Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

கவர் ஸ்டோரி

11/26/2019

0 Comments

 
பகீர் பிஸ்கெட்கள்
சமீபத்தில் என் அம்மாவை அழைத்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்க சென்றிருந்தேன். அம்மாவுக்கு சில உபாதைகள் இருந்தன. மருத்துவர் சில பரிசோதனைகள் செய்து மருந்துகள் எழுதித் தந்தார். மேலும் என்னென்ன உணவுகள் உட்கொள்ள வேண்டும், எந்த காய், கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி தினசரி எப்படி சாப்பிட வேண்டும் என்று ஒரு அட்டவணையும் எழுதித் தந்தார். அதில் தேநீருடன் எளிதாக ஜீரணமாகக் கூடிய பிஸ்கெட்களை சாப்பிட சொல்லி பரிந்துரைத்தார்.
 
மருத்துவர் அறிவுறுத்தலின் படி கடைக்கு சென்று பிஸ்கெட்டுகள் வாங்க முயற்சித்தேன். பொதுவாக பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் மற்றும் பார்லே கிராக் ஜாக் பிஸ்கெட் என்றால் எனக்கு இஷ்டம். அம்மா மேரி பிஸ்கெட்டை விரும்பி சாப்பிடுவார். திகட்டித் திணற வைக்கும் இனிப்பு மேரி பிஸ்கெட்டில் இல்லை என்பது அவர் அபிப்பிராயம். 

Picture
மருத்துவர் சில கட்டுப்பாடுகள் விதித்ததால் ஒவ்வொரு பிஸ்கெட் பாக்கெட்டையும் எடுத்து அதிலுள்ள உட்பொருட்கள் (Ingrediants) என்ன? அதில் உள்ள ஊட்டச்சத்துகள் (Nutrition Facts) என்ன என்று நிதானமாக கவனித்தேன். அதை கவனித்த பின்பு உடனே மனம் “பகீர் பிஸ்கெட்கள்” எழுத வேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டது.
 
“பிஸ்கெட் சகல வயதினரும் விரும்பி உண்பது அதை பகீர் என்கிறேனே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முன்பெல்லாம் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் பெரிதாக எந்த விவரங்களையும் குறிப்பிட மாட்டார்கள். அவர்கள் விளம்பரத்தில் உள்ள வாசகமே அந்தப் பொருளுக்கான தர அளவீடு போல் இருந்தது.
அன்புமணி ராமதாஸ் அவர்கள் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது பாக்கெட் உணவுகளில் உள்ள உறையில் எந்தெந்த பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன?, அதில் உள்ள ஊட்டச்சத்துகள் என்ன? போன்ற விவரங்களை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று சட்டம் இயற்றியதால் ஓரளவு நாம் சாப்பிடும் ரெடிமேட் உணவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் இந்த சட்டத்தில் இருந்து எப்படி லாவகமாக உணவுத் தயாரிப்பாளர்கள் தப்பிக்கிறார்கள் என்பது தனிக் கதை அதை இங்கு விவரிக்க ஆரம்பித்தால் ஒரு தனி கவர் ஸ்டோரி ஆகும் என்பதால் எழுத வந்த விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
“பகீர்” இதற்கு என்ன காரணம்? காரணம் இல்லை காரணிகள்...
 
Antioxidant INS 322
Artificial Flavour like Ethyil Vannilin
Refined Palm Oil
Refined Palmolein
Refined Wheat flour (Maida)
Nature Identical Flavouring Substances
Raising Agents 503, 500
Dough Conditioners
Emulsifiers
Sodium
Artificial sweetener like Sucralose…
 
மேலே உள்ள பட்டியல் ஒரு துளி மட்டுமே, இது போல் பல “பகீர்” உட்பொருட்கள் நாம் தினமும் சாப்பிடும் பிஸ்கெட்டுகளில் உள்ளன.
 
மைதா மாவு, மிதமிஞ்சிய ஜீனி, பாமாயில், செயற்கை சுவையூட்டி, செயற்கை நிறமூட்டி, செயற்கை இனிப்பு உட்பொருள், மாவை மிருதுவாக்கும் கண்டிஷனர், எமுல்ஸிஃபையர், வாசனைக்கு சேர்க்கப்படும் செயற்கை ரசாயனங்கள் (உதாரணம் வெனிலா ஃப்ளேவர், பைன் ஆப்பிள் ஃப்ளேவர், பட்டர் ஸ்காட்ச் ஃப்ளேவர் போன்றவை)
 
இவற்றை கலக்கி திரவ நிலை மாவுக் கலவையாக்கி பேகிங் ஓவன் துணையுடன் பல வடிவ அச்சுகளில் வைத்து வட்டம், சதுரம், முக்கோணம் என பல தினுசாக பெறும் பொருளைத் தான் நாம் பிஸ்கெட் என்று வாங்கி சாப்பிடுகிறோம்.
 
