Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

ஊர் சுற்றி போஜனம் தேடி – சத்யா GP

11/26/2019

0 Comments

 
​காலை ஆறு மணிக்கு அந்த உணவகம் இயங்க ஆரம்பிக்கிறது. இட்லி, வடை, வெண் பொங்கல், பூரி கிழங்கு, தோசை, கல் தோசை, இடியாப்பம் போன்ற உணவுப் பதார்த்தங்களைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். முற்பகல் பதினொன்றரை மணி வரை காலை உணவு கிடைக்கும். சாம்பார், பொட்டுக்கடலை மற்றும் தேங்காய் சேர்த்தரைத்த சட்னி, தக்காளிச் சட்னி போன்றவை காலை போஜனத்திற்கு. இடியாப்பத்திற்கும் சட்னி சாம்பார் தான். டீ காபி போன்ற பானங்கள் விற்பனை கிடையாது.      
Picture
மதியம் கடை திறப்பதில்லை மீண்டும் மாலை ஐந்தரை மணிக்கு ஆரம்பமாகும் உணவு விற்பனை இரவு பதினோரு மணி வரை நீடிக்கிறது. இட்லி, தோசை, கல் தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா, வெண் பொங்கல் போன்ற உணவு வகைகளை மாலை நேரத்தில் விற்பனை செய்கிறார்கள். காலை போன்றே சாம்பார், பொட்டுக்கடலை மற்றும் தேங்காய் சேர்த்தரைத்த சட்னி, தக்காளிச் சட்னி. இத்துடன் சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு குருமாவும் உண்டு. 
 
இது போன்ற உணவகங்கள் பல உண்டு. இந்த உணவகத்தில் என்ன விசேஷம்?
 
மேற்குறிப்பிட்ட உணவகத்தில் கெட்டிச் சட்னி என்றொரு வஸ்துவே கிடையாது. அவர்கள் அரைத்து டேபிளில் சாப்பிட வருபவர்கள் எடுத்து உண்ண வசதியாக பாத்திரத்தில் வைக்கும் பொட்டுக்கடலை சட்னியே கெட்டிச்சட்னி போன்றே இருக்கிறது. உருளை, கேரட், பீன்ஸ் போன்ற காய்கள் நர்த்தனமாடும் அட்டகாசமான குருமா இவர்கள் கடையில் கிடைப்பது வாடிக்கை. இரவு உணவுக்கு தக்காளி காரச்சட்னி சாப்பிட்டாலும் நள்ளிரவு உறக்கம் கலைந்து நெஞ்செரிச்சலில் அவதியுறும் துன்பம் அறவே இருக்காது.
 
இது போன்ற உணவகங்கள் ஏராளமாக உண்டு. இந்த உணவகத்தில் என்ன விசேஷம்?
 
தோசை, சப்பாத்தி, பரோட்டா என தருவிக்கும் மாஸ்டர் சுறுசுறுப்பின் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தோசை கேட்டு காத்திருப்பவர்களின் பொறுமையை சோதிப்பதே இல்லை. தான் அரசாளும் அடுப்புகளின் மீதுள்ள கல்லில் உடனுக்குடன் மாவு ஊற்றி தோசை வார்ப்பது, கோதுமை மாவை இட்டு சப்பாத்தி வார்ப்பது, பரோட்டா தயாரிப்பது போன்றவற்றை துரித கதியில் செய்து முடிக்கிறார். நன்கு வேக வைத்து பதார்த்தங்களைத் தருவதிலும் வல்லவராகத் திகழ்கிறார்.
 
இது போன்ற உணவகங்கள் ஏராளமாக உண்டு. இந்த உணவகத்தில் என்ன விசேஷம்?
 
வாடிக்கையாளர்கள் இருக்கையில் அமர்ந்த உடனேயே சப்ளை செய்பவர்கள் வந்து இலை போட்டு டம்ளரில் குடிநீர் நிரப்பி வைக்கிறார்கள். “என்ன வேண்டும்” என்று தன்மையாக கேட்டு உபசரிக்கிறார்கள். சாப்பிடும் போது சட்னி, சாம்பார், குருமா... எதன் அளவு குறைகிறதோ உடனே அதை கவனித்து குறைந்ததை நிறைக்கிறார்கள்.
 
இது போன்ற உணவகங்கள் ஏராளமாக உண்டு. இந்த உணவகத்தில் என்ன விசேஷம்?
 
காலை பதினொன்றரை மணி வரை உணவகம் இயங்குவதால் தோசை மாவு, சாம்பார், தக்காளி காரச்சட்னியின் இருப்பை குறையாமல் பார்த்துக் கொண்டு சாப்பிட வருபவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லாமல் வயிறு நிறைய வைக்கிறார்கள்.
 
இது போன்ற உணவகங்கள் ஏராளமாக உண்டு. இந்த உணவகத்தில் என்ன விசேஷம்?
 
இரவு நேரங்களில் பத்து மணிக்குப் பிறகும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பதை கவனத்தில் கொண்டு மளமளவென இரண்டாவது சுற்று முறையில்  தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி அரைத்து தாளித்து பரிமாறுகிறார்கள். சாப்பிட வருபவர்களிடம் தேங்காய் சட்னி இல்லை என்று சொல்லக் கூடாது என்பதில் உறுதியுடன் வளைய வருகிறார்கள்.
 
