாள். பச்சை வண்ணம் அவளுக்கு பிடித்தமானதாக இருக்கும் போல. அவள் வைத்திருக்கும் மூன்றில் இரண்டு நைட்டி பச்சைக் கலர் என்கிற புள்ளி விபரம் பரமுவுக்கு தெரிந்திருந்தது. கச்சிதமான உயரம் அவள். நல்ல சிகப்பு. முதுகு முடியும் இடம் வரை முடி இருக்கும். தலை குளித்திருந்தாளாயின், கேட்கவே வேண்டாம், கிறங்குவான் பரமு.
 
விரல்களை விரிந்த தலைமுடிக்கிடையில் விட்டு கோதிக் கொண்டே திண்ணையில் அமர்ந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பாள். நிஜத்தில் ஏதாவது வம்படி செய்து கொண்டிருப்பாள். பெரிய கண்களில் மை எழுதி, இருக்கிறதா இல்லையா என்பது போல் ஒரு பொட்டை வைத்திருப்பாள். பரமுவின் அனுமானிப்பில் அவள் கோகுல் சந்தனப் பவுடரை பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருந்தான். அந்த சந்தன வாடை வேறு எந்த பவுடருக்காவது இருக்கிறதா என்ன?
 
பரமு அறிந்த வரையில் அவளை மாப்பிள்ளைக்குப் பிடிக்காமல் போக வாய்ப்பில்லை. மாப்பிள்ளையும் அழகாக இருப்பதாக அம்மா சொல்கிறாள். ஒரு வேளை இந்த சம்பந்தம் முடிந்துவிடுமோ என்று உள்ளுக்குள் பதறிக் கொண்டிருந்த பரமு, மறு நாள் அதை அவளிடம் கேட்டே விட்டான்.
 
வெளியில் நின்று கொண்டிருந்தவளிடம் ''மாப்பிள்ளை எப்படி?'' என்றான் எடுத்த எடுப்பில் உஷாவும் சிரித்தபடி ''வாங்களேன் போட்டோ காட்டறேன்'' என்றாள்.
 
''போட்டோ இருக்கா எங்கே காட்டு'' என்று ஆர்வமாகப் போக அவன் உள்ளே வந்ததும் ஒரு போட்டோவைக் காட்டி ''அம்மா கடைக்குப் போயிருக்கு சீக்கிரம் பாத்துட்டு கொடுங்க, திட்டும்'' என்றாள்.
 
போட்டோவை வாங்கிப் பார்த்த பரமு மாப்பிள்ளையின் முகத்தை முதலில் பார்க்கவில்லை. அவனுக்குத் தொப்பை இருக்கிறதா என்று தான் பார்த்தான், ஏமாந்தான். அவனுக்கு ஸ்லேட்டு மாதிரி தட்டையான வயிறு. ஒரு கணம் கறிக்கடையை விட்டுவிட்டு துபாயில் கொத்து வேலை பார்க்கலாம் என்று யோசித்தான் பரமு.
 
''எப்படி இருக்கார்?'' என்று வெள்ளந்தியாகக் கேட்ட உஷாவிடம் ''என் அளவுக்கு கலரில்லை கொஞ்சம் கருப்பு தான் ஆனா நல்லா இருக்கார்'' என்றான் பரமு.
 
''ஐ அதென்ன உங்க அளவுக்கு? அவருக்கு என்ன உங்க மாதிரி தொப்பையா இருக்கு?'' என்றாள் உஷா, அவன் கையிலிருந்த போட்டோவை வெடுக்கென பிடுங்கியபடி.
 
அவள் பதிலிலும், செய்கையிலும், அவளுக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருப்பதை உணர்ந்த பரமு, ''என்ன சொன்னார்?'' என்றான்.
 
''ஜாதகம் பொருந்தினா நேரடியா கல்யாணம் தான். கல்யாணத்துக்கு முதல் நாள் நிச்சயம் வெச்சுக்கலாம்னு சொல்லியிருக்காங்க ஜாஸ்தி எதிர்பார்க்குறாங்க'' 
 
இந்த இடத்தை தன் ஆம்பளைத்தன்மையை நிறுவ, முற்போக்கு மனோபாவத்தைக் காட்ட நல்ல வாய்ப்பு என்று கருதி பரமு ''இதென்ன பேடித்தனம். வரதட்சணைலாம் கேட்கவே கூடாது தெரியுமா? ஒரு அழகான பொண்ணைக் கட்ட ஆம்பளை தான் வரதட்சணை கொடுக்கணும். பொண்ணையும் கொடுப்பாங்க பொன்னையும் கொடுப்பாங்களா? நல்ல ஆம்பளை விரும்புவானா இதை?'' என்று வீராவேசமாகப் பேசிக்கொண்டிருந்த பரமுவை ''ஹலோ ஹலோ என்ன ஆச்சு? எதுவும் சினிமா பார்த்தீங்களா ராத்திரி?'' என்று அலட்சியமாக இடை நிறுத்தினாள் உஷா.
 