ஏராளமான பிஸ்கெட்டுகள் ரகங்கள், விளம்பரங்கள் மூலம் வாங்கியே தீர வேண்டும் என குழந்தைகளை அடம் பிடிக்க வைத்து நம் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. பெரியவர்களையும் விட்டு வைப்பதில்லை. ஷுகர் ஃப்ரீ, ஃபேட் ப்ரீ, ஸீரோ பர்சென்ட் கொலஸ்ட்ரால், ஓட்ஸ் சத்து செறிந்தது, எளிமையான செரிமானத்திற்கானது என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டு இதுவே ஆரோக்கியம் என்ற கருத்தியல் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. நாமும் அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குகிறோம்.
 
சில பிஸ்கெட்டுகளை மட்டும் அது எப்படிப்பட்டது என என் புரிதலைப் பகிர்கிறேன் நீங்களே படியுங்கள். நான் குறிப்பிடும் அனைத்தும் பிஸ்கெட் தயாரிப்பாளர்கள் தங்கள் பொருட்களின் பேக்கில் தந்துள்ள விவரங்களின் அடிப்படையில் மட்டுமே என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
 
முதலில் க்ரீம் பிஸ்கெட் ரகங்களைப் பார்ப்போம், பிஸ்கெட் தயாரிப்பில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் இந்த ரக பிஸ்கெட்டுகளை விற்பனை செய்கின்றன. பெயர்கள் வெவ்வேறு என்றாலும் உட்பொருகள் மற்றும் ஊட்டச்சத்துகள், இரண்டும் பொதுவாக ஒரே மாதிரி தான் இருக்கின்றன 3 முதல் 5 கிராம்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உட்பொருள் விகிதங்களில் வேறுபாடு இருந்தாலும் அனைத்தும் ஒரே அடிப்படையில் தான் தயாராகின்றன.
 
பிரிட்டானியா அந்நிய நாட்டு நிறுவனம் அதாவது விதேசி, பதஞ்சலி நம் நாட்டு நிறுவனம் அதாவது சுதேசி, பதஞ்சலி தயாரிப்புகள் சிறப்பானவை என முன்முடிவுடன் உள்ளவர்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள அந்நிறுவனத்தின் இரு தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் :
 
பதஞ்சலி க்ரீம் ஃபீஸ்ட் மில்க் வெனிலா பிஸ்கெட்டுகள் –
இதில் உள்ள உட்பொருட்கள் :
 
  • கோதுமை மாவு
  • ஜீனி
  • பாமாயில்
  • பால் பெளடர்
  • ஸ்டார்ச் - மாவுச்சத்து கொண்ட உட்பொருள்
  • டெக்ஸ்ட்ரோஸ், இன்வர்ட் ஷுகர் (செயற்கை தித்திப்பு சுவையூட்டி)
  • ரைஸிங் ஏஜெண்ட்
  • உப்பு
  • மால்ட் எக்ஸ்ட்ராக்ட் பார்லே மாவு (பீர் போன்ற மதுபானங்களில் சேர்க்கப் பயன்படுவது)
  • சோயா லெசித்தின் – (சோயா பீன்ஸில் சில இரசாயனங்களைக் கலந்து பதப்படுத்தி எடுக்கப்படும் பொருள்)
  • டோ கன்டீஷ்னர்ஸ் – இதன் வேதியியல் பெயர் சோடியம் மெடா பை சல்ஃபேட்
  • அசிடிட்டி ரெகுலேட்டர்ஸ் – பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளில் உள்ள அமிலத்தன்மையை (pH level) சரியான விகிதாச்சாரத்தில் வைத்திருக்க உதவுகிறது.  
 
