Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

Cinema நூலகம் – ராஜ்குமார் பார்த்திபன்

1/2/2020

2 Comments

 
உலகப்படங்கள் என்றாலே பிரெஞ்சு, கொரியன், ஈரானியப் படங்கள் என்று போய்விடுகிறோம். தமிழில் அப்படியான தன்மை கொண்ட படங்களே வருவதில்லையா என்று பொதுவான தமிழ்சினிமா ரசிகர்கள் சிலர் கருதுவது வாடிக்கையான ஒன்று. அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாய்ச் சொல்லிவிட முடியாது. உலகப்படங்களுக்கு நிகராக தரமான காட்சியமைப்புகளுடன் தமிழிலும் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அப்படி வந்த ஒரு தமிழ்ப்படம்தான் 2010ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான நந்தலாலா.
Picture
மிஷ்கின் படங்களில் பிரதானமாய் துருத்தித் தெரிவது படத்தின் அடிநாதமாய் விளங்குகிற அன்புதான். இதற்குச் சிறந்த உதாரணங்களாய் இரண்டு படங்களைக் குறிப்பிடுகிறேன். முதல் படம் பிசாசு. அன்பே உருவான ஒரு பிசாசு... (இங்கு பிசாசு என்பது பெண்ணையோ அல்லது அதீத பாசக்காரரையோ குறிப்பதல்ல.) இருந்தால் அது என்ன செய்யும்... இந்தக்கருவை நேர்த்தியான திரைக்கதை செய்தது ஒருபக்கம். இன்னொன்று மிகச்சமீபமாய் வெளியான துப்பறிவாளன். இந்தப்படத்தில் ஒரு சிறுவன் தன் வளர்ப்பு நாயின் மேல் வைத்த அன்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு மிஷ்கின் கையாண்ட திரைக்கதை உத்தி.
 
மிஷ்கின் படங்கள் எத்தகைய தன்மை கொண்டவை என்பதற்கு இந்த உதாரணங்களே போதுமானவை. நந்தலாலா இதற்கெல்லாம் ஒருபடி மேலேயே அன்பைப் பேசுகிறது.
 
மனப்பிறழ்வு கொண்ட ஒருவன் தான் இருக்கிற காப்பகத்திலிருந்து வெளியேறி தன் தாயைக் கண்டுபிடித்து "ஏன் இத்தனை நாள் என்னைப் பார்க்க வரவில்லை" என்று கேட்டுக் கன்னத்தில் அறைய வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணத்தைத் தொடங்குகிறான். புகைப்படத்தில் மட்டுமே தன்னைப் பார்த்துப் புன்னகைக்கும் தாயைப் பார்த்து அவள் கன்னத்தில் முத்தமிடத் தனியாய்ப் பயணப்படும் சிறுவன் அஷ்வத்ராம் மிஷ்கினோடு சேர்ந்து கொள்கிறான்.
 
இவர்களின் இந்த அன்புப் பயணமே நந்தலாலா எனும் சினிமாவாக கண்முன் விரியத் தொடங்குகிறது.
 
முதலில் இந்தப்படம் தமிழின் நேரடிக்கதை அல்ல என்பதை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். மிஷ்கின் தன் படங்கள் எல்லாவற்றையுமே ஏதாவதொரு படைப்பின் பாதிப்பிலேயே உருவாக்கியிருப்பார். நந்தலாலா படமும் அதறகு விதிவிலக்கல்ல.
 
2009ல் வெளியான ஜப்பானியத் திரைப்படம் "கிக்குஜிரோ" வின் தழுவலாகவே நந்தலாலாவைச் சிருஷ்டித்திருப்பார் மிஷ்கின்.
 
ஆனாலும் தமிழில் இங்கிருக்கிற மண் தன்மைக்கேற்ற, மக்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ற படைப்பாக மாற்றிக் கொடுப்பதும் சாதாரண காரியம் என்று சொல்லிவிட முடியாது. அதை ஒரு சவாலாய் எடுத்து நந்தலாலாவைச் செய்திருப்பார் மிஷ்கின்.
 
ஆற்றுநீர் ஆர்ப்பரித்து ஓடாமல் நிதானமாய் சலசலத்துச் செல்கிறது. நந்தலாலா என டைட்டில்கார்டு ஆற்றுநீர் மேலேதான் மிதக்கிறது. அதில் கிடக்கிற நாணல் புற்கள் ஆற்றுநீரின் வேகங்களுக்கேற்ப அசைந்து கொடுக்கிறது. மனிதர்கள் கொஞ்சமே கொஞ்சம் Flexible ஆக நடந்து கொண்டால் வாழ்வு ஆர்ப்பாட்டமில்லாத தெளிந்த நீரோடை தான் எனச் சொல்லிப் பயணத்தைத் தொடர ஆரம்பிக்கிறார் இயக்குனர். ஆனால் ஒரிஜினலுக்கான எந்த அங்கீகாரமும் படத்தின் டைட்டிலில் இடம்பெறவில்லை என்பது கண்டனத்துக்குரியது.
 
