Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

Cinema நூலகம் – ராஜ்குமார் பார்த்திபன்

9/19/2019

5 Comments

 
ஒரு திரைப்படம் மொழி எல்லைகளைக் கடந்து உலகின் வெவ்வேறு கலாச்சார சூழலுக்குள் வாழுகின்ற சகல மக்களின் பொதுவான உணர்வுக்குள் பயணிக்கத் தொடங்குகிறது என்றால் அவற்றை உலக சினிமா எனக் கொள்ளலாம் என்பது என் கருத்து. 2006ல் Kim Rossi Stuart (கிம் ரோஸி ஸ்டூவர்ட்) இயக்கத்தில் வெளிவந்த இத்தாலி நாட்டுத் திரைப்படமான “Along the Ridge” இந்த வகைக்குள் வரும் ஒரு படம். இப்படத்தின் திரைக்கதை பொதுவான ஒரு கருவில் பின்னப்பட்டிருந்தாலும் இந்தியச் சூழலுக்கும் இங்கிருக்கிற குடும்பங்களின் ஒரு முக்கியப் பிரச்சினையையும் மிக ஆழமாகப் பேசுகிறது.
 
தங்களின் அடையாளத்தைத் தேடிக் கொண்டிருக்கிற ஒரு கணவன் மனைவி அல்லது பெற்றோர்... என எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆம் அவர்கள் இரு குழந்தைகளின் தாய் தந்தை. இந்த நான்கு கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இந்த “Along the Ridge” படம் பிரகாசிக்கத் தொடங்குகிறது.
Picture
இந்தியாவில் மலைபோல் விவாகரத்து வழக்குகள் குவிந்து கிடக்கிறது அல்லவா? அதற்கான காரணிகளை விட்டுவிடுவோம். அவர்களின் குழந்தைகள் அம்மா அல்லது அப்பா யாரேனும் ஒருவர் கவனிப்பில் பந்தாடப்பட, அந்தக் குழந்தைகள் முதிர்ச்சியற்ற நிலையில் இந்த உலகத்தை எவ்விதம் காண்கிறார்கள் என்ற கோணத்தை நாம் யோசித்ததுண்டா?
 
அதற்காக இந்தப்படம் விவாகரத்து பற்றி பேசுகிறது என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம். அப்படியான ஒரு சூழல் படத்தில் நிலவுகிறது. அவ்வளவே. அதாவது, அப்பாவின் அரவணைப்பில் வளரும் 11 வயது சிறுவன் ஒருவனை, அவன் பார்வைக் கோணத்தின் காட்சிகளைப் பிரதானப்படுத்துகிறது படம்.
 
ரெனாடோ எனும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் Kim Rossi Stuart. இவரே இப்படத்தின் இயக்குனர் என்பது இன்னும் சிறப்பு. தன் அடையாளத்தைத் தேடி அடையத் துடிக்கும் பெற்றோர்களாக இப்படத்தில் வரும் ரெனோடா கதாபாத்திரத்தையும், ஸ்டெஃபானியா (Barbora Bobulova) கதாபாத்திரத்தையும் அணுக வேண்டியிருக்கிறது. இவற்றை அவர்களின் பதினொரு வயது மகன் டாமியும் (Alessandro morace) மகள் வயோலாவும் (Marta Nobili) எந்த மாதிரிப் புரிந்து கொள்கிறார்கள்... அவர்கள் குழப்பங்களுக்கான தீர்வை பெற்றவர்களால் தர முடிந்ததா என நீள்கிறது திரைக்கதை.

Picture
​டாமி, வயோலா இருவரும் அப்பாவின் நிழலிலேயே வளர்கிறார்கள். அவர்கள் தேவைகளைப் பார்த்துப் பார்த்து நிறைவேற்றுகிறார் ரெனாடோ. தாய் இல்லாமல் உடைந்த குடும்பத்தின் மென்சோகச் சூழல் அந்த வீடு முழுக்கச் சூழ்ந்திருந்தாலும் ரெனாடோவின் அன்பு அத்தனையையும் துடைத்தெறிகிறது. ரெனாடோ திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். மனதுக்கு நிறைவான வேலை. வாழ்க்கை தென்றல் மாதிரி போய்க் கொண்டிருக்கையில் புயலாய் அந்த வீட்டில் நுழைகிறாள் ஓடிப்போனதாய் சொல்லப்படும் தாய் ஸ்டெஃபானியா. இப்போது இந்தச் சூழலை நன்கு கவனியுங்கள். இந்திய விவாகரத்துச் சம்பவங்களுடன் இதைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என்பதாலேயே மேலே அவ்வாறு குறிப்பிட்டேன்.
 