அடுத்து இந்த பிஸ்கெட்டில் உள்ள ஊட்டச்சத்து விவரங்கள் :
 
100 கிராம் பிஸ்கெட் என்ற அளவு –
  • எனர்ஜி அதாவது கலோரி – விவரங்கள் இல்லை
  • நல்ல கொழுப்பு சத்து (Saturated Fat) வெண்ணை போன்றவற்றில் இருப்பது – 12 கிராம்
  • மாவு சத்து : 69 கிராம், அதில் ஜீனியின் அளவு மட்டும் 34 கிராம்
 
அதாவது 34 விழுக்காடு ஜீனியும், ஒட்டு மொத்தமாக சுமார் 70 விழுக்காடு மாவுச்சத்து மட்டுமே இந்த பிஸ்கெட்டில் உள்ளது.
 
மேலும் நார்ச்சத்து சுமார் 3.5 கிராம் என்னும் அளவிற்கு இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
 
பிஸ்கெட்டை உண்பதன் மூலம் நம் உடலுக்கு சேரும் விஷயங்கள் இவை மட்டுமே ஆனால் இந்த பிஸ்கெட்டை எப்படி விளம்பரப்படுத்துகிறார்கள்?
 
“இந்த பிஸ்கெட்டில் மைதா, கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொழுப்பு (Trans fat) பூஜ்ஜிய விழுக்காடு அதாவது மூன்றும் அறவே இல்லை. கூடுதல் நார்ச்சத்தும் ஊட்டச்சத்துகளும் நிரம்பிய பிஸ்கெட்”
 
100 கிராம் பிஸ்கெட்டில் எத்தனை விழுக்காடு நார்ச்சத்து என்பதைப் பார்த்தீர்கள். மற்றொரு விஷயம் கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொழுப்பு இல்லை என்றார்கள் அல்லவா? அதில் ஒரு சின்ன தகவல் பாமாயிலில் அதிகளவு கெட்ட கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது.
 
உட்பொருட்கள் எப்படிப்பட்டவை என அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் நாம் அறிந்த பொருட்கள் என்ற வகையில் ஜீனி, பாமாயில், ஸ்டார்ச் போன்றவற்றால் நம் உடலுக்கு எப்படி தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்திருப்பீர்கள்.
 
சின்ன உதாரணம் : ஒரு நாளைக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக இந்த பிஸ்கெட்டை சிறுவர்/சிறுமியர் உண்டு வந்தால் டீ, காபி, பால், இனிப்பு, அரிசி சாதம் மற்றும் பிற உணவுகள் நீங்கலாக மாதம் சுமார் ஒரு கிலோ ஜீனி அவர்கள் உடலில் சேருகிறது என்பதே உண்மை. மாவுச்சத்து ஒரு மாதத்திற்கு சுமார் 2.1 கிலோ.
 
சோடியம் மெடா பை சல்ஃபேட் – நம் உடலில் உள்ள இரைப்பையில் பல உபாதைகளை உண்டாக்கும். மேலும் முதுகுவலி, வாந்தி. மயக்கம், தலை சுற்றல், வயிற்றுப் போக்கு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிஸ்கெட் பதமாக மிருதுவாக அதே சமயம் உறுதியாக தயாராக இந்த ரசாயனத்தை சேர்க்கிறார்கள்.
 
டெக்ஸ்ட்ரோஸ், இன்வர்ட் ஷுகர் (செயற்கை தித்திப்பு சுவை கூட்டி) – இந்த ரசாயனத்தை எளிமையான ஜீனி (Simple sugar) என்றழைக்கிறார்கள். அதீத தித்திப்பை செயற்கையான முறையில் தரும் தன்மை கொண்டது இது. உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்தும் திறன் கொண்டது. உண்பது அளவுக்கு அதிகமானால் உடலில் சேமித்துவைக்கப்பட்ட அனைத்து ஊட்டச்சத்துகளின் சாதகங்களையும் நீர்த்து போகச் செய்யும் அளவிற்கு சக்தி கொண்டது இது. வெறும் அதீத தித்திப்பு சுவை என்னவெல்லாம் செய்கிறது என்று பாருங்கள்.
 
அது மட்டுமல்ல நுரையீரலில் வீக்கத்தையும், நீரையும் கொண்டு சென்று நுரையீரலை பாதிக்க செய்யும் சக்தியையும் இந்த ரசாயனம் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
 
இதை அனைத்தையும் தாண்டி முக்கியமான விஷயம் வெனிலா.
 