சினிமா என்பது வசனங்களால் நிரம்பியது அல்ல. அது காட்சிமொழி என்பதை இப்படத்தில் மிகச்சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்கள் வசனங்களை வளவளவென்று எங்கும் பேசவில்லை. ஆனால் பல முக்கியமான காட்சிகளில் முடிந்தளவுக்கு வசனத்தைக் குறைத்து பின்னணி இசையிலேயே படத்தை நகரவிடுகிறார்கள். நான்கு பக்க வசனங்கள் தரும் புரிதலை விட இந்த வெற்று அமைதி நம்மை இன்னும் படத்துக்குள் இழுக்கிறது.
 
படத்தில் வருகிற மனிதர்களின் உணர்வுத் தொகுப்புதான் நந்தலாலா முழுமைக்குமான மையப்புள்ளி. எல்லா மனிதர்களுக்குள்ளும் எல்லாமும் உண்டு. நாம் அவர்களை எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்து அவர்களின் ஏதாவதொரு குணம் வெளிப்படுகிறது என்பதைப் படத்தில் வருகிற பல்வேறு வித மனிதர்களின் வாயிலாக அழுத்தமாகக் காட்சி பண்ணியிருக்கிறார்கள்.
 
உதாரணமாய் ஒரு காட்சியைச் சொல்லலாம். மாணவி ஒருத்தி சைக்களிலிருந்து கீழே விழுகிறாள். ஒரு குழந்தைக்கான பரிதவிப்போடு அங்கே ஓடும் மிஷ்கின் அவளின் பாவாடையை முழங்காலுக்கும் சற்றுமேல் தூக்க, அவள் அதிர்ந்து அறைந்து விடுகிறாள். மிஷ்கின் பதிலுக்கு "எச்சை தொட்டு வை. வலிக்காது" எனச் சொல்லும் போது அந்த மாணவியின் ரியாக்சன்... சான்ஸ்லெஸ். தன் தவறை உணர்கிறாள். மிஷ்கினை வாஞ்சையாய் அவள் பார்க்கும் இந்தக்காட்சி ஒரு சோறு பதம். இப்படியான காட்சிகளே படம் முழுக்க விரவிக் கிடக்கிறது.
 
படத்தின் உருவாக்கம் நாடகவியலை ஞாபகப்படுத்துகிறது. ஆம். படத்தின் காட்சிகளில் ஒரு சாலையோ அல்லது வீடோ எதுவாகினும் அங்கு வைக்கப்படும் கேமரா ஃப்ரேமிற்குள் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். நடிக்கிறார்கள். பிறகு அங்கிருந்து சென்று விடுகிறார்கள். அதாவது ஃப்ரேமிலிருந்து வெளியேறுகிறார்கள். ஆனால் அப்படி அவர்கள் வெளியேறிய பிறகும் கேமரா சில நொடிகளுக்கு அந்தச் சூழலிலேயே இருக்கிறது. அங்கு அவ்வளவு சம்பவங்கள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. ஆனாலும் அந்த இடத்தில் பெரிதாய் எந்த மாற்றங்களும் நிகழாமல் இயற்கை மௌனமே சாட்சியாய் நிற்கிறது.
 
படத்தில் பிரதானமாய் குறிப்பிடத் தகுதியுள்ள இரண்டு விஷயங்கள் இசையும் ஒளிப்பதிவும். வசனங்கள் இல்லாத இடங்களிலெல்லாம் பின்னணி இசை நின்று பேசுகிறது. குறிப்பாக பாலியல் தொழிலாளி ஸ்னிக்தா தன் கதையைச் சொல்லி முடித்து "நான் அழுக்காகிட்டேன்" என்று சொல்கிற போது பெய்து கொண்டிருக்கும் மழையைக்காட்டி "அதுல குளி... சுத்தமாகிருவ" என்று மிஷ்கின் சொல்கிற காட்சியில் பின்னணி இசை அவ்வளவு கம்பீரம்.
 
"ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே..." பாடலில் நெகிழ வைக்கிறார்கள்.
அதே மாதிரி மிஷ்கின் சிறுவன் அஷ்வத் ராமின் தாயைச் சந்திக்கிற காட்சி மிக நீண்ட நேரத்துக்கு லாங் ஷாட்டில் காட்டப்படுகிறது. படத்தின் உயிர்நாடியாக விளங்குகிற இந்தக்காட்சியில் எந்த வசனங்களும் இடம்பெறாது. ஆனால் இளையராஜாவின் இசையும் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் மாயாஜாலம் புரிந்து கொண்டிருக்கும். தவிர இப்படத்தின் ஒரு காட்சியின் முடிவு அடுத்த காட்சியில் இருந்து ஆரம்பிப்பதாகக் காட்டப்பட்டிருக்கும் திரைக்கதை உத்தியும் இயக்குனர் ரசனையின் கட்டியம் கூறுகிற சிறப்பான இடங்கள்.
 