இது போன்ற உணவகங்கள்... இந்த உணவகம் எங்கிருக்கிறது?
 
மெட்ராஸில் ஜன நடமாட்டம் அதிகமுள்ள முக்கியமான நகரப்பகுதியான நங்கநல்லூரில் அதன் இதயப் பகுதியான ஹிந்து மிஷன் மருத்துவமணி, சக்ரா மருத்துவமனை மின்சார வாரியம் போன்ற முக்கியமான சேவை மையங்கள்  அமைந்துள்ள நூறடி சாலையில் அமைந்துள்ளது.
 
இந்த உணவகத்தை நடத்துபவரின் பூர்வீகம் என்ன?
 
இந்த உணவகத்தின் உரிமையாளர் பெயர் ஆறுமுகம். பூர்வீகம் வால்பாறை, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்.
 
உணவகத்தின் பெயர் என்ன?
 
ரோஹினி
 
உணவகத்தின் சிறப்பம்சங்கள் என்று வேறு ஏதாவது?
 
உண்டு. மெட்ராஸின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இரண்டு படுக்கை அறைகள் வசதி உள்ள ஒரு ஃபிளாட்டின் மாத வாடகையே 15,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் என்ற அளவிற்கு உச்சம் தொட்ட ரியல் எஸ்டேட் பகுதி இது.
 
உயர்வான வாடகை, உச்சம் தொட்ட ரியல் எஸ்டேட்... இதற்கும் அந்த உணவகதிற்கும் என்ன சம்பந்தம்?
 
ரோஹினி உணவகத்திற்கு இன்னொரு பெயர் உண்டு அதன் பெயர் இருபது ரூபாய் உணவகம்.
 
இது தொடர்பாக உரிமையாளர் ஆறுமுகம் சொன்னது :
“நானும் எல்லார் மாதிரியும் தான் சார் ஹோட்டலை நடத்திக்கிட்டு இருந்தேன், பக்கத்துல ஹாஸ்பிட்டல் இருக்கு, அங்க பேஷண்ட்ஸ் கூட தங்கி அவங்களைப் பார்த்துக்கறவங்க அதிகமா நம்ம கடைல சாப்பிட வந்தாங்க, அவங்களுக்கு மலிவா சாப்பாடு தரணும்னு நினைச்சேன். அதுக்கு அப்புறம் தான் ரேட்டை மாத்தி குறைச்சு விற்க ஆரம்பிச்சேன்”  

Picture
“இந்த விலைவாசில கட்டி வருதா சார்”
 
“நான் எல்லா பொருளையும் ஹோல்சேல்ல தான் சார் வாங்குறேன், தேங்காய் கூட இளசா பாத்து மொத்தமா சாக்குல அள்ளிட்டு வந்துருவேன், உண்மையை சொல்றேன் சார், திட்டமிட்டு உணவுத் தொழில் செய்தால் எல்லாராலயும் இந்த விலைக்கு வியாபாரம் செய்ய முடியும், எனக்கு நஷ்டம் எதுவும் இல்லை, நஷ்டப்பட்டா தொடர்ந்து தொழில் செய்ய முடியுமா”
 
“உங்களுக்கு உங்க ஹோட்டல்ல எந்த டிஃபன் ஐட்டம் சார் ரொம்ப பிடிக்கும்”
 
“அப்படியெல்லாம் கிடையாது சார், சாப்பிட வரவங்க எல்லாரும் சாப்பிடனும் அப்புறம் மாஸ்டர், சப்ளையர்ஸ், டேபிள் தொடைக்கறவங்க, க்ளீனிங் வேலை செய்யறவங்க எல்லாம் வயிறார சாப்பிடனும் அது தான் சார் எனக்கு முக்கியம்”
 
“உங்களுக்கு என்ன சார் பிடிக்கும்? அதை சொல்லவே இல்லியே?”
 
“கச்சட்டில மொத நாள் செஞ்ச காரக் கொழம்பை சாதத்தில ஊத்தி நல்லெண்ணெய் விட்டு பிசைஞ்சு அம்மா கை நிறைய அள்ளி வெச்சு சாப்பிட சொல்வாங்க பாருங்க அந்த சாதம் தான் சார் பிடிக்கும், அந்த ருசி மாதிரி உலகத்துல எதுவுமே கிடையாது”

 
இருபது ரூபாய் உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பதாரத்தங்களின் விலைப் பட்டியல்
 
4 இட்லிக்கள் – ரூபாய் 20/-
4 மெது வடைகள் – ரூபாய் 20/-
1 செட் இடியாப்பம் - ரூபாய் 20/- (காலை மட்டும்)
1 செட் பூரி கிழங்கு – ரூபாய் 20/- (காலை மட்டும்)
1 ப்ளேட் பொங்கல் – ரூபாய் 20/- (காலை மட்டும்)  
1 தோசை – ரூபாய் 20/-
1 செட் சப்பாத்தி – ரூபாய் 20/- (இரவு மட்டும்)
1 செட் பரோட்டா – ரூபாய் 20/- (இரவு மட்டும்)   
1 செட் கல் தோசை – ரூபாய் 20/-

 
தெய்வம் மனுஷ ரூபேனா!            
 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    November 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.