Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

சிறுகதை – அ. முத்துலிங்கம்

9/19/2019

0 Comments

 
ஜகதலப்ரதாபன்
முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினத்துக்கு ஒரு புதுப்படம் வந்தால் அதைக் கிராமங்களில் விளம்பரப் படுத்துவதற்கு மாட்டு வண்டில்களைப் பயன்படுத்துவார்கள். வண்டிலின் இரண்டு பக்கங்களிலும் தொங்கும் விளம்பரத் தட்டிகளில் எம்.கே.டி பாகவதரோ, டி.ஆர் ராஜகுமாரியோ, எம்.எஸ். சுப்புலட்சுமியோ, பி.யு.சின்னப்பாவோ காட்சியளிப்பது வழக்கம். மேளம் அடித்தபடி வண்டில் கிராமத்து ஒழுங்கைகளில் ஓடும். அப்படி ஓடும்போது விளம்பரத்துண்டுகளை அள்ளி வீசுவார்கள். வாழ்நாள் முழுக்க இந்த ஒரு தருணத்துக்காகவே காத்திருந்ததுபோல நானும் தம்பியும் பாய்ந்து புழுதியில் விழுந்து புரண்டு அந்த துண்டுகளை பொறுக்குவோம். 
Picture
முன்னொரு அதே காலத்தில் எங்கள் வீட்டில் பெரிய அண்ணரும் சின்ன அண்ணரும் அடிக்கடி சண்டை போட்டார்கள். பெரிய அண்ணர் எம்.கே.டி பாகவதர் பக்தர். அவர் நடித்த அத்தனை படங்களையும் பார்த்திருந்தார். சில படங்களை பல தடவை. சின்ன அண்ணர் பி.யு. சின்னப்பா பக்கம். அவருடைய முழுப் பாடல்களையும் மனப்பாடம் செய்திருந்தார்; பாடவும் செய்வார். எம்.கே.டியின் ஒரு பாடலைக்கூட பாடமாட்டார். அப்படி ஒரு வன்மம். எங்கள் ஊர் கடையொன்றின் கிராமபோன் பெட்டியில் தியாகராஜ பாகவதரின் பாட்டுக்களை வைப்பார்கள். என்னுடைய பெரிய அண்ணர் குழாய்க்குள் தலையை விட்டு பாட்டுக்களை கேட்பார். கடைக்காரர் பி.யு.சின்னப்பா பாடல்களையும் போடுவார். அப்போது இரண்டாவது அண்ணர் விழுந்தடித்து கடைக்கு ஓடுவார். நானும் தம்பியும்  சிலசமயம் பெரிய அண்ணர் பக்கமும் சிலசமயம் சின்ன அண்ணர் பக்கமும் சாய்ந்து அவர்களை மகிழ்விப்போம். சினிமா என்கிற சமாச்சாரத்தை நாங்கள் பார்த்தது கிடையாது. பெரிய அண்ணரும் சின்ன அண்ணரும் தாங்கள் பார்த்த படக்கதைகளை அளக்கும்போது நாங்கள் ஒரு கற்பனை உலகை சிருஷ்டித்து அதற்குள் மூழ்கிக்கிடப்போம்.
 
ஜகதலப்ரதாபன் விளம்பரத் துண்டுகளை பொறுக்கிய நாளிலிருந்து எனக்கும் தம்பிக்கும் எப்படியாவது அந்தப் படத்தை பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை பெருகத் தொடங்கியது. அந்த ஆசை இன்னும் தங்கச்சிக்கு வரவில்லை.  பிறந்ததிலிருந்து அவள் நோஞ்சானாக இருந்தாள். உடம்பில் எந்தப் பகுதியை தொட்டாலும் அங்கே ஒரு எலும்பு இருக்கும். சிரித்து விளையாடுவாள், திடீரென்று படுத்துவிடுவாள். பெலன் காணாது என்று பரியாரியார் சொல்லி ஓர் ஆடும் குட்டியும் அவளுக்காக வாங்கி வீட்டில் விட்டார்கள். அவள் ஆட்டுப்பால்தான் குடிப்பாள். ஆட்டிலும் பார்க்க ஆட்டுக்குட்டிதான் அவள் ஆரோக்கியமாக வளர்வதற்கு காரணம். ஆட்டுக்குட்டிக்கு செங்கமலம் என்று பெயர். தங்கச்சி 'செங்கி, செங்கி' என்று கத்துவாள், அது துள்ளினால்தான் வாயை திறப்பாள். அம்மா ஒரு வாய் தீத்தி விடுவார். இப்படித் தங்கச்சி தேறி வந்தாள்.
 
