Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

ரெடி 1... 2...3... சந்திரயான்ஸ் - கார்த்திக் ஸ்ரீநிவாசன்

11/26/2019

0 Comments

 
பாகம் 3  :  வெற்றியா தோல்வியா?

சமீபத்தில் எனக்கு Whatsapp மூலம் ஒரு meme வந்தது. அதனைப் படித்தவுடன் சற்று மனம் கலங்க நேர்ந்தது, காரணம் அந்த meme சொன்ன விஷயம் ரஃபேல் விமானத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் பூஜை போட்டது குறித்துதான் என்றாலும், அதில் ஒரு வரி சேர்த்திருந்தார்கள் – அப்படித்தான் பூஜை போடுவோம், ஏன், செத்துப்போன சந்திரயான் 2க்கு திவசம் கூட பண்ணுவோம் – என்றது அந்த meme.
 
சந்திரயான் – 2 வெற்றியா தோல்வியா என்று அறிவியல் உலகம் பேசியதை விட மீடியா அதிகம் பேசி இருக்கிறது. மீடியா இது தோல்வி என்றே எழுதி வருகிறது, இந்தியா என்றல்லாமல், உலக மக்களில் பலர் அதனையே நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கட்டுரை மூலம் தெளிவுபடுத்த விரும்புவது ஒன்றே ஒன்று தான் – அறிவியலாளர்கள் எவரும் சந்திரயான் – 2 தோல்வி என்று நினைக்கவில்லை, மீடியா தான் அப்படி மீண்டும்-மீண்டும் எழுதிக் கொண்டு இருக்கிறது. இப்போது அது பற்றிக் கொஞ்சம் பேசிவிடலாம்.
 
சந்திரயான் – 2 என்பது பத்து வருடங்களுக்கு முன் இந்தியா அனுப்பிய சந்திரயான் – 1 இன் நீட்சி என்பது நமக்குத் தெரியும். சந்திரயான் 1 உலகை திரும்பிப் பார்க்க வைத்த விஷயம்! அதன் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவானது. அதனுடன் சில வெளிநாட்டு அமைப்புகளின் கருவிகளும் சென்றது, மற்றும், என்னென்ன ஆய்வுகள் செய்வதற்காக அனுப்பப்பட்டது என்று பகுதி – 1 இல் ஒரு அறிமுகம் பார்த்தோம்.
 
அதன் தொடர்ச்சியாக அனுப்பப்பட விண்கலம் தான் சந்திரயான் - 2. அந்த விண்கலத்துடன் சேர்த்து விக்ரம் என்று பெயரிடப்பட்ட தரையிறங்கு கலம் ஒன்றும், பிரஞான் என்று பெயரிடப்பட்ட ரோவர் (rover – தானியங்கி திரிவாகனம்) ஒன்றும் அனுப்பப்பட்டது.
 
சந்திரயான் – 1 தான் நிலவில் நீர் இருப்பதை முதல்முறையாக ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியது என்பது நம் அனைவருக்கும் தெரியும். சந்திரனில் நீர் திரவ விடிவில் நேரடியாக பரப்பின் மீது இருக்கக் கூடிய சூழல் இல்லை, ஆனால், நீர் சூரிய ஒளி படாத இடங்களில், பாறைகளுக்கு உள்ளும், அடியிலும் பனிப் பாறைகளாக உறைந்த நிலையில் இருக்கலாம் என்று நிறுவியது சந்திரயான் – 1. 


Picture
அதன் தொடர்ச்சியாக நீர் பற்றிய ஆராய்ச்சிக்காக, வடிவமைக்கப்பட்டதுதான் சந்திரயான் – 2. இந்த விண்கலம் எடுத்துச் சென்ற தரையிறங்கு கலம், முதலில் ரஷ்யாவின் உதவியுடன் செயப்படுவதாக இருந்தது. அப்படி செய்திருந்தால் இந்த சந்திரயான் – 2, சென்ற 2013 அல்லது 2014 ஆம் ஆண்டே செலுத்தப்பட்டு இருக்கும். ஆனால், ரஷ்யா இந்தியாவுடன் சேர்ந்து தரையிறங்கு கலம் செய்யும் முடிவினை கைவிட்டதும், இந்தியாவே தனியாக வடிவமைக்க முற்பட்டது. இந்த தரையிறங்கு கலத்தினை வடிவமைக்க ஐ‌எஸ்‌ஆர்‌ஓவுக்கு மூன்றாண்டு காலம் ஆனது! இந்த தரையுறங்கு கலம் தான் சந்திரயான் – 2 இன் பலவீனமான பகுதி! இந்தியாவிற்கு ஒரு கலத்தை மென்னிறக்கம் செய்ய வைத்த முன்னனுபவம் இல்லை என்பதையும் இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மூன்றாண்டுகள் என்பது, அதுவும் முதல் முறை, ஒரு மென்-தரையிறங்கு கலம் வடிவமைக்க மோதுமான காலம் அல்ல என்பது இந்த தொழில்நுட்பப்பிரிவில் பணிபுரியும் சர்வதேச அறிவியலாளர்களின் கருத்தாகும். அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இது போன்ற ஒரு திட்டத்தினை செயல்படுத்த இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆனது! வடிவமைப்பிற்குப் போதுமான நேரம் இல்லாமை மற்றும் முன் அனுபவம் இல்லாமை ஆகியவற்றை கருத்தில் கொண்டே விக்ரம் தரையிறங்கு கலம் பற்றி நாம் பேச வேண்டும். மேலும், அந்த தரையிறங்கு கலமும், அதனுள் இருந்த ரோவரும் சந்திரயான் – 2 திட்டத்தில் ஒரு 10% பகுதி என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். விக்ரம் மற்றும் பிரஞான் கலங்களின் ஆயுள் 2 வாரங்கள் மட்டுமே, ஆனால் சந்திரயான் – 2 இன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
விக்ரம் தரையிறங்கு கலமும், பிரஞான் ரோவரும் சில ஆய்வுகளை செய்ய வடிவமைக்கபப்ட்டு இருந்தாலும், இந்தியாவின் முக்கிய நோக்கம், தன்னால் ஒரு கலத்தை ஒரு வேற்றுக் கோளில் மென்னிறக்கம் செய்ய முடியும் என பறைசாற்றுவது தான். இது ஒரு அரசியல் காரணத்திற்காக செய்யப்பட்டது. அது குறித்தான விளக்கங்களை பகுதி – 2 இல் பார்த்தோம்.
 
