Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

ஊர் சுற்றி... போஜனம் தேடி... - சத்யா GP

9/19/2019

0 Comments

 
அத்தியாயம் – 3 
தமிழகத்தின் தலைநகராக இருக்க வேண்டிய நகரம். தமிழகத்தின் மத்தியப் பகுதியில் உள்ள நகரம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பேருந்து வசதி உள்ள நகரம். தூங்கா நகரம் என்ற பெயரை உண்மையில் மெய்பிப்பது போல் மத்தியப் பேருந்து நிலையம் இயங்கும் நகரம். குறிப்பிட்ட ஜாதியினர் அதிகம் என்றில்லாமல் அனைத்து ஜாதி மற்றும் மதத்தினரும் இணைந்து வாழும் நகரம். எந்தவொரு பெரிய இன மற்றும் மத மோதலிலும் சிக்கிக்கொள்ளாமல் வளைய வரும் நகரம். பாராளுமன்ற பொதுத் தொகுதியாக இருந்தாலும் 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பட்டியல் சமூகத்து நபரை வெற்றி பெற வைத்து மக்களவை உறுப்பினராக்கி பெருமை தேடிக் கொண்ட நகரம்.
 
அகன்ற காவிரி, ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில், மலைக்கோட்டை, எறும்பீஸ்வரர் சந்நிதி, பிஎச்ஈஎல், துப்பாக்கித் தொழிற்சாலை... நகரத்தின் சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
 
பீடிகை, புகழாரம் எல்லாம் எதற்கு என்று இப்போது தெரிந்திருக்கும், இந்த அத்தியாயத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் அறுபத்தைந்து வருடங்களாக இயங்கும் ஒரு உணவகத்தைப் பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம்.
Picture
தமிழகத்தைப் பொறுத்தவரை உணவகங்களில் உணவுப் பதார்த்தங்களின் விலை என்பது சற்று அதிகமாகத்தான் இருக்கின்றன. மெட்ராஸ், கோவை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமல்லாது அனைத்து ஊர்களிலும் இந்நிலை தான். பிற மாநிலங்களில் தரமான விலை குறைவான உணவகங்கள் நிறைய உண்டு ஆனால் நம் ஊரைப் பொறுத்தவரை தேடித் தேடித் தான் தரமான மலிவு விலை உணவகங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
தமிழகத்தைப் பொறுத்தவரை பல ஊர்களின் பேருந்து நிலையங்களுக்கு உள்ளே உள்ள உணவகங்களின் விற்கப்படும் பதார்த்தங்களின் தரம் சரியில்லை, விலையும் அதிகம் என்ற ஒரு குறையை பெரும்பாலானோர் சொல்கிறார்கள். அடுத்து பேருந்து நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள் போன்ற ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு அருகே உள்ள முக்கிய வீதிகளில் இயங்கும் உணவகங்களிலும் விலை என்பது உச்சத்தில் இருக்கிறது என்று நம் மக்கள் புலம்புகிறார்கள்.
 
ஊருக்கே பெருமை சேர்க்கும் முக்கியமான கோயில்கள் உள்ள ஊர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், கோயிலுக்கு அருகே வழிபாடு தொடர்பான பூஜைப் பொருட்களை யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிக விலை வைத்து விற்கும் கடைகள், கோயிலுக்கு அருகே இயங்கும் “உயர் தர சைவ உணவகம்” போன்ற இடங்களில் சிகரம் தொடும் அதிக விலை உணவுப் பண்டங்கள்... இது தமிழகத்தின் வழமையான கலாச்சாரமாகிக் கொண்டிருக்கிறது. நம் மாநில ஆட்கள் தவிர, பிற மாநிலங்களிலில் இருந்து இது போன்ற கோயில்களுக்கு வருபவர்களுக்கும் இந்த சூழல் தெரிந்திருக்கிறது. இந்நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை ஆனால் புகழ் பெற்ற சந்நிதி உள்ள ஊரில், ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் சுமார் அறுபத்தைந்து ஆண்டுகளாக மெஸ் போன்ற வடிவம் கொண்டு இயங்கி வரும் உணவகம் ஒன்று மலிவான விலையில் தரமான உணவுப் பதார்த்தங்களை விற்பனை செய்கின்றன.
 
