Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

வாசிப்பனுபவம் – சத்யா GP

1/2/2020

0 Comments

 
​ஸ்ரீமதி. ஜெயந்தி ஜெகதீஷ் அவர்கள் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பின் பெயர் “ரெஜிஸ்தர் ஆபீஸ் மசிகுண்டு”
 
நூலாசிரியர் இரு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். நூல்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது அவரின் மூன்றாவது புத்தகம்.
 
இந்தத் தொகுப்பில் மொத்தம் பதினைந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. நான்கைந்து பக்கங்களில் நிறுத்தப்படும் சிறுகதைகள் இத்தொகுப்பில் அதிகமாக காணப்படுகின்றன.
 
பொதுவாக சிறுகதைத் தொகுப்பு அல்லது கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றை நான் படிக்கத் துவங்கினால் குறைவான பக்கங்களைக் கொண்ட ஆக்கங்களை முதலில் படிப்பேன். அதற்கடுத்து சாப்பாடு தொடர்புடைய தலைப்பில் ஏதேனும் இடம் பெற்றிருந்தால் அதைப் படிப்பேன். சின்ன சின்ன சிறுகதைகள் அதிகம் இத்தொகுப்பில் இருப்பதால் எளிதாக, குறைவான நேரம் ஒதுக்கி இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து விடலாம். நூற்றி இருபது பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.
 
நூலாசிரியர் பெண்ணாக இருந்தாலும் ஆண் பார்வையில் நிறைய கதைகளை எழுதி இருக்கிறார். இது குறிப்பிடப்பட வேண்டிய ஆற்றல். சற்று விரிவாக சொல்ல வேண்டுமெனில் சமூகத்தை, தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஆழமாக அவதானிப்பதோடு, ஒரு விஷயத்தை அணுகுவதில் ஒவ்வொருவரின் பார்வையும் எப்படி இருக்கிறது என்பதை பாலின பேதமின்றி புரிந்து கொண்டால் மட்டுமே எழுத  சாத்தியப்படும். நூலாசிரியருக்கு சாத்தியமாகி இருக்கிறது.
 
“கொப்பரை”, “கொலுபொம்மை” – இந்த இரு சிறுகதைகளும் அகல் மின்னிதழ் நடத்திய சிறுகதைப்போட்டிக்காக ஆசிரியர் அனுப்பி இருந்ததால் அந்த சிறுகதைகளுடன் எனக்குப் பரிச்சயம் உண்டு.
 
வாழ்க்கையின் எதார்த்தம் என்ன, வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நம் வாழ்வில் நடந்தேறும் சம்பவங்கள் போன்றவை நமக்கு உணர்த்தும் சங்கதிகள் என்ன? இப்படி பல்வேறு வீரியமான புள்ளிகளை இணைத்து நேர்த்தியான கோலமாக “கொப்பரை” சிறுகதை படிக்கும் நம்முள் படர்கிறது. நான்கு பக்கங்கள் கொண்ட சிறிய கதையானாலும் அது பேசும் விஷயங்கள் மிக மிக கனமானவை.
 
பெண்ணின் பார்வையையும், ஆணின் பார்வையையும் சரி சமமான விகிதத்தில் கொண்டதாக எழுதப்பட்ட சிறுகதை “கொலு பொம்மை”. “கொப்பரை” சிறுகதையின் பேசு பொருளுக்கு அப்படியே எதிரான கருத்தைக் கொண்ட கதை இது. இரண்டையும் படிக்கும் வாசகர்கள், “ஆசிரியரின் பார்வை சரியானது” என்று படித்து முடித்து நினைக்கும் அந்த மனநிலையில் தான் நூலாசிரியர் வெற்றி பெறுகிறார். ஒரு கதை சொல்லிக்கு அவசியம் தேவையான ஆற்றல் இது.
 
ஆணின் பார்வையில் சரளமாக எழுதும் நூலாசிரியர் அதில் முக்கிய கருவாக கையாளுவது “ஒரு ஆண் தன் காதலை பெண்ணிடம் வெளிப்படையாக சொல்லாமல் மனதுக்குள் பூட்டி வைத்து மருகுவது”. சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல் இதை கையிலெடுத்து லாவகமாக ஆசிரியர் நிறைய எழுதுகிறார்.
 