ஒருநாள் நாங்கள் எல்லோரும் வீட்டில் இருந்தோம். அது பள்ளி விடுமுறை நாளாக இருந்ததால் தங்கச்சி நடுவிலே நின்று எல்லோருக்கும் விளையாட்டுக் காட்டினாள். ஒரு வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் ஒருவரைச் சுற்றித்தான் அது இயங்கிக்கொண்டிருக்கும். எங்கள் வீட்டில் அது தங்கச்சிதான். இடுப்பிலே கைகளை வைத்து, இரண்டு வயதுப் பின்னல் எழும்பி எழும்பி அதே இடத்தில் விழ, அவள் ஆட நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். அந்த நேரம் கதவை யாரோ தட்டினார்கள்.
 
“நில், நில்” என்று வீட்டிலிருந்த அத்தனை பேரும் கத்த கத்த குடுகுடுவென்று ஓடிச்சென்று நாதாங்கியை இழுத்து கதவை திறந்துவிட்டாள் என் தங்கச்சி. கதவை திறக்க அவளால் முடியும் என்பது முதல் ஆச்சரியம். வாசலில் நின்ற அந்த பெண்மணியை பார்த்தது எங்களுக்கு இரண்டாவது ஆச்சரியம்.
 
எங்கள் ஊர் பணக்காரருடைய மனைவி அவர். அம்மாவைக் கண்டால் பல்லுக் கொதி வந்தமாதிரி முகத்தை மாற்றிவிடுவார். அம்மாவுக்கு அவரைப் பிடிக்காது. சாதாரணமாக எங்கள் வீடுகளுக்கெல்லாம் அவர் வரமாட்டார். அன்றைக்கு மஞ்சள் சேலை உடுத்தி, தலை மொட்டையடித்து பெரிய பொட்டு வைத்து வாயை திறந்து ஒன்றுமே பேசாமல் சேலை மடியை விரித்து பிடித்துக்கொண்டு நின்றது துயரமான காட்சி. அம்மா உள்ளே வரும்படி உபசாரத்துக்கு அழைத்தும் அவர் ஒரு சொல் சொல்லாமல் அசையாது நின்றார். நத்தை ஊர்ந்த தடம் போல முகத்திலே கண்ணீர் காய்ந்த கோடு. அம்மா உள்ளே போய் ஒரு கைப்பிடி அரிசி கொண்டுவந்து அவர் மடியில் போட்டார். தலையை ஆட்டிவிட்டு அவர் அடுத்த வீட்டுக்கு புறப்பட்டார்.
 
அம்மா அவர் மடிப்பிச்சை எடுக்கிறார் என்று சொன்னார். ஏழு வீடுகளுக்கு போய் பிச்சை எடுத்து  கஞ்சி காய்ச்சி குடிப்பார். அது மிகத் தீவிரமான நேர்த்திக்கடன். ஊரிலே நெருப்புக் காய்ச்சல் பரவி வந்த நேரம் அது. அவர்களுடைய ஒரே மகனுக்கு நெருப்புக் காய்ச்சல் கண்டு அவன் படுத்த படுக்கையாக கிடந்தான். அதற்காகத்தான் விரதம் என்றார் அம்மா. அதன் பிறகு அவர் சொன்னதுதான் எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
 
“அவர்கள் வீட்டிலே மூட்டை மூட்டையாக அரிசி அடுக்கி வைத்திருக்கு. மடிப்பிச்சை எடுக்கிறது எவ்வளவு வெட்கக்கேடு” அம்மாவின் வாயிலிருந்து இப்படியான வார்த்தைகள் எப்படி வந்தன என்றே தெரியவில்லை. இரண்டு நாள் கழித்து அழுது கொண்டே அம்மா அவர்கள் சாவீட்டுக்கு போனார்; அழுது கொண்டே திரும்பி வந்தார். அப்படியும் அவருக்கு அழுகை முடிவடையவில்லை.
 