புகழ் பெற்ற சந்நிதி – ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில்
உணவகம் அமைந்துள்ள இடம் – ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கு எதிர்புறம் அதாவது ரெயில்வே ஸ்டேஷன் ரோடு. சரியான முகவரியும் உணவகத்தின் பெயரும் வேண்டுமா?
 
“மணீஸ் கஃபே”
22/2, ஸ்டேஷன் ரோடு, ஸ்ரீரங்கம், (ரெயில்வே ஸ்டேஷன் எதிர்ப்புறம்) திருச்சி – 620006
 
(திருச்சி என்று குறிப்பிட்டு 620 என்ற பின்கோடு வரிசையை எழுத ஆரம்பித்தாலே சொல்ல முடியாதொரு பரவசம், உற்சாகம், குதுகூலம் பொங்கித் ததும்புகிறது)  
 
இந்த உணவகத்தில் அடை & அவியல் பிரமாதமாக இருக்கும். இந்த மெஸ்ஸில் சேவை ருசியாக இருக்கும். இந்த ஹோட்டலில் சாப்பிடும் நெய் ரோஸ்டுக்காக சொத்தையே எழுதி வைக்கலாம். இப்படி ஒவ்வொரு கடைக்கும் ஏதாவதொரு பதார்த்தத்தை ஸிக்னேச்சர் டிஷ் போல் சித்தரித்து நம்மவர்கள் கொண்டாடுவது வாடிக்கை. மணீஸ் கஃபேயைப் பொறுத்தவரை அப்படி எல்லாம் அறவே கிடையாது. எல்லா இடங்களிலும் காலை உணவாக கிடைக்கும் இட்லி, தோசை, பூரி, வடை, காஃபி, டீ போன்றவற்றைத் தான் இவர்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள் ஆனால் ருசி, தரம், விலை இம்மூன்று விஷயங்களிலும் சராமாரியாக ஸ்கோர் செய்கிறார்கள்.
 
விலைப் பட்டியலை மட்டும் குறிப்பிடுகிறேன் பார்த்து பரிசோதித்துக் கொள்ளுங்கள்
 
  • 2 இட்லிக்களின் விலை ரூபாய் 15/-
  • மெதுவடையின் விலை ரூபாய் 5/-
  • சாதா தோசையின் விலை ரூபாய் 20/-
  • ரோஸ்ட்டின் (ஸ்பெஷல் தோசை) விலை ரூபாய் 25/-
  • ரவா தோசையின் விலை ரூபாய் 20/-
  • ஸ்பெஷல் ரவா தோசையின் விலை ரூபாய் 25/-
  • சப்பாத்தியின் விலை ரூபாய் 20/-
  • அடையின் விலை ரூபாய் 25/-
  • டீ மற்றும் ஃபில்டர் காஃபியின் விலை ரூபாய் 10/-
 
ரவா தோசை, ஸ்பெஷல் ரவா தோசை, சப்பாத்தி & அடை போன்ற உணவு வகைகள் மாலை மட்டுமே கிடைக்கும்.
 
தினசரி காலை ஐந்தரை மணிமுதல் முற்பகல் பதினோரு மணி வரை கஃபே இயங்கும்
 
மீண்டும் மாலை ஐந்தரை மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும்.
 
கடைக்கு வார விடுமுறை கிடையாது அனால் அமாவாசையன்று மட்டும் கடைக்கு விடுமுறை.
 
திருச்சியில் 2004 ஆம் ஆண்டு வரை குடியிருந்த போது மணீஸ் கஃபேயில் பல முறை காலை ஆகாரத்தை சாப்பிட்டு இருக்கிறேன். யுரேகா ஃபோர்ப்ஸில் வேலை பார்க்கும் போது ஸ்ரீரங்கம் ஏரியா வொர்க்கின் போதும் சாப்பிட்ட அனுபவங்கள் நிறைய உண்டு ஆனால் இப்போது போல முழு போஜனப் பிரியராய் ஒரு உணவகத்தில் சாப்பிடும் உணவு பிடித்துப் போனால் அங்கு சமைப்பவரைப் பார்த்து பாராட்டுவது, ஸ்தாபனத்தின் வரலாறைத் தெரிந்து கொள்வது, சமையல் குறிப்புகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது போன்ற காத்திரமானப் பணிகளை மேற்கொண்டதில்லை.
 
