Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் - வாசிப்பனுபவம் – சத்யா GP

1/2/2020

0 Comments

 
தொடர்ச்சியாக ஓராண்டுக்கும் மேலாக அகல் மின்னிதழில் கவிதைகள், கட்டுரைகள், வாசிப்பு அனுபவங்கள், சிறுகதைகள் என எழுதி வரும் ஸ்ரீமதி. ஜான்ஸி ராணி அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு “ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்”
 
எழுதுவதைத் தாண்டி புத்தகங்கள் படிப்பதிலும் கவிஞர் ஆர்வம் காட்டுபவர். அகல் மின்னிதழ் பிரசுரம் வெளியிட்ட ஸிடோர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்தார். புத்தகம் வாங்கினார். அதன் பிறகு என்னுடைய இரு புத்தகங்களையும் வாங்கி ஊக்குவித்தார். புத்தகம் பற்றி தம் கருத்துகளையும் வெளியிட்டு சிறப்பித்தார். மனோதத்துவம் படித்தவர் என்ற தகவல் கிடைத்தவுடன் அது தொடர்பாக நிறைய விஷயங்கள் இவரிடம் கேட்டுப் பெற்றேன். பல்வேறு தலைப்புகளில் அத்துறை பற்றி இவரிடம் விவாதித்து அகலில் கட்டுரைகள் எழுதும்படி வேண்டினேன். மிகச் சிறப்பான முறையில் எழுதித் தந்தார்.    

“ஆத்ம பலம் தா மனோபலம் தா” என்ற தலைப்பை சொல்லி அது பற்றி பேசி நான் ஒரு கட்டுரை கேட்க, சலிக்காது எழுதித் தந்தார்.
 
“இது ரெகுலர் டெம்ப்ளேட்ல இருக்கு ஜி, நீங்க “mental strength” என்கிற பதத்தை அடிப்படையா வெச்சு அறிவியல் பூர்வமா ஒரு விளக்கம் தருவது போல எழுதித் தாங்க” என்று கேட்டேன். சிறிதும் முகம் சுளிக்காது மாறுபட்ட ஜானரில் அந்த பதத்தை எடுத்தாண்டு எழுதித் தந்தார்.
 
இவரிடம் இன்னொரு சிறப்பம்சம், கவிதையாகட்டும், கட்டுரையாகட்டும், சிறுகதையாகட்டும் (அகல் சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றுக்கு பரிசும் கிடைத்திருக்கிறது) அதனதன் வடிவை மாற்றாமல் துல்லியமாக எழுதுவார். கடவுள் கொடுத்த வரமாக இதைக் கருதுகிறேன்.
 
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் இடம் பெற்றுள்ள முதல் கவிதையான “முழு முதற் கடவுள்” பற்றி சொல்ல வேண்டும். இவர் எழுதிய கவிதை ஒரு சஞ்சிகையில் பிரசுரமாகி இருந்தது அது பற்றி ஃபேஸ்புக்கில் பதிவெழுதி இருந்தார். நான் எதுவுமே சொல்லவில்லை. வாட்ஸப்பில் ஒரு கோப இமோஜியை மட்டும் அனுப்பி வைத்தேன். அன்று முழுதும் மொபைல் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியாத ஒரு பணி நிமித்ததில் சிக்கிக் கொண்டேன். மாலை ஏழு மணியளவில் டேட்டாவை உயிர்ப்பித்து ஃபேஸ்புக்கை அசுர கதியில் ஆராயும் போது வாட்ஸப் நோட்டிஃபிகேஷன் ஒன்று, கவிஞரிடமிருந்து!
 
“கவிதை, கோபமா ஜி?”
 
அந்தக் கவிதை தொடர்பாக மறுநாள் அரை மணித்தியாலத்திற்கு தர்க்கம் செய்ய பொறுமையாக அனைத்தையும் கேட்டு பதிலளித்தார். அதில் முத்தாய்ப்பாக சொன்னது “என் இஷ்ட தெய்வமே விக்ன விநாயகர் தான், என்கிட்ட 30 க்கும் மேல வித விதமான பிள்ளையார் விக்ரஹங்கள் இருக்கு”
 
பொதுவாக நாம் வணங்கும் கடவுளின் உருவங்கள் அது சிவனோ, விநாயகரோ, பெருமாளோ, இயேசுவோ, உருவம் இல்லை என்றாலும் அல்லா - இறைவன் அவன் என்று ஆண் பால் சார்ந்து புழங்கும் கடவுள்களை என் மனம் எளிதாக ஏற்றுக் கொள்ளும். மனிதர்களை தெய்வம் என்று உருவகப்படுத்தும் போது பெற்ற அம்மா போன்ற பெண் பால் மனிதர்களை கடவுளாக விகல்பமின்றி ஏற்கும் அதே மனம் ஆண் பால் மனிதர்களை தெய்வமாக உருவகப்படுத்துவதை ஏற்க மறுக்கிறது. (மனோதத்துவம் படித்த கவிஞர் தான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்)
 
அந்த விவாதத்தின் இறுதியில் நான் சொன்னது “புனைப் பெயர் சத்யா ஆனால் என்னோட இயற் பெயர் கணேஷ், என் கோபம் உங்களுக்குப் புரியும்னு நம்பறேன் ஜி” என்று நிறைவு செய்தேன். வீட்டில் இப்புத்தகத்தை வாசித்த என்னைப் பெற்ற அம்மா சொன்னது “முதல் கவிதையே அட்டகாசமா இருக்கு, தனித்துவமா இருக்கு”.
 
