Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

Cinema நூலகம் – ராஜ்குமார் பார்த்திபன்

11/26/2019

4 Comments

 
நரைகூடிக் கிழப்பருவமெய்திய பின்னர் தளும்பிப் பெருகுகிற உன்னதக் காதலை எத்தனை சினிமாக்கள் பேசியிருக்கிறது? இளைய காதலை விட வாழ்வின் இறுதிக் காலக் காதல் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அது எத்தனை பரிபூரணமானது என்பதையும் 2012ல் வெளியான ஒரு பிரெஞ்சு படம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. வாழ்வின் கடைசி கட்டங்களில், மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு முதிய ஆதர்சமான தம்பதிகளின் இறுதிக்கால காதலை மனம் வலிக்க வலிக்கச் சொல்லி முடிக்கிறது Amour. அந்தக் காதல் தன் கடைசி நிமிடங்களில் மோட்சம் பெறுகிற போது விழிகளில் கசியும் நீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. Amour என்றால் நேசம் என்று பொருள்.
 
தமிழில் இத்தகைய முயற்சிகள் மிகக் குறைவு. கொஞ்ச வருடங்கள் முன்பு வந்த "பண்ணையாரும் பத்மினியும்" இந்த முதுமைக் காதலை இலேசாக சொல்ல முயன்றது ஆனால் அது இந்தக் கருவைச் சொன்ன முழுமையான படமென்று சொல்ல முடியாது.
Picture
வாழ்வு எனும் நெடும் பயணத்தில் எல்லாமுமாய் நம்மோடு இணைந்து கொண்ட ஓர் உறவின் அத்தனை அம்சங்களையும் ஜார்ஜ் மற்றும் ஆனா கதாபாத்திரங்களின் வழியாக யதார்த்தமாகப் பதிகிறார் இயக்குனர் Michael Haneke. இயல் வாழ்வில் நாம் எவ்வளவோ பேரைச் சந்திக்கிறோம். எவ்வளவோ பேரால் நன்மையடைகிறோம். எவ்வளவோ பேருக்கு அன்பைக் கொடுக்கிறோம். எவ்வளவோ பேரால் ஏமாற்றப்படுகிறோம். நம் வாழ்வோடு சம்பந்தப்பட்ட நிறைய பேர், இவ்வளவு ஏன் நம் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய நிறைய பேரைக் கூட ரயில் சிநேகமாய் நினைத்து அவர்களைக் கடக்கப் பழகியிருக்கிறோம். இவை தாண்டி நம்மோடு நெடுந்தூரம் பயணிக்கும் உறவு மனைவி அல்லது கணவன்.
அந்த உறவுகளின் அர்த்தத்தை, முக்கியத்துவத்தை இந்தத் திரைப்படம் கற்பிக்கிறது என்றே சொல்லலாம்.
 
படத்தின் துவக்கத்திலேயே ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக புகார் போகிறது. தீயணைப்புத்துறை, போலீஸ் சகிதமாக அந்த வீட்டைத் திறந்து பார்க்கிறார்கள். அப்போது அந்த வீட்டின் குறிப்பிட்ட ஒரு அறையில் பூக்கள் அலங்காரத்தின் மத்தியில் வயதான பெண்ணின் பிணம் ஒன்று இருக்கிறது. யார் அந்தப் பெண்? என்ன நடந்தது எனும் பின்னணியை விவரிக்கிறது Amour.
 
முதிய தம்பதிகள் ஜார்ஜ் (Jean Louis Trintignant) ஆனா (Emannuelle Riva) ஜோடி பாரிஸ் நகரில் வசிக்கிறார்கள். இவர்களின் ஒரு மகள் ஈவா (Isabelle Hubbert) வெளியூரில் வசிக்கிறாள். இந்த தம்பதிகள் முன்னாள் இசைக்கலைஞர்கள். இவர்களின் பழைய மாணவனொருவனின் இசைவாசிப்பை பார்த்த தினத்தன்று வீட்டிற்கு வந்து ஒன்றாக உணவருந்துகின்றனர். திடீரென்று ஆனா Stroke ஏற்பட்டுச் சிலை போல் ஆகிறாள். உடனடியாய் மருத்துவமனை கொண்டு செல்கிறார் ஜார்ஜ். அங்கே இதய அடைப்பை நீக்குகிற சிகிச்சையில் தவறு நிகழ பக்கவாதத்தாலும் பாதிக்கப்படுகிறாள். வீட்டிற்குத் திரும்பும் மனைவி இனி மருத்துவமனைக்கு தன்னை அழைத்துச் செல்ல வேணாம் என ஜார்ஜிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள். ஆனாவை ஜார்ஜ் கவனிக்கத் துவங்குவதிலிருந்து இந்தத் தம்பதிகளின் அன்பு வானம் விரியத் தொடங்குகிறது.
 