சுத்தமான வெனிலா பீன்ஸில் இருந்து எடுக்கப்படும் வெனிலா எக்ஸ்ட்ராக்ட்டின் விலை 8 அவுன்ஸ் ரூபாய் 1500/-
 
பத்து ரூபாய் பிஸ்கெட்டுக்கு இத்தனை செலவிடுகிறார்களே என ஆச்சரியப்படாதீர்கள். வெனிலா மாதிரி என்று சொல்லக்கூடிய எதில் வெனிலில் என்ற ஃப்ளேவர் வடிவ ரசாயனம் வெனிலாவின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இதன் விலை 1 கிலோ சுமார் 800/- ருபாய் மட்டுமே!
 
விலை மலிவான இந்த ரசாயனம் வழங்கும் பக்க விளைவுகள் : படை, சொறி, சிரங்கு போன்ற தோல் உபாதை நோய்கள் மற்றும் பல்வேறு கண் நோய்கள். இந்த ஃப்ளேவரின் வீரியம் அதிகம் என்பதால் தலை சுற்றல், வாந்தி, மயக்கம், மந்த நிலை போன்ற பக்க விளைவுகளையும் தருகிறது. வெனிலா, பட்டர் ஸ்காட்ச், ஆரஞ்ச், பைன் ஆப்பிள் என்று பல ரூபங்களில் வரும் க்ரீம் பிஸ்கெட்கள் அனைத்தும் வீரிய செயற்கை ஃப்ளேவர் கொண்டே தயாரிக்கப்படுகின்றன   
 
பதஞ்சலியின் தயாரிப்புகள் அனைத்தும் சரியானது அல்ல என்று நான் விவரிக்க எழுதவில்லை. மேலும் நிறுவன பேதமின்றி சந்தையில் விற்கப்படும் க்ரீம் பிஸ்கெட்டுகள் பெரும்பாலானவை இதே உட்பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
 
அதே சமயம் பதஞ்சலி நிறுவனத்தின் தேங்காய் எண்ணை (Virgin coconut oil) பாத்திரம் துலக்கும் கட்டி (Dish wash bar) போன்ற பொருட்கள் மிகச் சிறப்பானவை, தரமானதும் கூட!
 
க்ரீம் பிஸ்கெட் என்றாலே அப்படித்தான், மேரி பிஸ்கெட் லைட்டா இருக்கும் அது நல்லது என்ற கட்சி உறுப்பினர்களுக்காக அடுத்த கட்ட தகவல்கள்
 
பிரிட்டானியா மேரி கோல்ட் பிஸ்கெட் உட்பொருட்கள் (Ingredients) :
 
  • கோதுமை மாவு
  • ஜீனி
  • பாமாயில்
  • பால் பெளடர்
  • இன்வர்ட் ஷுகர் ஸிரப் (செயற்கை தித்திப்பு சுவை கூட்டி)  
  • பால் பெளடர்
  • அமோனியம் பை கார்பனேட் பிஸ்கெட்களின் மிருதுத் தன்மை மற்றும் மொறுமொறுப்பான சுவையை சரியான அளவில் வழங்க உதவும் ரசாயனம். பண்டைய காலத்தில் இதை அதிகளவில் பயன்படுத்தினாலும் இதன் பக்க விளைவுகள் காரணமாக தற்போது அதிகம் பயன்படுத்துவதில்லை ஆனால் மேரி பிஸ்கெட்டில் பயன்படுத்துவது நெடுங்காலமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. தோல் எரிச்சல், கண் கோளாறு, சுவாசப் பிரச்சனை போன்ற பக்கவிளைவுகளைத் தரும் ரசாயனம் இது. இது தவிர மூக்கில் தொந்தரவு, தொண்டைப்புண் போன்றவற்றையும் அள்ளி வழங்கும் தன்மை கொண்டது இது. இத்துடன் சோடியம் பை கார்பனேட்டை சேர்த்து பிஸ்கெட் மாவில் கலக்கிறார்கள்.
  • டோ கன்டீஷ்னர் (சோடியம் மெடா பை சல்ஃபேட்) என சகலமும் இதிலும் இருக்கின்றன.
  • செயற்கை ஃப்ளேவர்களில் வெனிலா மட்டுமல்லாது பால், வெண்ணை என்ற அனைத்து வாசத்திற்கும் மேரி பிஸ்கெட்டைப் பொறுத்தவரை செயற்கை மணம் தான். அது போன்ற ரசாயனங்களையே உபயோகிக்கிறார்கள்.
 