தான் எழுதியவற்றிலிருந்து மிக கவனமாக தேர்ந்தெடுத்து சில கவிதைகளை முதல் தொகுப்பில் சேர்த்திருப்பதில் கவிஞரின் மெனக்கெடல் நன்கு புலப்படுகிறது.
 
முழு முதற்கடவுள் விக்ன விநாயகரிலிருந்து ஆரம்பிக்கிறார். பெண் சார்ந்த பெண் பார்வை பொதிந்த பெண் கஷ்டங்களைப் பேசும் கவிதைகளே இத்தொகுப்பில் ஏராளமாக உள்ளன. தொகுப்பின் தலைப்புக்கு பொருத்தமானதாகவும், அழகு சேர்ப்பதாகவும் இருக்கின்றன. இறுதியில் மரணத்தைப் பற்றிய கவிதையுடன் தொகுப்பை நிறைவு செய்கிறார்.
 
ஒரு சிறந்த சிறுகதைக்கான இலக்கணமாக அதில் பாண்டித்தியம் பெற்றவர்கள் சொல்வது :  
“சிறுகதைக்கு முடிவென்பது கிடையாது, சரியான இடத்தில் நிறுத்துவது என்றே நாம் பார்க்க வேண்டும், நிறுத்தும் போது வாசிப்பவர்களுக்கு ஒரு அதிர்வை அச்சிறுகதை ஏற்படுத்த வேண்டும்”
 
கவிஞரின் பல கவிதைகள் அத்தகையதொரு பண்பைக் கொண்டிருக்கின்றன. கவிதை நிறைவடையும் போது ஒன்றிப் போய் வாசிப்பவர்களின் மனதை ஆழமாக உலுக்கும் கண்ணிகளை தன்னுள்ளே பல கவிதைகள் புதைத்து வைத்து தக்க சமயத்தில் வெடிக்கின்றன.
 
“என் கேள்வியெல்லாம்
நான் புலியோ பசுவோ?!”
 
“பெண்ணியக் கவிதைகளிட்டு
ஓராயிரம் லைக்குகள்
வாங்குதல் சுலபம்
கொஞ்சம் நிமிர்ந்து பார்
உன் மனைவியையும்”
 
“நியாயத்திலிருந்து
நியாயப்படுத்துதலுக்கு
நகர்ந்த பிறகு
அது எதுவாய்
இருந்தாலென்ன”
 
இப்படி நிறைய சொல்லலாம்.
 
பொதுவாக கவிஞர்களுக்கு உவமானங்கள் இயற்கையிலிருந்து வற்றாமல் கிடைக்கும். அவர்களுக்கு இயற்கையானது ஒரு அமுதசுரபி ஆனால் நம் கவிஞருக்கு சிட்டிகை உப்பு, தாளிக்கும் கடுகு கூட வசப்படுகிறது.
 
“இனிப்பின் சுவைகூட்டும்
சிட்டிகை உப்பு
நீ கண்டுகொள்ளாமல்
நடிக்கும் பாவனைகள்”
 
உப்பு மட்டும் சேர்த்து எலுமிச்சை சாறு அருந்தும் குழுவினர்களில் முதன்மையானவன் நான் ஆனால் ஜீனி சேர்த்து சாறு குடிப்பவர்கள் சிட்டிகை உப்பு சேர்த்து ஜீனி கரைந்த குளிர் ஜலத்தில் தயாரித்த எலுமிச்சை சாறை அருந்தும் போது வெளிக்காட்டும் முகபாவம்... அவர்களால் இக்கவிதையினை உணர்வுப்பூர்வமாகவும் அனுபவப்பூர்வமாகவும் ரசித்து லயித்துக் கொண்டாட முடியும்.
 
தொகுப்பை படிக்கும் போது அடிக்கடி படித்து சலித்த வார்த்தைகள் எதையும் கவிஞர் பயன்படுத்தக்கூடாது என்ற பரிதவிப்பு வெளிப்பட்டது. கவிஞரும் ஏமாற்றவில்லை. இருப்பினும் மதுப்போத்தல் என்ற வார்த்தையை ஓரிரு இடத்தில் பிரயோகித்து கவிதைக்குரிய நவீன இலக்கணத்தை சுட்டி இருக்கிறார். 
 
ஒரு தேர்ந்த கவிஞரின் தொகுப்பாகவே இப்புத்தகம் மிளிர்கிறது. கவிஞருக்கு இது முதல் தொகுப்பு என்று சொல்ல இயலாது.
 
சற்று மாறுபட்டு எழுதப்பட்ட கவிதைகள் கொண்ட இத்தொகுப்பிற்கான அட்டைப்படத்திற்கு டிஸைனர் இன்னும் சற்று மெனக்கெட்டு இருக்கலாம். சராசரியான முகப்புப் படம் தொகுப்பின் வீரியத்தை எடுத்துக் காட்டாது நம்மைக் கடக்கிறது.
 
நண்பர்கள் அவசியம் வாங்கி வாசிக்க வேண்டும் என்ற என் பரிந்துரையுடன் நிறைவு செய்கிறேன்.
 
கவிஞர் மேலும் பல சிறப்பான கவிதைத் தொகுப்புகளை வெளியிட வேண்டும் என்று கோரி அதற்கு எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
 
கவிதைத் தொகுப்பின் பெயர் : ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்
ஆசிரியர் : ஸ்ரீமதி. ஜான்ஸி ராணி
வெளியீடு : வாசகசாலை பதிப்பகம்

 
இந்நூலைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் : 9942633833/ 9790443979


0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    January 2020

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.