பி.யு.சின்னப்பா நடித்த ஜகதலப்ரதாபன் படம் விண்ட்சர் தியேட்டரில் ஆறு மாதம் ஓடிவிட்டது. அந்தப் படத்தை பார்க்காமல் வாழ்வதில் ஒருவித பிரயோசனமும் இல்லை என்பது என்னுடைய இரண்டாவது அண்ணரின் முடிவான எண்ணம். அம்மாவிடம் போய் 'படத்தை மாத்தப் போறாங்கள். படம் மாறினால் பின்னர் பார்க்கவே முடியாது' என்றெல்லாம் கெஞ்சினார். நாங்களும் 'முன்வீட்டு மாமி எங்களுக்கு அம்மாவாக பிறந்திருக்கலாம் அல்லது பக்கத்து வீட்டு அக்கா அம்மாவாகப் பிறந்திருக்கலாம்' என்றெல்லாம் சொல்லி அம்மாவின் ஆத்திரத்தை கூட்டினோம். கடைசியில் சின்ன அண்ணர் சொன்னதைக் கேட்ட அம்மாவின் வாய் அப்படியே பிளந்துபோய் நின்றது. 'நான் வயித்திலே இருந்த போது நீங்கள் என்னைக் கரைக்கப் பார்த்தது எனக்கு தெரியும். நான் பிறந்திருக்கவே கூடாது. என்னிலே உங்களுக்கு பட்சமே இல்லை' என்றார். அது வேலை செய்தது. 
 
அம்மா ஒருவரும் எதிர்பாராத காரியம் ஒன்று செய்தார். தங்கச்சியின் ஆட்டுக்குட்டியை முன்பின் யோசிக்காமல் விலைபேசி விற்றார். படத்துக்கு அளவான காசை பெரிய அண்ணரிடம் எண்ணிக் கொடுத்து எங்களை பட்டினத்துக்கு கூட்டிப்போய் படத்தைக் காட்டிவிட்டு வரச்சொன்னார். அதுதான் நானும் தம்பியும் பார்க்கப்போகும் முதல் படம். நாங்கள் தியேட்டருக்கு கிட்டத்தட்ட பறந்துதான் போய்ச் சேர்ந்தோம். அங்கே ஏற்கனவே வரிசை நீண்டுபோய் கிடந்தது. அத்தனை சனங்களும் ஆடுகளை விற்று வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்தபோது மலைப்பானது. கேட் திறந்ததுதான் தாமதம் நாங்கள் நின்ற வரிசை மறைந்து புதிதாக வரிசைகள் முளைத்தன. சிலர் ஆட்களுக்கு மேல் ஏறி வந்து டிக்கட் வாங்குவதை அன்றுதான் பார்த்தேன்.
 
ஒடுக்கமான வாங்குகளில் முதுகுகளை நேராக்கிக் கொண்டு நெருக்கியடித்தவாறு நாங்கள் உட்கார்ந்தோம். வலது பக்கத்தில் கயிறு கட்டி சிறைக்கூடம் போல செய்து அதற்குள் பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். சோடா, சிகரெட், கடலை என்று தோளிலே தொங்கிய பெட்டியிலிருந்து சின்னப் பெடியன்கள் விற்றார்கள். பிரம்மாண்டமான வெள்ளைத் திரை முன்னே இருந்தது. சும்மா அந்த திரையை பார்த்துக்கொண்டு இருப்பதே புளகாங்கிதம் தரக்கூடியது. அத்தனை கண்களும் அதையே பார்த்தன. எங்கே தங்களுக்கு தெரியாமல் படம் ஆரம்பமாகிவிடுமோ என்ற பயத்தில் அடிக்கடி  திரையில் ரோர்ச் லைட் அடித்து சோதனை செய்தார்கள்.
 
முதல் மணி அடித்து இரண்டாவது மணியும் ஒலித்தபோது விளக்குகள் அணைந்தன. என்னுடைய இருதயம் என்றைக்கும் இல்லாத மாதிரி ஏன் அவ்வளவு வேகமாக அடித்தது என்பது புரியாத புதிர்தான். என் நெஞ்சு எலும்பு தடுத்திருக்காவிட்டால் இருதயம் வெளியே வந்து விழுந்திருக்கும் என்று நான் அப்போது பயந்தேன்.
இப்பொழுது நினைவில் இருப்பதெல்லாம் பிரமிப்புதான். அன்றைக்கும் இன்றைக்கும் மறக்கமுடியாத ஆச்சரியத்தை தந்தது பி.யு சின்னப்பா பல வேடங்களில் ஒரு காட்சியில் தோன்றியது. அவரே மிருதங்கம், அவரே கடம், அவரே வயலின், அவரே வாய்ப்பாட்டு, அவரே கொன்னக்கோல். சின்ன அண்ணர் சீட்டில் இருக்க முடியாமல் துள்ளினார். நான் என்னை உயரமாக்குவதற்கு என் கை மேலேயே உட்கார்ந்திருந்தேன். அதனால் துள்ளவில்லை.
 