இத்தொகுப்பின் மாஸ்டர் பீஸ் என நான் நினைக்கும் சிறுகதை “எனக்குள் நான்” ஒரு பெண்ணின் உடல் சார்ந்த பிரச்சனைகளை பேசும் சிறுகதை இது. துவக்கத்திலிருந்து கதையை நிறுத்துவதற்கு சற்று முன்பு வரை ஒரு பார்வையில் பேசிகொண்டு இருந்த கதை சடாரென வேறொரு பார்வைக்கு மாற்றம் அடைகிறது. படிப்பவர்கள் மறக்காமல் இருக்கும் விதத்தில் கதையை நிறுத்த அந்த பார்வை பேருதவியாக இருக்கிறது.
 
நூலாசிரியர் இயல்பில் கவிஞர். ஒவ்வொன்றையும் கவித்துவமான பார்வையில் அணுகும் தன்மை கொண்டவர். அந்த குணாம்சம் சில சிறுகதைகளிலும் வெளிப்படுகிறது, கவிதை வேறு, கதை வேறு.
 
அதிகாலை நேரத்தில் வாகனம் ஓட்டியபடி சாலையில் பயணிக்கும் தருணத்தில் ஒரு சூரியோதயத்தை நாம் பார்த்தால் அதில் பரவசமாகி நாம் கவிதை எழுத முடியும். அதையே கதையாக எழுத முடியாது. அந்தக் காட்சியை ஒரு பேசு பொருளாக எடுத்துக் கொண்டு அந்த தரிசனம் வாழ்க்கையில் எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தை எவ்வாறு நினைவுபடுத்துகிறது என்றெல்லாம் விரிவாக சொல்லி வாக்கியங்களை அடுக்கி கதையாக எழுதலாம்.
 
இத்தொகுப்பில் கவிதைப்பார்வையில் எழுதப்பட்ட சில ஆக்கங்கள் உண்டு.
 
“ரெஜிஸ்தர் ஆபீஸ் மசிகுண்டு” சிறுகதை மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. முக்கியமாக சம்பவங்களை விவரிக்கும் பாங்கு, எழுத்து நடை, சொல்ல வந்த விஷயத்தை நாசுக்காக அதே சமயம் வளர்த்தாமல் நறுக்கென எடுத்து சொல்லும் விதம் என எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்குகிறது.
 
என் பார்வையில் “வேலைக்காரி” சிறுகதை பெரியதொரு கவனத்தை ஈர்க்கவில்லை.
 
கதை எழுதுபவர்கள் அனைத்தையும் படிப்பவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் எழுதுவது தேவையற்றது. படிக்கும் வாசகன் புத்திசாலி என்ற எண்ணத்துடன் எழுத்தாளர் எழுத வேண்டும். சில விஷயங்களை வாசகனின் யோசனைக்கு விட்டுவிட வேண்டும் என்ற பார்வை எழுத்துலகில் பரவலாக பேசப்பட்டு இப்போது அனைவரும் அதை ஏற்றுக்கொண்ட பார்வையாகிவிட்டது. “நீட்சி” என்ற சிறுகதை, “ஒரு கோணத்தை மட்டும் படிப்பவர்களை யோசிக்க வைப்பது” என்ற பார்வைக்குள் எழுதப்படாமல் ஒட்டு மொத்த முழு சிறுகதையையும் படிக்கும் வாசகனின் புரிதலுக்கு ஏற்றார் போல் என்ற பதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த யுக்தி மிகச் சிறப்பானதொரு வாசிப்பு அனுபவத்தை எனக்குத் தந்தது.
 
பதினைந்து சிறுகதைகளையும் எடுத்து பதினைந்து பத்திகள் எழுதுவதைக் காட்டிலும் ஒரு பானை சாதத்திற்கு சில பருக்கைகள் பதம் போதுமானது என்ற சொலவடைக்கு ஏற்ப சில சிறுகதைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
 
நூலாசிரியருக்கு சிறுகதை வசப்பட்டுவிட்டது. கவிஞர் பார்வையிலிருந்து விலகி (கதை எழுதும் போது மட்டும்) தொடர்ந்து சிறுகதைகள் எழுத வேண்டும். எழுதுவார் என்பது என் நம்பிக்கை.
 
ஒரு யதார்த்தமான இயல்பான வாழ்க்கை அனுபவத்தை இந்த சிறுகதை தொகுப்பானது வஞ்சனை இல்லாமல் வழங்குகிறது. நண்பர்கள் தொகுப்பை வாங்கிப் படித்து தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்.
 
சிறுகதைத் தொகுப்பு : ரெஜிஸ்தர் ஆபீஸ் மசிக்குண்டு
ஆசிரியர் : ஸ்ரீமதி. ஜெயந்தி ஜெகதீஷ்
 
இந்நூலைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 9445912564          

 
 
 
 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    January 2020

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.