உதாரணமாய் பயணத்தின் இடையில் இவர்களோடு வந்து சேருகிற ஸ்னிக்தா ஒரு கட்டத்தில் விடைபெறுகிறார். ஆனால் பிரிய மனமின்றி இரு தரப்பும் பார்த்துக் கொண்டிருக்க காட்சி தாவுகிறது. ஒரு லாரியில் மூவரும் ஒன்றாய்ப் பயணிக்கிறார்கள். இதுபோல் காட்சிகள் படத்தில் நிறைய இடம்பெற்றிருக்கிறது.
 
அஷ்வத்ராமின் பாட்டி, அங்கே வேலை செய்கிற பணிப்பெண், கால்களை இழந்த அதே சமயம் கெத்து காட்டுகிற ஊனமுற்ற இளைஞர், அவருக்கு மருத்துவம் பார்க்கிற மருத்துவர், ஹாரனை திருடியதாரல் மிஷ்கினை அடித்துப் பின்பு அவர் பற்றித் தெரிந்து வாஞ்சையாய் நடந்து கொள்ளும் லாரி டிரைவர், ஐஸ் விற்பவர், அஷ்வத்ராமின் ஆங்கிலம் கண்டு மிரளும் சப் இன்ஸ்பெக்டர், போதையில் உற்சாகமாய் வாகனங்களில் வலம் வருகிற இளைஞர்கள், மிஷ்கின் நடவடிக்கைகள் கண்டு மிரண்டு போகும் புதுமணத் தம்பதிகள் எனப் படம் முழுக்க பல நிறங்களில் மனிதர்கள். அன்பென்ற ஒற்றைக் குடை கீழ் ஒரு புள்ளியல் திடீரெனச் சங்கமித்து அவரவர் இயல்புக்குத் திரும்பும் இடங்கள் என படம் நீரோடை போலவே பயணிக்கிறது.
 
கால்களில் குவியும் கேமரா மிஷ்கின் படங்களின் தனித்துவமிக்க அடையாளம். இந்தப்படத்திலும் அவ்வாறான காட்சிகள் நிறையவே இருக்கிறது. குறிப்பாய்ச் சாலைகளில் மிஷ்கின், அஷ்வத்ராம் நகர்ந்து கொண்டிருக்கிற காட்சிகளை அபாரமாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
 
அஷ்வத்ராமின் தாயை மிஷ்கின் எதிர்கொள்கிற விதமும் அதைத் தொடர்ந்த காட்சிகளும் மிஷ்கின் மனப்பிறழ்வு நோயில் அவர் எந்தக் கட்டத்தில் இருக்கிறார் எனும் கேள்வியை நமக்கு உண்டாக்குகிறது. காரணம் அவ்வளவு முதிர்ச்சியாக அந்தச் சிக்கலைக் கையாளுகிறார். அதே போல தன் தாயைப் பார்க்கிற காட்சியிலும் அதே முதிர்ச்சி வெளிப்படுகிறது. 
​
Picture
இந்தக் குறைகளெல்லாம் இருந்தாலும் கிக்குஜிரோ படத்தின் பாதிப்பு இருந்தாலும் இது மாதிரிப் படத்தைத் தமிழில் நம் மண்ணின் கலாச்சாரப் பின்னணியில் பார்க்கிற போது பெருமைமிகு படைப்புதான் இது என்று ஒப்புக்கொள்ளத் தோன்றுகிறது.
 
அஷ்வத்ராம் கடைசியாய் ஸ்னிக்தாவை தன் தாயாக ஏற்றுக்கொண்டு முத்தமழை பொழிந்து கொண்டிருக்கிறான். நாணல், ஆற்று நீரில் வளைந்து கொடுத்து வாழ்ந்து கொண்டே இருக்கிறது. நடக்கிற சம்பவங்களின் சாட்சியான சாலைகளும் கட்டிடங்களும் அசையாமலேயே மௌனத்தைச் சுமந்தபடி இருக்கின்றன.
 
படம் : நந்தலாலா
நடிகர்கள் : மிஷ்கின், அஷ்வத்ராம், ஸ்னிக்தா அகோல்கர்.
வருடம் : 2010
மொழி : தமிழ்.

 
2 Comments
Abdul hakkim
1/3/2020 04:05:36 pm

அன்பை சொல்லும் கதைகள் அழகானவையாகவே இருக்கிறது

Reply
sooraj
10/16/2024 11:11:52 pm

அருமை...அருமை!

Reply



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    January 2020

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.