பேச்சை நிறுத்திவிட்டு அவளை இரண்டொரு வினாடி அடித்துப் பார்த்தான் பரமு. அவளும் அவன் கண்களைப் பார்த்தாள். அந்த நேரம் ஏன் இப்படிப் பார்க்கிறான் என்று கூட நினைத்திருப்பாள்.
 
என்ன? என்பது போல் கண்களால் கேட்ட அவளிடம் ''எனக்கு உன் மேல ஒரு இது இருக்கு உஷா!'' என்றான். அவளை நேராகப் பார்த்தான். முந்தைய வினாடி வரை இப்படிச் சொல்லிவிட வேண்டும் என்று அவனும் நினைக்கவில்லை. இப்படிச் சொல்வான் என்று அவளும் நினைக்கவில்லை.
 
''ஒண்ணும் மோசமில்லை ஒரு வேளை ஜாதகம் பொருந்தலைன்னா'' ஆரம்பித்த பரமுவை நிறுத்தினாள் உஷா...
 
''அபசகுனமாப் பேசாதீங்க பரமு'' என்றவள் ''நீங்க கிளம்புங்க அம்மா வந்துடுவாங்க'' என்றாள். முகம் சிறுத்திருந்தது. 
 
''நான் தானே அம்மா வந்தா என்ன? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன். வேணுமின்னா உங்க அம்மா கிட்ட பேசறேன்'' என்றான் பரமு.
 
''பரமு நீங்க விளையாட்டுக்குப் பேசறீங்கனு தான் நினைக்கிறேன் ஒருவேளை இந்த சம்பந்தம் முடியலன்னா'' என்றுவிட்டு மேற்கொண்டு பேசாமல் நிறுத்தினாள் உஷா. வாசலில் அம்மா செருப்பு சத்தம் கேட்டது.
 
''யாரு பரமுவா?'' என்றபடி உள்ளே வந்து கொண்டிருந்தாள் உஷாவின் அம்மா.
 
''சொல்லு உஷா ஏதோ சொல்ல வந்தியே?''
 
அம்மா வந்துவிட்டாள் பேச உசிதமில்லை என்பதாக சைகை செய்த உஷா, சகஜமாக ''முதல்ல தொப்பையைக் குறைங்க பரமு பார்த்துக்கலாம்'' என்று சிரித்தாள்.
 
அன்று இரவு படுத்திருந்த மேனிக்கு குலசாமி அத்திவெட்டி வைரவரிடம் உஷாவிற்கு இந்த மாப்பிள்ளை முடியக் கூடாது என்று வேண்டிக் கொண்டான் பரமு.
 
என்ன செய்தும் கிஞ்சித்தும் குறையாத தொப்பையை ஏதோ முன்னோர்கள் இட்ட சாபம் என்று நினைக்க ஆரம்பித்தான் பரமு. கெளதம் சார் சொன்னது போல் ஜிம்மிற்குச் சென்றான். இரண்டே நாளில் உடம்பு அடித்துப் போட்டது போல் வலித்தது. அப்போது தான் அவனுக்கு இது நாள் வரை மொட்டை மாடியில் செய்தது எல்லாம் ஓர் உடற்பயிற்சியே இல்லை என்பது விளங்கியது.
 
உடலை மாற்றுவது எத்தனைப் பெரிய வித்தை? உடல், உணவு, மனசு மூன்று ஒத்திசைவோடு நின்றால் மட்டுமே உடம்பு விரும்பிய தினுசுக்கு மாறும் என்று ஜிம் மாஸ்டர் சொன்னார்.
 
தன் மனசுக்கு என்ன குறை? தொப்பையைக் குறைத்தே ஆக வேண்டும் என்று தானே நினைக்கிறது? இல்லையில்லை உஷாவை அடைந்தாக வேண்டும் என்று தான் நினைக்கிறதோ?
 
ஒரு நாள் சற்றே அதிகப்படியான எடையுள்ள பாரை தவறுதலாகத் தூக்கி அடித்ததில், பரமுவுக்கு வலது தோள்பட்டை தசை சற்றே நழுவிக் கொண்டு கையை இரண்டு வாரம் தூக்கவே முடியாதபடிக்குச் செய்துவிட்டது. அவனால் பைக் ஓட்ட முடியவில்லை. இரத்த ஓட்டம் குன்றிப் போய் கைவிரல்கள் அடிக்கடி மரத்துப் போயின. இதற்காக ஒரு நரம்பு டாக்டரைப் பார்க்க வேண்டியதாயிற்று. அன்றைக்குப் போன போது பைக்கைக் கூட கருப்பண்ணன் தான் ஓட்டினார். கையை அசைக்காமல் ஒருக்களித்து பைக்கில் ஏறிய பரமுவைப் பார்த்து வெளியில் நின்று கொண்டிருந்த உஷா ''என்னாச்சு பரமு?'' என்றாள்.
 