படம் முடிந்த பிறகும் கூட எங்களுக்கு வெளியே போகத் தோன்றவில்லை. சின்ன அண்ணர் பி.யு.சின்னப்பாவின் பாட்டுகளைப்பாட, நாங்கள் ஊரை நோக்கி நடந்தோம். அங்கே எந்த வீதியில் எந்த நாய் என்பது எங்களுக்கு தெரியும். அவைக்கும் எங்களை தெரியும். அவை குலைத்துக்கொண்டே எங்கள் பின்னால் எல்லை முடியும்வரை வந்தன. அதன்பின்னர் அடுத்த நாய் எங்களை தொடர்ந்தது. இப்படியாக ஒருவாறு வீடு வந்து சேர்ந்தோம்.
 
அம்மா எங்களுக்காக சோற்றை வைத்துக்கொண்டு காத்திருந்தார். படக்கதையை சின்ன அண்ணர் உணர்ச்சியோடு, ஒரு சொல் மற்றச் சொல்லை இடித்துக்கொண்டு வெளியே வர, சொன்னார். மிதமிஞ்சிய ஆர்வத்தில் உருட்டிய சோற்றை வாய்க்குள் வைக்காமல் கையிலே பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் காட்சியை வர்ணித்தார். சின்ன அண்ணருக்கு ஆகப் பிடித்த சீன் பி.யு சின்னப்பாவின் சாகசங்கள் நிறைந்த வாள்சண்டைகளும், கம்புச்சண்டைகளும்தான். அம்மா 'சோறு காயப்போகுது. முதலில் வாய்க்குள் வை, பிறகு கதையை சொல்லு' என்றார். பெரிய அண்ணர் வாயை திறந்தால் சின்ன அண்ணர் முழுசிப் பார்த்தார். பி.யு.சின்னப்பா அவருக்குத்தான் சொந்தம், அவர்தான் கதையை சொல்லவேண்டும் என்று நினைத்தார். தங்கச்சி நித்திரையாகி விட்டாள் என்று மட்டுமே அம்மா சொன்னார். அவள் 'செங்கி, செங்கி' என்று ஆட்டுக்குட்டியை கேட்டு நீண்ட நேரம் அரற்றியதையும், எவ்வளவு முயன்றும் சாப்பிடாமலே அழுதபடி தூங்கச் சென்றதையும் எங்களுக்கு சொல்லவில்லை.
 
அடுத்தநாளும் தங்கச்சி சாப்பிட மறுத்துவிட்டாள். முதலில் அவள் உடம்பு பொட்டுப்பொட்டாக  சிவந்து தடித்தது. அம்மா எண்ணெய் தடவிவிட்டார். கொஞ்சம் காய்ச்சல்தனமாக இருந்ததால்  கைமருந்து கொடுத்தார். நாள் செல்லச் செல்ல காய்ச்சல் நிற்காமல் ஏறிக்கொண்டே போனது. பரியாரியாரைக் கூட்டி வந்ததும் அவர் கையை பிடித்து பார்த்துவிட்டு நிமிடம் கூட யோசிக்காமல் நெருப்புக் காய்ச்சல் என்றார். அவ்வளவு எச்சரிக்கையாய் இருந்தும் தப்பமுடியவில்லை. வைத்தியர் கொடுத்த குளிசையை முலைப்பாலில் கரைத்து அம்மா பருக்கினார். காய்ச்சல் விடவில்லை, வரவரக் கூடிக்கொண்டே போனது. காய்ச்சலின் உச்சத்தில் தங்கச்சி 'செங்கி, செங்கி' என்று பிதற்றத் தொடங்கினாள். நோயின் கடைசிக்கட்டம் அது என்று பேசிக்கொண்டார்கள். பரியாரியார் வந்து கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு இரண்டு நாளைக்கு பிறகுதான் சொல்லலாம் என்றார்.
 