கேரமெல் நிறமூட்டியில் சல்ஃபைட்டும் உண்டு சில வகையான கேரமெல் நிறமூட்டியில் கார்சிநோஜெனிக் கெமிக்கல் (4 – methylimidazole) காணப்படுவதும் உண்டு. கார்சிநோஜெனிக் என்றால் புற்று நோய் காரணி என்று பொருள்.
 
இதில் உள்ள ஊட்டச்சத்து என்ன என்று பார்ப்போமா?
 
100 கிராம் பிஸ்கெட்டில் மாவுச்சத்து மட்டும் 78 கிராம் அதில் ஜீனியின் அளவு 22 கிராம்.
 
ப்ரோட்டீன் 8 கிராம், நல்ல கொழுப்பு (Saturated fatty acids, Mono Unsaturated & poly unsaturated fatty acids) 9.2 கிராம்.
 
எனர்ஜி – 443 kcal (கலோரி)
 
மற்றபடி இரும்புச்சத்து, கால்ஷியம், அயோடின் வைட்டமின் B1, B2, B3, B6, B12 & வைட்டமின் E போன்றவை மில்லி கிராம் & மில்லி செண்டி கிராம் என்று பூதக் கண்ணாடியை வைத்து தேடும் அளவிற்கு இடம் பிடித்துள்ளது.
 
லைட்டானது, ஆரோக்கியமானது என்று பரவலானவர்களால் நம்பப்படும் மேரி பிஸ்கெட்ட்டில் (ஐடிஸி மேரி, இங்கிலீஷ் மேறி, பார்லே மேரி, பதஞ்சலி மேரி என சகலமும் ஒரே மாதிரி தான்) நூறு கிராம் அளவைப் பார்த்தால் அதில் சுமார் எண்பது விழுக்காடு வெறும் மாவுச்சத்து மட்டுமே!
 
பார்லே ஜி என்ற பிஸ்கெட் இந்திய நிறுவனத்துடையது. சுதேசி தயாரிப்பு. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட போராளி சமூகத்தினரிடம் குறுகிய காலத்திற்கு அனுதாபத்தை கணிசமான அளவு சம்பாதித்த நிறுவனம்.
 
இதில் 100 கிராம் பிஸ்கெட்டில் மாவுச்சத்து சுமார் 79 கிராம் அதில் ஜீனியின் அளவு சுமார் 26 கிராம்.
 
அதே பாமாயில், இன்வர்ட் ஷுகர் ஸிரப்... சகல உட்பொருட்களும் உண்டு.
 
ஓட்ஸ் பிஸ்கெட், உண்மையாக சக்கரை, மைதா இல்லாத பிஸ்கெட் என ஐடிஸி நிறுவனமானது ஃபார்ம்லைட் ஓட்ஸ், ஃபார்ம்லைட் டைஜஸ்டிவ் ஃபைபர் ஆல் குட் என்ற பெயரில் இரு பிஸ்கெட் பிராண்டுகளை வெளியிடுகின்றன. ஓட்ஸ் வகையில் உலர் திராட்சை, பாதாம் & சாக்லேட் என்ற உட்பிரிவுகளும் உண்டு.
 
மைதா, ஜீனி அறவே இல்லை என்றும் பகிரங்கமாக விளம்பரப்படுத்துகின்றன என்று முழங்குபவர்களுக்காக இந்தப் பகுதி.
 
முதலில் ஆல் குட் வகையை பார்ப்போம் :
 
கோதுமை மாவு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது (சுமார் 54%)
 
செயற்கை தித்திப்பு சுவை கூட்டியில் பாலியோல் என்ற ரசாயன சர்க்கரை சாராயம் (Sugar alchol) சேர்க்கப்பட்டிருக்கிறது. பெரியவர்களே ஒரு நாளைக்கு 20 கிராமுக்கு மேல் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்கிறார்கள். இந்த பிஸ்கெட்டில் எத்துனை அளவு சேர்க்கப்பட்டுள்ளது என்ற விவரம் பேக்கில் இல்லை. 
 
கேரமல் சல்ஃபைட் அமோனியா – நிறமூட்டியானது இந்த பிஸ்கெட்டிலும் காணப்படுகிறது.
 
துவக்கத்தில் தாவர எண்ணை என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தது. அது பாமாயிலா அல்லது வேறா என்று சொல்லவில்லை. தற்போது வரும் ஸ்டாக்குகளில் பாமாயில் என்றே குறிப்பிடுகிறார்கள். 
 