படத்தின் இறுதிக்கட்ட காட்சி நம் மனதில் அதிர்வலைகளை உண்டாக்கி பிறகு நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமைதியாய் விசும்ப வைக்கிறது. சொல்லொண்ணாத் துயரம் ஒன்று மனம் கவ்விக் கொள்ளுகிறது. 

Picture
முதியவர்களின் ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கிய பய(ண)ங்கள். முதுமை தன் ரேகைகளை அவர்கள் உடலில் படரவிடத் தொடங்கி சில நாட்களில் குழந்தைமையும் அவர்களின் மீது படர்ந்து விடுகிறது. உடல்நிலை இயலாத சூழ்நிலையில் ஆனாவும் ஒரு குழந்தை போல ஜார்ஜிடம் நடந்து கொள்கிறாள்.
 
ஜார்ஜ் ஒரு குழந்தையை விடவும் அதீத அக்கறையோடு தன் மனைவியை கவனித்துக் கொள்ளுகிறார். மகள் ஈவா அம்மாவை மருத்துவமனை அழைத்துச் செல்ல வலியுறுத்தியும் ஜார்ஜ் அதை மறுத்து தானே அத்தனை தேவைகளையும் நிறைவேற்றுகிறார். தன் முதுமையையும் மீறி ஜார்ஜ் மனைவிக்குச் செய்யும் பணிவிடைகள் தரும் தாக்கம் படத்தில் ஏராளமாய் நிறைந்து கிடக்கிறது.
 
முதலில் படம் மிக மெதுவாக நகர்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். ஆனால் இம்மாதிரிப் படங்களுக்கு வேகமோ பரபரப்போ தேவையில்லை என்பதையும் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். காட்சிகளில் இருக்கும் வலு படத்தின் தரத்தை எவ்விதத்திலும் பாதிக்காமல் இருப்பதும் குறிப்பிட வேண்டிய அம்சம். உதாரணமாய் இந்த முதிர் தம்பதிகளின் முன்னாள் மாணவன் ஒருவன் இவர்களைத் தேடி வீடு வருகிறான். இவர்களின் நிலை அறிந்து துயர் கொள்கிறான். பிறகு ஆனாவுக்குப் பிடித்த இசையை வாசித்துக் காட்டுகிறான். மிக நெகிழ்ச்சியாக அமைந்த காட்சி இது.
 
அதே போல ஆனா உணவருந்த மறுக்கும் சமயம் ஜார்ஜ் அவரையும் மீறி ஆனாவை அடித்து விடுகிறார். இந்த மாதிரி வலுவான காட்சிகளால் படத்தை நிறைத்திருப்பதால் படத்தில் வேகம் ஒரு பொருட்டாய்த் தெரியவில்லை. வேகம் தேவைப்படுகிற களமும் இதுவல்ல. இயக்குனர் இவ்வளவு அழகாய் இந்தக் காதலையெல்லாம் காட்சிப்படுத்திவிட்டு உச்சகட்ட அதிர்ச்சிக்கு நம்மை தயார் படுத்துகிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
படத்தின் இறுதியில் ஒரு முடிவை பார்வையாளர்களுக்கே விட்டுவிடுகிறார் இயக்குனர். அது என்ன என்பதை படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

​2012ல் வெளியான இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் "தங்கப்பானை" விருது, கோல்டன் க்ளோப் விருது உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில்      55 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது.
 
சென்னை 10வது சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது. மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகை பிரிவில் இப்படத்தில் நடித்த 85 வயதான Emmanuelle Riva நாமினேஷன் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Picture
இப்படத்தின் இயக்குனரான Michael Haneke ன் பிற படங்களான The piano teacher, Time of the Wolf, Cache, The White Ribbon அனைத்தும் மனித மென் உணர்வுகளைக் கையாண்டு வெளிவந்த படங்களே.
 
இதில் சுவாரஸ்யமான இன்னொரு தகவல் என்னவென்றால் இவரது அனைத்து படங்களின் பிரதான கதாபாத்திரப் பெயர்கள் ஜார்ஜ் மற்றும் ஆனாதான்.
 
படம். Amour
 
மொழி. பிரெஞ்சு
 
நடிகர்கள் :
Jean Louis Trinticntant
 
Emmanuelle Riva
 
Isabelle Hubbert
 
படம் வெளிவந்த ஆண்டு : 2012
 
(தொடரும்)

 
4 Comments
EZHIL AMUTHAN
11/26/2019 05:47:46 am

Good Review

Reply
Ganesan lakshmanan
11/26/2019 08:09:14 am

Excellent review...Luv you da Parthi

Reply
Selvakumar
11/26/2019 08:26:31 am

👌👌

Reply
கோ. இராசராசன் link
12/4/2019 07:26:43 am

விமர்சனம் எனும் நேசம்
அற்புதம்.


முடிவு பார்வையாளர்க்கு அதிசயம்.

அடுத்ததுக்காய்....

Reply



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    November 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.