இந்த ஊர் சுற்றி போஜனதைத் தேடி தொடர் கட்டுரைகளை எழுதும் போது “நம்ம திருச்சிக்காரர் கிட்ட இதை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்காம வக்கனையா அங்க போய் போஜனத்தை முடிச்சுருக்கோமே” என்று கவலைப்பட்டேன்.
 
இரு வருடங்களுக்கு முன்பாக நான் திருச்சி சென்ற போது மணீஸ் கஃபேயில் காலை போஜனத்தை நிறைவாக முடித்துக் கொண்டேன், பூப் போன்ற மிருதுவான இட்லி, மல்லிமணம் கமழும் சாம்பார், வெள்ளைத் தேங்காய் & பொட்டுக் கடலை சேர்த்து அரைத்த கெட்டிச் சட்னி, வர மிளகாய், தக்காளி & வெங்காயத்தை வதக்கி அரைத்து தாளித்த தக்காளிச் சட்னி, வாயில் கரையும் ரோஸ்ட், பூரி கிழங்கு என்ற பெயருக்கு ஏற்றது போல தாராளமாக உருளைக்கிழங்கை தன் வசம் வைத்திருக்கும் பூரிக்கு இணையாகப் பரிமாறப்படும் மசாலா... எதிலும் குறைவில்லை... அதே நிறைவு. அது தான் மணீஸ் கஃபே.
 
சமீபத்தில் திருச்சிக்கு சென்ற நண்பன் என்னிடமிருந்து தகவல்கள் பெற்று ஒரு நாள்  காலை & இரவு என இரு வேளை பலகாரத்தை இங்கு உண்டு தன் பிறவிப் பயனை அடைந்தான். அவன் சொன்ன விலைகளைத் தான் மேலே பட்டியலில் தந்திருக்கிறேன்.      
 
திருச்சியில் வசிக்கும் ரவி சாரிடம் உடனே மணீஸ் கஃபே குறித்து அலைபேசியில் கதைத்தேன். அந்த சம்பாஷணை :
 
“சாப்பாடு பத்தி அகல்ல மாசா மாசம் எழுதறேன்ல அது சம்பந்தமா நம்ம ஊர்ல இருக்கற ஒரு கடை பத்தி கொஞ்சம் விஷயம் வேணும் சார்”
 
“எந்த ஹோட்டல் பத்தி?”
 
“ஸ்ரீரங்கத்துல ரெயில்வே ஸ்டேஷன் எதிர்க்க இருக்கற மணீஸ் கஃபே” 
 
“எனக்கு நல்லா தெரியுமே, அந்த கடை முதலாளி எனக்குப் பழக்கமானவர் தான், நான் இப்ப அந்தக் கடைக்கு பக்கத்துல தான் இருக்கேன், அவர் கிட்டயே நேரடியா பேசறீங்களா?”
 
“கண்டிப்பா சார்”
 
ரவி சார் அலைபேசியை கடை முதலாளியிடம் தர அவரிடம் பேச ஆரம்பித்தேன். சகஜமான அறிமுகம் முடித்து சில நிமிடங்கள் பேசும் போதே ரவி சாருக்கு அவர் அலுவலகத்திலிருந்து அழைப்பு. உடனே “ஓனரை அவர் மொபைல்ல இருந்து உங்க கிட்ட பேச சொல்றேன்” என்றார்.
 
உணவகம் பற்றி உடனே தகவல்களைப் பெறுமாறு வழி செய்து வயிற்றில் அமுலை வார்த்தார் ரவி சார்.
 