அவளிடம் முதலில் வயோலா ஒட்டிக் கொள்கிறாள். அவளை வரவேற்கிறாள். கட்டியணைத்துக் கொள்கிறாள். பெண் பிள்ளைகளின் இயல்பான குணாதிசியங்களின் பிரதிநிதி போல வயோலாவின் பாத்திர வார்ப்பு இருக்கிறது. ரெனாடோ முதலில் கன்னாபின்னாவென்று கோவப்பட்டாலும் பிறகு மனம் மாறுகிறான்.  பிள்ளைகளுக்காக ஒரு தகப்பன் சாமியாய் சிந்திக்கிறான். அவளை ஏற்றுக் கொள்கிறான்.
 
இங்குதான் டாமியின் கதாபாத்திரம் மற்ற பாத்திரங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது. படம் அவனைத்தான் குவியப்படுத்துகிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். அம்மாவிடம் ஒட்ட மறுக்கிறான். அமைதியாய் வெறித்துப் பார்க்கிறான். பதினோரு வயதுக்கான உற்சாகமோ துள்ளலோ அவனிடம் இல்லை ஆனால் புத்திசாலி. தனக்கான ஒரு உலகை சிருஷ்டித்துக் கொண்டு கொண்டு அதில் ஜீவிக்கிறான். அந்த வீட்டில் அவனுக்கென்று தனிமையான ஒரு பகுதியை அவனே தேர்ந்தெடுக்கிறான். அங்கிருந்து காணும் காட்சிகள் அவனுக்கு ஆசுவாசமாக இருக்கிறது என்பதை அவன் சொல்லவில்லை என்றாலும் அவன் கதாபாத்திரத்தின் தன்மை சொல்கிறது.
 
ரெனாடோ தன் மகனைப் பார்த்துக் காரணம் கேட்கிறார். "அம்மா மறுபடி போயிருவா..." என்பதே அவன் பதிலாக இருக்கிறது. அது விடையாக மாறப்போகிற நாட்களும் தூரத்தில் இல்லை என்பதை ரெனாடோ, வயோலா அப்போது உணர்ந்திருக்கவில்லை. யெஸ். டாமி ஒரு கல்லூளிமங்கன் என்று நாமே ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாம்.
 
ஸ்டெஃபானியாவின் வருகைக்குப் பின் ரெனாடோவுக்கும் வயோலாவுக்கும் வாழ்க்கை மிகவும் அற்புதமாகக் கழிகிறது ஆனால் டாமியிடம் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல் இயல்பாகவே இருக்கிறான். கொண்டாட்டங்களில் அவன் மனம் லயிக்கவில்லை.
 
இந்த டாமி கதாபாத்திரத்துக்காக இயக்குனர் நிறைய பள்ளிகளுக்குச் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை ஆடிஷன் செய்து இறுதியாக Alessandro morace ஐ தேர்வு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Picture
படத்தில் நெகட்டிவான கேரக்டர்கள் என்று யாரையும் வகைப்படுத்த முடியாது. எல்லோருக்கும் ஏதோ ஒரு தேவை இருக்கிறது. அவை அன்பாக, கனவாக, லட்சியமாக எனப் பல்வேறு வடிவங்களில் நிறைந்து கிடக்கிறது. படத்தில் இடம்பெறுகிற ஸ்டெஃபானியா, டாமி இடையிலான ஒரு உரையாடல் இதையே அழுத்தமாய் வலியுறுத்துகிறது.
 
தன்னோடு இணக்கமாய் இருக்க மறுக்கும் மகனிடம் ஸ்டெஃபானியா காரணத்தைத் தேட அவன் இப்படிச் சொல்கிறான். "இத்தனை நாள் எனக்கு இப்படியே பழகிடுச்சு. இன்னைக்கு நீங்க வந்துட்டீங்க. ரொம்ப சந்தோஷம். ஆனா ஒங்களோட என்னால கொண்டாட்டமா இருக்க முடியாது. திரும்ப நீங்க போய்ட்டீங்கன்னா எனக்கு கஷ்டமாகிடும்ல."
 
