Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

வாசிப்பனுபவம் – சுப்பா ராவ் சந்திரசேகர ராவ்

1/2/2020

0 Comments

 
வெளியேற்றம்
புனைவின் உச்சமா அல்லது உண்மையின் உச்சமா?
 
இரண்டு நாட்களாக யுவன் சந்திரசேகரின் வெளியேற்றத்தை கீழே வைக்காமல் படித்துவிட்டு அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். கதைக்குள் கதைக்குள் கதை என்று நம் பாரம்பரியக் கதைசொல்லும் மரபின் நீட்சியாகவே இருக்கும் யுவனின் படைப்புகள் எனக்கு எப்போதுமே பிடித்தமானவை. இந்த நாவலை இத்தனை நாட்களாக எப்படி மிஸ் செய்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
 
யுவனின் எல்லா நாவல்களையும் போலவே இதுவும் 1950களிலிருந்து 2006 வரை நீள்கிறது. அன்றாட வாழ்வின் சகிக்க முடியாத துக்கத்திலிருந்து வெளியேற வழியில்லாத மனிதர்கள் குறைந்தபட்சம் வீட்டை விட்டாவது வெளியேறி சற்று தப்பிக்கலாம் என்று நினைப்பது மனித இயல்பு. இப்படித்தான் இந்த நாவலிலும் வேதமூர்த்தியிலிருந்து ஹரிஹரசுப்ரமணியம், மன்னாதி, சிவராமன், ராமலிங்கம், பால்பாண்டி, குற்றாலிங்கம், வைரவன், கோவர்த்தனம், என்று பலரும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். கதைசொல்லியும் தற்காலிகமாக வீட்டை விட்டு வெளியேறியவன்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. அவர்கள் எல்லாரையும் பிணைக்கும் ஒரு மாயச் சங்கிலியைத் தேடிச் செல்கிறான் நாயகன். நாமும் கூடவே செல்கிறோம்.
 
விதவிதமான மனிதர்கள். விதவிதமான சூழல்கள். வேறுவேறு காலகட்டங்கள். எல்லாவற்றையும் ஒரே சீராகக் கொண்டு செல்கிறது யுவனின் வசீகரமான மாயமொழி. பட்டுநூல்காரர்களின், பிராமணர்களின், செட்டியார்களின், பிள்ளைமார்களின், மறவர்களின் பேச்சு மொழிகள் அத்தனை இயல்பாக இருக்கின்றன. அதிலும் சௌராஷ்ட்டிரர்கள் நாங்க, எங்க, நம்ம என்பதை வேறுவிதமாகப் பயன்படுத்துவதை அப்படியே பயன்படுத்தியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
 
நாவலில் எனக்கு மிகவும் பிடித்தது எல்லா பாத்திரங்களும் நல்லவர்களாக இருப்பது. எல்லா பாத்திரங்களும் நல்லவர்களாக, மிகத் தெளிவோடு பேசுபவர்களாகப் படைக்கும் பிரபலமான எழுத்தாளர்கள் பலரை நாம் அறிவோம். ஆனால் ஏதேனும் ஒரு இடத்தில் ஆமா, இப்படித்தான் ஓவரா நல்லவங்களா இருப்பாங்களாக்கும்… என்று நமக்கு தோன்றும் வகையில் ஏதேனும் ஒரு இடத்தில் செயற்கையாக ஓவர் நல்லவர்களாக இருந்துவிடுவார்கள். இந்த நாவலில் அப்படி இல்லாமல் இயல்பாகவே, தம் கஷ்டங்களையும் மீறி அவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்களது வெளியேற்றம் பெரிய அளவில் அவர்கள் கஷ்டங்களை ஒன்றும் போக்கிவிடவில்லை. ஏதோ ஒருவித நிம்மதி கிடைக்கப் பெறுகிறார்கள். அந்த நிம்மதியில், தம் வெளியேற்றத்தால் ஏற்பட்ட மற்ற இழப்புகளையும் சரி, இப்படித்தான் இருக்கும் என்று எடுத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். இப்படி எத்தனையோ பேரை நாம் நிஜத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு நாவலில் இப்போதுதான் பார்க்கிறோம்.
 
எனக்குப் பிடித்த மற்றொரு அம்சம் இந்த நாவலில் வரும் பெண்கள் – அதுவும் குறிப்பாக அம்மாக்கள். நல்ல அம்மாக்கள், கெட்ட அம்மாக்கள் எல்லோருமே தம் குழந்தைகள் மீது அப்படியொரு பாசமாக இருக்கிறார்கள். சிவராமனுக்கு மட்டும் அம்மாவின் இடத்தில் மன்னி. எல்லா பாத்திரங்களுமே அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்குகிறார்கள். கஷ்டமோ, துக்கமோ வேதனையோ. என்னவாக இருந்தாலும், எந்த அளவிற்குத் தாங்க முடியாமல் இருந்தாலும் அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்கினால் தற்காலிகமாகவேனும் அவை சரியாகின்றன அல்லவா?
 
மனித வாழ்க்கையில் காரண காரியங்கள் சொல்ல முடியாத விஷயங்கள் எவ்வளவு இருக்கின்றன! என்ற ஒற்றை வரியை வைத்து எத்தனையோ மனிதர்களின் விசித்திரமான வாழ்க்கையை நேரில் பார்ப்பது போல எழுதிச் சென்றிருக்கிறார் யுவன். கதையில் வரும் அவை அனைத்துமே நிஜமாக நடந்தவை, வலுவான சாட்சியங்களும் சான்றுகளும் உள்ளவை. ஆனால் கதையில் வரும் தன்னியல்பான நடைமுறை சாத்தியம் உள்ள நிகழ்வுகள் அனைத்துமே கற்பனையானவை! என்று நாவல் பற்றிய தன் பின்னுரையில் சொல்லி முடிக்கிறார் யுவன். நாவலின் வெற்றி எது? கற்பனையின் உச்சமா அல்லது உண்மையின் உச்சமா? என்பதன் விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.
 
இப்படியான உயிரோட்டமான பாத்திரங்களை சமீபகாலத்தில் எந்த நாவலிலும் நான் பார்க்கவில்லை. படித்து முடித்தபின்னும், இதை எழுதி முடித்தபின்னும் மனம் அவர்கள் கூடவே சுற்றிக் கொண்டிருக்கிறது.
 

வெளியேற்றம் – யுவன் சந்திரசேகர்
வெளியீடு - கிழக்குப் பதிப்பகம்.

 
  • “வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்” – ஃபேஸ்புக் குழுவில் வெளியான பதிவு 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    January 2020

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.