மணீஸ் கஃபே உரிமையாளரிடம் விரிவாகப் பேசினேன் அந்த உரையாடலிலிருந்து :
 
“வணக்கம் சார் நான் மெட்ராஸ்ல இருந்து ரவி சார் ஃப்ரெண்ட் சத்யா பேசறேன். நான் பொறந்து, வளர்ந்து, படிச்சது எல்லாம் திருச்சி ஜில்லால தான், 2004 ல தான் மெட்ராஸ் வந்தேன். சின்ன வயசுல உங்க ஹோட்டல்ல பல முறை வந்து சாப்பிட்டுருக்கேன், இப்போ அகல்னு ஒரு ஈ மேகசீன் நடத்தறேன். அதுல மாசா மாசம் ஒவ்வொரு ஊர்ல இருக்கற குறிப்பிட்ட ஹோட்டல் பத்தி எழுதறேன். ஒவ்வொரு உணவகத்துக்கும் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கற மாதிரி இயல்பா எழுதும் போதே வந்துருது. அது நிஜமும் கூட. இந்த புரட்டாசி மாசம், நம்ம திருச்சி பத்தி எழுத ஆசைப்பட்டேன், உங்க கஃபே ஞாபகத்துக்கு வந்தது, எனக்கு கொஞ்சம் டீடெயில்ஸ் சொன்னா செளகரியமா இருக்கும் சார்”
 
“மெட்ராஸ் போயும் நம்ம கடையை ஞாபகம் வெச்சுண்டு விசாரிக்கிறது சந்தோஷமா இருக்கு, உங்களுக்கு என்ன டீடெயில்ஸ் வேணும்? சொல்லுங்க”
 
“அறுபத்தஞ்சு வருஷமா உங்க ஸ்தாபனம் இருக்கு, இதை ஆரம்பிச்சது யார், நீங்க எப்போ நிர்வாகம் செய்ய ஆரம்பிச்சீங்க? இதெல்லாம் சொல்லுங்க சார்?”
 
“எங்களுக்கு பூர்வீகம் பாலக்காடு, அங்க என்னோட அப்பா மணீஸ் கபேன்னு ஒரு ஹோட்டல் நடத்திண்டு இருந்தார். அங்க இருந்து 1954 ல ஸ்ரீரங்கம் வந்தார். ஊர் மாறும் போது ஹோட்டலை இன்னொருத்தருக்கு கை மாத்தி விட்டார். அப்பா இங்க வந்து அதே பேர்ல ஆரம்பிச்சார். அப்பாவும் அம்மாவும் தான் ஆரம்பத்துல ஹோட்டலை பார்த்துக்கிட்டாங்க. ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு ஹோட்டலை டெவெலப் செஞ்சாங்க. இதே ரெயில்வே ஸ்டேஷன் ரோட்ல தான் அறுபத்தஞ்சு வருஷமா மணீஸ் கஃபே இருக்கு”
 
“பாலக்காட்டுல ரெயில்வே ஜங்க்ஷன் பக்கத்துல அதாவது பழைய என்ட்ரன்ஸ் கிட்ட ஒரு மணீஸ் கஃபே இருக்கே அதுவா?”
 
“சாட்சாத் அதே தான்”
 
“அப்பா பெயர் என்ன சார்? அப்பா ஹோட்டலை நிர்வாகம் மட்டும் செய்வாரா, இல்லை சமையலும் பார்த்துப்பாரா?”
 
“அப்பா அம்மா ரெண்டும் பேரும் சகலமும் செய்வாங்க. சமைப்பாங்க, பரிமாறுவாங்க, இலையை எடுத்துப் போடுவாங்க, டேபிள்களை சுத்தம் செய்வாங்க, கல்லாவைப் பார்த்துப்பாங்க, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு பாகுபாடு இல்லாம செய்வாங்க. அப்பா பேரு மஹாதேவ ஐயர், அம்மா பேரு லக்ஷ்மியம்மாள்”
 
“நீங்க எப்ப சார் ஹோட்டல் நிர்வாகத்துக்கு வந்தீங்க”
 