''சுளுக்கு!'' என்று மட்டும் சொன்ன பரமு, கருப்பண்ணனிடம் கடுப்படித்தான் ''எடுங்கண்ணே வண்டியை''
 
டாக்டர் ''கை நரம்புகள் கம்ப்ரஸ் ஆகியிருக்கு'' என்றார். அதற்கு என்ன அர்த்தம் என்று கூட பரமு கேட்கவில்லை. எப்போது சரியாகும் என்று தான் கேட்டான்.
 
டாக்டரின் பதில் முத்தாய்ப்பாக இருந்தது. ''சொல்ல முடியாது. இனிமே எக்ஸர்சைஸே பண்ணாதீங்க இந்த மருந்துகளை சாப்பிடுங்க. அதுவா சரியாகிடும்'' என்றார்.
 
கருப்பண்ணன் வீட்டில் அப்பாவிடம் டாக்டர் சொன்னதைச் சொல்லிவிட்டு போனதும், அப்பா ஆரம்பித்துவிட்டார், ''அப்பவே சொன்னேன் கேட்டீயா?'' என்று. மாடிக்குப் போய் எல்லா உடற்பயிற்சி உபகரணங்களையும் ஒரு சாக்கில் போட்டு ஒழித்துக் கட்டினார்.
 
சில நாட்கள் வீட்டில் இருந்தான். கடையை கருப்பண்ணன் கவனித்துக் கொண்டார். கை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக் கொண்டிருந்தது. உஷாவின் அம்மா வந்து சம்பந்தம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த மாதத்தில் கல்யாணம் வைத்திருப்பதாகவும் சொல்லி பத்திரிகை வைத்துச் சென்றாள்.
 
பரமு பத்திரிக்கையை வாங்கி மாப்பிள்ளையின் பெயரை மட்டும் பார்த்தான். மதிவாணன் கேம்ப் துபாய்! பரமசிவம், ஸ்டார் மட்டன் ஸ்டால் என்று பொருத்திப் பார்த்தான். பெருமூச்சு விட்டான். மறு நாளில் இருந்து கை வலியையும் பொருட்படுத்தாமல் கடைக்கு போக ஆரம்பித்திருந்தான் பரமு. மதியம் சாப்பிடாமலேயே தூங்கிப் போயிருந்த பரமு, மூன்று மணி சுமாருக்கு வாசலில் ஆரவாரம் கேட்க எட்டிப் பார்த்தான். மாப்பிள்ளையும் பெண்ணும் காரில் பெண் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். பின்னால் வேனிலிருந்து பரமுவின் அம்மாவும் அப்பாவும் இறங்கினார்கள்.
 
வீட்டு வாசலில் வந்து நின்ற காரினின்று முதலில் உஷா இறங்கினாள். அசங்கி இருந்த கல்யாண சீலையைச் சரி செய்து கொண்டவள் ஒரே ஒரு கணம் பரமுவைப் பார்த்தாள். பரமு சிரிக்க முற்பட, அதற்குள் குனிந்து கொண்டாள். தொடர்ந்து மாப்பிள்ளை இறங்கினார்.
 
அதிர்ந்தான் பரமு. முப்பத்திரண்டு வயது மதிப்பில் பெருத்த தொப்பையுடன் இறங்கிய மனிதருக்கு லேசாக முன் தலையில் வழுக்கை வேறு இருந்தது. முதலில் போட்டோவில் பார்த்த மாப்பிள்ளைக்கு இந்த ஒன்றரை மாதத்தில் அதற்குள் தொப்பை விழுந்துவிட்டதா என்று தான் யோசித்தான். பிறகு தான் அவன் வேறு இவர் வேறு என்பதே புரிந்தது.
 
''என்னடா பனியனோட வெளில நிக்கறே? வாடா'' என்றபடி உள்ளே நுழைந்த அம்மாவிடம் ''என்னம்மா ஆச்சு?'' என்றான் பரமு.
 
''அந்தக் கூத்தை ஏண்டா கேட்கறே, மாப்பிள்ளை ஓடிட்டாண்டா முகூர்த்த நேரம் ஒரு மணி முன்னாடி வரைக்கும் மண்டபத்துல இருந்தவன் ஓடிட்டான். ஏதோ லவ்வாம். லெட்டர் எழுதி வெச்சிட்டு போயிட்டான். மண்டபமே அமளிதுமளிப் பட்டுப்போச்சு! அப்புறமா சொந்தத்துல யாரையோ உடனே புடிச்சி சொன்ன முகூர்த்தத்துல கட்டி வெச்சுட்டாங்க பாவம் உஷா!'' என்றவள் ரூமிற்குள் நுழைந்தாள். இவனும் தன்னிலை மறந்து அதிர்ச்சியிலிருந்து விலகாதவனாக அம்மாவைத் தொடர்ந்து உள்ளே போக, ''நீ எங்கடா வர்றே வெளிய போ புடைவை மாத்தணும்'' என்று கதவைச் சாத்தினாள்.
 
''இவ்ளோ நடந்திருக்கு என் கிட்ட ஏம்மா சொல்லலை?'' என்று சாத்திய கதவைப் பார்த்துக் கத்தினான் பரமு. 
*****************

 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    June 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.