பல வருடங்களுக்கு பின்னர் இந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்போது என் மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் ஒரு சித்திரமே வந்து போகும். ஜகதலப்ரதாபன் படத்தில் பௌர்ணமி வெளிச்சத்தில் அரசன் தன் மகன்களைக் கூப்பிட்டு, அப்படியான ஓர் அற்புத இரவில் என்ன செய்யத் தோன்றுகிறது என்று கேட்பான். எல்லா புதல்வர்களும் அரசனுக்கு பிடித்த காரியத்தையே சொல்வார்கள். ஜகதலப்ரதாபன் மாத்திரம் துணிச்சலோடு தான் மஞ்சத்தில் படுத்திருக்க இந்திராணி, நாககுமாரி, அக்னிகுமாரி, வருணகுமாரி ஆகிய நால்வரும் வெண்சாமரம் வீசியும், இசைபாடியும், நடனமாடியும் பணிவிடை செய்து தன்னை மகிழ்விக்கவேண்டும் என்று மன்னனிடம் சொல்வான். அரசன் அவனை துரத்திவிடுவான். இறுதிக் காட்சியில் ஜகதலப்ரதாபன் சொன்னதை செய்து சபதத்தை முடிப்பான். அவனுடைய வெற்றியைப் பார்த்து நாங்கள் மகிழ்ந்திருந்த அதே வேளை எங்கள் தங்கச்சி 'செங்கி, செங்கி' என்று வீட்டிலே கத்தி அழுது கொண்டிருந்திருப்பாள். அன்றிலிருந்து ஜகதலப்ரதாபன்  படத்தை எங்கே, எந்தச் சமயத்தில் நினைத்தாலும் என் தங்கச்சியின் நினைவும் சேர்ந்தே வரும்.   
 
சில நாட்களாக தங்கச்சி படுத்திருக்கும் அறைக்குள் போகக்கூடாது என்பது அம்மாவின் கட்டளை. கயிற்றுக் கட்டிலின் நடுவே அவள் தனியாகப் படுத்துக் கிடந்தாள். எலும்பான உடம்பு என்றபடியால் அவள் கட்டிலில் கிடப்பதே சில வேளை கண்ணுக்கு தெரியாது. நாங்கள் யன்னல் வழியாக வேடிக்கை காட்டுவோம். வீடு நிறைய இருந்த தங்கச்சி படுத்தவுடன் வீடு ஸ்தம்பித்த நிலைக்கு வந்திருந்தது.
 
அவள் படுக்கையில் கிடக்க என் தம்பி நாகலோகத்தில் பேபி கமலா ஆடிய பாம்பு நடனத்தை அப்படியே நெளிந்து நெளிந்து ஆடினான். தங்கச்சி வழக்கத்தில் கைதட்டி விழுந்து விழுந்து சிரிப்பாள். அன்று மெல்ல உதடுகளை அசைத்து தான் சிரிப்பதாகக் காட்டினாள். சில நேரங்களில் அதைக்கூட செய்யாமல், சோர்ந்து போய் தூங்கிவிடுவாள். நாங்கள் ஒவ்வொருவராக படுக்கச் செல்வோம். அம்மா விளக்கை குறைத்துவிட்டு தங்கச்சிக்கு பக்கத்தில் அமர்ந்து கொள்வார்.
 
இரவு முழுக்க அப்பாவும் அம்மாவும் தூங்கவில்லை என்றுதான் தோன்றியது. கிரமமாக மருந்து கொடுத்துக்கொண்டும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டும் இருந்தார்கள். அதிகாலையில் சத்தம் கேட்டு விழிப்பு ஏற்பட்ட போது மங்கலாக உருவங்கள் அசைந்தன. ரகஸ்யமான குரலில் பேச்சு நடந்தது. அப்பா கதவுக்கு பக்கத்தில் நிற்பது புகை போல தெரிந்தது. சத்தம் செய்யக்கூடாது என்ற கவனத்துடன் கதவு நாதாங்கி உருவப்பட்டபோது ணங் என்ற மெல்லிய ஒலி எழும்பி வீட்டை நிறைத்தது.
 
கதவை மெள்ளத் திறந்து, மஞ்சள் சேலை உடுத்தி மொட்டையடித்திருந்த என் அம்மா வெளியே போனார்.
*********************

 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    September 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.