“அப்பா எதுக்குமே அசர மாட்டார். சர்வ சாதாரணமா மலைக்கோட்டை, மெயின்கார்ட் கேட், காந்தி மார்க்கெட் எல்லாம் போயிட்டு வருவார். காய்கறி, மளிகை சாமான் எல்லாம் மொத்தமா வாங்கிண்டு வந்துருவார். அவர் கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன். 1995 ஆம் வருஷம் கஃபேக்கு வந்து தொழில் பழக ஆரம்பிச்சேன். அப்பா, அம்மா மாதிரி எல்லா வேலையும் செய்வேன்”
 
திருச்சியில் வசிப்பவர்கள் மலைக்கோட்டை, காந்தி மார்க்கெட் போவது பெரிய ஆச்சரியமான விஷயமில்லை. இதை ஏன் சொல்கிறார் என்று விசித்திரமான உணர்வு ஏற்பட்டது. அதனால் சில நிமிடங்கள் பேசாது இருந்தேன். சுதாரித்து தொடர்ந்து விசாரிக்க ஆரம்பித்தேன்.
 
“அப்பா, அம்மா இப்பவும் வராங்களா? உங்க பெயரை கேட்க மறந்துட்டேன் அதையும் சொல்லுங்க சார்”
 
“2005 ஆம் வருஷம் வரைக்கும் அப்பாவும் அம்மாவும் ஹோட்டலுக்கு வருவாங்க எல்லாத்தையும் கவனிச்சுப்பாங்க அப்புறம் கிளம்பிடுவாங்க. அந்த வருஷம் அம்மா காலமானாங்க. அப்பா நொடிஞ்சு போயிட்டார். அம்மா போனப்றம் கடைக்கு வரதை அப்பா படிப்படியா குறைச்சுண்டார். ஒரு கட்டத்துல வரதை நிறுத்திட்டார். நானும் என் மனைவியும் தொடர்ந்து பார்த்துக்கறோம். என் பேர் சங்கரன். மிசஸ் பேரு ஜோதி”
 
“உங்களுக்கு குழந்தைங்க?”
 
“எனக்கு ஒரு பொண்ணு அவளை மெட்ராஸ்ல கட்டிக் கொடுத்திருக்கேன். பசங்க வேற யாரும் கிடையாது, எனக்கு அம்பத்திரெண்டு வயசாச்சு, நானும் வைஃப்பும் தான் சகலத்தையும் பாத்துக்கறோம். ஹோட்டல்ல வழக்கம் போல ஸ்டாஃப்ஸ் இருக்கா”
 
“...”
 
“வேற ஏதாவது சங்கதி வேணுமா சார்”
 
“நான் சாப்பிட வர போது, சரியா சொல்லனும்னா 1997 ல இருந்து 2000, விறகடுப்புல தான் சமைப்பீங்க இப்போ எப்படி சார்/”
 
“இப்பவும் விறகடுப்புல தான் எல்லா பதார்த்தமும் சமைக்கிறோம்”
 
“...”
 
“வேற ஒன்னும் இல்லியே”
 
“... இல்... லை அவ்வளவு தான் சார்”
 
“ஏதோ கேட்கனும்னு நினைக்கறீங்க ஆனா தயக்கம் சரியா?”
 
“அப்படியெல்லாம் இல்லை சார்”
 
“நான் அப்பா மலைக்கோட்டை மார்க்கெட் போறதை பத்தி சொன்ன உடனே நீங்க சைலென்ட் ஆனீங்க அப்புறம் பேசுனீங்க அதானே?”
 
“சார் அது வந்து...”
 
“புரியுதுங்க... நான் ஒரு ஆர்வத்துல வேகமா பேசும் போது சொல்ல மறந்துட்டேன் அதான் உங்களுக்கு குழப்பம். அப்பாக்கு பதினெட்டு வயசாகும் போது ஒரு ஆபரேஷன் செய்து ஒரு காலை ரிமூவ் செய்தாங்க. கல்யாணம் செய்து, என்னைப் பெத்து, வளர்த்து, ஆளாக்கி, மணீஸ் கஃபேயையும் குறைவில்லாம நடத்தி... அப்பா அப்பா தான்...”                                       
*************** 

0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    September 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.