கண் கொட்டாமல் மகனையே பார்த்துக் கொண்டிருக்கிற அவள் தன் பக்க நியாயங்களையும் தேவைகளையும் அவனுக்கு எடுத்துச் சொல்கிறாள். இப்படி ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் தங்கள் செய்கைகளுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள் ஆனால் படத்தின் அடி நாதமே இதில் அன்பும் அடங்குகிறது என்பது தான்.
 
டாமியின் கணிப்பு உண்மையாகிறது. ஸ்டெஃபானியா மீண்டும் வெளியேறுகிறாள். ரெனோடா கிடந்து தவிக்கிறான். வயோலா கதறித் தீர்க்கிறாள் ஆனால் டாமி அமைதியாய் இருக்கிறான் ஆனாலும் பெரும் வலியைச் சுமந்து கொண்டிருக்கிறான். இதற்குப் பிறகான அவர்களின் சமாதானம் எழுத்தில் அடங்காதது. ரெனாடோ தன்னைத்தானே தேற்றிக் கொண்டு சலனமில்லாமல் நிற்கிற மகனைத் தேற்றுகிற காட்சி அவ்வளவு வலியைக் கடத்துகிறது.
 
ரெனாடோ வேலை செய்கிற இடத்தில் பிரச்சினையாகி வேலை இழந்து, மகன் எப்படியும் நீச்சல் போட்டியில் வென்று விடுவான் என்று நம்பிக்கையாய் இருக்கிறான். அது ஒன்றுதான் தனக்கு ஆறுதலாக அமையப்போகிறது என்று எதிர்பார்த்திருக்க அங்கும் ஏமாற்றம் கிடைக்கிற போது உடைந்து நொறுங்குகிற காட்சியெல்லாம் அல்ட்டிமேட். அழகியல்களைக் கொண்டிருந்தாலும் அதற்குச் சமமான அபத்தங்களையும் கொண்டிருக்கிறது இந்த வாழ்வு என்கிறார் இயக்குனர்.
 
மனிதர்கள் வகுத்த சில நியதிகளுக்குக் கட்டுப்படுபவர்கள் இங்கு சீரான வாழ்வை வாழ்கிறார்கள். மீறத் துடிப்பவர்கள் ஒரு கட்டத்தில் எந்தப்பக்கமும் போக முடியாமல் தடுமாறி நிற்கிறார்கள். குடும்பம் என்பதை அடிமைத்தனமாய் நினைக்காமல் அதை கமிட்மெண்டாய் வாழ்க்கையின் அர்த்தமாய் உணர்வதே சிறப்பு என்பதை கலவையான உணர்வுகளினூடே அழுத்தமாகச் சொல்லி அதிர வைக்கிறார் இயக்குனர்.

Picture
டாமியின் பள்ளி நண்பர்கள் சிலர் அவனிடம் அவன் தாய் பற்றிச் சில கற்பனைகளை கிண்டலாய் சொல்கின்றனர். அது அவனுக்கு ஒரு துயரமான கனவாய் வடிவம் தருகிறது. அவளை யாரோ பிய்த்துத் திண்பது போலக் கனவு காண்கிறான். அது அவனுக்குக் கடுமையான ஒரு மனநிலையைத் தருகிறது. தவறு ஏதுமில்லாமலேயே தான் தண்டிக்கப்படுவது அந்தச் சிறுவனுக்குப் புரிகிறது. (இக்காட்சியில் ஸ்டெஃபானியா அரை நிர்வாணமாய் தோன்றுவார். கதைக்கு மிக முக்கியமான காட்சி இது)
 
படத்தின் கதையில் பெரிதாய் தொடர்பு இல்லாவிட்டாலும் சில நிதர்சனங்களை ஆங்காங்கு தூவிச் செல்கிறார் இயக்குனர். வயோலா டீன் ஏஜில் இருப்பதால் தன் தம்பி டாமியிடம் அந்த வயதிற்கே உரிய குறும்புடன் பாலியல் சார்ந்து சில விளையாட்டுகளை முயற்சிப்பாள். அது மிக இயல்பாக படத்தின் கதையோடு மெல்லிய இழையாய் சொல்லப்பட்டிருக்கும்.
 
