Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

கவர் ஸ்டோரி – சத்யா GP

9/19/2019

0 Comments

 
பிமல் ஜலான் கமிட்டி
ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள நிதியை செலவினங்களுக்குப் பிறகு நடுவண் அரசுக்கு வழங்குவது வழமையான ஒரு நடவடிக்கை. இந்த வருடமும் அதை செய்தபோது சிலரால் விமர்சிக்கப்பட்டது. இந்த வருடம் தான் முதன் முதலாக ரிசர்வ் வங்கி இது போன்ற நடவடிக்கையை எடுத்தது போல் சித்தரிக்கவும் முயற்சி நடந்தது. ரிசர்வ் வங்கி எந்த அடிப்படையில் நடுவண் அரசுக்கு வருடந்தோறும் செலவினங்கள் போக தம்மிடமுள்ள இருப்பிலிருந்து நிதியினை வழங்கி வருகிறது. இதற்கு எத்தகைய வழிமுறைகளை அது மேற்கொள்ளுகிறது என்பதையும், முந்தைய கால நடைமுறைகளையும் சற்று விரிவாக இந்த கவர் ஸ்டோரியில் பார்க்கவிருக்கிறோம். இந்த வருட நிதிப் பங்கீடு குறித்து நாம் தெரிந்து கொள்ள பிமல் ஜலான் கமிட்டி பற்றியும், அக்கமிட்டியின் பரிந்துரைகள் குறித்தும், அதை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டது பற்றிய விவரங்கள் அவசியம். அதையே இக்கட்டுரை அலசவிருக்கிறது.
 
பிமல் ஜலான் கமிட்டி பற்றி பார்ப்பதற்கு முன்பு பிமல் ஜலான் யார் என்று பார்ப்போம். 

Picture
பிமல் ஜலான் : 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். பூர்வீகம் ராஜஸ்தான். தற்போது வசிப்பது மேற்கு வங்காளத்தில். இவர் இரு முறை ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பணியாற்றி இருக்கிறார். 2003 ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை நியமன ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
 
இந்திய அரசுப் பணிகளில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்த அனுபவம் ஸ்ரீ. பிமல் ஜலான் அவர்களுக்கு உண்டு. 1980 ஆம் ஆண்டு ஸ்ரீமதி. இந்திரா ஆட்சிக் காலத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசால் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டு ஸ்ரீ. ராஜீவ் ஆட்சிக் காலத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசால் வங்கித்துறையின் உயரிய நிர்வாகப் பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று 1989 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.
 
1991 ஆம் ஆண்டு ஸ்ரீ. நரசிம்மாராவ் ஆட்சிக் காலத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசால் ஃபைனான்ஸ் செகரெட்டரி என்ற பொருளாதார அமைச்சகத்தின் முக்கிய பொறுப்பினைப் பெற்று ஓராண்டு காலம் பணியில் இருந்தார். 1992 – 93 காலகட்டத்திலும் (நரசிம்மராவ் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சி) 1998 – 2008 (வாஜ்பாய் பிரதமராக இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மற்றும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி) என பத்தாண்டுகளுக்கு திட்டக் கமிஷன் துறையில் உள்ள தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
 
ஸ்ரீ. பிமல் ஜலான் அவர்கள், முதல் முறை ரிசர்வ் வங்கி ஆளுநராக 1997 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய அரசால் ஐந்தாண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்பட்டார். அப்போது பிரதமராக பொறுப்பு வகித்தவர் : ஸ்ரீ. ஐ.கே. குஜரால். அப்போது தேசத்தின் நிதியமைச்சராக இருந்தவர் ஸ்ரீ. ப. சிதம்பரம்.
 