ஃப்ளேவர்களில் எந்த ரசாயனத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் தெளிவாக குறிப்பிடவில்லை. பொத்தம் பொதுவாக பால், வெண்ணை போன்றவற்றிக்கு செயற்கை ஃப்ளேவர் ரசாயனம் சேர்ப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
 
கார்ன் ஃபேளேக்ஸ் சுமார் 700 மில்லி கிராம் என்ற அளவிற்கு தான் சேர்க்கப்பட்டிருக்கிறது.
 
100 கிராம் பிஸ்கெட்டில் 67 கிராம் என்னும் அளவிற்கு மாவு சத்து உண்டு. அதில் இயற்கையான சக்கரை அளவு 6.5 கிராம். பாலியோல் என்ற உட்பொருள் இந்த பிஸ்கெட்டில் இடம் பிடித்திருக்கையில் added sugar இல்லை என்று எந்த அடிப்படையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்று கெமிஸ்ட்ரி வித்தகர் யாரிடமாவது விசாரிக்க வேண்டும்.
 
மற்ற விஷயங்கள் அனைத்தும் பிற பிஸ்கெட்டுகள் போலத்தான் இருக்கின்றன.
 
ஓட்ஸ் வகையிலும் அதே மாதிரியான உட்பொருட்கள் ஆனால் பாமாயில் மற்றும் ஓட்ஸ் சுமார் 16% என சொல்லி இருக்கிறார்கள். ஓட்ஸ் அளவு என்ன என்று தனியாக குறிப்பிடவில்லை. மேலும் ஜீனி மற்றும் திரவ க்ளுகோஸ் என இரண்டும் இந்த பிஸ்கெட்டில் இருக்கிறது.
 
482 கலோரிகள், 67.4 கிராம் என்னும் அளவிற்கு மாவுச் சத்து அதில் 26.1 கிராம் ஜீனி என்பதை எல்லாம் பார்க்கும் போது இந்த பிஸ்கெட்டுகளை சாப்பிட்ட பின்பு செரிமானம் ஆக சிறப்பு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறது. இத்தனை கலோரி, மாவுச்சத்து மற்றும் சக்கரை அளவு உள்ள மைதா அல்லாத பிஸ்கெட்டிற்குப் பதிலாக மைதா பிஸ்கெட்டே பெட்டர் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்லக்கூடும்.
 
முக்கிய குறிப்பு : பிஸ்கெட் என்றாலே குழந்தைகளுக்கானது என்று சொல்வார்கள் ஆனால் இந்த ஆல் குட் பிஸ்கெட் குட் ஃபார் ஆல் கிடையாது. பாலியோல் (சர்க்கரை சாராயம்) உட்பொருள் குழந்தைகள் முற்றிலும் தவிர்க்க வேண்டியது என்பதால் பிஸ்கெட் பாக்கெட்டிலே குழந்தைகள் இந்த பிஸ்கெட்டுகளை சாப்பிடக் கூடாது என்று தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார்கள்.
 
கோதுமை மாவு, வெல்லம், பசு நெய் அல்லது வெண்ணை ஏலக்காய் பொடி இவற்றின் துணையுடனோ அல்லது கோதுமை மாவிற்கு பதிலாக பல தானியங்களை சேர்த்து அரைத்த சத்து மாவு கொண்டு பிஸ்கெட் தயாரிக்க முடியாதா? செயற்கை நிறமூட்டிகள், செயற்கை தித்திப்பு சுவை கூட்டிகள், பிற ரசாயனங்கள் இல்லாது பிஸ்கெட் தயாரிக்க முடியாதா?
 
முடியும், செலவு கூடுதலாகும், ஷெல் லைஃப் குறையும். இதனால் தான்...
 
மேற் சொன்ன விதத்தில் பிஸ்கெட்டுகளே இல்லையா என்று கேட்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கொழுவியை சொடுக்குங்கள். தரமான பிஸ்கெட்டை கண்டுகொள்ளுங்கள்.
 

https://www.amazon.in/gp/product/B01N7AEJ7A/ref=as_li_qf_asin_il_tl?ie=UTF8&tag=fittub-21&creative=24630&linkCode=as2&creativeASIN=B01N7AEJ7A&linkId=d99fdd17c49d8b5cac7a76c95f3d8fdf
****************
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    November 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.