இந்த அரசியல் முடிவு கூட, கடைசி சில வினாடிகளில் ஏற்பட்ட கோளாறால் தான் (கடைசி சில வினாடிகள் தான் மிகவும் முக்கியமான தருணம் என்பதும் குறிப்பிடத்தக்கது). அதுவரை, அதன் செயற்பாடுகளில் எந்தக் குறையும் இல்லை என்பதனையும் நாம் கவனிக்க வேண்டும்.
 
சந்திரயான் – 2 கலம் (orbiter) சந்திரனை சரியான பாதையில் சுற்றிக் கொண்டு இருக்கிறது, அதன் எரிபொருள் பயன்பாட்டினை மிகவும் திறமையாகக் கையாண்டு அதன் ஆயுட்காலத்தை 7 ஆண்டுகள் வரை இந்தியா நீடித்து வைத்து உள்ளது. இது தான் இந்த திட்டத்தின் முக்கியமான பணிகளை மேற்கொள்ள இருக்கும் கலம் – இது தான் சந்திரனை துல்லியமாக map செய்யவும், நீர் மூலக் கூறு ஆராய்ச்சிகளையும் செய்யப் போகும் கலம். இந்தக் கலம் வரையப் போகும் map, இதுவரை வரையப்பட்ட சந்திரனின் mapகளை விட மிகவும் துல்லியமானதாக இருக்கும். நாசா அனுப்பிய Lunar Orbiter கொடுத்த வரைபடங்களை விட, சந்திரயான் – 2 கொடுக்கப் போகும் வரைபடம் அதிக விவரங்களைக் கொடுப்பதாக இருக்கும். குறிப்பாக நீர் எந்தெந்த வடிவங்களில், எங்கெங்கு, எந்த அளவிற்கு இருக்கிறது, எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதனை துல்லியமாக அளிக்கவிருக்கிறது. சந்திரயான் – 2 கொடுக்கப்போகும் தரவுகளை வைத்தே சந்திரனுக்கு மனிதர்கள் இனி செல்லபோகும் திட்டங்கள் வடிவமைக்கப்படும். சந்திரயான் – 2, தன் பணிகளை முடிக்கும் முன்னரே, சந்திரனில் மனிதன் காலனி அமைக்கப் பயன்படும்  பல அறிய தகவல்களை நிச்ச்யம் தரும்.    
===============================================================
 
சந்திரனில் நீர் இருப்பது குறித்தான ஆய்வுகள் 1961 முதலே நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்போலோ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் எடுத்துக் கொண்டு வந்த மண் மற்றும் கற்களில் சில நீர் மூலக்கூறுகள் இருந்தன, ஆனால் அது மனிதர்கள் எடுத்துக் கொண்டு வந்ததாலும், பூமிக்குள் இருப்பதாலும் ஏதாவது கலந்து (contamination) அதில் நீர் உருவாகி இருக்கலாம் என யூகித்தார்கள். பின்பு 1976 ஆம் ஆண்டு ரஷ்யா அனுப்பிய Luna 24 எனும் விண்கலம் கொண்டு வந்த கல் மற்றும் மண் மாதிரிகளில் 0.1% அளவிற்கு நீர் மூலக்கூறுகள் இருந்ததை ரஷ்யாவின் ஆய்வறிக்கை சொன்னது. பின்பு அமெரிக்கா 1994 ஆம் ஆண்டு அனுப்பிய Clementine probe, சந்திரனின் இருட்டுப் பகுதிகளில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய சமிக்ஞைகளை அனுப்பினாலும் அது ஒரு முடிவுக்கு வர முடியாத படி, தெளிவற்று இருந்தது. 1998 ஆம் ஆண்டு அமெரிக்கா அனுப்பிய Lunar Prospector கலமும் சரி, 1999 ஆம் ஆண்டு அனுப்பப்பட Cassini–Huygens கலமும் சரி, 2005 ஆம் ஆண்டு அனுப்பப்பட Deep Impact கலமும் சரி,  தெளிவற்ற, முடிவுக்கு வர முடியாத தரவுகளையே கொடுத்தன. 2007 ஆம் ஆண்டு ஜப்பான் அனுப்பிய Kaguya கலமும் நீர் இருப்பை உறுதி செய்யவில்லை. சீனா அனுப்பிய Chang'e 1 விண்கலம், அங்கு நீர் பாறை வடிவில் இருக்கலாம் என யூகிக்க வைக்கும் தரவுகளை கொடுத்தது. இந்தியாவின் சந்திரயான் 1 தான், சந்திரனின் பரப்பிலேயே அதனை கண்டுபிடித்து சொல்லி உள்ளது, அதனால் அதற்குண்டான இடம் கிடைத்தது.

 
(தொடரும்) 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    November 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.