இரண்டாவது முறையாக ஸ்ரீ. பிமல் ஜலால் அவர்களின் பதவிக் காலம் 2002 ஆம் ஆண்டு முடிந்த உடனேயே மேலும் இரு ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பில் நீடிக்கும் மத்திய அரசின் உத்தரவினை அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மந்திரிசபை மூலம் பெற்றார். அப்போது ஸ்ரீ. அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக பொறுப்பு வகித்தார் ஆனால் 2003 ஆம் ஆண்டே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஸ்ரீ. வேணுகோபால் ரெட்டி அவர்களை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமித்தது. அப்போது ஸ்ரீ, பிமல் ஜலானுக்கு நியமன ராஜ்ய சபா உறுப்பினர் பதவியினை வழங்கி கெளரவித்தது.  
 
பிமல் ஜலான் குறித்தும் அவர் வகித்த பொறுப்புகள் குறித்தும் பார்த்தோம். பிமல் ஜலான் கமிட்டி எதற்காக அமைக்கப்பட்டது? அக்கமிட்டியில் யார் யார் உறுப்பினர்களாக இருந்தார்கள்? அக்கமிட்டியின் பரிந்துரைகள் என்ன? இது பற்றியெல்லாம் இனி பார்ப்போம்.
 
ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி கையிருப்பை நடுவண் அரசுக்கு வருடந்தோறும் வழங்குவது என்பது வழமையான சம்பிரதாயம் ஆனால் 2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் இந்த சம்பிரதாயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நடுவண் அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் இடையே பிரச்சினை மூண்டது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி நடுவண் அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக வழி காட்டும் நெறிமுறைகளை வகுக்க ஒரு கமிட்டி அமைக்க முடிவெடுத்தது. இப்படித்தான் பிமல் ஜலான் கமிட்டித் தலைவரானார். கமிட்டியின் பரிந்துரைகள் சர்வதேச நாடுகள் கடைபிடிக்கும் நடைமுறைகளைக் கவனத்தில் கொண்டு பரிந்துரைகளை வழங்க முடிவானது. உலகளவில் ஒவ்வொரு நாட்டு வங்கிகளும் கடைபிடிக்கும் பேசில் விதிமுறைகள் போல என்று சொல்லலாம்.
 
கமிட்டி அமைத்து அதன் பரிந்துரைகளின் படி ரிசர்வ் வங்கி நடுவண் அரசுக்கு நிதி ஒதுக்குவது என்பதும் நம் தேசத்திற்கு புதிய சங்கதி அல்ல. 2014 ஆம் ஆண்டு துவக்கத்தில் அப்போது ஸ்ரீ. மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்திலும் இப்படியொரு குழு அமைக்கப்பட்டது. அதாவது நடுவண் அரசு நிதி கேட்டவுடன் ஸ்ரீ. ஒய்.எச். மலேகம் தலைமையில் ஒரு பார்வையாளர் குழு அமைக்கப்பட்டு அது ரிசர்வ் வங்கியின் நிதிக் கையிருப்பை ஆராய்ந்து நிதி ஒதுக்குவது தொடர்பான பரிந்துரையை அளித்தது. 

Picture
“தற்காலிக மற்றும் சொத்து மேம்பாட்டு நிதி கையிருப்பு திருப்திகரமான நிலையில் இருப்பதால் ரிசர்வ் வங்கி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக தம்முடைய உபரி கையிருப்பு நிதியை வழங்கலாம். மூன்றாண்டுகளுக்குப் பிறகு உபரி நிதியிலிருந்து ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி தன் கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் வருடாந்திர இருப்பு நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஆண்டும் முடிவெடுக்கலாம். மூன்றாண்டு காலவரம்பு என்பதை சூழலுக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ளலாம்”
 
இது தான் மலேகம் குழு ரிசர்வ் வங்கிக்கு அளித்த பரிந்துரை. இப்பரிந்துரையை ஏற்று முந்தைய நிதியாண்டில் ரிசர்வ் வங்கி ஈட்டிய உபரி கையிருப்பு நிதியான தொகை சுமார் 52,679 கோடி ரூபாயை முழுமையாக வழங்கியது. அப்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர் ஸ்ரீ. ரகுராம் ராஜன். பரிந்துரை குறித்து அவர் எந்தவொரு எதிரான கருத்துகளையும் சொல்லவில்லை. முழுமையாக ஏற்றுக் கொண்டார்.
 