வார்த்தைகளில் அன்பை சொல்ல முற்பட்டால் அங்கே கபடங்களுக்கு இடங் கொடுக்க நேரிடும் என்பதால் படத்தில் அன்பு என்கிற அதி அற்புதமான விஷயம் உணர்வுகளால் சொல்லப்பட்டிருக்கும். வெற்றுப்பார்வை, அழுகை, அமைதி, சிரிப்பு என ஒவ்வொரு வார்த்தையில்லா நிகழ்வுகளுக்குப் பின்னணியிலும் இந்தப்படம் பேரன்பைச் சுமந்து கொண்டிருக்கும்.
 
இறுதியாய் தன் தாய் விட்டுச் சென்ற குறிப்பு ஒன்று டாமியிடம் வந்து சேரும். அதில் ஸ்டெஃபானியா இப்படிச் சொல்லியிருப்பாள். "நான் உன்னை விட்டு இந்த உலகில் எங்கும் இருக்கலாம். ஆனால் என் அன்பும் நினைப்பும் உன்னைச் சுற்றியே இருக்கும். ஒரு கட்டத்தில் நீ அதை உணர்வாய்".
 
டாமியிடம் இப்போது மாற்றம் ஏற்படுகிறது. தன் தாயின் முடிவை அவன் ஏற்றுக் கொள்கிறானோ இல்லையோ அவளைப் புரிந்து கொள்கிறான். மெல்ல தன் இறுக்கங்களிலிருந்து வெளியே வருகிறான். அன்பும் கருணையும் மென்மையும் கொண்ட கம்பீர ஆணாக அவன் உருவாகிக் கொண்டிருக்கிறான் என்று ரெனாடோ நம்பத் தொடங்குகிறான். அன்பைத்தவிர அத்தனையும் கடந்து போகட்டும் என்று நம்மை நினைக்க வைப்பதுதான் இப்படத்தின் வெற்றி. "Children's are watching us" என்ற இத்தாலிய படத்தைத் தழுவி மீண்டும் இத்தாலியிலேயே எடுக்கப்பட்ட இந்தப்படம் 2006 ல் வெளிவந்தது. பல்வேறு உலகப்படவிழாக்களில் திரையிடப்பட்டு இருபதுக்கும் க்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றுள்ளது.

Picture
படம் : Along The Ridge (Anche libero va Bene)
நடிகர்கள் :
Kim Rossi Stuart
Alessandro Morace
Marta Nobili
Barbora bobulova
படம் வெளிவந்த ஆண்டு : 2006
பூர்வீகம் : இத்தாலி 

5 Comments
Abdul hakkim
9/19/2019 09:35:11 am

வாழ்த்துகள் ராஜ்குமார். அன்பே உலகை ஆளும்!!

Reply
Iyappan giri
9/19/2019 09:13:58 pm

வாழ்த்துக்கள் டா குண்டா😘

Reply
Seethakkathi
9/21/2019 06:21:34 pm

நோ வேர்ட்ஸ்..

சில இடங்களில் உணர்கள் இறுகிப்போவதையும் சில இடங்களில் கண்ணீர் ததும்புவதையும் தவிர்க்க முடியவில்லை படிக்கும்போது...

படைப்போடு ஒன்றிப்போய் உள்வாங்கி எழுதிய வெகு நேர்த்தியான விமர்சணம். வாழ்த்துக்கள் தம்பி ராஜ்குமார். இந்த துறையில் உனக்கு பெரிய எதிர்காலம் இருப்பதாக நம்புகிறேன் வாழ்த்துகிறேன் பிரார்த்திக்கிறேன்.

Reply
கோ. இராசராசன் link
9/22/2019 11:43:14 pm

ஒத்த செருப்பு - படம் பாக்கும்போது ஒன்னோட நெனப்பு வந்துச்சுப்பா. பாத்தா அத பத்தியும்...
வாழ்த்துக்கள்ப்பா. அருமையா இருக்கு.

Reply
SOORAJ
10/1/2019 12:02:35 pm

நேர்த்தி..!

Reply



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    September 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.