இந்த நிதியைக் கொண்டு அப்போதைய நடுவண் அரசு என்ன செய்தது? நதி நீர் இணைப்பு, தேசத்தின் பல்வேறு இடங்களில் சரியாக இல்லாத நீர்வழிப் பாதையை சீராக்குதல், துறைமுகம் போன்ற பெரிய கட்டுமானப் பணிகளை செய்தல் போன்ற பெரிய திட்டங்களுக்கு அந்நிதியைப் பயன்படுத்தவில்லை.
 
பொருளாதார ரீதியிலான பல்வேறு சிக்கல்களுக்குள் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சில தவறான கொள்கைகளால் நாடு தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ஸ்ரீ மன்மோகன் சிங் நாட்டின் பிரதமர் இன்னொரு புறம் பொருளாதாரத்தில் சகலமும் கற்றறிந்த நிர்வாகி என சிலரால் புகழாரம் சூட்டப்படும் ஸ்ரீ. ப. சிதம்பரம் நாட்டின் நிதியமைச்சர். இவர்கள் இருவரும் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் போது தான் அந்நிய செலவாணி வீதம் மிக மோசமாக வீழ்ந்து கொண்டிருந்தது. பொருளாதார வளர்ச்சியில் பெரியதொரு சுணக்கம் நிலவியது, பொருளாதார பாதிப்பால் தடுமாறும் நாடுகள் என உலகளவில் “ஃப்ராஜில் 5” என்று ஐந்து நாடுகளைப் பட்டியலிடுவார்கள். அந்த காலகட்டத்தில் இரு பொருளாதார மேதைகள் இருந்த போது இந்தியா அப்பட்டியலில் இடம் பிடித்த அவமானத்தை சந்தித்தது.
 
நிர்வாக ரீதியலான தோல்வியால் விளைந்த பொருளாதார நெருக்கடிகளையும், நிதிப் பற்றாக்குறையையும் சமாளிக்க நடுவண் அரசு இந்நிதியைப் பயன்படுத்தியது.
 
பிமல் ஜலான் கமிட்டி என்ன சொல்கிறது? இதை சற்று விரிவாகப் பார்க்கலாம் :
 
கமிட்டியில் மொத்தம் ஆறு உறுப்பினர்கள் அவர்கள் பற்றிய விவரம் –
 
  1. ஸ்ரீ. பிமல் ஜலான் 
  2. ஸ்ரீ. ராகேஷ் மோகன் (முன்னாள் துணை ஆளுநர், ரிசர்வ் வங்கி)
  3. ஸ்ரீ. சுபாஷ் சந்திர கார்க் (பொருளாதார விவகாரத் துறை செயலாளர், நிதியமைச்சகம்)
 
இவர்களைத் தவிர ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு உறுப்பினர்களாக உள்ள மூவர். அவர்களின் விவரம் –
 
  1. ஸ்ரீ. பரத் தோஷி
  2. சுதீர் மன்கட்
  3. என்.எஸ். விஸ்வநாதன் (ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்)  
 
ரிசர்வ் வங்கியின் ஜூன் 2018 கால நிதிநிலை அறிக்கையின் படி பேலன்ஸ் ஷீட்டின் மதிப்பு 36.18 லட்சம் கோடிகள். இதில் மொத்த இருப்பி நிதி சுமார் 9.59 லட்சம் கோடிகள், இதில் கரன்சி மற்றும் தங்க மறுமதிப்பு இருப்பு நிதி 6.91 லட்சம் கோடிகள். எதிர்பாரா செலவினங்களுக்கான நிதி சுமார் 2.32 லட்சம் கோடிகள் மற்றும் சொத்து மேம்பாட்டு நிதி சுமார் 22,811 கோடிகள். ஆக மொத்தம் 9.59 லட்சம் கோடிகள். இதிலிருந்து தான் இவ்வருடத்திற்கான 1.76 லட்சம் கோடியை நடுவண் அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியது.   
கமிட்டி ரிசர்வ் வங்கிக்கு வழங்கிய முக்கியப் பரிந்துரைகள் : 

Picture
​ 
  1. பொருளாதார மூலதனத்தைப் பொறுத்தவரை இரு விஷயங்களில் உள்ள வேறுபாட்டைத் தெளிவாக வரையறை செய்து கொள்ள வேண்டும். அ) கையிருப்பில் உள்ள உறுதியான நிதியை அபாயகரமான சூழல் மற்றும் இழப்பு (நஷ்டம்) தொடர்பானவற்றிற்கு உபயோகப்படுத்த வேண்டும். ஆ) மறு மதிப்பீடு செய்யப்பட்டு இறுதியான கையிருப்பு நிதியானது சந்தையில் உள்ள அபாயகரமான சூழல் போன்றவற்றை கணக்கில் கொண்டு மதிப்பிடப்படுவதால் அந்த நிதியினை அப்படியே இருப்பில் வைக்க வேண்டும். அது ஒதுக்கீடு என்னும் பிரிவுக்குள் சேர்க்க உகந்த காரணியாக கருத இயலாது.
  2. ஒவ்வொரு ஆண்டும் கையிருப்பில் எஞ்சும் சகல விதமான வருமானங்களில் மூலம் ஈட்டப்பட்ட ஒட்டுமொத்த உபரி நிதியில் அந்த ஆண்டு சேர்க்கப்படும் செலவினங்கள் மற்றும் பிற ஒதுக்கீடுக்கு ஒதுக்கப்படும் நிதி போன்றவற்றிக்கு பிறகு இறுதியாகும் ஆண்டு நிகர வருமானத்தை முழுமையாக நடுவண் அரசிற்கு வழங்கலாம் இந்த கணக்கீட்டை உலகளவில் (பிரிக் நாடுகள் உட்பட) பெரும்பாலான தேசங்கள் கடைபிடிப்பதால் இதே கணக்கீட்டை அளவுகோலாகப் பயன்படுத்தலாம்.
  3. ரிசர்வ் வங்கி நஷ்டத்தை வருமானமாக ஈட்டியுள்ள சூழ்நிலையில் மேலும் ரிசர்வ் வங்கியிடம் உள்ள ஒட்டுமொத்த நிதியிருப்பும் திருப்திகரமாக இல்லாத சூழலில் ரிசர்வ் வங்கி நடுவண் அரசிற்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது.
  4. பரிந்துரைகளை அமல்படுத்துவது முழுக்க முழுக்க தன்னாட்சி அதிகாரம் பெற்ற ரிசரவ் வங்கியின் முடிவினைச் சார்ந்தது.
  5. அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உள்ள நிதிப் பற்றாக்குறை மற்றும் அரசு மதிப்பீடு செய்த அளவினைத் தாண்டி அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறை போன்றவற்றை சரி கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது. (2014 ஆம் ஆண்டு துவக்கத்தில் ரிசர்வ் வங்கியிடமிருந்து கேட்டு வாங்கிய தொகையை அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது நிதிபற்றாக்குறையை குறைக்க பயன்படுத்திக் கொண்டது)
 
ரிசர்வ் வங்கியின் மொத்த சொத்துகள் மதிப்பின் அடிப்படையில் சுமார் 28% என்னும் விகிதாச்சார அடிப்படையில் செலவினங்களுக்குப் பிறகான கையிருப்பு நிதியை தன் கையிருப்பில் வைத்திருக்கிறது. சர்வதேச அளவில் 14%  இருக்க வேண்டும் என்ற கணக்கீட்டுடன் ஒப்பிடும் போது இது இருமடங்கு அதிகம். இந்த கணக்கீட்டை ஆராய்ந்து மூன்று கமிட்டிகள் பரிந்துரைகளை வழங்கின.
 
1997 ஆம் ஆண்டு வி. சுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியானது (அப்போதைய மத்திய கூட்டணி ஆட்சியின் நிதியமைச்சராக இருந்தவர் ஸ்ரீ. ப.சிதம்பரம்) 12% என்ற அளவினை சிபாரிசு செய்தார். அதாவது உலகளவில் கடைபிடிக்கும் விகிதாச்சாரத்தை விட குறைவான அளவீடு. இதை ரிசர்வ் வங்கி கடைபிடிக்க வேண்டுமென்று அப்போதைய நடுவண் அரசும், அப்போதைய நிதியமைச்சர் ஸ்ரீ. ப. சிதம்பரமும் வலியுறுத்தினார்கள்.
 
2004 ஆம் ஆண்டு உஷா தோரட் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியானது பதினெட்டு விழுக்காடு என்ற அளவீட்டை பரிந்துரைத்தது. இதை ஏற்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. 1997 ஆம் ஆண்டு வி. சுப்பிரமணியம் பரிந்துரைத்த 12% என்ற அளவினை அதாவது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதமபரம் வலியுறுத்திய சர்வதேச அளவுகோலை விட குறைவான கணக்கீட்டை ஏற்போம் என்றது.
 
2013 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மலேகம் கமிட்டி இது தொடர்பாக எந்தவொரு கணக்கீட்டையும் பரிந்துரைக்கவில்லை. நடுவண் அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மட்டும் வலியுறுத்தியதோடு தன் பணியை முடித்துக் கொண்டது.
 
தற்போது பிமல் ஜலான் கமிட்டி தன் பரிந்துரைகளில் சர்வதேச அளவான 14% என்ற கணக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. இந்த கணக்கீட்டை எட்ட ரிசர்வ் வங்கி தம்முடைய பிற செலவினங்களை குறைப்பது அவசியம். அப்படித்தான் அயல்நாடுகள் செயல்படுகின்றன.
 
பின் குறிப்பு :
 
பொதுவாக பொருளாதாரம் தொடர்பாக எழுதப்படும் கட்டுரைகளில் நான் அரசியல் தொடர்பான விஷயங்களைப் பற்றி எழுதாமல் தவிர்த்துவிடுவேன் ஆனால் வருடந்தோறும் ரிசர்வ் வங்கி நடுவண் அரசுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீடு என்னும் வழமையான சம்பிரதாயத்தை ஏதோ இந்த வருடம் தான் மத்திய அரசு பெற்றது போலவும், மிரட்டி ரிசர்வ் வங்கியின் நிதி அனைத்தையும் வாங்கிவிட்டது போலவும் சிலர் சித்தரித்து பொய்யாக தகவல் சமைத்ததால் அரசியலையும் குறிப்பிட வேண்டி இருந்தது.
 
அரசியல் கட்சிகள் ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டையும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டை எடுப்பதையும் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். எந்தக் கட்சியாக இருந்தாலும் அதைத் தான் செய்யும் ஆனால் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர் பணியின் போது ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதும் பணியிலிருந்து விலகிய பின் முரணாகப் பேசுவதும் ஒட்டு மொத்த தேசத்தையே சீரழிக்கும்.
 
பிமல் ஜலான் கமிட்டி பரிந்துரையை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்ட பின் இப்படியொரு அறிக்கை வெளியானது.
 
“ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் அதன் தரக் குறியீடு வெகுவாக குறையும், இது சரியான நடவடிக்கை அல்ல”
 
சொன்னவர் : முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஸ்ரீ. ரகுராம் ராஜன்
**********************    
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    September 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.